சுற்றமொடு பற்று அவை துயக்குஅற அறுத்துக்
குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்
மற்றுஅவரை வானவர்தம் வானுலகம் ஏற்றக்
கற்றவன் இருப்பது கருப்பறியலூரே.
|
1
|
சுற்றம், பற்று ஆகியவற்றை முற்றிலும் அறுத்துக் குற்றமற்ற நல்ல குணங்களோடு கூடி விளங்கும் அடியவர்களைத் தேவர்கள் வாழும் வானுலகம் ஏற்றலைச் செய்யும் சிவபிரான் இருக்குமிடம் கருப்பறியலூர். | |
வண்டு அணைசெய் கொன்றைஅது வார்சடைகள்மேலே
கொண்டு; அணைசெய் கோலம் அது, கோள் அரவினோடும்;
விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர, ஒர் அம்பால்;
கண்டவன் இருப்பது கருப்பறியலூரே.
|
2
|
வண்டுகள் அணைதலைச் செய்கின்ற கொன்றை மலர்மாலையை நீண்ட சடைமுடிமீது அணிந்து, துன்பம் செய்யும் பாம்பு அணைதலைச் செய்யும் கோலம் பூண்டவராய், மும்மதில்களும் உடைந்து நிலத்தினை அடையுமாறு ஓரம்பால் எய்தழித்தவர் இருப்பது கருப்பறியலூர். | |
வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல் ஆகப்
போதினொடு போது, மலர், கொண்டு புனைகின்ற
நாதன் என, நள் இருள் முன் ஆடு, குழை தாழும்
காதவன் இருப்பது கருப்பறியலூரே.
|
3
|
வேதியர்கள் வேதங்களை ஓதுவதோடு வேள்வி முதலியனவற்றைச் செய்து, காலம் பெற அரும்புகளையும் மலர்களையும் சாத்தி வழிபடும் தலைவராக நள்ளிருளில் அசைகின்ற குழைதாழ ஆடும் காதினை உடையவராகிய சிவபிரான் இருப்பது கருப்பறியலூர். | |
மடம் படு மலைக்குஇறைவன்மங்கை ஒருபங்கன்,
உடம்பினை விடக் கருதி நின்ற மறையோனைத்
தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒருகாலால்
கடந்தவன், இருப்பது கருப்பறியலூரே.
|
4
|
மலையரசனின் மகளாகிய மடப்பம் பொருந்திய உமையொருபாகனும், உடலைவிட்டு உயிர் செல்லும் காலம் வருவதை அறிந்து தொழுது நின்ற மார்க்கண்டேயன் உயிரைக் கவரவந்த காலனின் உயிர் நீங்குமாறு தனது ஒரு காலினால் உதைத்தவனும் ஆகிய பெருமான் வீற்றிருக்கும் தலம் கருப்பறியலூர். | |
ஒருத்திஉமையோடும் ஒருபாகம் அதுஆய
நிருத்தன் அவன், நீதி அவன், நித்தன், நெறிஆய
விருத்தன் அவன், வேதம் என அங்கம் அவை ஓதும்
கருத்தவன், இருப்பது கருப்பறியலூரே.
|
5
|
ஒருபாகமாக ஒப்பற்றவளாகிய உமையம்மையோடு கூடி விளங்கும் கூத்தனும், நீதியின் வடிவானவனும் அழியாதவனும், நெறிகாட்டும் முதியோனும், வேதங்கள் ஆறு அங்கங்கள் ஆகியவற்றை ஓதும் தலைவனும் ஆகிய சிவபிரான் விளங்குவது கருப்பறியலூர். | |
| Go to top |
விண்ணவர்கள்வெற்புஅரசு பெற்ற மகள், மெய்த் தேன்
பண் அமரும் மென்மொழியினாளை, அணைவிப்பான்
எண்ணி வரு காமன் உடல் வேவ, எரி காலும்
கண்ணவன் இருப்பது கருப்பறியலூரே.
