சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.060   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்பாசூர் - காந்தாரம் லதாங்கி நவரோசு கனநப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு பசுபதிநாயகியம்மை உடனுறை அருள்மிகு பாசூர்நாதர் திருவடிகள் போற்றி

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=lK4XZljS70A  https://www.youtube.com/watch?v=t9JFCSZSqkU   Add audio link Add Audio

சிந்தை இடையார், தலையின் மிசையார், செஞ்சொல்லார்,
வந்து மாலை வைகும்போழ்து என் மனத்து உள்ளார்,
மைந்தர், மணாளர் என்ன, மகிழ்வார் ஊர்போலும்
பைந் தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.

1
மனத்திலும், தலையின்மேலும் வாக்கிலும் உறைபவர், மாலைக்காலம் வரும்போது வந்து என் மனத்தில் விளங்குபவர், மைந்தா! மணாளா! என்று அழைக்க மகிழ்பவர். அவரது ஊர் பசுமையான மாதவி படர்ந்த சோலைகள் சூழ்ந்த பாசூர் ஆகும்.

பேரும் பொழுதும் பெயரும் பொழுதும், பெம்மான் என்று
ஆரும் தனையும் அடியார் ஏத்த அருள் செய்வார்,
ஊரும் அரவம் உடையார், வாழும் ஊர்போலும்
பாரின் மிசையார் பாடல் ஓவாப் பாசூரே.

2
இடம் விட்டுச்செல்லும்போதும், வரும் போதும் பெம்மானே என்று மனம் நிறைவுறும் அளவும் அடியவர் ஏத்த அருள் செய்பவர். ஊர்ந்து செல்லும் படப்பாம்பை அணிந்தவர். அவர் வாழும் ஊர் உலக மக்களின் பாடல்கள் ஓவாது கேட்கும் பாசூர் ஆகும்.

கையால் தொழுது தலை சாய்த்து உள்ளம் கசிவார்கண்
மெய் ஆர் குறையும் துயரும் தீர்க்கும் விமலனார்
நெய் ஆடுதல் அஞ்சு உடையார், நிலாவும் ஊர்போலும்
பைவாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே.

3
கைகளால் தொழுதும், தலையைத்தாழ்த்தியும், உள்ளம் உருகி வழிபடும் அடியவர்களின் உடற்குறைகளையும் துன்பங்களையும் தவிர்த்தருளும் விகிர்தன். நெய் முதலிய ஆனைந்தும் ஆடுதல் உடையவன், அவன் எழுந்தருளிய ஊர், பாம்பின் படம் போலக்காந்தள் பூக்கள் மலர்ந்துள்ள பாசூராகும்.

பொங்கு ஆடு அரவும் புனலும் சடைமேல் பொலிவு எய்த,
கொங்கு ஆர் கொன்றை சூடி, என் உள்ளம் குளிர்வித்தார்,
தம் காதலியும் தாமும் வாழும் ஊர்போலும்
பைங்கால் முல்லை பல் அரும்பு ஈனும் பாசூரே.

4
சினந்து படம் எடுத்தாடும் பாம்பும், கங்கையும் சடையின் மேல் விளங்கித்தோன்ற, தேன் நிறைந்த கொன்றை மலரைச் சூடி என் உள்ளம் குளிர் வித்தவர். அவர் தம் காதலியாரோடு தாமும் வாழும் ஊர் பசிய காலோடு கூடிய முல்லைக் கொடிகள் பற்கள் போல அரும்புகள் ஈனும் பாசூராகும்.

ஆடல் புரியும் ஐவாய் அரவு ஒன்று அரைச் சாத்தும்
சேடச் செல்வர், சிந்தையுள் என்றும் பிரியாதார்,
வாடல் தலையில் பலி தேர் கையார், ஊர்போலும்
பாடல் குயில்கள் பயில் பூஞ்சோலைப் பாசூரே.

5
ஆடும் ஐந்து தலைப்பாம்பை இடையிலே கட்டிக் கொண்டுள்ள மேலான செல்வர். நினைப்பவர் சிந்தையினின்றும் பிரியாதவர். ஊன்வாடியதலையோட்டில் பலிதேரும் கையினர். அவரது ஊர், பாடும் குயில்கள் வாழும் பூஞ்சோலைகளை உடைய பாசூர் ஆகும்.
Go to top

கால் நின்று அதிர, கனல் வாய் நாகம் கச்சு ஆக,
தோல் ஒன்று உடையார்; விடையார்; தம்மைத்
தொழுவார்கள்
மால் கொண்டு ஓட மையல் தீர்ப்பார்; ஊர்போலும்
பால் வெண்மதி தோய் மாடம் சூழ்ந்த பாசூரே.

6
திருவடி ஊன்றித் தாளம் இட நாகத்தைக் கச்சாக இடையில் கட்டிக்கொண்டு தோலை ஆடையாக உடுத்தவர். விடை ஊர்தியர். தம்மைத் தொழுபவர்கள் அன்பு கொண்டு தம்மைத் தொழ அவர்களின் மயக்கங்களைத் தீர்ப்பவர். அவரது ஊர் பால் போன்ற வெண்மதிதோயும் மாட வீடுகள் சூழ்ந்த பாசூர் ஆகும்.

