மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல பொன் இயல் கொன்றையினான்; புனல் சூடி; பொற்பு அமரும் அன்னம் அன நடையாள் ஒரு பாகத்து அமர்ந்து அருளி; நாளும் பன்னிய பாடலினான்; உறை கோயில்-பாதாளே.
|
1
|
மின்னல் போன்ற செஞ்சடைமேல் விளங்கும் மதி ஊமத்தமலர் பொன் போன்ற நல்ல கொன்றை ஆகியவற்றோடு கங்கையையும் சூடி அழகு விளங்கும் அன்னம் போன்ற நடையினளாகிய உமையம்மை ஒரு பாகமாக விளங்க நாள்தோறும் வேத கீதங்களைப் பாடியவனாய்ச் சிவபெருமான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும். | |
நீடு அலர் கொன்றையொடு நிரம்பா மதி சூடி; வெள்ளைத்- தோடு அமர் காதில் நல்ல குழையான்; சுடு நீற்றான்; ஆடு அரவம் பெருக அனல் ஏந்திக் கை வீசி, வேதம் பாடலினால் இனியான்; உறை கோயில் பாதாளே.
|
2
|
கொத்தாக நீண்டு அலர்கின்ற கொன்றையோடு கலைநிறையாத இளம் பிறையை முடியில் சூடி ஒரு காதில் வெள்ளைத் தோட்டுடன் மறு காதில் நல்ல குழையையுடையவனாய் விளங்குவோனும் சுட்ட திருநீற்றை மெய்யில் பூசியவனும் ஆடும் பாம்பு அணிகலனாகப் பெருகித்தோன்ற அனல் ஏந்திக் கைவீசி வேதப் பாடல்களைப் பாடுதலில் இனியனாய் விளங்குவோனும் ஆகிய சிவபெருமான் உறையும் கோயில் திருப்பாதாளீச்சரமாகும். | |
நாகமும் வான்மதியும் நலம் மல்கு செஞ்சடையான், சாமம் போக நல் வில்வரையால் புரம் மூன்று எரித்து உகந்தான், தோகை நல் மாமயில் போல் வளர் சாயல்-மொழியைக் கூடப் பாகமும் வைத்து உகந்தான், உறை கோயில்-பாதாளே.
|
3
|
பாம்பு வானில் விளங்கும் மதி ஆகியனவற்றைச் சூடிய அழகுமிக்க செஞ்சடையை உடையவனும் உரிய காலம் கழிய நல்ல மேருவில்லால் முப்புரங்களை எரித்துகந்தவனும் தோகையை உடைய நல்ல ஆண்மயில் போன்று வளர்கின்ற கட்புலனாய மென்மையை உடைய தூய மொழி பேசும் உமையம்மையைத் தன்னோடு உடனாக இடப்பாகமாகக் கொண்டு மகிழ்ந்தவனும் ஆகிய சிவபிரான் மகிழ்ந்துறையும் கோயில் பாதாளீச்சரமாகும். | |
அங்கமும் நால்மறையும் அருள்செய்து, அழகு ஆர்ந்த அம் சொல் மங்கை ஓர் கூறு உடையான், மறையோன், உறை கோயில் செங்கயல் நின்று உகளும் செறுவில்-திகழ்கின்ற சோதிப் பங்கயம் நின்று அலரும் வயல் சூழ்ந்த பாதாளே.
|
4
|
ஆறு அங்கங்களையும் நான்கு வேதங்களையும் அருளிச் செய்தவனும் அழகிய இனிய சொற்களைப் பேசும் உமைநங்கையை ஒரு பாகமாக உடையவனும் வேதங்களைப் பாடி மகிழ் பவனுமாகிய சிவபிரான் உறையும் கோயில் செங்கயல் மீன்கள் புரளும் வயல்களில் விளங்கும் ஒளியினால் தாமரைகள் எழுந்து மலரும் வயல்கள் சூழ்ந்த பாதாளீச்சரமாகும். | |
பேய் பலவும் நிலவப் பெருங்காடு அரங்கு ஆக உன்னி நின்று, தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்து, தேய்பிறையும் அரவும் பொலி கொன்றைச் சடைதன் மேல் சேர, பாய் புனலும் உடையான் உறை கோயில் பாதாளே.
|
5
|
பேய்கள் பலவும் உடன் சூழ சுடுகாட்டை அரங்காக எண்ணி நின்று தீ மான்கன்று மழு ஆகியவற்றைக் கைகளில் விளங்குவித்து தேய்ந்த பிறையும் பாம்பும் விளங்கிய கொன்றை மலரும் உடைய தன் சடைமேல் பாய்ந்து வரும் கங்கையையும் உடையவனாகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும். | |
| Go to top |
கண் அமர் நெற்றியினான், கமழ் கொன்றைச் சடைதன்மேல் நன்றும் விண் இயல் மா மதியும் உடன் வைத்தவன், விரும்பும் பெண் அமர் மேனியினான், பெருங்காடு அரங்கு ஆக ஆடும் பண் இயல் பாடலினான், உறை கோயில் பாதாளே.