|
6
|
இமவான் பெற்ற மகளும், தேன்சுவை, பண்ணிசை ஆகியன போன்ற மொழியினாளும் ஆகிய உமையம்மையை, சிவபிரானது திருமேனியோடு சேர்ப்பிக்குமாறு விண்ணவர்கள் ஏவவந்த காமனது உடல் வெந்தழியுமாறு எரிகாலும் நெற்றிக்கண்ணை உடைய சிவபிரான் எழுந்தருளியிருப்பது கருப்பறியலூர். | |
ஆதி அடியைப் பணிய, அப்பொடு, மலர்ச் சேர்
சோதிஒளி, நல் புகை, வளர்க் குவடு புக்குத்
தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்கக்
காதினன் இருப்பது கருப்பறியலூரே.
|
7
|
உலகின் ஆதியாய் விளங்கும் தன்னை வழிபட நீர், மலர், ஒளிதரும் விளக்கு, நறுமணப்புகை ஆகியவற்றுடன் கட்டு மலையாய் உயரமாக அமைந்த ஆலயத்தை அடைந்து வழிபட்ட மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்தணைந்த காலன் அழியுமாறு உதைத்த சிவபிரான் எழுந்தருளியிருப்பது கருப்பறியலூர். | |
வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கைநகர் வேந்தற்கு
ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ, மேல்நாள்
காய்ந்தவன் இருப்பது கருப்பறியலூரே.
|
8
|
புகழ் வாய்ந்த தேவர்களும் மக்களும் அஞ்சுமாறு ஓடிச் சென்று போர் உடற்றும் தொழிலினை உடைய இலங்கை மன்னனுக்கு அமைந்த இருபது தோள்களும் ஒடிந்து விழுமாறு முன்னாளில் சினந்தவனாகிய சிவபிரான் வீற்றிருப்பது கருப்பறியலூர். | |
பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை
கரந்து, ஒர் சடைமேல் மிசை உகந்து அவளை வைத்து,
நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல்
கரந்தவன் இருப்பது கருப்பறியலூரே.
|
9
|
வரிசையாகப் பரவிப் பெருகி வந்த அலைவீசும் கங்கை சுவறுமாறு ஒருசடைமேல் ஏற்று அந்நதித் தெய்வமாகிய கங்கையை மகிழ்வுடன் முடிமிசை வைத்து, திருமால் பிரமர் தேடி அறியாதவாறு எப்போதும் அவர்களால் அறியப்பெறாதவனாய் ஒளித்திருக்கும் சிவபிரான் எழுந்தருளியிருக்கும் ஊர் கருப்பறியலூர். | |
அற்றம் மறையா அமணர், ஆதம் இலி புத்தர்,
சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டு,
குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில்
கற்றென இருப்பது கருப்பறியலூரே.
|
10
|
மறைக்கவேண்டிய உறுப்பை மறையாது ஆடையின்றித் திரியும் சமணர்களும், அறிவற்ற புத்தர்களும் சொல்லும் திறன் அறியாதவர்கள். அவர்கள் சொல்லை விடுத்துக் குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயிலையே உறுதியானதாகக் கருதி எழுந்தருளிய ஊர் கருப்பறியலூர். | |
| Go to top |
நலம் தரு புனல் புகலி ஞானசமபந்தன்,
கலந்தவர் கருப்பறியல் மேய கடவுளைப்
பலம் தரு தமிழ்க்கிளவி பத்தும் இவை கற்று,
வலம்தருமவர்க்கு வினை வாடல் எளிதுஆமே.
|
11
|
நன்மைகளைத்தரும் நீர் வளம் மிக்க புகலிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், தன்னோடு உடன் கலந்தவனாய கருப்பறியலில் மேவிய கடவுளைப்பாடிய பயன்தரும் தமிழ்ச் செய்யுளாகிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் கற்று வன்மை உற்றோர்க்கு வினைகள் வாடுதல் எளிதாம். | |