பெண் அமரும் திருமேனி உடையீர்! பிறங்கு சடை தாழப்
பண் அமரும் நால்மறையே பாடி ஆடல் பயில்கின்றீர்!
திண் அமரும் பைம்பொழிலும் வயலும் சூழ்ந்த திரு
நல்லூர்,
மண் அமரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.
|
1
|
உமையம்மை பொருந்திய திருமேனியை உடையவரே! விளங்கும் சடைகள் தாழ்ந்து தொங்க இசை அமைதி உடைய நான்மறைகளைப்பாடி ஆடல்புரிகின்றவரே! நீர் உறுதியான பசிய பொழில்களும் வயல்களும் சூழ்ந்த திருநல்லூரில் மண்ணுலக மக்களால் விரும்பப்படும் கோயிலையே நும் கோயிலாகக் கொண்டுள்ளீர். | |
அலை மல்கு தண்புனலும் பிறையும் சூடி, அங்கையில்
கொலை மல்கு வெண் மழுவும் அனலும் ஏந்தும்
கொள்கையீர்!
சிலை மல்கு வெங்கணையால் புரம் மூன்றும் எரித்தீர்! திரு
நல்லூர்,
மலை மல்கு கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.
2
|
2
|
அலைகள் நிறைந்த குளிர்ந்த கங்கையையும், பிறையையும் முடியிற்சூடி அழகிய கைகளில் கொல்லும் தன்மை வாய்ந்த வெண்மழு அனல் ஆகியவற்றை ஏந்திய தன்மையீர்! வில்லிற் பொருந்திய கொடிய கணையால் முப்புரங்களை எரித்தீர்! நீர் திருநல்லூரில் மலையமைப்புடைய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர். | |
குறை நிரம்பா வெண்மதியம் சூடிக் குளிர்புன்சடை தாழ,
பறை நவின்ற பாடலோடு ஆடல் பேணிப் பயில்கின்றீர்!
சிறை நவின்ற தண்புனலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர்,
மறை நவின்ற கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.
|
3
|
என்றும் குறைநிரம்பாத வெண்மதியத்தைச்சூடி, குளிர்ந்த மென்மையான சடைகள் தாழப் பறைகள் ஒலிக்கப் பாடலோடு ஆடலை விரும்பிப் பழகும் இயல்பினரே! மடையில் நிரம்பிய குளிர்ந்த புனலோடு கூடிய வயல்கள் சூழ்ந்த திருநல்லூரில் வேதங்கள் ஒலிக்கும் கோயிலையே நும் கோயிலாக விரும்பி மகிழ்ந்து உறைகின்றீர். | |
கூன் அமரும் வெண்பிறையும் புனலும் சூடும் கொள்கையீர்!
மான் அமரும் மென்விழியாள் பாகம் ஆகும் மாண்பினீர்!
தேன் அமரும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு
நல்லூர்,
வான் அமரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.
|
4
|
வளைந்த வெண்பிறையையும் கங்கையையும் முடியிற்சூடுபவரே! மான் போன்ற மென்மையான விழியினை உடைய உமையம்மை பாகமாக விளங்கும் மாண்புடையவரே! தேன் நிறைந்த பசிய பொழிலில் வண்டுபாடும் திருநல்லூரில் விளங்கும் வானளாவிய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர். | |
நிணம் கவரும் மூவிலையும் அனலும் ஏந்தி, நெறிகுழலாள
அணங்கு அமரும் பாடலோடு ஆடல் மேவும் அழகினீர்!
திணம் கவரும் ஆடு அரவும் பிறையும் சூடி, திரு நல்லூர்,
மணம் கமழும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.
|
5
|
நிணம் பொருந்திய மூவிலைவேலையும், அனலையும் கைகளில் ஏந்தி நெறிப்புடைய கூந்தலினளாகிய உமையம்மையோடு கூடிப் பாடல் ஆடல் விரும்பும் அழகுடையவரே! உறுதியாகப் பிற உயிர் கவரும் பாம்பையும் பிறையையும் சூடித் திருநல்லூரில் மணங்கமழும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு மகிழ்கின்றீர். | |
| Go to top |
கார் மருவு பூங்கொன்றை சூடிக் கமழ் புன்சடை தாழ,
வார் மருவு மென்முலையாள் பாகம் ஆகும் மாண்பினீர்!
தேர் மருவு நெடுவீத்க் கொடிகள் ஆடும் திரு நல்லூர்,
ஏர் மருவு கோயிலே கோயில் ஆக இருந்தீரே.
