சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.030   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்புறம்பயம் - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு கரும்பன்னசொல்லம்மை உடனுறை அருள்மிகு சாட்சிவரதநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=CekV2gQOEpA  https://www.youtube.com/watch?v=TrbvYsHCGkA   Add audio link Add Audio

மறம் பயம் மலிந்தவர் மதில் பரிசு அறுத்தனை;
நிறம் பசுமை செம்மையொடு இசைந்து, உனது நீர்மை
திறம் பயன் உறும் பொருள் தெரிந்து உணரும் நால்வர்க்கு
அறம்பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்!

1
புறம்பயம் அமர்ந்தவனே! வீரமும் பயமும் கொண்டு தன்னோடு போர்மலைந்த அசுரர்களின் முப்புரங்களின் வலிமையை அறுத்தாய். உனது தன்மை பசுமை நிறமும் செம்மையும் கலந்தது. ஆகமங்களின் பயனாகச் சொல்லத்தக்க பொருளைத் தெரிந்துணர விரும்பிய முனிவர் நால்வர்க்கு அறமாகிய பயனை உணர்த்தியருளினாய்.

விரித்தனை, திருச்சடை; அரிஉத்து ஒழுகு வெள்ளம்
தரித்தனை; அது அன்றியும், மிகப் பெரிய காலன்
எருத்து இற உதைத்தனை; இலங்கிழை ஒர்பாகம்
பொருத்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய்!

2
புறம்பயத்தில் எழுந்தருளியவனே! சடையை விரித்து பெருகி வந்த கங்கை வெள்ளத்தைத் தாங்கினாய்: அஃதன்றியும் மிகப்பெரிய காலனின் பிடரி வருந்துமாறு உதைத்தாய். விளங்கும் அணிகலன் பூண்ட உமையம்மையை மேனியின் ஒரு பாகமாகப் பொருத்தியுள்ளாய்.

விரிந்தனை; குவிந்தனை; விழுங்கு உயிர் உமிழ்ந்தனை;
திரிந்தனை; குருந்து ஒசி பெருந்தகையும் நீயும்
பிரிந்தனை; புணர்ந்தனை; பிணம் புகு மயானம்
புரிந்தனை; மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய்!

3
புறம்பயம் அமர்ந்த பெருமானே! எல்லாமாக விரிந்து நின்றாய்: நுண்ணியனாகக் குவிந்துள்ளாய்: ஊழிக்காலத்தில் விழுங்கிய உயிர்களை வினைப்போகத்திற்காக மீண்டும் உடலோடு உலவவிட்டாய்: உன் நிலையை விடுத்துப் பல்வகை வடிவங்கள் எடுத்துத் திரிந்தாய். குருந்தொசித்த திருமால் மோகினியாகவர அவரோடு கூடிப்பிரிந்தும் புணர்ந்தும் விளையாடினாய்: பிணம்புகும் சுடுகாட்டை விரும்பிமகிழ்ந்தாய்.

வளம் கெழு கடும்புனலொடும் சடை ஒடுங்க,
துளங்கு அமர் இளம்பிறை சுமந்தது விளங்க,
உளம் கொள அளைந்தவர் சுடும் சுடலை நீறு
புளம் கொள விளங்கினை புறம்பயம் அமர்ந்தோய்!

4
புறம்பயம் அமர்ந்த பெருமானே! வளமை பொருந்தியதாய்க் கடுமையாகப் பெருகிவந்த கங்கையொடு கூடிய சடையசைய விளங்கும் இளம்பிறையை கலங்கத்தாங்கி மனம் நெகிழ்ந்து வணங்கும் அடியவர்க்குச் சுடுகாட்டில் விளைந்த நீற்றொடு தோன்றும் உன் கோலத்தை அறிவிற் காட்டி விளங்குகின்றாய்.

பெரும் பிணி பிறப்பினொடு இறப்பு இலை; ஒர் பாகம்,
கரும்பொடுபடும்சொலின்மடந்தையை மகிழ்ந்தோய்;
சுரும்பு உண அரும்பு அவிழ் திருந்தி எழு கொன்றை
விரும்பினை புறம்பயம் அமர்ந்த இறையோனே!

5
புறம்பயம் அமர்ந்த இறைவனே! நீ பெரிதாகப் பற்றிய நோய், பிறப்பு இறப்பு, இல்லாதவன். கரும்படு சொல்லி என்னும் பெயருடைய உமையம்மையுடன் மகிழ்ந்தவன். வண்டுகள் தேனுண்ண அதனால் அழகுற அவிழும் கொன்றைமலர்களை விரும்பியவன்.
Go to top

அனல் படு தடக்கையவர், எத் தொழிலரேனும்,
நினைப்பு உடை மனத்தவர் வினைப்பகையும் நீயே;
தனல் படு சுடர்ச் சடை தனிப் பிறையொடு ஒன்றப்
புனல் படு கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய்!

6
புறம்பயம் அமர்ந்த பெருமானே! தீ வளர்க்கும் நீண்டகையை உடைய அந்தணர்கள் உன்னை நினையும் மனத்தவராயின் அவர் எத்தொழிலை மேற்கொண்டவர் ஆயினும் அவர்தம் தீவினைகட்குப் பகையாயிருந்து தீர்ப்பவன் நீ. தீக்கொழுந்து போன்ற ஒளி பொருந்திய சடையில் தனித்த பிறையோடு பொருந்தக் கங்கை கிடக்குமாறு செய்துள்ளவன், நீ.

