சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.126   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

சீர்காழி - வியாழக்குறிஞ்சி தீரசங்கராபரணம் செளராஷ்டிரம் கவுடாமல்ஹார் ராகத்தில் திருமுறை அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி

திருஜால ஜதியில் அமைந்த இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ நல்ல இசை ஞானம் வளரும்
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=k79jeHXwR6w   Add audio link Add Audio

பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர், அப்
பாலே சேர்வு ஆய் ஏனோர், கான்பயில் கணமுனிவர்களும்,
சிந்தித்தே வந்திப்ப, சிலம்பின் மங்கை தன்னொடும்
சேர்வார், நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசு அது எலாம்
சந்தித்தே, இந்தப் பார்சனங்கள் நின்று தம் கணால்
தாமே காணா வாழ்வார் அத் தகவு செய்தவனது இடம்
கந்தத்தால் எண்திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தனக்
காடு ஆர், பூவார், சீர் மேவும் கழுமல வள நகரே.

1
வினைவயத்தால் மண்ணுலகம் வந்து எல்லா இடங்களிலும் பொருந்தி அவ்விடங்களே தமக்கு இருப்பிடமாய் வாழும் தேவர்களும் மற்றவர்களாகிய கானகங்களில் வாழும் முனிவர்களும் மனத்தால் சிந்தித்து வழிபட்டு உய்தி பெறுமாறு மலையரையன் மகளாகிய பார்வதி தேவியாரோடு சேர்ந்தவராய் நாளும் நாளும் நீண்டுயர்ந்த கயிலைமலையில் விளங்கும் திருவோலக்கச் சிறப்புக்கள் எல்லாவற்றையும் இந்த உலகில் வாழும் மக்கள் தங்கள் கண்களால் தாமே கண்டு வாழ்பவராகப் பெருங்கருணையோடு காட்சி நல்குபவனது இடம் எட்டுத் திசைகளிலும் மணம் கமழ்ந்து விளங்கும் மலர்களோடு கூடிய சந்தன மரக்காடுகள் சிறந்து வளர்ந்து செழிக்கும் கழுமலநகராகும்.

பிச்சைக்கே இச்சித்து, பிசைந்து அணிந்த வெண்பொடிப்
பீடு ஆர் நீடு ஆர் மாடுஆரும்பிறைநுதல் அரிவையொடும்,
உச்சத்தான் நச்சிப் போல் தொடர்ந்து அடர்ந்த வெங் கண் ஏறு
ஊராஊரா, நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெய் இசை
வச்சத்தால் நச்சுச் சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார்
வாரா, நேரே மால் ஆகும் வசி வல அவனது இடம்
கச்சத்தான் மெச்சிப் பூக் கலந்து இலங்கு வண்டு இனம்
கார் ஆர் கார் ஆர் நீள் சோலைக் கழுமல வள நகரே.

2
பிச்சை ஏற்பதை விரும்பி நீரில் குழைத்தணிந்த வெண்பொடியினராய்ப் பெருமை பொருந்தியவரும் புகழால் விரிந்தவருமாய் அருகில் விளங்கும் பிறை போன்ற நெற்றியினளாகிய உமையம்மையோடு உச்சிப்போதினை விரும்பித் தன்னை எதிர்ப்பவரைத் தொடர்ந்து கொல்லும் தறுகண்மையை உடைய விடையேற்றின் மீதமர்ந்து ஊர்ந்து ஊர்ந்து நீண்ட தெருக்களில் விருப்பத்தோடு பாடுவதால் நச்சுதலுக்குரியனவும் முத்துவடங்கள் அணிந்தனவுமாகிய கொங்கைகளை உடைய மகளிர் அவ்விசையைக் கேட்டு வந்து தமக்கு முன்னே விரக மயக்கம் கொள்ளுமாறு வசீகரிக்கும் வன்மை பொருந்திய சிவபிரானது இடம். மேலைக் காற்றினால் அல்லது ஒற்றுமையோடு பூக்களைக் கலந்து விளங்கும் வண்டினங்களோடு கருமை நிறம் பொருந்திய மேகங்கள் தவழும் நீண்ட சோலைகளை உடைய கழுமல வளநகராகும்.

திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து-இலங்கு மத்தையின்
சேரேசேரே, நீர் ஆகச் செறிதரு சுர நதியோடு,
அங்கைச் சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண்தலைப்
பாலே மேலே மால் ஏயப் படர்வு உறும் அவன் இறகும்,
பொங்கப் பேர் நஞ்சைச் சேர் புயங்கமங்கள், கொன்றையின்
போது ஆர் தாரேதாம், மேவிப் புரிதரு சடையன் இடம்
கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின்
காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே.

3
திங்கள் தும்பை விளங்கித் தோன்றும் ஊமத்த மலர் ஆகியவற்றைச் சேர்த்துச் செறிந்த நீராகிய கங்கை நதி அழகிய கையில் விளங்குவதையன்றி உடைந்த கபாலம் முடிகாண மயக்க உணர்வுடையனாய் மேலே பறந்து சென்ற பிரமனாகிய அன்னத்தின் இறகு நஞ்சு பொங்கும் பாம்பு கொன்றை மாலை ஆகியவற்றை அணிந்து வளைத்துக் கட்டிய சடையை உடைய சிவபிரானது இடம்; கங்கைக்கு நிகரான அழகோடு கலந்து வந்த பொன்னி நதியின் வாய்க்கால்கள் பாய்ந்து வளஞ் சேர்க்கும் கழுமல வளநகராகும்.

அண்டத்தால் எண்திக்கும் அமைந்து அடங்கும் மண்தலத்து
ஆறே, வேறே வான் ஆள்வார் அவர் அவர் இடம் அது எலாம்
மண்டிப் போய் வென்றிப் போர் மலைந்து அலைந்த உம்பரும்
மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய,
முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சி சூழ்
மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம்
கண்டிட்டே செஞ்சொல் சேர் கவின் சிறந்த மந்திரக்
காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே.

4
இம்மண்ணுலகில் இருந்துகொண்டே எண் திசைகளையும் உள்ளடக்கிய அனைத்துலகங்களுக்கும் சென்று வெற்றி கொண்டு வான்உலகை ஆளும் தேவர்களையும் நெருங்கிச் சென்று வெற்றிப்போர் செய்து அத்தேவர்களாலும் எதிர்க்க இயலாதவர்களாய் விளங்கிய அவுணர்களின் வலிமை மிக்க முப்புரங்களைத் தன் நெற்றிவிழியால் வெந்து முடியுமாறு செய்து அவ்இஞ்சி சூழ்ந்த அழியாத பழமையான மூன்று ஊர்களும் முதுமை உடையவாய் அழியுமாறு சினந்த சிவபிரானது இடம் செஞ்சொற்களைக் கண்டு தேர்ந்து தொகுத்த அழகிய மந்திரங்களை மூச்சுக் காற்றாகக் கொண்டு உருவேற்றி வருவோர் வாழும் கழுமலமாகிய வளநகராகும்.

திக்கில்-தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டலச்
சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே
புக்கிட்டே வெட்டிட்டே, புகைந்து எழுந்த சண்டத்தீப்
போலே, பூ,நீர், தீ, கால், மீ, , புணர்தரும் உயிர்கள் திறம்
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்
தோடு ஏயாமே, மா லோகத் துயர் களைபவனது இடம்
கைக்கப் போய் உக்கத்தே கனன்று மிண்டு தண்டலைக்
காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே.

5
எட்டுத் திசைகளுக்கும் காவலர்களாகிய தெய்வங்கள் அங்கங்கே இருந்து காவல் செய்து விளங்கும் இம் மண்ணுலகைச் சீறி அழித்தற்கு வந்த வலிய போர் வல்ல தாருகன் உடலை அவன் எதிரிலேயே புகுந்து வெட்டி வீழ்த்தி புதைந்தெழுந்து வந்த ஊழித் தீப் போலத் தோன்றி மண் நீர் தீ கால் விண் ஆகிய ஐம்பூத வடிவாய் விளங்கும் இவ்வுலகில் வாழும் உயிர்களை அழிக்கச் சிவந்த கோபத்தோடு சொக்க நிருத்தத்தில் நடனமாடி வந்த காளியின் கோபத்தை அவளோடு எதிர் நடனம் ஆடி வென்று பெரிதான இவ்வுலக உயிர்களின் துயரைக் களைந்தவன் ஆகிய சிவபிரானது இடம் பலரும் வெறுக்கக் கனன்று வந்த பேரூழிக் காலத்தும் செறிந்த சோலைகளாகிய காடுகளோடு அழியாத ஊராக விளங்கும் கழுமல வளநகராகும்.
Go to top

