கருந்தடங்கணின் மாதரார் இசை செய்ய, கார்
அதிர்கின்ற பூம்பொழில்
குருந்தம் மாதவியின் விரை மல்கு கோட்டாற்றில்
இருந்த எம்பெருமானை, உள்கி, இணை அடி தொழுது ஏத்தும் மாந்தர்கள்
வருந்தும் ஆறு அறியார்; நெறி சேர்வர், வான் ஊடே
|
1
|
கரிய பெரிய கண்களை உடைய மகளிர் இசை பாடவும், அதற்கேற்ப மேகங்கள் முழவொலிபோல ஒலிக்கவும், அழகிய பொழிலிலுள்ள குருந்தம் மாதவி ஆகியவற்றின் மணம் நிறையவும் விளங்கும் கோட்டாற்றில் வீற்றிருந்த பெருமானை நினைந்து அவருடைய இணையடி தொழுதேத்தும் மாந்தர்கள் வருந்தார். விண் வழியாக வீட்டுநெறியை எய்துவர். | |
நின்று மேய்ந்து, நினைந்து, மா கரி, நீரொடும் மலர் வேண்டி, வான் மழை
குன்றில் நேர்ந்து குத்திப் பணிசெய்யும் கோட்டாற்றுள்
என்றும் மன்னிய எம்பிரான் கழல் ஏத்தி, வான் அரசு ஆள வல்லவர்
பொன்றும் ஆறு அறியார்; புகழ் ஆர்ந்த புண்ணியரே.
|
2
|
பெரியயானை நின்று மேய்ந்து நினைந்து நீர் மலர் வேண்டி வான்மழை பெறுதற் பொருட்டு மலைபோல எழுந்து, மேகங்களைக்குத்திப் பணிசெய்யும் கோட்டாற்றுள் என்றும் நிலை பெற்றிருக்கும் எம்பிரான் திருவடிகளை ஏத்தி வானுலகை அரசாளவல்லவர் அழியார். அவர்புகழ் வாய்ந்த புண்ணியர் ஆவார். | |
விரவி நாளும் விழா இடைப் பொலி தொண்டர் வந்து வியந்து பண்செய,
குரவம் ஆரும் நீழல் பொழில் மல்கு கோட்டாற்றில்,
அரவம் நீள்சடையானை உள்கி நின்று, ஆதரித்து, முன் அன்பு செய்து, அடி
பரவும் ஆறு வல்லார் பழி பற்று அறுப்பாரே.
|
3
|
நாள்தோறும் நடைபெறும் விழாக்களில் கலந்து கொண்டு பொலிவு எய்தும் தொண்டர் புகழ்ந்து பாட, குரா மரங்களின் பொழில் நீழலில் அமைந்த கோட்டாற்றில் விளங்கும் பாம்பு அணிந்த நீண்ட சடையுடையவனை நினைந்து, ஆதரவுடன் அன்பு செய்து பரவுவார், பழியும் பற்றும் நீங்கப் பெறுவர். | |
அம்பின் நேர் விழி மங்கைமார் பலர் ஆடகம் பெறு மாட மாளிகைக்
கொம்பின் நேர் துகிலின் கொடி ஆடு கோட்டாற்றில்,
நம்பனே! நடனே! நலம் திகழ் நாதனே! என்று காதல் செய்தவர்
தம் பின் நேர்ந்து அறியார், தடுமாற்ற வல்வினையே.
|
4
|
அம்புபோன்ற விழியை உடைய மங்கையர் ஆடுமிடமாகக் கொண்ட மாடமாளிகைகளில் கொம்பிற் கோத்து உயர்த்திய துகிற்கொடிகள் ஆடும் கோட்டாற்றில் விளங்கும் நம்பனே! நடனம் புரிபவனே! நன்மைகள் பலவும் வாய்ந்த நாதனே! என்று அன்பு செய்தவர், தமக்குப் பின் தடுமாற்றம் வல்வினைகள் வருவதை அறியார். | |
பழைய தம் அடியார் துதிசெய, பார் உளோர்களும் விண் உளோர் தொழ,
குழலும் மொந்தை விழா ஒலி செய்யும் கோட்டாற்றில்,
கழலும் வண் சிலம்பும்(ம்) ஒலி செய, கான் இடைக் கணம் ஏத்த ஆடிய
அழகன் என்று எழுவார், அணி ஆவர், வானவர்க்கே.
|
5
|
பழமையான தம் அடியவர் துதிசெய்யவும், மண்ணுளோர், விண்ணுளோர் தொழவும் குழல் மொந்தை முதலியன விழாஒலி செய்யவும் விளங்கும் கோட்டாற்றில் கழலும் வளமான சிலம்பும் ஒலிக்கக் கானகத்தே பேய்க்கணம் ஏத்த ஆடிய அழகன் என்று சிவபெருமானை வணங்கப் போதுவார், வானவர்க்கு அணியாவர். | |
| Go to top |
பஞ்சின் மெல் அடி மாதர், ஆடவர், பத்தர், சித்தர்கள், பண்பு வைகலும்
கொஞ்சி இன்மொழியால் தொழில் மல்கு கோட்டாற்றில்,
மஞ்சனே! மணியே! மணிமிடற்று அண்ணலே! என உள் நெகிழ்ந்தவர்,
துஞ்சும் ஆறு அறியார்; பிறவார், இத் தொல் நிலத்தே.
