காயச் செவ்விக் காமற் காய்ந்து, கங்கையைப்
பாயப் படர் புன் சடையில் பதித்த பரமேட்டி
மாயச் சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை; தன்
மீயச் சூரைத் தொழுது, வினையை வீட்டுமே!
|
1
|
அழகிய உடலை உடைய காமனைக் காய்ந்து, கங்கையை விரிந்த புன்சடையிற் பாயுமாறு செய்து, பதித்த பரமேட்டியும் சூரபன்மன் மாயும்படி அழித்த முருகப்பெருமானின் தந்தையும் ஆகிய சிவபிரானது மீயச்சூரைத் தொழுது வினையைத் தீர்த்தொழியுங்கள். | |
பூ ஆர் சடையின் முடிமேல் புனலர்; அனல் கொள்வர்;
நா ஆர் மறையர்; பிறையர்; நற வெண்தலை ஏந்தி,
ஏ ஆர் மலையே சிலையா, கழி அம்பு எரி வாங்கி,
மேவார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே.
|
2
|
திருமீயச்சூர் இறைவர் மலர் அணிந்துள்ள சடை முடியில் கங்கையைச் சூடியவர். கையில் அனலைக் கொண்டவர். நாவால் வேதங்களை அருளியவர். பிறைசூடியவர். நாற்றமுடைய வெள்ளிய தலையோட்டை ஏந்தியவர். பெருமை பொருந்திய மேருமலையாகிய வில்லில் திருமாலைக் கழியம்பாகவும் அக்கினியை அம்பின் முனையாகவும் கொண்டு வில்லை வளைத்துப் பகைவரின் முப்புரங்களை எரித்தவர். | |
பொன் நேர் கொன்றைமாலை புரளும் அகலத்தான்,
மின் நேர் சடைகள் உடையான், மீயச்சூரானை,
தன் நேர் பிறர் இல்லானை, தலையால் வணங்குவார்
அந் நேர் இமையோர் உலகம் எய்தற்கு அரிது அன்றே.
|
3
|
பொன்போன்ற கொன்றை மாலைபுரளும் மார்பினனும், மின்னல் போன்ற சடைகளை உடையவனும் தனக்கு ஒப்பார் பிறர் இல்லாதவனும் ஆகிய மீயச்சூர் இறைவனைத் தலையால் வணங்குவார் அழகும் நேர்மையும் உடைய தேவர் உலகத்தை எய்துதல் அரி தன்று. | |
வேக மத நல் யானை வெருவ உரி போர்த்து
பாகம் உமையோடு ஆக, படிதம் பல பாட,
நாகம் அரைமேல் அசைத்து, நடம் ஆடிய நம்பன்
மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே.
|
4
|
வேகமும் மதமும் உடைய நல்லயானையை வெருவுமாறு கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்து உமைபாகராக அவ்வம்மையார் பாடப் பாம்பை இடையின் மேல் கச்சாகக் கட்டிக் கொண்டு நடனமாடிய பெருமான் மேகந்தோயும் பொழில்சூழ்ந்த மீயச்சூர் இறைவன் ஆவான். | |
வேக மத நல் யானை வெருவ உரி போர்த்து
பாகம் உமையோடு ஆக, படிதம் பல பாட,
நாகம் அரைமேல் அசைத்து, நடம் ஆடிய நம்பன்
மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே.
|
5
|
திருமீயச்சூர் இறைவர், விடைக்கொடியை உடையார். சடைமேல் விளங்கும் பிறைவேடத்தை உடையவர். படைகளாக அமைந்த பூதங்கள் சூழப்பாடியும் ஆடியும் மகிழ்பவர். பெடைகளோடு கூடி ஆண் வண்டுகள் அணையும் கொன்றைமாலையை அணிந்தவர். காளைபோன்ற நடையை உடையவர். | |
| Go to top |
குளிரும் சடை கொள் முடிமேல் கோலம் ஆர் கொன்றை
ஒளிரும் பிறை ஒன்று உடையான், ஒருவன், கை கோடி
நளிரும் மணி சூழ் மாலை நட்டம் நவில் நம்பன்,
மிளிரும்(ம்) அரவம் உடையான் மீயச்சூரானே.