மறத்துறை மறுத்தவர், தவத்து அடியர், உள்ளம்
அறத்துறை ஒறுத்து உனது அருள்கிழமை பெற்றோர்,
திறத்து உள திறத்தினை மதித்து அகல நின்றும்,
புறத்து உள திறத்தினை புறம்பயம் அமர்ந்தோய்!

7
புறம்பயம் அமர்ந்தோய்! பாவமான செயல்களை விரும்பாத தவத்தைப்புரியும் அடியவர் உள்ளங்களில் அறநெறிப் பயனையும் அடைய விரும்பாதவாறு அதனைக்கடிந்து, உன் அருள் உரிமையைப் பெற்றோர் திறத்தினுக்கு ஏற்ப அருள் வழங்கும் தன்மையனாய் வேறாய் நின்றும் அருள் புரிபவன் நீ.

இலங்கையர் இறைஞ்சு இறை, விலங்கலில் முழங்க
உலம் கெழு தடக்கைகள் அடர்த்திடலும், அஞ்சி,
வலம்கொள எழுந்தவன் நலம் கவின, அஞ்சு
புலங்களை விலங்கினை புறம்பயம் அமர்ந்தோய்!

8
புறம்பயம் அமர்ந்தவனே! இலங்கை மக்கள் வணங்கும் தலைவனாகிய இராவணன் மலையின் கீழ் அகப்பட்டு முழங்க அவன் வலிய தலைகளோடு கைகளை அடர்த்து அவன் அஞ்சிப் போற்ற வாளும், நாளும் அளித்து அவனுக்கு வெற்றி உண்டாக அருள் புரிந்தவன் நீ. நன்மைகள் உண்டாக ஐந்து புலன்களை வென்றவன் நீ.

வடம் கெட நுடங்குண இடந்த இடை அல்லிக்
கிடந்தவன், இருந்தவன், அளந்து உணரல் ஆகார்
தொடர்ந்தவர், உடம்பொடு நிமிர்ந்து, உடன்வணங்க,
புள் தங்கு அருள்செய்து ஒன்றினை புறம்பயம்
அமர்ந்தோய்!

9
புறம்பயம் அமர்ந்தவனே! ஆல் இலையில் துயின்ற திருமாலும் அவனது கொப்பூழாகிய தாமரையில் இருந்துதோன்றிய பிரமனும் உன்னை அளந்தறிய இயலாதவரா(யி)னார். பின் அவர்கள் தொடர்ந்து பழைய உருவோடு வணங்க அவர்கட்கு கருடப்புள், அன்னப்புள் ஆகியவற்றை ஊர்தியாகக் கொண்டு படைத்தல், காத்தல் ஆகிய தொழில்களைச் செய்யுமாறு அருள்புரிந்தாய்.

விடக்கு ஒருவர் நன்று என, விடக்கு ஒருவர் தீது என,
உடற்கு உடை களைந்தவர், உடம்பினை மறைக்கும்
படக்கர்கள், பிடக்குஉரை படுத்து, உமை ஒர்பாகம்
அடக்கினை புறம்பயம் அமர்ந்த உரவோனே!

10
புறம்பயம் அமர்ந்த வலியவனே! ஊன் உண்டல் நன்றென்று கூறும் தேரர்கள், தீதென்று கூறும் சமணர்கள், உடலில் உடையின்றித்திரியும் திகம்பரர்கள் உடலைப் போர்த்தித்திரியும் புத்தர்கள் ஆகியோர் கூறும் பிடகநூல் முதலியவற்றின் உரைகளைக் கொள்ளாது உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குகின்றாய்.
Go to top

கருங்கழி பொரும் திரை கரைக் குலவு முத்தம்
தரும் கழுமலத்து இறை தமிழ்க் கிழமை ஞானன்
சுரும்பு அவிழ் புறம்பயம் அமர்ந்த தமிழ் வல்லார்,
பெரும் பிணி மருங்கு அற, ஒருங்குவர், பிறப்பே.

11
கரிய உப்பங்கழிகள், பெரிய அலைகளால், விளங்கும் முத்துக்களைத்தந்து உலவும் கழுமலத்தார்க்குத் தலைவனும் தமிழுக்கு உரிமை பூண்டவனுமாகிய ஞானசம்பந்தன், வண்டுகள் ஒலி செய்யும் புறம்பயம் அமர்ந்தபிரானை விரும்பிப் பாடிய இப்பதிகத்தமிழை வல்லவர்கள் காலங்காலமாக வரும் பெரும் பிணியாகிய பிறப்பு நீங்கப் பெறுவர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்புறம்பயம்
2.030   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மறம் பயம் மலிந்தவர் மதில்
Tune - இந்தளம்   (திருப்புறம்பயம் சாட்சிவரதநாதர் கரும்பன்னசொல்லம்மை)
6.013   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொடி மாட நீள் தெருவு
Tune - குறிஞ்சி   (திருப்புறம்பயம் சாட்சிவரதநாதர் கரும்பன்னசொல்லம்மை)
7.035   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அங்கம் ஓதி ஓர் ஆறைமேற்றளி
Tune - கொல்லி   (திருப்புறம்பயம் சாட்சிவரதேசுவரர் கரும்படுசொல்லம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000