சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.104   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்புகலி -(சீர்காழி ) - வியாழக்குறிஞ்சி தீரசங்கராபரணம் செளராஷ்டிரம் கவுடாமல்ஹார் ராகத்தில் திருமுறை அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=bne7fi0psYs   Add audio link Add Audio

ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான் விரித்தான், கொன்றை
சூடிய செஞ்சடையான், சுடுகாடு அமர்ந்த பிரான்,
ஏடு அவிழ் மாமலையாள் ஒரு பாகம் அமர்ந்து அடியார் ஏத்த
ஆடிய எம் இறை, ஊர் புகலிப்பதி ஆமே.

1
படம் எடுத்து ஆடும் பாம்பினை இடையில் கட்டியவனும் அரிய பெரிய வேதங்களை அருளிச் செய்தவனும் கொன்றை மலர் மாலையைச் சூடிய செஞ்சடை முடியை உடையவனும் சுடுகாட்டைத் தனது இருப்பிடமாகக் கொண்டு உறைபவனும் இதழ் அவிழும் மலர்கள் பூத்த பெரிய இமயமலை அரசனின் புதல்வியாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று அடியவர் போற்ற நடனம் ஆடியவனும் ஆகிய எம் இறைவனது ஊர் புகலிப் பதியாகும்.

ஏலம் மலி குழலார் இசை பாடி எழுந்து, அருளால் சென்று,
சோலை மலி சுனையில் குடைந்து ஆடித் துதி செய்ய,
ஆலை மலி புகை போய் அண்டர் வானத்தை மூடி நின்று நல்ல
மாலை அது செய்யும் புகலிப்பதி ஆமே.

2
மயிர்ச் சாந்தணிந்த கூந்தலினை உடைய மகளிர் காலையில் எழுந்து இசை பாடிக்கொண்டு இறையருள் பெறும் வேட்கையோடு சென்று சோலையின்கண் விளங்கும் சுனையில் துளைந்து நீராடித் துதி செய்ய கரும்பு ஆலைகளில் நிறைந்தெழுந்த புகை சென்று தேவர்கள் உறையும் வானகத்தை மூடி நின்று காலையை நல்ல மாலைப் போதாகச் செய்வது புகலிப்பதியாம். மகளிர் நீராடித்துதி செய்ய விளங்குவது புகலிப்பதி என முடிவு காண்க.

ஆறு அணி செஞ்சடையான்; அழகு ஆர் புரம் மூன்றும் அன்று வேவ,
நீறு அணி ஆக வைத்த நிமிர் புன்சடை எம் இறைவன்;
பாறு அணி வெண் தலையில் பகலே பலி என்று வந்து நின்ற
வேறு அணி கோலத்தினான்; விரும்பும் புகலி அதே.

3
கங்கை சூடிய செஞ்சடையினை உடையவனும் அழகமைந்த முப்புரங்களைத் தீயால் வேவச் செய்தவனும் திருநீற்றைத் தன் திருமேனியில் அழகாகப் பூசியவனும் மேல்நோக்கிய சிவந்த சடையை உடைய எம் இறைவனும் பருந்து சூழும் வெள்ளிய தலையோட்டை ஏந்திப் பகலில் பலி இடுக என்று வந்து நிற்பவனும் வேறுபாடு உடையனவாய்ப் புனையப் பெற்ற கோலத்தினனும் ஆகிய சிவபிரான் விரும்பும் தலம் புகலியாகும்.

வெள்ளம் அது சடைமேல் கரந்தான், விரவார் புரங்கள் மூன்றும்
கொள்ள எரி மடுத்தான், குறைவு இன்றி உறை கோயில்
அள்ளல் விளை கழனி அழகு ஆர் விரைத் தாமரைமேல் அன்னப்
புள் இனம் வைகி எழும் புகலிப்பதிதானே.

