மறையானை, மாசு இலாப் புன்சடை மல்கு வெண்
பிறையானை, பெண்ணொடு ஆண் ஆகிய பெம்மானை,
இறையானை, ஏர் கொள் கச்சித் திரு ஏகம்பத்து
உறைவானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.
|
1
|
வேதவடிவினன், குற்றமற்ற சிவந்த சடையிற் பொருந்திய வெண்பிறையினன். பெண்ணும் ஆணுமாகிய பெருமான் எல்லாப் பொருள்களிலும் உறைபவன். அழகிய கச்சிப்பதியில் திருஏகம்பம் என்னும் கோயிலில் உறைபவன். அத்தகையோனை அல்லது என் உள்ளம் பிறவற்றை நினையாது. | |
நொச்சியே, வன்னி, கொன்றை, மதி, கூவிளம்,
உச்சியே புனைதல் வேடம்; விடைஊர்தியான்;
கச்சி ஏகம்பம் மேய கறைக்கண்டனை
நச்சியே தொழுமின்! நும்மேல் வினை நையுமே.
|
2
|
நொச்சியிலை, வன்னிஇலை, கொன்றை மலர் பிறைமதி, வில்வம் ஆகியவற்றை முடியிற்புனைந்துள்ளமை அவன் அடையாளமாகும். விடைஊர்தியை உடையவன் அவன். கச்சியில் திருவேகம்பத்தில் எழுந்தருளிய அக்கறைக்கண்டனை விரும்பித் தொழுவீர்களாக. உம்மேல் வரும் வினைகள் மெலியும். | |
பார் ஆரும் முழவம், மொந்தை, குழல், யாழ், ஒலி
சீராலே பாடல் ஆடல் சிதைவுஇல்லது ஓர்
ஏர் ஆர் பூங் கச்சி ஏகம்பனை, எம்மானை,
சேராதார் இன்பம் ஆய நெறி சேராரே.
|
3
|
உலகிற் பொருந்திய முழவம், மொந்தை, குழல், யாழ் ஆகியவற்றின் ஒலியோடு முறையான பாடலும் ஆடலும் குறையாத அழகிய கச்சி ஏகம்பத்து எம்மானைச் சேராதவர் இன்பமான நெறிகளைச் சேராதவர் ஆவர். நும் வினை - உங்கள் கர்மம், மேல்வினை - ஆகாமியம். | |
குன்று ஏய்க்கும் நெடுவெண்மாடக் கொடி கூடிப் போய்
மின் தேய்க்கும் முகில்கள் தோயும் வியன்கச்சியுள
மன்று ஏய்க்கும் மல்கு சீரால் மலி ஏகம்பம்
சென்று ஏய்க்கும் சிந்தையார்மேல் வினை சேராவே.
|
4
|
குன்றுகள் போன்று உயர்ந்த சுதைமாடங்களில் கட்டிய கொடிகள் கூடிச் சென்று மின்னல்கள் உராயும் முகில்களைத் தோயும் விரிந்த கச்சிப்பதியில் பலவாறு மன்றுகளில் புகழப்படும் சீர்மையை உடையவன் எழுந்தருளிய திருஏகம்பத்தை அடைந்து மனம் பொருந்த வழிபாடு செய்யும் அடியவர்கள்மேல் வினைகள் சேரா. | |
சடையானை, தலை கை ஏந்திப் பலி தருவார்தம்
கடையே போய் மூன்றும் கொண்டான் கலிக் கச்சியுள
புடையே பொன் மலரும் கம்பைக்கரை ஏகம்பம்
உடையானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.
|
5
|
சடைமுடியை உடையவனும், தலையோட்டைக் கையில் ஏந்திப் பலியிடுவார் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் உடல் பொருள் ஆவி ஆகியவற்றைக் கொண்டவனும் ஆகிய ஆரவாரம் நிறைந்த கச்சிப் பதியில் பொன்னிறமலர்கள் மலரும் கம்பை நதிக்கரையில் விளங்கும் திருஏகம்பம் உடையானை அல்லது பிறரை எனது உள்ளம் விரும்பாது. | |
| Go to top |
மழுவாளோடு எழில் கொள் சூலப்படைவல்லார்தம்
கெழு வாளோர், இமையார், உச்சி உமையாள் கங்கை
வழுவாமே மல்கு சீரால் வளர் ஏகம்பம்
தொழுவாரே விழுமியார்; மேல்வினை துன்னாவே.
