சீரின் ஆர் மணியும்(ம்) அகில் சந்தும் செறி வரை
வாரி நீர் வரு பொன்னி வடமங்கலக்குடி
நீரின் மா முனிவன் நெடுங்கைகொடு நீர்தனைப்
பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே.
|
1
|
மலையிலிருந்து புகழ்மிக்க மணிகள், அகில், சந்தனம் ஆகியனவற்றை வாரிக்கொண்டுவரும் நீரை உடைய பொன்னி நதியின் வடபால் விளங்கும் திருமங்கலக்குடியில், அக்காவிரி நீரினைப் பெருமைமிக்க முனிவர் ஒருவர், தமது வலிமை மிக்க நீண்டகையால் கோயிலில் இருந்தவாறே நீட்டி எடுத்து நிறைத்து இறைவனுக்கு அபிடேகம் புரிந்து அர்ச்சிக்க பழையவனாகிய பெருமான் மகிழ்ந்து அதனை ஏற்று வீற்றிருந்தருள்கின்றான். | |
பணம் கொள் ஆடுஅரவு அல்குல் நல்லார் பயின்று
ஏத்தவே,
மணம் கொள் மா மயில் ஆலும் பொழில் மங்கலக்குடி
இணங்கு இலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட,
அணங்கினோடு இருந்தான் அடியே சரண் ஆகுமே.
|
2
|
ஆடும் அரவினது படம் போன்ற அல்குலை உடைய மகளிர் பலகாலும் சொல்லி ஏத்த, மணம் பொருந்தியனவும் பெரிய மயில்கள் ஆடுவனவுமான பொழில்கள் சூழ்ந்த மங்கலக்குடியில் தம்முள் மாறுபடும் செய்திகளைக் கூறும் வேதங்களை வல்ல அந்தணர்களும் இமையவர்களும் வணங்கிப்போற்ற உமையம்மையாரோடு எழுந்தருளியிருக்கும் பெருமான் திருவடிகளே நமக்குப் புகலிடமாகும். | |
கருங்கையானையின் ஈர் உரி போர்த்திடு கள்வனார்,
மருங்குஎலாம் மணம் ஆர் பொழில் சூழ் மங்கலக்குடி
அரும்பு சேர் மலர்க்கொன்றையினான் அடி அன்பொடு
விரும்பி ஏத்த வல்லார் வினைஆயின வீடுமே.
|
3
|
கரிய துதிக்கையை உடைய யானையை உரித்த தோலைப் போர்த்த கள்வரும், அயலிடமெல்லாம் மணம் பரப்பும் பொழில்கள் சூழ்ந்த மங்கலக்குடியில் அரும்புகளோடு கூடிய கொன்றை மலர் மாலையை அணிந்தவரும் ஆகிய சிவபிரான் திருவடிகளை அன்போடு விரும்பி ஏத்த வல்லவர் வினைகள் நீங்கும். | |
பறையினோடு ஒலிபாடலும் ஆடலும் பாரிடம்,
மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடிக்
குறைவு இலா நிறைவே! குணம் இல் குணமே! என்று
முறையினால் வணங்கு(ம்)மவர் முன்நெறி காண்பரே.
|
4
|
பறையொலியோடு பாடல் ஆடல்புரியும் பூதகணங்கள் சூழ, வேத ஒழுக்கத்தோடு நிறைந்து வாழும் அந்தணர் வாழும் திருமங்கலக்குடியில் விளங்கும் இறைவனை, குறைவிலா நிறைவே என்றும், பிறர்க்கு இல்லாத எண்குணங்களை உடையவனே என்றும் முறையோடு வணங்குவோர், முதன்மையான சிவநெறியை அறிவார்கள். | |
ஆனில் அம்கிளர் ஐந்தும் அவிர் முடி ஆடி, ஓர்
மான் நில் அம் கையினான், மணம் ஆர் மங்கலக்குடி
ஊன் இல்வெண்தலைக் கை உடையான் உயர் பாதமே
ஞானம் ஆக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே.
|
5
|
பசுவிடம் விளங்கும் பால், தயிர் முதலான ஐந்து தூயபொருள்களிலும் மூழ்கி, மானை ஏந்திய அழகிய கையினராய், மணம் பொருந்திய மங்கலக்குடியில், தசைவற்றிய வெள்ளிய பிரமகபாலத்தைக் கையின்கண் உடையவராய் விளங்கும் பெருமானார் திருவடி அடைதலே ஞானத்தின் பயனாவது என்பதை அறிந்து அவற்றை ஏத்த வல்லவர் வினைகள் நாசமாகும். | |
| Go to top |
தேனும் ஆய் அமுதுஆகி நின்றான், தெளி சிந்தையுள
வானும் ஆய் மதி சூட வல்லான்; மங்கலக்குடிக்
கோனை நாள்தொறும் ஏத்திக் குணம்கொடு கூறுவார்
ஊனம் ஆனவை போய் அறும்; உய்யும் வகை, அதே.
