நறவம் நிறை வண்டு அறை தார்க்கொன்றை நயந்து, நயனத்தால் சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான், புறவம் உறை வண்பதியா, மதியார் புரம் மூன்று எரி செய்த இறைவன், அறவன், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
|
1
|
தேன் நிறைந்த வண்டுகள் ஒலிக்கும் கொன்றை மாலையை விரும்பிச்சூடி சுறாமீன் எழுதப்பட்ட கொடியை உடைய உயிர்கட்கு எல்லாம் இன்பநலம் தரும் வள்ளன்மை உடைய மன்மதனைப் பொடியாகுமாறு நெற்றிக்கண்ணால் விழித்து அழித்த சிவபிரான் உறையும்பதி புறவம் எனப்பெறும் சீகாழியாம். தன்னை மதியாத அசுரர்களின் முப்புரங்களை எரித்தழித்த அவ்விறைவனாகிய அறவன் இமையவர் ஏத்தித்துதிக்க அப்பதியிடை உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான். | |
உரவன், புலியின் உரி-தோல் ஆடை உடைமேல் பட நாகம் விரவி விரி பூங்கச்சா அசைத்த விகிர்தன், உகிர்தன்னால் பொரு வெங்களிறு பிளிற உரித்து, புறவம் பதி ஆக, இரவும் பகலும் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
|
2
|
மிக்க வலிமையை உடையவனும் புலியிலினது தோல் ஆடையாகிய உடை மேல் படம் பொருந்திய நாகத்தைக் கச்சாகக் கட்டிய விகிர்தனும் தனது கைவிரல் நகத்தால் போர்செய்யும் கொடிய யானை பிளிற அதன் தோலை உரித்துப் போர்த்தவனுமாகிய இறைவன் புறவம் என்னும் சீகாழியையே தான் உறையும் பதியாகக் கொண்டு அதன்கண் இரவும் பகலும் தேவர்கள் பலரும் வந்து வணங்க உமையம்மையோடு எழுந்தருளியிருக்கின்றான். | |
பந்தம் உடைய பூதம் பாட, பாதம் சிலம்பு ஆர்க்க, கந்தம் மல்கு குழலி காண, கரிகாட்டு எரி ஆடி, அம் தண்கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி, எம் தம்பெருமான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
|
3
|
எம்முடைய தலைவனாகிய இறைவன் உதரபந்தத்தை அணிந்துள்ள பூதங்கள் பாடவும் பாதங்களில் சிலம்புகள் ஒலிக்கவும் மணம் நிறைந்த கூந்தலையுடைய உமையம்மை காணச் சுடுகாட்டில் எரியேந்தி ஆடி அழகிய குளிர்ந்த கடலால் சூழப்பட்ட எழில்மிக்க புறவம் என்னும் சீகாழியையே இருப்பிடமாகக் கொண்டு எழுந்தருளி இமையோர்கள் தன்னையேத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான். | |
நினைவார் நினைய இனியான், பனி ஆர் மலர் தூய், நித்தலும்; கனை ஆர் விடை ஒன்று உடையான்; கங்கை, திங்கள், கமழ்கொன்றை, புனை வார்சடையின் முடியான்; கடல் சூழ் புறவம் பதி ஆக, எனை ஆள் உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
|
4
|
என்னை ஆளாக உடைய இறைவன் நாள்தோறும் குளிர்ந்த மலர்களைத் தூவித் தன்னை நினையும் அடியவர்களின் நினைப்பிற்கு இனியவனாய் கனைக்கும் விடை ஒன்றை ஊர்தியாக உடையவனாய் கங்கை திங்கள் மணங்கமழும் கொன்றை ஆகியவற்றைச் சூடிய அழகிய நீண்ட சடைமுடியை உடையவனாய் கடலால் சூழப்பட்ட புறவம் என்னும் சீகாழிப்பதியை இடமாகக் கொண்டு இமையவர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான். | |
செங்கண் அரவும், நகுவெண்தலையும், முகிழ் வெண் திங்களும், தங்கு சடையன்; விடையன்; உடையன், சரி கோவண ஆடை; பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக, எங்கும் பரவி இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
|
5
|
சிவபிரான் சிவந்த கண்களையுடைய பாம்பும் சிரிப்பதுபோல வாய்விண்டு தோன்றும் வெள்ளிய தலையோடும் இளையவெண்பிறையும் தங்கும் சடைமுடியன். விடை ஊர்தியன். சரியும் கோவண ஆடையை உடையாகக் கொண்டவன். அப்பெருமான் பொங்கிஎழும் அலைகளையுடைய வளம் பொருந்திய கடலால் சூழப்பட்ட அழகிய புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு இமையோர் எங்கும் பரவி நின்று ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான். | |
| Go to top |
பின்னுசடைகள் தாழக் கேழல் எயிறு பிறழப் போய், அன்ன நடையார் மனைகள் தோறும் அழகு ஆர் பலி தேர்ந்து, புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக, என்னை உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
|
6
|