4
பெருகி வந்த கங்கை வெள்ளத்தைச் சடைமேல் கரந்தவனும் பகைவர்களாகிய அசுரர்களின் புரங்கள் மூன்றையும் எரி மடுத்தவனும் ஆகிய சிவபிரான் குறைவிலா நிறைவோடு உறையும் கோயில் சேறு நிறைந்த வயல்களில் முளைத்த அழகிய மணங்கமழும் தாமரை மலர்கள் மேல் அன்னமும் பிற பறவைகளும் வந்து தங்கிச் செல்லும் புகலிப் பகுதியாகும்.

சூடும் மதிச் சடைமேல் சுரும்பு ஆர் மலர்க்கொன்றை துன்ற, நட்டம்-
ஆடும் அமரர்பிரான், அழகு ஆர் உமையோடும் உடன்
வேடுபட நடந்த விகிர்தன், குணம் பரவித் தொண்டர்
பாட, இனிது உறையும் புகலிப்பதி ஆமே.

5
மதி சூடிய சடையின் மீது வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலர்களைப் பொருந்துமாறு அணிந்து நடனம் ஆடும் தேவர் பிரானும் அழகிய உமையம்மையோடு உடனாய் வேட்டுவக் கோலத்தோடு தோன்றி அருச்சுனற்கு அருள்புரிய நடந்த வேறுபாடுடையவனும் ஆகிய சிவபிரானின் குணங்களைப் போற்றித் தொண்டர்கள் பாட அப்பெருமான் இனிதுறையும் பதிபுகலியாகும்.
Go to top

மைந்து அணி சோலையின் வாய் மதுப் பாய் வரி வண்டு இனங்கள் வந்து
நந்து இசை பாட, நடம் பயில்கின்ற நம்பன் இடம்
அந்தி செய் மந்திரத்தால் அடியார்கள் பரவி எழ, விரும்பும்
புந்தி செய் நால்மறையோர் புகலிப்பதிதானே.

6
இளமை குன்றாத மரங்களை உடைய அழகிய சோலையின்கண் மலர்ந்த பூக்களின் தேனில் பரவிய வரி வண்டுகள் வந்து வளரும் இசையைப் பாட நடம் பயிலும் பெருமானது இடம் அந்திக் காலங்களில் செய்யும் சந்தியாவந்தன மந்திரங்களால் அடியார்களாய்ப் போற்றுவதற்கு நான்கு வேதங்களிலும் வல்ல அந்தணர் விருப்போடு தமது புந்தியில் நினைக்கும் புகலிப்பதியாகும்.

மங்கை ஓர்கூறு உகந்த மழுவாளன், வார்சடைமேல்-திங்கள்
கங்கைதனைக் கரந்த கறைக்கண்டன், கருதும் இடம்
செங்கயல் வார் கழனி திகழும் புகலிதனைச் சென்று, தம்
அம் கையினால்-தொழுவார் அவலம் அறியாரே.

7
உமையம்மையைத் தனது திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்பவனும் மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியவனும் நீண்ட சடைமேல் திங்களையும் கங்கையையும் அணிந்தவனும் விடக் கறை பொருந்தியமிடற்றினனும் ஆகிய சிவபிரான் கருதி உறையும் இடமாகிய சிவந்த கயல் மீன்கள் திகழும் நீண்ட வயல்களோடு விளங்கும் திருப்புகலிக்குச் சென்று தம் அழகிய கைகளைக் குவித்து வணங்குபவர் துன்பங்கள் நீங்கப்பெறுவர்.

வில் இயல் நுண் இடையாள் உமையாள் விருப்பன் அவன் நண்ணும்
நல் இடம் என்று அறியான் நலியும் விறல் அரக்கன்
பல்லொடு தோள் நெரிய விரல் ஊன்றி, பாடலுமே, கை வாள்
ஒல்லை அருள் புரிந்தான் உறையும் புகலி அதே.

