சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.066   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருஆலவாய் (மதுரை) - காந்தாரம் லதாங்கி நவரோசு கனநப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி
சமணர்கள் அச்சமுற்றார்கள். ஆயினும் அதனை மறைத்துக் கொண்டு சம்பந்தரை நோக்கி உங்கள் சமயக் கொள்கைகளைக் கூறுங்கள் எனக்கூறினர். அரசியார் கொடிய சமணர்கள் நடுவில் இப் பாலகரை நாம் அழைத்தது தவறோ என வருந்திச் சமணர்களை நோக்கி மன்னனின் நோயை முதலில் தணிக்க முயலுங்கள். நோய் தணிந்த பிறகு வாது செய்யலாம் என்றார். ஞானசம்பந்தர் அரசமா தேவியாரைப் பார்த்து அஞ்சற்க; என்னைப் பாலகன் எனக் கருத வேண்டா; ஆலவாயரன் துணைநிற்க வாதில் வெல்வோம் என்றார். சமணர்கள் மன்னன் உடலில் இடப்பாகம் பற்றிய நோயை நாங்கள் குணப்படுத்துகிறோம் என்று பீலி கொண்டு உடலைத் தடவிய அளவில் நோய் மேலும் கூடியது. ஞானசம்பந்தர் மந்திரமாவது நீறு என்ற திருப்பதிகம் பாடி, தம் திருக்கரத்தால் வலப்பாகத்தில் திரு நீற்றைத் தடவிய அளவில் நோய் தணிந்து இடப்பாகத்தே மூண்டெழக் கண்ட மன்னன் அப் பாகத்தையும் தாங்களே தீர்த்தருள வேண்டுமென வேண்டினான். ஞானசம்பந்தர் இடப்பாகத்திலும் திருநீறு பூசிய அளவில் நோய் தணிந்தது. மன்னன் எழுந்து ஞானசம்பந்தரைப் பணிந்து யான் உய்ந்தேன் என்று போற்றினான்.
வெப்பம் மிகுதியால் ஏற்படும் நோய்கள், உடல் சூடு நீங்க ஓதவேண்டிய பதிகம்
- Hide Meaning   https://sivaya.org/audio/2.066 மந்திரம் ஆவது நீறு.mp3  https://www.youtube.com/watch?v=n2Uf5Es4A10   Add audio link Add Audio

மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.

1
சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது.

வேதத்தில் உள்ளது நீறு; வெந்துயர் தீர்ப்பது நீறு;
போதம் தருவது நீறு; புன்மை தவிர்ப்பது நீறு;
ஓதத் தகுவது நீறு; உண்மையில் உள்ளது நீறு;
சீதப்புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.

2
குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திருஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, வேதங்களில் புகழ்ந்து ஓதப்பெறுவது. கொடிய துயர்களைப் போக்குவது. சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது. புகழ்ந்து போற்றத் தக்கது. உண்மையாக நிலைபெற்றிருப்பது.

முத்தி தருவது நீறு; முனிவர் அணிவது நீறு;
சத்தியம் ஆவது நீறு; தக்கோர் புகழ்வது நீறு;
பத்தி தருவது நீறு; பரவ இனியது நீறு;
சித்தி தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.

3
திருஆலவாயான் திருநீறு வீடுபேறு அளிப்பது. முனிவர்களால் அணியப் பெறுவது. நிலையாக எப்போதும் உள்ளது. தக்கோர்களால் புகழப்படுவது. இறைவனிடம் பக்தியை விளைப்பது. வாழ்த்த இனியது. எண்வகைச் சித்திகளையும் தரவல்லது.

காண இனியது நீறு; கவினைத் தருவது நீறு;
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு;
மாணம் தகைவது நீறு; மதியைத் தருவது நீறு;
சேணம் தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.

4
திருஆலவாயான் திருநீறு கண்களுக்கு இனிமை தருவது. அழகைக் கொடுப்பது. விரும்பி அணிவார்க்குப் பெருமை கொடுப்பது. இறப்பைத் தடுப்பது. அறிவைத் தருவது. உயர்வு அளிப்பது.

பூச இனியது நீறு; புண்ணியம் ஆவது நீறு;
பேச இனியது நீறு; பெருந் தவத்தோர்களுக்கு எல்லாம்
ஆசை கெடுப்பது நீறு; அந்தம் அது ஆவது நீறு;
தேசம் புகழ்வது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.

5
திருஆலவாயான் திருநீறு, பூசுதற்கு இனிமையானது. புண்ணியத்தை வளர்ப்பது. பேசுதற்கு இனியது. பெருந்தவம் செய்யும் முனிவர்கட்கு ஆசையை அறுப்பது. முடிவான பேரின்பநிலையை அளிப்பது. உலகோரால் புகழப்படுவது.
Go to top

அருத்தம் அது ஆவது நீறு; அவலம் அறுப்பது நீறு;
வருத்தம் தணிப்பது நீறு; வானம் அளிப்பது நீறு;
பொருத்தம் அது ஆவது நீறு; புண்ணியர் பூசும் வெண் நீறு;
திருத் தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.

