சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.067   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்பழனம் - தக்கேசி கரகரப்பிரியா காம்போதி கர்நாடக காபி ராகத்தில் திருமுறை அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஆபத்சகாயர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=OL2vd0T4TY8   Add audio link Add Audio

வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி,
பூதம் சூழ, பொலிய வருவார்; புலியின் உரி-தோலார்;
நாதா! எனவும், நக்கா! எனவும், நம்பா! என நின்று,
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழனநகராரே.

1
நாதனே எனவும் நக்கனே நம்பனே எனவும் கூறி நின்று தம் திருவடிகளைப்பரவும் அடியவர்களின் பாவங்களைத் தீர்த்தருளும் திருப்பழனத்து இறைவர் வேதங்களை ஓதிக் கொண்டு மார்பில் வெண்மையான பூணூலையணிந்து கொண்டு வெண்மையான எருதின் மிசை ஏறிப் பூதகணங்கள் புடைசூழப் புலியின் தோலை அணிந்து பொலிவுபெற வருவார்.

கண் மேல் கண்ணும், சடைமேல் பிறையும், உடையார்; காலனைப்
புண் ஆர் உதிரம் எதிர் ஆறு ஓடப் பொன்றப் புறம்தாளால்
எண்ணாது உதைத்த எந்தை பெருமான்-இமவான் மகளோடும்,
பண் ஆர் களி வண்டு அறை பூஞ்சோலைப் பழன நகராரே.

2
மது உண்ட வண்டுகள் பண்பாடி ஒலி செய்யும் அழகிய சோலைகள் சூழ்ந்த திருப்பழனநகரில் இமவான் மகளாகிய பார்வதிதேவியோடு எழுந்தருளிய இறைவர் இயல்பாக உள்ள இரண்டு கண்களுக்கு மேலாக நெற்றியில் ஒரு கண்ணையும் சடைமுடிமேல் பிறையையும் உடையவர். காலனை உதைத்து அவன் உடலில் தோன்றிய புண்களிலிருந்து குருதி வெள்ளம் ஆறாக ஓடுமாறு அவனை ஒரு பொருளாக மதியாது புறந்தாளால் அவன் அழிய உதைத்த எந்தை பெருமானார் ஆவார்.

பிறையும் புனலும் சடைமேல் உடையார்; பறை போல் விழி கண் பேய்
உறையும் மயானம் இடமா உடையார்; உலகர் தலைமகன்-
அறையும் மலர்கொண்டு அடியார் பரவி, ஆடல் பாடல் செய்
பறையும் சங்கும் பலியும் ஓவாப் பழன நகராரே.

3
அடியவர்கள் உயர்ந்தனவாகப் போற்றப்படும் நறு மலர்களைக் கொண்டுவந்து சாத்தி பரவி ஆடல் பாடல்களைச் செய்தும் பறை சங்கு ஆகியவற்றை முழக்கியும் பணிந்தும் இடைவிடாது வழிபடும் திருப்பழனநகர் இறைவர் சடைமேல் பிறையையும் கங்கையையும் உடையவர். பறை வாய் போன்ற வட்டமான விழிகளையுடைய பேய்கள்வாழும் மயானத்தைத் தமக்கு இடமாகக்கொண்டவர். அனைத்துலக மக்கட்கும் தலைவர்.

உரம் மன் உயர்கோட்டு உலறு கூகை அலறு மயானத்தில்,
இரவில் பூதம் பாட ஆடி, எழில் ஆர் அலர்மேலைப்
பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான்; எமை ஆளும்
பரமன்; பகவன்; பரமேச்சுவரன்-பழன நகராரே.

4
திருப்பழன நகர் இறைவர் வலிமை பொருந்திய உயரமான மரக்கிளைகளில் அமர்ந்து ஒலி செய்யும் கூகைகள் அலறும் மயானத்தே நள்ளிருளில் பூதங்கள் பாட ஆடியும் அழகிய தாமரை மலர்மேல் உறையும் பிரமனது தலையோட்டில் பலியேற்றும் திரு விளையாடல் புரியும் பெருமானார் எம்மை ஆளும் பரமர் ஆவார். அவர் பகவன் பரமேச்சுவரன் என்பனவாகிய பெயர்களை உடையவர்.