செற்றிட்டே வெற்றிச் சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும்
சேரே வாரா, நீள் கோதைத் தெரியிழை பிடி அது ஆய்,
ஒற்றைச் சேர் முற்றல்கொம்பு உடைத் தடக்கை முக்கண் மிக்கு
ஓவாதே பாய் மா தானத்து உறு புகர்முக இறையைப்
பெற்றிட்டே, மற்று இப் பார் பெருத்து மிக்க துக்கமும்
பேரா நோய்தாம் ஏயாமைப் பிரிவு செய்தவனது இடம்
கற்றிட்டே எட்டு-எட்டுக்கலைத்துறைக் கரைச் செலக்
காணாதாரே சேரா மெய்க் கழுமல வள நகரே.

6
சலந்தரன் திரிபுரத்தசுரர் முதலானவர்களைக் கொன்று வெற்றி பெற்று விளங்கும் வலிமை பொருந்திய ஆண் யானை வடிவு கொண்ட தன்னைச் சேர்தற் பொருட்டு வரும் நீண்ட மலர்மாலை அணிந்த உமையம்மை பெண்யானை வடிவு கொண்டு வந்து கூட முற்றிய ஒரு கொம்பையும் நீண்ட கையையும் மூன்று கண்களையும் இடைவிடாது மிகுந்து பொழியும் மதநீரையும் புள்ளிகளோடு கூடிய முகத்தையும் உடைய விநாயகனைப் பெற்றெடுத்து இவ்வுலகில் வாழும் மக்கட்குப் பெரிய துன்பங்களும் நோய்களும் வந்து பொருந்தாதவாறு செய்து காத்தருளிய சிவபிரானது இடம் அறுபத்து நான்கு கலைகளையும் முற்றக் கற்றுக் கரைகண்டு அவற்றின் வழி ஒழுகுவோர் சேர்ந்துறைவதும் அவ்வாறு ஒழுகாதார் அடைய முடியாததுமாகிய கழுமல வளநகராகும்.

பத்திப் பேர் வித்திட்டே, பரந்த ஐம்புலன்கள்வாய்ப்
பாலே போகாமே காவா, பகை அறும் வகை நினையா,
முத்திக்கு ஏவி, கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய்
மூடா, ஊடா, நால் அந்தக்கரணமும் ஒரு நெறி ஆய்,
சித்திக்கே உய்த்திட்டு, திகழ்ந்த மெய்ப் பரம்பொருள்
சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையும் இடம்
கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல்பொருள்
காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே.

7
அன்பாகிய விதையை ஊன்றி பரந்துபட்ட சுவை முதலிய ஐம்புலன்கள் வழி ஒழுகாது தம்மைக் காத்துக் காமம் முதலிய பகைகளைக் கடிந்து முத்திக்கு இடையூறாகும் முக்குணங்களின்வழி ஒழுகாது அந்தக்கரணங்கள் நான்கையும் ஒரு நெறிப்படுத்திச் சிந்தனையில் செலுத்தி விளங்கும் மெய்ப்பரம்பொருளாகிய தன்னையே எண்ணுபவர்களைத் தானாகச் செய்யும் சிவபெருமான் உறையும் இடம் ஆறு அங்கங்களையும் கற்றுணர்ந்தோர் தம்மோடு கலந்து விளங்கும் சிவபரம் பொருளின் திருவடிகளை இடைவிடாது தியானித்து வாழும் கழுமல வளநகராகும்.

செம்பைச் சேர் இஞ்சிச் சூழ் செறிந்து இலங்கு பைம்பொழில்
சேரே வாரா வாரீசத்திரை எறி நகர் இறைவன்,
இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து, அரன் பயின்ற வெற்பு
ஏர் ஆர், நேர் ஓர்பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு
அம் பொன் பூண் வென்றித் தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு
ஆர் ஆர் கூர்வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம்
கம்பத்து ஆர் தும்பித் திண் கவுள் சொரிந்த மும்மதக்
கார் ஆர், சேறு ஆர், மா வீதிக் கழுமல வள நகரே.