6
அழகிய மாளிகைகள் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறு செல்வமாக இருப்பது. துன்பம் போக்குவது. மனவருத்தத்தைத் தணிப்பது. துறக்க இன்பத்தை அளிப்பது. எல்லோருக்கும் பொருத்தமாக இருப்பது. புண்ணியரால் பூசப்பெறுவது.

எயில் அது அட்டது நீறு; இருமைக்கும் உள்ளது நீறு;
பயிலப்படுவது நீறு; பாக்கியம் ஆவது நீறு;
துயிலைத் தடுப்பது நீறு; சுத்தம் அது ஆவது நீறு;
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே.

7
கூர்மைக்கு விளக்கம் தருகின்ற சூலப்படையினை ஏந்திய திருஆலவாயான் திருநீறு, திரிபுரங்களை எரிக்கச் செய்தது. இம்மை மறுமை இன்பம் தர இருப்பது. பிறரோடு பழகும் பயன் அளிப்பது. செல்வமாக விளங்குவது. உறக்கநிலையைத் தடுப்பது. தூய்மையை அளிப்பது.

இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு;
பராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு;
தராவணம் ஆவது நீறு; தத்துவம் ஆவது நீறு;
அரா அணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.

8
பாம்புகள் வளைந்து தவழும் திருமேனியனாகிய திருஆலவாயான் திருநீறு., இராவணன் பூசிப் பயன் பெற்றது. நல்லவர்களால் எண்ணத்தக்கது. பராசக்தி வடிவமானது. பாவம் போக்குவது. தத்துவங்களாக இருப்பது. மெய்ப்பொருளை உணர்த்துவது.

மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு;
மேல் உறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு;
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு;
ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.

9
நஞ்சுண்ட கண்டனாகிய திருஆலவாயான் திருநீறு, திருமால் பிரமர்களால் அறியப்பெறாத தன்மையை உடையது. வானுலகில் வாழும் தேவர்கள் தங்கள் மேனிகளில் பூசிக்கொள்வது. பிறவியாகிய இடரைத் தவிர்த்து நிலையான இன்பம் அளிப்பது.

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட,
கண் திகைப்பிப்பது நீறு; கருத இனியது நீறு;
எண்திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு;
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே.

10
மேல் உலகில் வாழ்வோர் பணிந்து போற்றும் திருஆலவாயான் திருநீறு, குண்டிகை ஏந்திய கையர்களாகிய சமணர்கள் சாக்கியர்களின் கண்களைத் திகைக்கச் செய்வது. தியானிக்க இனியது. எட்டுத் திசைகளிலும் வாழும் மெய்ப்பொருளுணர்வுடையோரால் ஏத்தப்பெறும் தகைமைப்பாடு உடையது.
Go to top

ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றி, புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்,
தேற்றி, தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

11
ஆற்றலும், பிறரைக் கொல்லும் வலிமையும் உடைய விடையின்மீது ஏறிவரும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலியில் விளங்கும் பூசுரனாகிய ஞானசம்பந்தன் சைவத்தின் பெருமையைத் தெளிவித்துப் பாண்டியன் உடலில் பற்றிய தீமை விளைத்த பிணி தீருமாறு சாற்றிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் நல்லவராவார்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஆலவாய் (மதுரை)
1.094   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்
Tune - குறிஞ்சி   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
2.066   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திருநீற்று பதிகம், மந்திரம் ஆவது நீறு; வானவர்
Tune - காந்தாரம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
2.070   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,
Tune - காந்தாரம்   (திருஆலவாய் (மதுரை) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.032   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வன்னியும் மத்தமும் மதி பொதி
Tune - கொல்லி   (திருஆலவாய் (மதுரை) )
3.039   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மானின் நேர் விழி மாதராய்!
Tune - கொல்லி   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
3.047   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காட்டு மா அது உரித்து,
Tune - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
3.051   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!
Tune - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
3.052   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வீடு அலால் அவாய் இலாஅய்,
Tune - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
3.054   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வாழ்க அந்தணர், வானவர், ஆன்
Tune - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) )
3.087   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தளிர் இள வளர் ஒளி
Tune - சாதாரி   (திருஆலவாய் (மதுரை) தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
3.108   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வேத வேள்வியை நிந்தனை செய்து
Tune - பழம்பஞ்சுரம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
3.115   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திரு இயமகம் பதிகம், ஆல நீழல் உகந்தது இருக்கையே;
Tune - பழம்பஞ்சுரம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
3.120   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,
Tune - புறநீர்மை   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
4.062   திருநாவுக்கரசர்   தேவாரம்   வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!
Tune - கொல்லி   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
6.019   திருநாவுக்கரசர்   தேவாரம்   முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;
Tune - திருத்தாண்டகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000