|
6
|
கண் பொருந்திய நெற்றியை உடையவனும் சடை முடி மீது மணம் கமழும் கொன்றை மலரோடு அழகு பொருந்த வானின்கண் உலாவும் சிறந்த பிறைமதியையும் உடனாக வைத்தவனும் தன்னால் விரும்பப் பெற்ற உமைமங்கை பொருந்திய திரு மேனியனும் சுடுகாட்டை அரங்காகக் கொண்டு பண்ணொடு கூடிய பாடல்களுடன் ஆடுபவனுமாகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும். | |
விண்டு அலர் மத்தமொடு மிளிரும் இள நாகம், வன்னி, திகழ் வண்டு அலர் கொன்றை, நகு மதி, புல்கு வார்சடையான்; விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்து, உரை வேதம் நான்கும் அவை பண்டு இசைபாடலினான்; உறை கோயில் பாதாளே.
|
7
|
தளையவிழ்ந்து மலர்ந்த ஊமத்த மலரோடு புரண்டு கொண்டிருக்கும் இளநாகம் வன்னிஇலை வண்டுகளால் மலர்த்தப் பெறும் கொன்றை பிறைமதி ஆகியன பொருந்திய நீண்ட சடை உடையவனும் பகைவரான அசுரர்களின் முப்புரங்களையும் எரித்த வனும் நான்கு வேதங்களையும் உரைத்தலோடு அவற்றைப் பண்டைய இசைமரபோடு பாடி மகிழ்பவனுமான சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும். | |
மல்கிய நுண் இடையாள் உமை நங்கை மறுக, அன்று, கையால்- தொல்லைமலை எடுத்த அரக்கன் தலைதோள் நெரித்தான்; கொல்லை விடை உகந்தான்; குளிர்திங்கள் சடைக்கு அணிந்தோன்; பல் இசை பாடலினான்; உறை கோயில் பாதாளே.
|
8
|
செறிந்த நுண்மையான இடையினை உடைய உமை யம்மை அஞ்ச அன்று கையால் பழமையான கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் தலைகளையும் தோள்களையும் நெரித்தவனும் முல்லை நிலத் தெய்வமான திருமாலாகிய விடையை உகந்தவ னும் குளிர்ந்த திங்களைச் சடையின்கண் அணிந்தவனும் பல்வகையான இசைப் பாடல்களைப் பாடுபவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும். | |
தாமரைமேல் அயனும் அரியும் தமது ஆள்வினையால்-தேடி, காமனை வீடுவித்தான் கழல் காண்பு இலராய் அகன்றார்; பூ மருவும் குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல பா மருவும் குணத்தான் உறை கோயில் பாதாளே.
|
9
|
மன்மதனை எரித்த சிவபிரான் திருவடிகளைத் தாமரை மலரின்மேல் எழுந்தருளிய அயனும் திருமாலும் தமது முயற்சியால் தேடிக்காண இயலாது நீங்கினர். மலர்கள் சூடிய கூந்தலை உடைய உமைநங்கை ஒரு பாகமாகப் பொருந்தியவனும் வேதப் பாடல்களைப் பாடும் நல்ல குணத்தினனும் ஆகிய அப்பெருமான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும். அங்குச் சென்றால் அவன் கழலடி காணலாம் என்பது குறிப்பெச்சம். | |
காலையில் உண்பவரும் சமண்கையரும் கட்டுரை விட்டு, அன்று ஆலவிடம் நுகர்ந்தான் அவன்தன் அடியே பரவி, மாலையில் வண்டு இனங்கள் மது உண்டு இசை முரல, வாய்த்த பாலையாழ்ப் பாட்டு உகந்தான் உறை கோயில் பாதாளே.
|
10
|
காலையில் சோறுண்ணும் புத்தரும் சமண சமயக் கீழ்மக்களும் கூறும் மெய்போன்ற பொய்யுரைகளை விடுத்து ஆலகாலவிடமுண்டு அமரர்களைக் காத்தவனும் மாலைக் காலத்தில் வண்டினங்கள் மதுவுண்டு இசை முரல ஏற்புடையதான பாலைப் பண்ணையாழில் பாடக்கேட்டு மகிழ்பவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும். | |
| Go to top |
பல்மலர் வைகு பொழில் புடை சூழ்ந்த பாதாளைச் சேர, பொன் இயல் மாடம் மல்கு புகலி நகர் மன்னன்- தன் ஒளி மிக்கு உயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன இன் இசைபத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே.
|
11
|
பலவகையான மலர்களும் பூத்துள்ள பொழில் புடை சூழ்ந்த பாதாளீச்சரத்தைச் சென்று தரிசிக்குமாறு பொன்னால் இயன்ற மாட வீடுகள் நிறைந்த புகலி நகர் மன்னனும் தன்புகழ் உல கெங்கும் பரவி விளங்குமாறு உயர்ந்தவனுமாகிய தமிழ் ஞானசம்பந் தன் பாடிய இன்னிசை பொருந்திய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் அழகிய வானுலகின்கண் இருப்பர். | |