குல வெஞ்சிலையால் மதில் மூன்று எரித்த கொல் ஏறு உடை அண்ணல்
கலவமயிலும் குயிலும் பயிலும் கடல் போல் காவேரி
நல மஞ்சு உடைய நறு மாங்கனிகள் குதிகொண்டு எதிர் உந்தி,
பலவின் கனிகள் திரை முன் சேர்க்கும் பழன நகராரே.

5
தோகைகளையுடைய மயில்கள் குயில்கள் வாழ் வதும் கடல்போல் பரந்து விரிந்த காவிரி ஆற்றின் அலைகள் மாங்கனிகளையும் பலாவின் கனிகளையும் ஏந்திக் குதித்து உந்தி வந்து கரையிற் சேர்ப்பதுமாகிய திருப்பழனநகர் இறைவர் உயர்ந்த கொடிய மலை வில்லால் அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தவர். பகைவரைக் கொல்லும் ஆனேற்றையுடைய அண்ணல் ஆவார்.
Go to top

வீளைக் குரலும், விளி சங்கு ஒலியும், விழவின் ஒலி ஓவா,
மூளைத்தலை கொண்டு, அடியார் ஏத்த, பொடியா மதிள் எய்தார்
ஈளைப் படுகில் இலை ஆர் தெங்கின், குலை ஆர் வாழையின்,
பாளைக்கமுகின், பழம் வீழ் சோலைப் பழன நகராரே.

6
ஈரத்தன்மையுடைய ஆற்றுப்படுகைகளில் வளர்ந்த பசுமையான மட்டைகளோடு கூடிய தென்னை மரங்களின் குலைகளில் விளைந்த தேங்காயும் வாழை மரத்தில் பழுத்த வாழைப்பழங்களும் பாளைகளையுடைய கமுகமரங்களில் பழுத்தபாக்குப் பழங்களும் விழுகின்ற சோலைகளால் சூழப்பட்ட திருப்பழனநகர் இறைவர். அழைக்கும் சீழ்க்கை ஒலியும் அழைக்கும் சங்கொலியும் விழவின் ஆரவாரங்களும் ஓயாத ஊரகத்தே சென்று மூளை பொருந்திய தலையோட்டில் பலியேற்பவர். அடியவர்கள் போற்றி வாழ்த்த முப்புரங்களையும் அழித்தவராவார்.

பொய்யா மொழியார் முறையால் ஏத்திப் புகழ்வார்; திருமேனி
செய்யார்; கரிய மிடற்றார்; வெண் நூல் சேர்ந்த அகலத்தார்;
கை ஆடலினார்; புனலால் மல்கு சடைமேல் பிறையோடும்
பை ஆடு அரவம் உடனே வைத்தார் பழன நகராரே.

7
திருப்பழனநகர் இறைவர் பொய்கூறாத அடியவர் களால் முறைப்படி ஏத்திப் புகழப்பெறுவர். சிவந்த திருமேனி உடையவர். கரிய கண்டம் உடையவர். முப்புரிநூல் அணிந்த மார்பினை உடையவர். கைகளை வீசி ஆடல் புரிபவர். கங்கை சூடிய சடை முடி மீது பிறையையும் படப்பாம்பையும் ஒருசேர வைத்தவர்.

மஞ்சு ஓங்கு உயரம் உடையான் மலையை மாறு ஆய் எடுத்தான் தோள்
அஞ்சோடு அஞ்சும் ஆறும் நான்கும் அடர ஊன்றினார்;
நஞ்சார் சுடலைப் பொடி-நீறு அணிந்த நம்பான்-வம்பு ஆரும்
பைந்தாமரைகள் கழனி சூழ்ந்த பழன நகராரே.