|
6
|
மழுவாள் அழகிய சூலம் ஆகிய படைகளை ஏந்தி யவர். தம்மிடம் பொருந்திய ஒளியுடையவர். இமயமலையின் உச்சியில் உறைபவர். உமையம்மை கங்கை ஆகியோருடன் கூடி அவர் எழுந்தருளிய பெருகும் புகழ் பொருந்திய ஏகம்பத்தைத் தொழுபவரே விழுமியோர் ஆவர். அவரை வினைகள் அணுகா. | |
விண் உளார்; மறைகள்வேதம் விரித்து ஓதுவார்
கண் உளார்; கழலின் வெல்வார், கரி காலனை;
நண்ணுவார் எழில் கொள் கச்சிநகர் ஏகம்பத்து
அண்ணலார்; ஆடுகின்ற அலங்காரமே!
|
7
|
வானகத்தில் உறைபவர். மறைகளாகிய வேதங்களை விரித்து ஓதுபவர்களின் கண்களின் ஒளிர்பவர். கருநிறம் உடைய காலனை வீரக்கழல் அணிந்த திருவடியால் உதைத்து வென்றவர். தம்மைச் சரணாக அடைபவர்களின் எழிலைக் கொள்ளும், கச்சி நகரில் விளங்கும் திருஏகம்பத்துத்தலைவர் ஆடுகின்ற ஆடல் மிக்க அழகுடையது. | |
தூயானை, தூய ஆய மறை ஓதிய
வாயானை, வாள் அரக்கன் வலி வாட்டிய
தீயானை, தீது இல் கச்சித் திரு ஏகம்பம்
மேயானை, மேவுவார் என் தலைமேலாரே.
|
8
|
தூயவன். தூயனவாகிய மறைகளை ஒதிய வாயினன். ஒளி பொருந்திய வாளினை உடைய இராவணனின் வலிமையை அடர்த்த, தீயேந்தியவன். குற்றமற்ற திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளியிருப்பவன். அவனை அடைந்து துதிப்பவர் என் தலைமேல் கொள்ளத்தக்கவர். | |
நாகம் பூண்; ஏறுஅது ஏறல்; நறுங்கொன்றை, தார்;
பாகம் பெண்; பலியும் ஏற்பர்; மறை பாடுவர்;
ஏகம்பம் மேவி ஆடும் இறை இருவர்க்கும்
மா கம்பம் அறியும் வண்ணத்தவன் அல்லனே!
|
9
|
நாகம் அவனது அணிகலன். அவனது ஊர்தி விடை. மணம் கமழும் கொன்றை அவனதுமாலை. ஒருபாகத்தில் பெண்ணைக் கொண்டவன். பிச்சையும் ஏற்பவன். மறைகளைப்பாடுபவன். கச்சித்திருஏகம்பத்தில் எழுந்தருளி மகிழ்வோடு ஆடும் இறைவன். திருமால் பிரமர்க்குப் பெரிய நடுக்கத்தைத் தருவதோடு அவர்களால் அறியத்தக்க வண்ணத்தவன் அல்லன். | |
போதியார், பிண்டியார், என்று இவர் பொய்ந்நூலை
வாதியா வம்மின்! அம் மா எனும் கச்சியுள
ஆதியார் மேவி ஆடும் திரு ஏகம்பம்
நீதியால் தொழுமின்! நும்மேல் வினை நில்லாவே.
|
10
|
போதிமரநிழலில் அமர்ந்த புத்தனை வணங்கு வோரும், அசோகமர நிழலில் அமர்ந்த அருகனை வணங்குவோரும் ஆகிய புத்தசமண மதத்தினரின் பொய்ந்நூல்களை ஆராய்வதை விடுத்து, வாருங்கள். அழகிய மாமர நீழலில் விளங்கும் தலைவனாகிய சிவபிரான் ஆடும் கச்சியுள் விளங்கும் திருஏகம்பத்தை விதிப்படி வழிபடுங்கள். நும் மேல் வரும் வினைகள் நில்லா. | |
| Go to top |
அம் தண் பூங்கச்சி ஏகம்பனை, அம்மானை,
கந்து அண் பூங்காழிஊரன் கலிக்கோவையால்
சந்தமே பாட வல்ல தமிழ் ஞானசம்
பந்தன் சொல் பாடி ஆட, கெடும், பாவமே.
|
11
|
அழகும் தண்மையும் பொலிவும் உடைய கச்சி ஏகம்பத்தில் விளங்கும் தலைவனைப்பற்றி, நீர் வளமும் தண்மையும் அழகும் உடைய சீகாழிப்பதியுள் தோன்றியவனாய் ஒலிமாலை எனப்படும் திருப்பதிகங்களால் இசைத்தமிழில் பாடவல்ல ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப் பாடல்களைப் பாடி ஆடிப் போற்றப் பாவம் கெடும். | |