8
செம்பினால் இயன்ற மதில்களால் சூழப்பெற்றுச் செறிந்து விளங்குவதும் பசுமையான பொழில்கள் சேர்ந்ததும் நீண்ட கடல்களின் அலைகளால் மோதப் பெறுவதுமாகிய இலங்காபுரி நகருக்கு இறைவனாகிய இராவணன் இவ்வுலக மக்கட்குத் துன்பங்கள் செய்து வாழ்ந்ததோடு சிவபிரான் உறையும் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்டபோது அழகிய மலர் போன்ற ஓர் திருவடி விரல் ஒன்றை ஊன்றி அழகிய பொன்னணிகலன்கள் பூண்ட அவனது வெற்றி நிறைந்த தோள்வலிமையை அழித்து அவன் பிழை உணர்ந்து வந்தனம் செய்த அளவில் அவனுக்கு அரிய கூரிய வாளையும் நீண்ட வாழ்நாளையும் அப்பொழுதே அருள் புரிந்தருளிய சிவபெருமானது இடம்; கம்பங்களில் கட்டிய யானைகளின் வலியகன்னங்கள் முதலியன பொழிந்த மும்மதங்களால் நிலம் கரிய சேறாகும் வீதிகளை உடைய கழுமலநகராகும்.

பன்றிக்கோலம் கொண்டு இப் படித்தடம் பயின்று இடப்
பான் ஆம் ஆறு ஆனாமே, அப் பறவையின் உருவு கொள
ஒன்றிட்டே அம்புச் சேர் உயர்ந்த பங்கயத்து அவனோ தான்
ஓதான், அஃது உணராது, உருவினது அடிமுடியும்
சென்றிட்டே வந்திப்ப, திருக்களம் கொள் பைங்கணின்
தேசால், வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனது இடம்
கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும்,
காலே வாரா, மேலே பாய் கழுமல வள நகரே.

9
திருமால் பன்றி உருவம் எடுத்து இவ்வுலகைப் பிளந்து சென்று பாதாளம்வரை தேடியும் நீரில் தோன்றிய தாமரை மலரில் உறையும் நான்முகன் வேதங்களை ஓதுபவனாக இருந்தும் அதன் உண்மைப் பொருளை உணராது அன்னப்பறவை வடிவம் எடுத்து வானவெளியில் பறந்து சென்று தேடியும் தம் எதிரே தோன்றிய வடிவினது அடிமுடிகளைக் காணாது அயர்த்துச் சென்று வழிபட அவர்களின் பசுமையான கண்களுக்கு அழகிய நீலகண்டத்தோடு தனது வல்லமையால் வேறோர் வடிவம் தெரியச் செய்தவனது இடம் ஆன் கன்றுகள் முன்றிலில் நிறைந்து கலந்து நின்று இல்லத்தை நிறைக்கவும் வாய்க்கால்கள் வந்து மேல் ஏறிப்பாயவும் வளத்தால் நிறைந்து விளங்கும் கழுமல வளநகராகும்.

தட்டு இட்டே முட்டிக்கைத் தடுக்கு இடுக்கி, நின்று உணா,
தாமே பேணாதே நாளும் சமணொடும் உழல்பவனும்;
இட்டத்தால், அத்தம்தான் இது அன்று; அது என்று நின்றவர்க்கு
ஏயாமே வாய் ஏதுச்சொல், இலை மலி மருதம்பூப்
புட்டத்தே அட்டிட்டுப் புதைக்கும் மெய்க் கொள் புத்தரும்;
போல்வார்தாம் ஓராமே போய்ப் புணர்வு செய்தவனது இடம்
கட்டிக் கால் வெட்டித் தீம்கரும்பு தந்த பைம்புனல்
காலே வாரா, மேலே பாய் கழுமல வள நகரே.

10
தட்டைக் கையில்ஏந்தி வளைந்த கையில் தடுக்கை இடுக்கி நின்று உண்டு ஆடைகளால் தம்மைப் பேணாது நாள்தோறும் வருந்தித் திரியும் சமணர்களும் தம்விருப்பப்படி கேட்பவர்க்குத் தெளிவு ஏற்படாதவாறு பொருள் இது அன்று அதுதான் என்று வாய்க்கு வந்தபடி காரணம் கூறுபவரும் இலைகள் நெருங்கிய மருதமரத்தின் பூவை அரைத்துப் பின்புறத்தேப் பூசிச் சாயமூட்டிய ஆடையைத் தம் உடலின் பின்பாகத்தே சுற்றிக்கொண்டு உடலை மறைப்போரும் ஆகிய புத்தர்களும் போல்பவர் கண்டறியாதவாறு சென்று எழுந்தருளியுள்ள சிவபிரானது இடம் வெல்லக்கட்டிகளைத்தரும் இனிய கரும்பை வெட்டியதால் அக்கரும்பு தந்த இனியசாறு வாய்க்கால் வழியே வந்து மேல் ஏறிப்பாயும் வளமுடைய கழுமலவளநகராகும்.
Go to top

