மின்னும் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே,
துன்னும் கடல் நஞ்சு இருள் தோய் கண்டர் தொல் மூதூர்
அன்னம் படியும் புனல் ஆர் அரிசில் அலை கொண்டு,
பொன்னும் மணியும் பொரு தென் கரைமேல் புத்தூரே.
|
1
|
மின்னல் போல ஒளிரும் சடைமேல் இளம்பிறை விளங்கக் கடலில் பொருந்திய நஞ்சினது கருமை தோய்ந்த கண்டத் தராய் விளங்கும் பெருமானது பழமையான ஊர் அன்னங்கள் படிந்து ஆடும் நீரை உடைய அரிசிலாற்றின் அலை பொன்னையும் மணியை யும் கொண்டு வீசும் தென்கரையின் மேல் விளங்கும் புத்தூராகும் . | |
மேவா அசுரர் மேவு எயில் வேவ, மலைவில்லால்,
ஏ ஆர் எரி வெங்கணையால், எய்தான் எய்தும் ஊர்
நாவால் நாதன் நாமம் ஓதி, நாள்தோறும்,
பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே.
|
2
|
பொருந்தாத அசுரர் வாழும் மூன்று கோட்டைகளும் வெந்து அழியுமாறு மலைவில்லால் அம்பாகப் பொருந்திய எரியாகிய கொடிய கணையால் எய்தவனது ஊர், பூசுரர்கள் நாவினால் நாதன் நாமங்களை நாடொறும் ஓதிப்பூவாலும் நீராலும் போற்றி வழிபடும் புத்தூர் ஆகும். | |
பல் ஆர் தலை சேர் மாலை சூடி, பாம்பும் பூண்டு
எல்லா இடமும் வெண் நீறு அணிந்து, ஓர் ஏறு ஏறி,
கல் ஆர் மங்கை பங்கரேனும், காணுங்கால்,
பொல்லார் அல்லர்; அழகியர் புத்தூர்ப் புனிதரே. |
3
|
புத்தூர்ப்புனிதர், பற்களோடு கூடிய தலை மாலையைச் சூடிப் பாம்பையும் அணிந்து உடல் முழுதும் வெண்ணீறு அணிந்து ஒப்பற்ற விடைமீது ஏறி இமவான் மகளாகிய பார்வதி பங்கராக இருப்பவர். ஆராயுமிடத்து அவர் பொல்லாதவர் அல்லர். அழகியவர். | |
வரி ஏர் வளையாள் அரிவை அஞ்ச, வருகின்ற,
கரி ஏர் உரிவை போர்த்த கடவுள் கருதும் ஊர்
அரி ஏர் கழனிப் பழனம் சூழ்ந்து, அங்கு அழகு ஆய
பொரி ஏர் புன்கு சொரி பூஞ்சோலைப் புத்தூரே.
|
4
|
வரிகளும் அழகும் பொருந்திய வளையல்களை அணிந்த அம்பிகை அஞ்சுமாறு வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்த கடவுள் கருதும் ஊர், நெல்லரிகளைக் கொண்ட வயல்கள் சூழ்ந்து அழகிய நெற்பொரிகள் போல புன்கமரங்கள் பூக்களைச் சொரியும் சோலைகள் சூழ்ந்த புத்தூர் ஆகும். | |
என்போடு, அரவம், ஏனத்து எயிறோடு, எழில் ஆமை,
மின் போல் புரி நூல், விரவிப் பூண்ட வரைமார்பர்;
அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர்; அமரும் ஊர்-
பொன்போது அலர் கோங்கு ஓங்கு சோலைப் புத்தூரே.
|
5
|
எலும்பு, பாம்பு, பன்றிப்பல், அழகிய ஆமை ஓடு ஆகியவற்றை மின்னல் போன்ற பூணநூலோடு மாலையாகக் கலந்தணிந்த அழகிய மார்பினர். அன்போடு உருகி வழிபடும் அடியவர்கட்கு அன்பர். அவர் எழுந்தருளிய ஊர் பொன் போல மலரும் கோங்கமலர்கள் ஓங்கிய சோலைகளை உடைய புத்தூர் ஆகும். | |
| Go to top |
வள்ளி முலை தோய் குமரன் தாதை, வான் தோயும்
வெள்ளிமலை போல் விடை ஒன்று உடையான், மேவும் ஊர்
தெள்ளி வரு நீர் அரிசில் தென்பால், சிறைவண்டும்
புள்ளும் மலி பூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே.