|
6
|
திருமீயச்சூர் இறைவன் குளிர்ந்த சடைகளைக் கொண்டுள்ள முடிமீது அழகிய கொன்றைமாலை, விளங்கும் பிறை ஆகியவற்றைச் சூடியவன். ஒப்பற்றவன். மணிகள் அமைந்த மாலையுடன் கைகளைவளைத்து நடனம் புரிபவன்: விளங்கும் அரவினை அணிந்தவன். | |
நீலவடிவர் மிடறு, நெடியர், நிகர் இல்லார்,
கோல வடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார்,
காலர், கழலர், கரியின் உரியர், மழுவாளர்,
மேலர், மதியர், விதியர் மீயச்சூராரே.
|
7
|
திருமீயச்சூர் இறைவர் நீலகண்டர். நீண்டவர். ஒப்பில்லாதவர். அழகிய பலபல வடிவங்கள் தம்முடையனவாகக் கொண்டு அறிதற்கு அரியராயிருப்பவர். காலிற் கழல் அணிந்தவர். யானையின்தோலைப் போர்த்தவர். மழுவேந்தியவர். மேன்மையானவர். மதியை அணிந்தவர். உலகைப்படைப்பவர். | |
புலியின் உரி தோல் ஆடை, பூசும் பொடி நீற்றர்,
ஒலி கொள் புனல் ஓர் சடைமேல் கரந்தார், உமை அஞ்ச
வலிய திரள் தோள் வன் கண் அரக்கர் கோன் தன்னை
மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச்சூராரே.
|
8
|
திருமீயச்சூர் இறைவர் புலியின் தோலாகிய ஆடையையும் பூசும் திருநீற்றுப் பொடியையும் அணிந்தவர். ஆரவாரித்து வந்த கங்கையை ஓர் சடைமேற் கரந்தவர். உமையம்மை அஞ்ச வலிமையான திரண்ட தோள்களையும் வன்கண்மையையும் உடைய அரக்கர்கோனை மெலியுமாறு மலையின் கீழ் அடர்த்தவர். | |
காதில் மிளிரும் குழையர், கரிய கண்டத்தார்,
போதிலவனும் மாலும் தொழப் பொங்கு எரி ஆனார்
கோதி வரிவண்டு அறை பூம் பொய்கைப் புனல் மூழ்கி
மேதி படியும் வயல் சூழ் மீயச்சூராரே.
|
9
|
வரிவண்டுகள் மலர்களைக் கோதி ஒலிசெய்யும் பூம்பொய்கைப் புனலில் எருமைகள் மூழ்கி வயல் கரைகளில் சென்று படுக்கும் திருமீயச்சூரில் மேவும் இறைவர், காதில் விளங்கும் குழையை அணிந்தவர்: கரிய கண்டத்தினர்: தாமரையோனாகிய பிரமனும் திருமாலும் தொழப் பொங்கிய எரிவடிவாய் நின்றவர். | |
கண்டார் நாணும் படியார், கலிங்கம் முடை பட்டை
கொண்டார், சொல்லைக் குறுகார், உயர்ந்த
கொள்கையார்;
பெண்தான் பாகம் உடையார், பெரிய வரை வில்லா
விண்டார் புரம் மூன்று எரித்தார், மீயச்சூராரே.
|
10
|
கண்டவர் நாணும்படியாக ஆடையின்றித் திரியும் சமணர், கலிங்கமாகிய பட்டாடையை உடுத்த தேரர் ஆகியோர் கூறுவனவற்றை உயர்ந்த சிவநெறிக் கொள்கையர் குறுகார். திருமீயச்சூர் இறைவர் பெண்ணைப் பாகமாக உடையவர். பெரிய மலையாகிய வில்லால் பகைவரின் முப்புரங்களை எரித்தவர். | |
| Go to top |
வேடம் உடைய பெருமான் உறையும் மீயச்சூர்,
நாடும் புகழ் ஆர் புகலி ஞானசம்பந்தன்
பாடல் ஆய தமிழ் ஈர் ஐந்தும் மொழிந்து, உள்கி,
ஆடும் அடியார், அகல் வான் உலகம் அடைவாரே.
|
11
|
பற்பல வடிவங்களைக் கொண்டருளிய பெருமான் உறையும் திருமீயச்சூரை விரும்பும் புகழார்ந்த புகலி ஞானசம்பந்தன் அருளிய பாடலாகிய தமிழ் ஈரைந்தையும் மொழிந்தும் நினைத்தும் ஆடும் அடியவர் அகன்றவானுலகை அடைவர். | |