8
ஒளி பொருந்திய நுண்ணிய இடையினை உடைய உமையவளிடம் பெருவிருப்பினனாகிய சிவபிரான் எழுந்தருளிய மேம்பட்ட இடம் என்று கருதாது கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிய அரக்கனாகிய இராவணனின் பற்களும் தோள்களும் நெரியுமாறு கால்விரலை ஊன்றி அடர்த்த அளவில் அவன் தன்னைப் புகழ்ந்து பாடக்கேட்டுக் கையில் ஏந்திப் போர் செய்யும் வாளை விரைந்து அருள்புரிந்தவனாகிய சிவபிரான் உறையுமிடம் திருப்புகலியாகும்.

தாது அலர் தாமரை மேல் அயனும் திருமாலும் தேடி
ஓதியும் காண்பு அரிய உமைகோன் உறையும் இடம்
மாதவி, வான் வகுளம், மலர்ந்து எங்கும் விரை தோய, வாய்ந்த
போது அலர் சோலைகள் சூழ் புகலிப்பதிதானே.

9
மகரந்தம் விரிந்த தாமரை மலர் மேல் உறையும் பிரமனும் திருமாலும் தேடியும் புகழ்ந்தும் காண்டற்கு அரியவனாய் நின்ற உமைமணவாளனாம் சிவன் உறையுமிடம் மாதவி வானளாவ உயர்ந்த மகிழமரம் ஆகியன மலர்ந்து எங்கும் மணம் பரப்புமாறு பொருந்திய மலர் விரிந்த சோலைகள் சூழ்ந்த புகலிப்பதியாகும்.

வெந் துவர் மேனியினார், விரி கோவணம் நீத்தார், சொல்லும்
அந்தர ஞானம் எல்லாம் அவை ஓர் பொருள் என்னேல்!
வந்து எதிரும் புரம் மூன்று எரித்தான் உறை கோயில் வாய்ந்த
புந்தியினார் பயிலும் புகலிப்பதிதானே.

10
கொடிய மருதத்துவராடை உடுத்த மேனியினராகிய புத்தர்களும் விரிந்த கோவணம் உடுப்பதையும் துறந்த திகம்பர சமணரும் சொல்லும் அழிவுதரும் ஞானங்களாகிய அவற்றை ஒரு பொருளாகக் கொள்ளாதீர். தம்மை வந்தெதிர்த்த திரிபுரங்களை எரித்தவனாகிய சிவபிரான் உறையும் கோயில் பொருந்திய அறிவு உடையவர் வாழும் புகலிப் பதியாகும். அதனைச் சென்று தொழுமின்.
Go to top

வேதம் ஓர் கீதம் உணர்வாணர் தொழுது ஏத்த, மிகு வாசப்-
போதனைப் போல் மறையோர் பயிலும் புகலிதன்னுள்
நாதனை, ஞானம் மிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில்
ஓத வல்லார் உலகில் உறு நோய் களைவாரே.

11
வேத கீதங்களை உணர்ந்து வாழ்பவர் தொழுது ஏத்தவும் மிக்க மணமுடைய தாமரை மலர் மேல் உறையும் நான்முகனைப் போல விளங்கும் மறையவர் போற்றவும் விளங்கும் புகலியுள் உறையும் சிவபிரானை ஞானம் மிகும் சம்பந்தன் பாடிய இத்தமிழ் மாலையை நாவினால் ஓதி வழிபட வல்லவர் மேம்பட்ட பிறவிப் பிணியை நீக்கிவிடுவர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்புகலி -(சீர்காழி )
1.030   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விதி ஆய், விளைவு ஆய்,
Tune - தக்கராகம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.104   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான்
Tune - வியாழக்குறிஞ்சி   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.025   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உகலி ஆழ்கடல் ஓங்கு பார்
Tune - இந்தளம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.029   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும், பன்னிய
Tune - இந்தளம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.054   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம்
Tune - சீகாமரம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.122   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விடை அது ஏறி, வெறி
Tune - செவ்வழி   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.003   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இயல் இசை எனும் பொருளின்
Tune - கொல்லி   (திருப்புகலி -(சீர்காழி ) மந்திரபுரீசுவரர் பெரியநாயகியம்மை)
3.007   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கண் நுதலானும், வெண் நீற்றினானும்,
Tune - காந்தாரபஞ்சமம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000