என்னை அடிமையாக உடைய இறைவன் முறுக்கி விடப்பட்ட சடைகள் தாழ்ந்து தொங்க மாலையாகக் கோத்தணிந்த பன்றியின் பற்கள் விளங்கச் சென்று அன்னம் போன்ற நடையினையுடைய மகளிரின் இல்லங்கள்தோறும் அழகு பொருந்தப்பலியேற்று புன்னை தாழை முதலியன நிறைந்த பொழிலால் சூழப்பட்ட அழகிய புறவம் என்னும் சீகாழியைத் தனது பதியாகக்கொண்டு உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான். | |
உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு, ஒரு தோழம்தேவர் விண்ணில் பொலிய, அமுதம் அளித்த விடை சேர் கொடி அண்ணல், பண்ணில் சிறைவண்டு அறை பூஞ்சோலைப் புறவம் பதி ஆக, எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
|
7
|
யாராலும் உண்ண முடியாத நஞ்சைத் தான் உண்டு ஒரு தோழம் என்ற எண்ணிக்கையில் தேவர்கள் விண்ணுலகில் மகிழ்வுற்று வாழ கடலிடைத் தோன்றிய அமுதை வழங்கிய விடை எழுதிய கொடியையுடைய அண்ணல். சிறகுகளையுடைய வண்டுகள் பண்ணோடு ஒலிக்கும் பூஞ்சோலைகளால் சூழப்பட்ட புறவம் என்னும் சீகாழியைத் தன் பதியாகக் கொண்டு எண்ணற்ற இமையோர் தன்னை ஏத்தி வணங்க உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான். | |
விண்தான் அதிர வியன் ஆர் கயிலை வேரோடு எடுத்தான் தன் திண்தோள் உடலும் முடியும் நெரியச் சிறிதே ஊன்றிய புண்தான் ஒழிய அருள்செய் பெருமான், புறவம் பதி ஆக, எண்தோள் உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
|
8
|
எட்டுத் தோள்களையுடைய சிவபிரான் விண் அதிரும்படியாகப் பெரிய கயிலைமலையை வேரோடு பெயர்த்து எடுத்த இராவணனின் வலிமை பொருந்திய தோள்கள் உடல் முடி ஆகியன நெரியுமாறு கால் விரலால் சிறிதே ஊன்றிப் பின் அவன் வருந்திய அளவில் உடலில் தோன்றிய புண்கள் நீங்க அவன் வேண்டும் வரங்கள் பலவற்றைத்தந்த பெருமானாவான். அவ்விறைவன் புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு இமையோர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான். | |
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடிக் காண்கில்லாப் படி ஆம் மேனி உடையான், பவளவரை போல்-திருமார்பில் பொடி ஆர் கோலம் உடையான், கடல் சூழ் புறவம் பதி ஆக, இடி ஆர் முழவு ஆர் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
|
9
|
திருமாலும் நீண்டு வளர்ந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும் தேடிக்காண இயலாத தன்மையை உடைய திருமேனியன். பவளமலை போன்ற திருமார்பின்கண் திருநீறு அணிந்த அழகினையுடையவன். அவ்விறைவன் கடல் நீரால் சூழப்பட்டதும் இடி போன்ற முழக்கத்தையுடைய முழா ஒலிப்பதும் ஆகிய புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு இமையவர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான். | |
ஆலும் மயிலின் பீலி அமணர், அறிவு இல் சிறுதேரர், கோலும் மொழிகள் ஒழிய, குழுவும் தழலும் எழில் வானும் போலும் வடிவும் உடையான், கடல் சூழ் புறவம் பதி ஆக, ஏலும் வகையால் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
|
10
|
ஆடுகின்ற மயிலின் தோகையைக் கையில் ஏந்திய அமணர்களும் அறிவில் குறைந்த புத்தர்களும் புனைந்து பேசும் மொழிகளைத் தாழுமாறு செய்பவனாய் கூடி எரியும் தழலும் அழகிய வானமும் போன்ற செவ்வண்ணம் உடையசிவன் கடல் நீர் சூழ்ந்த புறவம் என்னும் சீகாழியைத் தனது பதியாகக் கொண்டு இமையோர் பொருந்தும் வகையால் போற்ற உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான். | |
| Go to top |
பொன் ஆர் மாடம் நீடும் செல்வப் புறவம் பதி ஆக மின் ஆர் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனை, தன் ஆர்வம் செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ்மாலை பல்-நாள் பாடி ஆட, பிரியார், பரலோகம்தானே.
|
11
|
அழகு பொருந்திய உயர்ந்த மாடவீடுகளை உடையதும் செல்வச் செழுமை வாய்ந்ததும் ஆகிய புறவம் என்னும் சீகாழிப்பதியில் மின்னல் போன்ற இடையினையுடைய உமையம்மையாரோடு எழுந்தருளியுள்ள குற்றமற்ற இறைவனைத் தன் அன்பால் தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் போற்றி உரைத்த இத்தமிழ் மாலையைப் பல நாள்களும் பாடி ஆடுவோர் மேலுலகத்தில் பிரியாது உறைவர். | |