|
6
|
தேனும் அமுதமும் போல இனியவனும், தெளிந்த சிந்தையில் ஞானவெளியாக நிற்பவனும், பிறைமதியை முடியிற் சூட வல்லவனும் ஆகிய திருமங்கலக்குடிக்கோனை நாள்தோறும் வணங்கி, அவன் குணங்களைப் புகழ்பவர்களின் குறைகள் நீங்கும். உய்யும் வழி அதுவேயாகும். | |
வேள் படுத்திடு கண்ணினன், மேரு வில் ஆகவே
வாள் அரக்கர் புரம் எரித்தான், மங்கலக்குடி
ஆளும் ஆதிப்பிரான், அடிகள் அடைந்து ஏத்தவே,
கோளும் நாள் அவை போய் அறும்; குற்றம் இல்லார்களே
|
7
|
மன்மதனை அழித்த நுதல் விழியினனும், மேரு மலையை வில்லாகக் கொண்டு வாட்படை உடைய அரக்கர்களின் முப்புரங்களை எரித்தவனும் ஆகிய, திருமங்கலக்குடியை ஆளும் முதற்பிரானாகிய சிவபிரான் திருவடிகளை அடைந்து, அவனை ஏத்துவார் நாள், கோள் ஆகியவற்றால் வரும் தீமைகள் அகல்வர். குற்றங்கள் இலராவர். | |
பொலியும் மால்வரை புக்கு எடுத்தான் புகழ்ந்து ஏத்திட,
வலியும் வாளொடு நாள் கொடுத்தான்; மங்கலக்குடிப்
புலியின் ஆடையினான்; அடி ஏத்திடும் புண்ணியர்
மலியும் வான் உலகம் புக வல்லவர்; காண்மினே!
|
8
|
விளங்கித் தோன்றும் பெரிய கயிலைமலையைப் பெயர்த்து எடுத்த இராவணனை முதலில் அடர்த்துப் பின் அவன் புகழ்ந்து ஏத்திய அளவில் அவனுக்கு வலிமை, வாள், நீண்ட ஆயுள் முதலியனவற்றைக் கொடுத்தருளியவனும், புலித்தோல் ஆடை உடுத்தவனும் ஆகிய மங்கலக்குடிப் பெருமானை வணங்கி, அவன் திருவடிகளை ஏத்தும் புண்ணியர் இன்பம் மிகப்பெறுவர். சிவலோகம் சேரவல்லவர் ஆவர். காண்மின். | |
ஞாலம் முன் படைத்தான் நளிர்மாமலர்மேல் அயன்,
மாலும், காண ஒணா எரியான்; மங்கலக்குடி
ஏல வார்குழலாள் ஒருபாகம் இடம்கொடு
கோலம் ஆகி நின்றான்; குணம் கூறும்! குணம் அதே.
|
9
|
உலகைப் படைத்தவனாகிய குளிர்ந்த தாமரை மலர் மேல் உறையும் பிரமனும் திருமாலும் அறிதற்கரிய நிலையில் எரி உருவானவனும், திருமங்கலக்குடியில் மண மயிர்ச்சாந்தணிந்த குழலினளாய உமையம்மையை இடப்பாகமாகக் கொண்ட அழகிய வடிவினனுமாகிய சிவபிரானின் குணத்தைக் கூறுங்கள். அதுவே உங்களைக் குணமுடையவராக்கும். | |
மெய்யில் மாசினர், மேனி விரி துவர் ஆடையர்,
பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர் மங்கலக்குடிச்
செய்யமேனிச் செழும் புனல்கங்கை செறி சடை
ஐயன் சேவடி ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே.
|
10
|
அழுக்கேறிய மேனியராகிய சமணர்கள், மேனி மீது விரித்துப் போர்த்த துவராடையராகிய சாக்கியர் ஆகியோர்களின் பொய்யுரைகளை விட்டுச் சைவசமய உண்மைகளை உணரும் புண்ணியர்கள் வாழும் திருமங்கலக்குடியில், சிவந்த திருமேனியனாய்ச் செழுமையான கங்கை நதி செறிந்த சடையினனாய் விளங்கும் தலைவன் சேவடிகளை ஏத்த வல்லார்க்கு, அழகிய பேரின்ப வாழ்வு அமையும். | |
| Go to top |
மந்த மாம்பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய
எந்தையை, எழில் ஆர் பொழில் காழியர்காவலன்
சிந்தைசெய்து அடி சேர்த்திடு ஞானசம்பந்தன் சொல்
முந்தி ஏத்த வல்லார், இமையோர்முதல் ஆவரே.
|
11
|
தென்றற் காற்றைத்தரும் பொழில்கள் சூழ்ந்த திரு மங்கலக்குடியில் நிலைபெற்றுள்ள எம் தந்தையாகிய சிவபிரானை அழகிய பொழில் சூழ்ந்த காழிப்பதியின் தலைவனாகிய ஞானசம்பந்தன், சிந்தித்து அவன் திருவடிகளைச் சேர்க்கவல்லதாகப் பாடிய இத்திருப்பதிக வாய்மொழியை அன்புருக ஏத்த வல்லவர், இமையோர் தலைவர் ஆவர். | |