6
|
6
|
கார்காலத்தைப் பொருந்திமலரும் கொன்றைப் பூவைச் சூடி மணம் கமழும் புன்சடை தாழக் கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மை பாகமாக விளங்கும் மாண்புடையவரே! கொடிகள் அசைந்தாடும் தேர் ஓடும் நீண்ட வீதியினை உடைய திருநல்லூரில் அழகு விளங்கும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு உறைகின்றீர். | |
ஊன் தோயும் வெண் மழுவும் அனலும் ஏந்தி, உமை காண,
மீன் தோயும் திசை நிறைய ஓங்கி ஆடும் வேடத்தீர்!
தேன் தோயும் பைம்பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர்,
வான் தோயும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.
|
7
|
ஊன்தோயும் வெண்மழுவையும் அனலையும் கையில் ஏந்தி உமையம்மை காண விண்மீன்கள் பொருந்திய வானத்தைத் தொடும் எல்லாத்திசைகளும் நிறையும்படி ஓங்கி ஆடும் நடனக் கோலத்தைக் கொண்டவரே! தேன் பொருந்திய அழகிய பொழிலின் கண் வண்டுகள் இசைபாடும் திருநல்லூரில் உள்ள வானளாவிய கோயிலையே நும் கோயிலாக மகிழ்ந்து உறைகின்றீர். | |
காது அமரும் வெண்குழையீர்! கறுத்த அரக்கன் மலை
எடுப்ப,
மாது அமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டு
உகந்தீர்!
தீது அமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திரு நல்லூர்,
மாது அமரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.
|
8
|
காதில் பொருந்திய வெண்குழையை உடையவரே! சினந்து வந்த இராவணன் கயிலையைப் பெயர்க்கக் காதல் விளைக்கும் மெல்லிய மொழியினை உடையாளாகிய உமையம்மை கலங்க, அதனைக் கண்டு உகந்தவரே! தீயசெயல்களை விரும்பாத அந்தணர்கள் பரவிப் போற்றும் திருநல்லூரில் உள்ள பெருமை பொருந்திய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர். | |
போதின் மேல் அயன், திருமால், போற்றி உம்மைக்
காணாது
நாதனே இவன் என்று நயந்து ஏத்த, மகிழ்ந்து அளித்தீர்!
தீது இலா அந்தணர்கள் தீ மூன்று ஓம்பும் திரு நல்லூர்,
மாதராள் அவளோடும் மன்னு கோயில் மகிழ்ந்தீரே.
|
9
|
தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், திருமாலும் போற்றியும் உம்மைக்காணாது பின் இவனே பரம்பொருள் என்று விரும்பி ஏத்த மகிழ்ந்து, அவர்கட்கு அருள் செய்தவரே! தீதில்லாத அந்தணர்கள் முத்தீயோம்பும் திருநல்லூரில் மன்னும் கோயிலில் உமையம்மையாரோடு மகிழ்ந்து உறைகின்றீர். | |
பொல்லாத சமணரொடு புறம் கூறும் சாக்கியர் ஒன்று
அல்லாதார் அற உரை விட்டு, அடியார்கள் போற்று ஓவா
நல்லார்கள், அந்தணர்கள், நாளும் ஏத்தும் திரு நல்லூர்,
மல் ஆர்ந்த கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.
|
10
|
பொல்லாத சமணர்களோடு புறங்கூறும் சாக்கியர் என்ற ஒன்றிலும் சேராதார் கூறும் அறவுரைகளை விட்டு அடியவர்கள் வந்து வழிபடுதல் நீங்காததும், நல்லவர்களாகிய அந்தணர்கள் நாளும் வந்து வழிபடுவதும் ஆகிய திருநல்லூரில் மலையில் விளங்கும் கோயிலையே தன் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர். | |
| Go to top |
கொந்து அணவும் பொழில் புடை சூழ் கொச்சை மேவு
&குலவேந்தன்
செந்தமிழின் சம்பந்தன் சிறை வண் புனல் சூழ் திரு
நல்லூர்,
பந்து அணவும் மெல்விரலாள் பங்கன்தன்னைப் பயில் பாடல்
சிந்தனையால் உரை செய்வார், சிவலோகம் சேர்ந்து இருப்பாரே.
|
11
|
பூங்கொத்துக்கள் செறிந்த பொழில்புடை சூழ்ந்த கொச்சைவயம் என்னும் சீகாழியில் உயர் குலத்தில் தோன்றிய தலைவனாகிய செந்தமிழ் வல்ல ஞானசம்பந்தன் மடையில் சிறைப்படுத்திய வண்புனல் சூழ்ந்த திருநல்லூரில் பந்து பொருந்தும் மெல்விரலாள் பங்கனைப் போற்றிப் பாடிய இப்பதிகப் பாடல்களைச் சிந்தையோடு ஒன்றி உரைப்பவர் சிவலோகம் சேர்ந்து இனிதிருப்பர். | |