|
6
|
பஞ்சு போன்ற மெல்லிய அடிகளை உடைய மாதர்கள், ஆடவர்கள், பத்தர்கள், சித்தர்கள் ஆகியோர் இறைவனுடைய பண்புகளை நாள்தோறும் இன்மொழியால் தொழுகின்ற கோட்டாற்றில் மைந்தனே! மணியே! மணிமிடற்று அண்ணலே என்று உள்நெகிழ்ந்து வணங்குவோர் இனி இறத்தல் பிறத்தல் இலராவர். | |
கலவ மா மயிலாள் ஒர் பங்கனைக் கண்டு, கண்மிசை நீர் நெகிழ்த்து, இசை
குலவும் ஆறு வல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்,
நிலவ மா மதி சேர் சடை உடை நின்மலா! என உன்னுவார் அவர்
உலவு வானவரின் உயர்வு ஆகுவது உண்மையதே.
|
7
|
தோகையை உடைய மயில் போன்றவளாகிய பார்வதிதேவியின் பங்கனைக் கண்டு கண்ணீர் நெகிழ்ந்து இசையோடு தோத்திரம் சொல்லுவார் குடிகொண்டுள்ள கோட்டாற்றில், நிலாவொளி வீசும் பிறைமதிபோன்ற சடையை உடைய நின்மலனே! என அவனை நினைவார் வானில் உலவுகின்ற வானவர்களினும் உயர்வாகுவது உண்மை. | |
வண்டல் ஆர் வயல் சாலி ஆலை வளம் பொலிந்திட, வார் புனல் திரை
கொண்டலார் கொணர்ந்து அங்கு உலவும் திகழ் கோட்டாற்றில்
தொண்டு எலாம் துதிசெய்ய நின்ற தொழிலனே! கழலால் அரக்கனை
மிண்டு எலாம் தவிர்த்து, என், உகந்திட்ட வெற்றிமையே?
|
8
|
வண்டல் மண் பொருந்திய நெல்வயல்களும் கரும் பாலைகளும் வளம் பொலிய மிக்க தண்ணீரை மேகங்கள் கொண்டு வந்து தரும் கோட்டாற்றில் தொண்டர்களெல்லாம் துதிக்க ஐந்தொழில் புரிபவனே! திருவடியால் இராவணனின் வலிமையைக் கெடுத்துப்பின் அவனை உகந்திட்ட வெற்றிமை யாதோ? | |
கருதி வந்து அடியார் தொழுது எழ, கண்ணனோடு அயன் தேட, ஆனையின்
குருதி மெய் கலப்ப உரி கொண்டு, கோட்டாற்றில்,
விருதினால் மடமாதும் நீயும் வியப்பொடும் உயர் கோயில் மேவி, வெள்
எருது உகந்தவனே! இரங்காய், உனது இன் அரு
|
9
|
அடியவர் கருதி வந்து தொழுது எழவும், கண்ணனோடு பிரமன் தேடவும், ஆனையின் குருதி மெய்யில் கலக்குமாறு அதன் தோலைப் போர்த்துக் கோட்டாற்றில் உயரிய புகழுரைகளோடு உமையம்மையும் நீயும் வியப்போடு உயரிய கோயிலில் எழுந்தருளி வெள்ளிய எருதை வாகனமாக உகந்த பெருமானே! உனது இனிய அருளை வழங்க இரங்குவாயாக. | |
உடை இலாது உழல்கின்ற குண்டரும், ஊண் அருந்தவத்து ஆய சாக்கியர்,
கொடை இலார் மனத்தார்; குறை ஆரும் கோட்டாற்றில்,
படையில் ஆர் மழு ஏந்தி ஆடிய பண்பனே! இவர் என்கொலோ, நுனை
அடைகிலாத வண்ணம்? அருளாய், உன் அடியவர்க்கே!
|
10
|
உடை உடுத்தாது திரியும் சமணரும், ஊண் அருந்தாத தவத்தைப் புரியும் புத்தரும் உலோபியின் மனம் போன்றவர். அவர்கள் கூறும் குறை உரைபொருந்தக் கோட்டாற்றில் படைக்கலமாக மழுவை ஏந்தி ஆடிய பண்பனே! சமண பௌத்தர்கள் உன்னை அடையாமைக்குரிய காரணம் யாது? அதனை அடியவர்க்குக் கூறியருளுக. | |
| Go to top |
விடை ஆர் கொடியான் மேவி உறையும் வெண் காட்டை,
கடை ஆர் மாடம் கலந்து தோன்றும் காழியான்
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு
அடையா, வினைகள்; அமரலோகம் ஆள்வாரே.
|
11
|
காலனைக் கழலணிந்த காலால் உதைத்தும், காமனை நெற்றிக் கண்ணால் கனலாகுமாறு சீறியும், மேனியின் ஒரு பாதியில் அழகிய நீண்ட கூந்தலை உடைய உமையம்மையோடு கூடிக்குடிகொண்டுள்ள கோட்டாற்றில், எல்லாப் பொருள்கட்கும் மூலகாரணனை முடிவில்லாத முத்தனை ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய இத்தமிழ் மாலைபத்தையும் வல்லவர்க்கு வானகம் எளிதாகும். | |