கஞ்சத்தேன் உண்டிட்டே களித்து வண்டு, சண்பகக்
கானே தேனே போர் ஆரும் கழுமல நகர் இறையைத்
தஞ்சைச் சார் சண்பைக் கோன் சமைத்த நல் கலைத் துறை,
தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ் விரகன் மொழிகள்,
எஞ்சத் தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு,
ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா,
வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொளப் பயிற்றுவோர்
மார்பே சேர்வாள், வானோர் சீர் மதிநுதல் மடவரலே.

11
தாமரை மலரிலுள்ள தேனைக் குடித்துக்களித்த வண்டுகள் சண்பக மரச்சோலைகளில் உள்ள தேன் வண்டுகளோடு போரிடும் கழுமல வளநகர் இறைவனைத் தஞ்சமாகச் சார்ந்துள்ள சண்பைநகர்த் தலைவனும் தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் குறைவின்றிப் பாடியமைத்த தேனுக்கு நிகரான இப்பதிகப் பாடல்களை நல்ல கலைகளில் துறைபோய்த் தமக்குத் தாமே நிகராய் இருபத்தொரு பண்முறையினால் இயல்பாக வஞ்சனையின்றி மனம் பொருந்தப்பாடுபவர்களின் மார்பினில் தேவர்களால் போற்றப் பெறும் சிறப்புமிக்க பிறை போன்ற நெற்றியினை உடைய திருமகள் சேர்வாள்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: சீர்காழி
1.019   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பிறை அணி படர் சடை
Tune - நட்டபாடை   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.024   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூஆர் கொன்றைப் புரிபுன் சடை
Tune - தக்கராகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.034   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அடல் ஏறு அமரும் கொடி
Tune - தக்கராகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.079   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அயில் உறு படையினர்; விடையினர்;
Tune - குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.081   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நல்லார், தீ மேவும் தொழிலார்,
Tune - குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.102   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உரவு ஆர் கலையின் கவிதைப்
Tune - குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.126   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திருத்தாளச்சதி பதிகம், பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
Tune - வியாழக்குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.129   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சே உயரும் திண் கொடியான்
Tune - மேகராகக்குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.011   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,
Tune - இந்தளம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.039   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
Tune - இந்தளம்   (சீர்காழி )
2.049   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பண்ணின் நேர் மொழி மங்கைமார்
Tune - சீகாமரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.059   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நலம் கொள் முத்தும் மணியும்
Tune - காந்தாரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.075   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்
Tune - காந்தாரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.096   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொங்கு வெண்புரி வளரும் பொற்பு
Tune - பியந்தைக்காந்தாரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.097   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நம் பொருள், நம் மக்கள்
Tune - நட்டராகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.113   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொடி இலங்கும் திருமேனியாளர், புலி
Tune - செவ்வழி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.022   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
Tune - காந்தாரபஞ்சமம்   (சீர்காழி )
3.040   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்
Tune - கொல்லி   (சீர்காழி )
3.043   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சந்தம் ஆர் முலையாள் தன
Tune - கௌசிகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.118   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மடல் மலி கொன்றை, துன்று
Tune - புறநீர்மை   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
4.082   திருநாவுக்கரசர்   தேவாரம்   பார் கொண்டு மூடிக் கடல்
Tune - திருவிருத்தம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
4.083   திருநாவுக்கரசர்   தேவாரம்   படை ஆர் மழு ஒன்று
Tune - திருவிருத்தம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
5.045   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாது இயன்று மனைக்கு இரு!
Tune - திருக்குறுந்தொகை   (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
7.058   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை
Tune - தக்கேசி   (சீர்காழி பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை)
8.137   மாணிக்க வாசகர்    திருவாசகம்   பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
Tune - அக்ஷரமணமாலை   (சீர்காழி )
11.027   பட்டினத்துப் பிள்ளையார்   திருக்கழுமல மும்மணிக் கோவை   திருக்கழுமல மும்மணிக் கோவை
Tune -   (சீர்காழி )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000