அக்கு இருந்த ஆரமும், ஆடு அரவும், ஆமையும்,
தொக்கு இருந்த மார்பினான்; தோல் உடையான்; வெண்
நீற்றான்;
புக்கு இருந்த தொல் கோயில் பொய் இலா மெய்ந்நெறிக்கே
தக்கிருந்தார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
|
1
|
என்புமாலை, ஆடும் பாம்பு, ஆமைஒடு, ஆகியனவற்றை ஒருசேரஅணிந்த மார்பினனும், திருவெண்ணீறு அணிந்தவனும், ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள பழமையான கோயில், பொய்யில்லாத மெய்ந்நெறியாகிய சைவசமயத்தைச் சார்ந்தொழுகுவார் பலர் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான்தோன்றி மாடம் ஆகும். | |
நீர் ஆர வார்சடையான், நீறு உடையான், ஏறு உடையான்,
கார் ஆர் பூங்கொன்றையினான், காதலித்த தொல் கோயில்
கூர் ஆரல் வாய் நிறையக் கொண்டு அயலே
கோட்டகத்தில்
தாரா இல்கு ஆக்கூரில் - தன் தோன்றி மாடமே.
|
2
|
கங்கை தங்கிய நீண்ட சடையினனும், திருநீறு அணிந்தவனும் விடையேற்றை ஊர்தியாகக் கொண்டவனும், கார்காலத்தே மலரும் கொன்றை மலரைச் சூடியவனும் ஆகிய சிவபெருமான் விரும்பிய பழமையான கோயில் நாரைப் பறவைகள் மிகுதியான ஆரல்மீன்களை வாய் நிறைய எடுத்துக்கொண்டு நீர்க்கரைகளில் மிகுதியாக வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடமாகும். | |
வாள் ஆர் கண், செந்துவர்வாய், மாமலையான் தன்
மடந்தை
தோள் ஆகம் பாகமாப் புல்கினான் தொல் கோயில்
வேளாளர் என்றவர்கள் வண்மையால் மிக்கு இருக்கும்
தாளாளர் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
|
3
|
ஒளி பொருந்திய கண்களையும், சிவந்தபவளம் போன்ற வாயினையும் உடையவனாய் இமவான் மகளாகிய பார்வதியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு அவள் தோளைத் தழுவிய சிவபெருமானது பழமையான கோயில், வள்ளன்மை உடைய, பிறர்க்கு உபகாரியாக விளங்கும் ஊக்கமுடைய வேளாளர்கள் மிகுந்து வாழும் ஆக்கூரில் விளங்கும் தான்தோன்றி மாடம் ஆகும். | |
கொங்கு சேர் தண்கொன்றை மாலையினான், கூற்று அடரப்
பொங்கினான், பொங்கு ஒளி சேர் வெண் நீற்றான்,
பூங்கோயில்
அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி
தங்கினார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
|
4
|
தேன் பொருந்திய குளிர்ந்த கொன்றை மாலையைச் சூடியவனும் இயமனை வருத்தச் சினந்தவனும் ஒளிமிக்க திருவெண்ணீற்றை அணிந்தவனும் ஆகிய சிவபெருமானது அழகிய கோயில், அரிய நான்கு வேதங்களோடு ஆறு அங்கங்களையும் கற்றுணர்ந்து ஐவகை வேள்விகளையும்புரியும் அந்தணர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள தான் தோன்றி மாடமாகும். | |
வீக்கினான், ஆடு அரவம்; வீழ்ந்து அழிந்தார் வெண்
தலை என்பு
ஆக்கினான், பல்கலன்கள்; ஆதரித்துப் பாகம் பெண்
ஆக்கினான்; தொல் கோயில் ஆம்பல் அம்பூம் பொய்கை
புடை
தாக்கினார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
|
5
|
ஆடுகின்ற பாம்பைக் கச்சாகக்கட்டியவரும், இறந்து அழிந்தவருடைய வெண்டலைகளையும், என்புகளையும் பல அணிகலன்களாக அணிந்தவரும், விரும்பி ஒருபாகமாகப் பெண்ணைக் கொண்டவரும் ஆகிய சிவபிரானது பழமையான கோயில் ஆம்பல் பூக்கள் மலரும் அழகிய பொய்கைக்கரையை உயர்த்திக் கட்டிய உழவர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள தான் தோன்றிமாடம் ஆகும். | |
| Go to top |
பண் ஒளி சேர் நால்மறையான், பாடலினோடு ஆடலினான்,
கண் ஒளி சேர் நெற்றியினான், காதலித்த தொல் கோயில்
விண் ஒளி சேர் மா மதியம் தீண்டியக்கால் வெண் மாடம்
தண் ஒளி சேர் ஆக்கூரில் தான் தோன்றிமாடமே.
