மட்டு இட்ட புன்னை அம்கானல் மடமயிலைக்
கட்டு இட்டம் கொண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான்,
ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல் கணத்தார்க்கு
அட்டு இட்டல் காணாதே போதியோ? பூம்பாவாய்!
|
1
|
பூம்பாவாய்! தேன்பொருந்திய அழகிய. புன்னை மரச்சோலைகள் சூழ்ந்ததும், இளமயில்கள் ஆரவாரிப்பதுமான ஊரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் விருப்பத்தோடு அமர்ந்தவன் மீது நெருக்கமான அன்புடைய மாகேசுரர்களுக்குத் திருவிழாக்காலங்களில் அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சிகளைக் காணாது செல்வது முறையோ? | |
மைப் பயந்த ஒண்கண் மடநல்லார் மா மயிலைக்
கைப் பயந்த நீற்றான், கபாலீச்சரம் அமர்ந்தான்,
ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ? பூம்பாவாய்!
|
2
|
பூம்பாவாய்! மைபூசப்பெற்ற ஒளிநிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் திருமயிலையில் கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைமேல் பயன்தரும் திருநீற்றை அணிந்தவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு நிகழ்த்தும் ஐப்பசி ஓண விழாவையும் அருந்தவமுனிவர் அமுதுண்ணும் காட்சிகளையும் காணாது செல்வது முறையோ? | |
வளைக்கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில்
துளக்கு இல் கபாலீச்சரத்தான் தொல்கார்த்திகைநாள்
தளத்து ஏந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ? பூம்பாவாய்!
|
3
|
பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த இளமகளிர் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள மாமயிலையில் விளங்கும், தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானைக் கார்த்திகைத் திங்களில் நிகழும் விழாக்களின்போது சாந்தணிந்த இளநகில்களைக் கொண்ட மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ? | |
ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலைக்
கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரிதனில்,
கார் தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆர்திரைநாள் காணாதே போதியோ? பூம்பாவாய்!
|
4
|
பூம்பாவாய்! ஊர்ந்து வரும் அலைகள் வந்து உலாவும் கடலை அடுத்துள்ள உயர்ந்த மயிலாப்பூரில், கூரிய வேலால் மீன்களைக் கொல்வதில் வெற்றிகாணும் நெய்தற்சேரியில் மழைவளம் தந்ததால் வளர்ந்த சோலைகள் சூழ்ந்த கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானுக்குத் திருவாதிரை நாளில் நிகழ்த்தும் விழாவைக் காணாது செல்வது முறையோ? | |
மைப் பூசும் ஒண்கண் மடநல்லார் மா மயிலைக்
கைப் பூசு நீற்றான், கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப் பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ? பூம்பாவாய்!
|
5
|
பூம்பாவாய்! மைபூசிய ஒளிநிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் சிறந்த மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைகளில் நீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு அணிகலன் பூண்டுள்ள மகளிர் நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப்பூசவிழாவைக் காணாது செல்வது முறையோ? | |
| Go to top |
மடல் ஆர்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடல் ஆட்டுக் கண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான்,
அடல் ஆன் ஏறு ஊரும் அடிகள், அடி பரவி,
நடம் ஆடல் காணாதே போதியோ? பூம்பாவாய்!
|
6
|
பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னைமரங்கள் மிகுந்த மயிலாப்பூரில் மாசிமகநாளில் கடலாட்டுக் கொண்ட களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ? | |
மலி விழா வீதி மடநல்லார் மா மயிலைக்
கலி விழாக் கண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான்
பலி விழாப் பாடல்செய் பங்குனி உத்தரநாள்
ஒலி விழாக் காணாதே போதியோ? பூம்பாவாய்!
|
7
|
பூம்பாவாய்! இளம் பெண்கள் வாழும் விழாக்கள் நிறைந்த வீதிகளைக் கொண்ட பெரிய மயிலையில் எழுச்சியை விளைவிக்கும் திருவிழாக்களைக் கண்டு அங்குள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் அமர்ந்தானது பலி அளிக்கும் விழாவாகப் பங்குனி உத்தரநாளில் நிகழும் ஆரவாரமான விழாவைக்காணாது செல்வது முறையோ? | |
தண் ஆர் அரக்கன் தோள் சாய்த்து உகந்த தாளினான்,
கண் ஆர் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்,
பண் ஆர் பதினெண்கணங்கள் தம்(ம்) அட்டமி நாள்
கண் ஆரக் காணாதே போதியோ? பூம்பாவாய்!
|
8
|
பூம்பாவாய்! வெம்மையான இயல்புடைய இராவணனின் தோள்களை நெரித்துகந்த திருவடிகளை உடையவனாய், கண்களுக்கு நிறைவு தரும் மயிலையில் உள்ள கபாலீச்சரத்தில் அமர்ந்துள்ளவனுக்கு, பண்ணோடு பாடும் பதினெண் கணத்தினரும் ஏத்தும் வகையில் சித்திரை அட்டமியில் நிகழும் விழாவைக் கண்ணாரக் கண்டுமகிழாது செல்வது முறையோ? | |
நல் தாமரை மலர் மேல் நான்முகனும் நாரணனும்
முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி, திருவடியைக்
கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம் அமர்ந்தான்,
பொன் தாப்புக் காணாதே போதியோ? பூம்பாவாய்!
|
9
|
பூம்பாவாய்! நல்ல தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் திருமாலும் முழுவதும் அறியாதவாறு அழலுருவாய் ஓங்கிய, மூர்த்தி தன் திருவடிகளைக் கற்றவர்பரவக் கபாலீச்சரம் அமர்ந்து உறைவோன். அப்பெருமானுக்கு நிகழும் ஊஞ்சலாட்டுத் திருவிழாவைக் காணாது செல்லல் முறையோ? | |
உரிஞ்சு ஆய வாழ்க்கை அமண், உடையைப் போர்க்கும்
இருஞ் சாக்கியர்கள், எடுத்து உரைப்ப, நாட்டில்
கருஞ் சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்
பெருஞ் சாந்தி காணாதே போதியோ? பூம்பாவாய்!
|
10
|
பூம்பாவாய்! உடை ஒழிந்தவராய் வாழும் சமணர், உடையைப் போர்த்துத் திரியும் கரிய சாக்கியர் தம் வாய்க்கு வந்தவாறு பிதற்ற மண்ணுலகில் கரிய சோலை சூழ்ந்த கபாலீச்சரத்தானுக்கு நிகழும் நல்ல பெருஞ்சாந்தி விழாவைக் காணாது செல்வது முறையோ? | |
| Go to top |
கான் அமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
தேன் அமர் பூம்பாவைப் பாட்டு ஆகச் செந்தமிழான்
ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார்,
வான சம்பந்தத்தவரோடும் வாழ்வாரே.
|
11
|
மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த மயிலையில் விளங்கும் கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளிய இறைவன்மீது, தேன் பொருந்திய பூவில் உறையும் பாவையை விளிக்கும் பாட்டாகச் செந்தமிழால் ஞானசம்பந்தன் இறைவனது நலம்புகழ்ந்து பாடிய இப்பத்துப்பாடல்களையும் ஓதவல்லவர் வீடுபெற்ற சிவகணத்தவரோடு கூடி நிலைத்து வாழ்வர். | |