கண்ணின் அயலே கண் ஒன்று உடையார், கழல் உன்னி
எண்ணும் தனையும் அடியார் ஏத்த அருள் செய்வார்,
உள் நின்று உருக உவகை தருவார், ஊர்போலும்
பண்ணின் மொழியார் பாடல் ஓவாப் பாசூரே.

7
இரு கண்களுக்கு அயலே நெற்றியில் மூன்றாவதாக ஒரு கண்ணை உடையவர். தம் திருவடிகளை நினைந்து எண்ணும் போதெல்லாம் உவகைகள் தருபவர். அவரது ஊர் பண்ணிசை போல மொழிகள் பேசும் பெண்கள் பாடும் ஓசை நீங்காத பாசூராகும்.

தேசு குன்றாத் தெண் நீர் இலங்கைக் கோமானைக்
கூச அடர்த்துக் கூர்வாள் கொடுப்பார், தம்மையே
பேசிப் பிதற்றப் பெருமை தருவார், ஊர்போலும்
பாசித் தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே.

8
புகழ்குன்றாத தெளிந்த நீரை உடைய கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனை மனம் கூசுமாறு அடர்த்துக் கூரிய வாளைப் பரிசாகக் கொடுத்தவர். தம்மையே பலகாலம் பேசிப்பிதற்றும் அடியவர்கட்குப் பெருமை தருபவர். அவரது ஊர் பசுமையான நீர் நிலைகளும், வயல்களும் சூழ்ந்த பாசூராகும்.

நகு வாய் மலர்மேல் அயனும், நாகத்து அணையானும்,
புகு வாய் அறியார், புறம் நின்று ஓரார், போற்று ஓவார்;
செகு வாய் உகு பல் தலை சேர் கையார் ஊர்போலும்
பகுவாய் நாரை ஆரல் வாரும் பாசூரே.

9
விரிந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முக னும், நாகணையில் பள்ளிகொள்ளும் திருமாலும் புகுமிடம் அறியாதவராகவும் புறம்பே நின்று அறிய இயலாதவராகவும் போற்றுதலை ஓவாதவராகவும் நிற்க அழிந்தவாயிற் பல்லுடைய தலையோடு சேர்ந்த கையினை உடையவர். சிவபெருமான். அவரது ஊர் பிளந்தவாயினை உடைய நாரைகள் ஆரல் மீன்களை வௌவி உண்ணும் பாசூராகும்.

தூய வெயில் நின்று உழல்வார், துவர் தோய் ஆடையார்,
நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயம் இல்லார்;
காவல் வேவக் கணை ஒன்று எய்தார் ஊர்போலும்
பாவைக் குரவம் பயில் பூஞ்சோலைப் பாசூரே.

10
நல்ல வெயிலில் நின்று உழல்பவரும், துவர் தோய்ந்த ஆடையை அணிந்தவருமாகிய சமண புத்தர்கள் நாவினால் வெய்ய சொற்களைச் சொல்லித்திரியும் நீதி அற்றவர்கள் காவல் புரியும் முப்புரங்களும்வெந்தழியுமாறு கணை ஒன்றை எய்த சிவபிரானது ஊர் பாவை போல மலரும் குராமரங்கள் செறிந்த சோலைகள் சூழ்ந்த பாசூர் ஆகும்.
Go to top

ஞானம் உணர்வான் காழி ஞானசம்பந்தன்
தேனும் வண்டும் இன் இசை பாடும் திருப் பாசூர்க்
கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார்,
ஊனம் இலராய், உம்பர் வானத்து உறைவாரே.

11
கலைஞானம் சிவஞானம் ஆகியவற்றை உணர்ந்தவனாகிய காழி ஞானசம்பந்தன் தேனும், வண்டும் இன்னிசை பாடும் திருப்பாசூர் என்னும் காடுகள் நிறைந்த ஊரில் உறையும் இறைவனின் திருவடிகளில் சேர்ப்பிக்கும் பாடல்களாகிய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் குற்றம் அற்றவராய் வானுலகில் உறைவர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பாசூர்
2.060   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சிந்தை இடையார், தலையின் மிசையார்,
Tune - காந்தாரம்   (திருப்பாசூர் பாசூர்நாதர் பசுபதிநாயகியம்மை)
5.025   திருநாவுக்கரசர்   தேவாரம்   முந்தி மூ எயில் எய்த
Tune - திருக்குறுந்தொகை   (திருப்பாசூர் பாசூர்நாதர் பசுபதிநாயகியம்மை)
6.083   திருநாவுக்கரசர்   தேவாரம்   விண் ஆகி, நிலன் ஆகி,
Tune - திருத்தாண்டகம்   (திருப்பாசூர் பாசூர்நாதர் பசுபதிநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000