8
மணம்கமழும் புதிய தாமரை மலர்களையுடைய வயல்களால் சூழப்பட்ட திருப்பழனநகர் இறைவர் வானகத்தே விளங்கும் மேகங்கள் அளவு உயர்ந்த தோற்றம் உடைய இராவணன் தனக்கு எதிராகக் கயிலைமலையைப் பெயர்க்க அவனுடைய இருபது தோள்களும் நெரியுமாறு கால்விரலை ஊன்றியவர். நஞ்சை உண்ட கண்டத்தர் சுடலையில் எரிந்த சாம்பலை அணிந்த பெருமானாகிய சிவனார் ஆவார்.

கடி ஆர் கொன்றைச் சுரும்பின் மாலை கமழ் புன் சடையார்; விண்
முடியாப் படி மூ அடியால் உலகம் முழுதும் தாவிய
நெடியான், நீள் தாமரைமேல் அயனும், நேடிக் காணாத
படியார்; பொடி ஆடு அகலம் உடையார் பழன நகராரே.

9
திருப்பழனநகர் இறைவர் மணங்கமழ்வதும் வண்டுகள் மொய்ப்பதுமான கொன்றை மாலை கமழ்கின்ற சிவந்த சடைமுடியையுடையவர். விண்ணளாவிய திருமுடியோடு இவ்வுலகம் முழுவதையும் மூவடியால் அளந்த நெடியோனாகிய திருமாலும் நீண்ட தண்டின்மேல் வளர்ந்த தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும் தேடிக்காணமுடியாத தன்மையை யுடையவர். திருநீற்றுப் பொடியணிந்த மார்பினையுடையவர்.

கண் தான் கழுவா முன்னே ஓடிக் கலவைக் கஞ்சியை
உண்டு ஆங்கு அவர்கள் உரைக்கும் சிறு சொல் ஓரார், பாராட்ட,
வண் தாமரை இன்மலர் மேல் நறவம் அது வாய் மிக உண்டு,
பண் தான் கெழும வண்டு யாழ் செய்யும் பழன நகராரே.

10
வண்டுகள் வளமையான தாமரை மலர்மேல் விளங்கும் தேனாகிய மதுவை வாயால் மிக உண்டு பண்பொருந்த யாழ்போல் ஒலி செய்யும் கழனிகளையுடைய திருப்பழனநகர் இறைவர் கண்களைக் கூடக் கழுவாமல் முந்திச் சென்று கலவைக் கஞ்சியை உண்பவர்களாகிய சமணர்கள் உரைக்கும் சிறு சொல்லைக்கேளாத அடியவர்கள் பாராட்ட விளங்குபவராவார்.
Go to top

வேய் முத்து ஓங்கி, விரை முன் பரக்கும் வேணுபுரம் தன்னுள்
நா உய்த்தனைய திறலால் மிக்க ஞானசம்பந்தன்,
பேசற்கு இனிய பாடல் பயிலும் பெருமான் பழனத்தை
வாயில் பொலிந்த மாலை பத்தும் வல்லார் நல்லாரே.

11
மூங்கில் மரங்கள் முத்துக்களோடு ஓங்கி வளர்ந்து மணம் பரப்பும் வேணுபுரநகரில் உள்ள நாவினால் வல்ல திறன் மிக்க ஞானசம்பந்தன் திருப்பழனப் பெருமான் மீது பேசற்கினிய பாடல்களாய்த் தன் வாயால் பாடிய இப்பதிகப்பாமாலை பத்தையும் இசையுடன் பாடவல்லவர் நல்லவர் ஆவார்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பழனம்
1.067   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி
Tune - தக்கேசி   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
4.012   திருநாவுக்கரசர்   தேவாரம்   சொல் மாலை பயில்கின்ற குயில்
Tune - பழந்தக்கராகம்   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
4.036   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆடினார் ஒருவர் போலும்; அலர்
Tune - திருநேரிசை   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
4.087   திருநாவுக்கரசர்   தேவாரம்   மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர்
Tune - திருவிருத்தம்   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
5.035   திருநாவுக்கரசர்   தேவாரம்   அருவனாய், அத்திஈர் உரி போர்த்து
Tune - திருக்குறுந்தொகை   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
6.036   திருநாவுக்கரசர்   தேவாரம்   அலை ஆர் கடல் நஞ்சம்
Tune - திருத்தாண்டகம்   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000