|
6
|
வள்ளி மணாளனாகிய முருகனின் தந்தையாய் வான்தோயும் கயிலைமலை போன்ற வெள்விடையை உடையவன் எழுந்தருளிய ஊர், தெளிவாக வரும் நீரை உடைய அரிசிலாற்றின் தென்கரையில் சிறைவண்டும் பறவைகளும் நிறைந்து வாழும் அழகிய பொய்கைகள் சூழ்ந்த புத்தூர் ஆகும். | |
நிலம் தண்ணீரோடு அனல் கால் விசும்பின் நீர்மையான்,
சிலந்தி செங்கண் சோழன் ஆகச் செய்தான், ஊர்
அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி,
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.
|
7
|
நிலம், தண்ணீர், அனல், காற்று விசும்பு ஆகிய ஐம்பூதங்களின் இயல்பை உடையவன். சிலந்தியைக் கோச்செங்கட் சோழனாகப் பிறக்கச் செய்தவன். அவனது ஊர் வறுமையுற்ற புகழ்த் துணையார் என்னும் சிவமறையவர் அன்றைக்கன்று ஒரு காசினை அருளப் பெற்றுப் புலர்ந்த காலையிலும் மாலையிலும் போற்றி வழிபட்ட புத்தூராகும். | |
இத் தேர் ஏக, இம் மலை பேர்ப்பன் என்று ஏந்தும்
பத்து ஓர்வாயான் வரைக்கீழ் அலற, பாதம்தான்
வைத்து, ஆர் அருள் செய் வரதன் மருவும்(ம்) ஊர் ஆன
புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே.
|
8
|
இந்தத் தேர் செல்லுதற்குத் தடையாக உள்ள இந்த மலையைப் பெயர்ப்பேன் என்று கூறிச் சிவபிரான் எழுந்தருளிய திருக்கயிலையைப் பெயர்த்து ஏந்திய பத்து வாய்களை உடைய இராவணன் மலைக்கீழ் அகப்பட்டு அலறுமாறு தம் பாதத்தைச் சிறிது ஊன்றி அடர்த்துப் பின் அவனுக்கு அருள் செய்யும் வரதனாகிய சிவபிரான் மருவும் ஊரான புத்தூரைத் தரிசிக்கச் செல்வார் வினைகள் போகும். | |
முள் ஆர் கமலத்து அயன், மால், முடியோடு அடி தேட,
ஒள் ஆர் எரி ஆய் உணர்தற்கு அரியான் ஊர்போலும்
கள் ஆர் நெய்தல், கழுநீர், ஆம்பல், கமலங்கள்,
புள் ஆர் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூரே.
|
9
|
முட்கள் பொருந்திய தண்டினை உடைய தாமரை மலரின் மேல் உறையும் நான்முகன், திருமால் ஆகியோர் முடியோடு அடிதேட, ஒளி பொருந்திய எரி உருவினனாய், உணர்தற்கு அரியவனாய் விளங்கிய சிவபிரானது ஊர், தேன் பொருந்திய நெய்தல், கழு நீர், ஆம்பல், தாமரை ஆகியவற்றை உடைய பறவைகள் நிறைந்த பொய்கைகளில் பூக்கள் நிறைந்து தோன்றும் புத்தூர் ஆகும். | |
கை ஆர் சோறு கவர் குண்டர்களும், துவருண்ட
மெய் ஆர் போர்வை மண்டையர், சொல்லு மெய் அல்ல;
பொய்யா மொழியால் அந்தணர் போற்றும் புத்தூரில்
ஐயா! என்பார்க்கு, ஐயுறவு இன்றி அழகு ஆமே.
|
10
|
கையில் வாங்கிச் சோற்றை உண்ணும் குண்டர்களும், துவர்நிறம் ஊட்டிய ஆடையை மெய்யிற் போர்த்தி மண்டையில் உணவு வாங்கி உண்ணும் தேரர்களும் கூறும் சொற்கள் உண்மையல்லாதவை. மெய்ம்மொழியால் அந்தணர்கள் போற்றும் புத்தூரில் எழுந்தருளிய தலைவனே! என்று போற்றுவார்க்கு ஐயுறவு இன்றி அழகு உண்டாம். | |
| Go to top |
நறவம் கமழ் பூங் காழி ஞானசம்பந்தன்,
பொறி கொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர்மேல்,
செறி வண்தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள்,
அறவன் கழல் சேர்ந்து, அன்பொடு இன்பம் அடைவாரே.
|
11
|
தேன் மணம் கமழும் அழகிய காழிநகரில் தோன்றிய ஞானசம்பந்தன், புள்ளிகளைக்கொண்ட பாம்பினைப் பூண்ட சிவபிரான் ஆட்சிபுரியும் புத்தூர்மேல் வளமை செறிந்த தமிழால் செய்த இம்மாலையைச் செப்பவல்லவர்கள் அறவடிவினனான சிவபிரான் திருவடிகளை அடைந்து அன்பும் இன்பமும் அடைவார்கள். | |