|
6
|
பண்ணமைதியும், அறிவொளியும் அமைந்த நான்கு வேதங்களையும் அருளியவனும், பாடலிலும் ஆடலிலும் வல்லவனும், ஒளிசெறிந்த கண்பொருந்திய நெற்றியினனும் ஆகிய சிவபெருமான் காதலித்த பழமையான கோயில், வானவெளியில் உலாவும் பெரிய மதியொளி சேர்தலால் வெண்மையான மாடவீடுகள் குளிர்ந்த ஒளியைப் பெறும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும். | |
வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்து அவிய
வாங்கினார், வானவர்கள் வந்து இறைஞ்சும், தொல் கோயில்
பாங்கின் ஆர் நால்மறையோடு ஆறு அங்கம் பல்கலைகள்
தாங்கினார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
|
7
|
பெருமை மிக்கவரும், மும்மதில்களையும் வெந்து அழியுமாறு மலைவில்லை வளைத்தவரும், தேவர்களால் வந்து வணங்கப்படுபவருமாகிய சிவபெருமான் எழுந்தருளிய பழமையான கோயில், பல பிரிவுகளுடன் கூடிய நான்மறைகளையும ஆறு அங்கங்களையும் பலகலைகளையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மாடமாகும். | |
கல் நெடிய குன்று எடுத்தான் தோள் அடரக் கால் ஊன்றி,
இன் அருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல்
கோயில்
பொன் அடிக்கே நாள்தோறும் பூவோடு நீர் சுமக்கும்
தன் அடியார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
|
8
|
கற்கள் நிரம்பிய நீண்ட கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்கள் நெரியுமாறு கால் விரலை ஊன்றிப் பின் அவன் வருந்தி வேண்ட அவனுக்கு இனிய கருணைகாட்டி ஆட்கொண்ட எம்பெருமானின் பழமையான கோயில், சிவபிரானின் பொன்போன்ற திருவடிகளுக்கு நாள்தோறும் பூவும் நீரும் சுமக்கும் சிவனடியார்கள் பலர் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும். | |
நன்மையால் நாரணனும் நான்முகனும் காண்பு அரிய
தொன்மையான், தோற்றம் கேடு இல்லாதான், தொல்
கோயில்
இன்மையால் சென்று இரந்தார்க்கு, இல்லை என்னாது,
ஈந்து உவக்கும்
தன்மையார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
|
9
|
நன்மைகள் செய்பவனாகிய திருமாலும் நான்முகனும் காணுதற்கு அரிய பழமையோனும், பிறப்பிறப்பு இல்லாதவனும் ஆகிய சிவபிரானது பழமையான கோயில், இன்மையால் வந்து இரந்தவர்கட்கு இல்லையென்று கூறாது ஈந்து மகிழும் தன்மையார் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும். | |
நா மருவு புன்மை நவிற்ற, சமண் தேரர்,
பூ மருவு கொன்றையினான் புக்கு அமரும் தொல் கோயில்
சேல் மருவு பைங்கயத்துச் செங்கழு நீர் பைங்குவளை
தாம் மருவும் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
|
10
|
சமணபௌத்தர்கள் நாவிற் பொருந்திய புன்மை மொழிகளால் அறியாது பிதற்றித்திரிய, கொன்றைப் பூக்கள் பொருந்திய சடையினனாகிய சிவபிரான் எழுந்தருளி அமரும் கோயில், சேல்மீன்கள் பொருந்திய நீர்நிலைகளில் செங்கழுநீர் பசுமையான குவளை மலர்கள் ஆகியன வளரும் வளமையைக் கொண்ட ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும். | |
| Go to top |
ஆடல் அமர்ந்தானை, ஆக்கூரில் தான் தோன்றி
மாடம் அமர்ந்தானை, மாடம் சேர் தண் காழி,
நாடற்கு அரிய சீர், ஞானசம்பந்தன் சொல்
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.
|
11
|
திருக்கூத்து ஆடுவதை விரும்புபவனாய், ஆக்கூரில் தான்தோன்றிமாடத்து எழுந்தருளிய சிவபிரானை ஏத்தி மாடவீடுகள் நிரம்பிய சீகாழிப்பதியில் தோன்றிய அறிதற்கரிய புகழினனாகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப்பாடல்கள் வல்லவர்கட்குப் பாவம் இல்லை. | |