வான் அமர் திங்களும் நீரும் மருவிய வார் சடையானை,
தேன் அமர் கொன்றையினானை, தேவர் தொழப்படுவானை,
கான் அமரும் பிணை புல்கிக் கலை பயிலும் கடம்பூரில்
தான் அமர் கொள்கையினானை, தாள் தொழ, வீடு எளிது
ஆமே.
|
1
|
வானிற் பொருந்திய திங்களும் கங்கையும் மருவிய நீண்ட சடையை உடையவனும், தேன்பொருந்திய கொன்றை மாலையைச் சூடியவனும், தேவர்களால் தொழப்படுபவனும், காடுகளில் பெண்மானைத் தழுவி ஆண்மான்கள் மகிழும் கடம்பூரில் எழுந்தருளிய இயல்பினனும் ஆகிய பெருமான் திருவடிகளைத் தொழின் வீடு எளிதாகும். | |
அரவினொடு ஆமையும் பூண்டு, அம் துகில் வேங்கை
அதளும்,
விரவும் திரு முடி தன் மேல் வெண்திங்கள் சூடி,
விரும்பிப்
பரவும் தனிக் கடம்பூரில் பைங்கண் வெள் ஏற்று
அண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய, இன்பம் நமக்கு அது ஆமே.
|
2
|
பாம்பு, ஆமையோடு, ஆகியவற்றைப் பூண்டு, அழகிய ஆடையாகப் புலித்தோலை உடுத்து அழகிய முடிமீது பொருந்திய வெண்பிறையைச்சூடிப் பலராலும் விரும்பிப்பரவப் பெறும் சிறந்த கடம்பூரில் எழுந்தருளிய பசிய கண்களை உடைய வெள்ளேற்று அண்ணலின் திருவடிகளை இரவும் பகலும் பணிய நமக்கு இன்பம் உளதாம். | |
இளி படும் இன்சொலினார்கள் இருங்குழல்மேல் இசைந்து
ஏற,
தெளிபடு கொள்கை கலந்த தீத் தொழிலார் கடம்பூரில்
ஒளிதரு வெண்பிறை சூடி, ஒண்ணுதலோடு உடன் ஆகி,
புலி அதள் ஆடை புனைந்தான் பொன்கழல் போற்றுதும்,
நாமே.
|
3
|
இளி என்னும் இசை இனிமையும் சொல்லினிமையும் உடைய மகளிர் தம் கரிய கூந்தலில் புகை படியுமாறு அந்தணர் ஆகுதி வேட்கும் கடம்பூரில் ஒளிபொருந்திய வெண்பிறைசூடி உமையம்மையோடு உடனாய்ப் புலித்தோலுடுத்து எழுந்தருளியுள்ள இறைவனின் பொற்கழலை நாம்போற்றுவோம். | |
பறையொடு சங்கம் இயம்ப, பல்கொடி சேர் நெடுமாடம்
கறை உடை வேல் வரிக்கண்ணார் கலை ஒலி சேர்
கடம்பூரில்
மறையொடு கூடிய பாடல் மருவி நின்று, ஆடல் மகிழும்
பிறை உடை வார்சடையானைப் பேண வல்லார்
பெரியோரே.
|
4
|
பறை சங்கம் முதலியன ஒலிக்கப் பலவகையான கொடிகள் கட்டிய மாட வீடுகளில் மகளிர் ஆடும் ஒலி நிறைந்த கடம்பூரில் வேதஒலியோடு கூடிய பாடல்கள் பாடி ஆடி மகிழும் பிறைசூடிய நீண்ட சடையை உடைய பெருமானைப் பேணவல்லவர் பெரியோர் ஆவர். | |
தீ விரிய, கழல் ஆர்ப்ப, சேய் எரி கொண்டு, இடுகாட்டில்,
நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய, நட்டம்
நவின்றோன்
கா விரி கொன்றை கலந்த கண்நுதலான் கடம்பூரில்,
பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே.
|
5
|
தீப்போலும் சடைவிரியக் கழல்கள் ஆர்க்கக் கையில் அனல் ஏந்திச் சுடுகாட்டில் பேய்க்கணம் நகைக்க நடனம் ஆடுபவனும் கொன்றைமாலை அணிந்த நுதல்விழியானும் ஆகிய சிவபெருமானது கடம்பூரை அடைந்து ஓசையின்பம் உடைய பாடல்களைப் பாடிப் போற்றுவார் பழிபாவங்கள் இலராவர். | |
| Go to top |
தண்புனல் நீள் வயல்தோறும் தாமரைமேல் அனம் வைக,
கண் புணர் காவில் வண்டு ஏற, கள் அவிழும் கடம்பூரில்,
பெண் புனை கூறு உடையானை, பின்னுசடைப்
பெருமானை,
பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர் தாமே.
|
6
|
குளிர்ந்த நீர்நிறைந்த வயல்களில் முளைத்த தாமரைகள் தோறும் அன்னங்கள் வைகிமகிழவும், கண்கவரும் சோலைகளில் வண்டுகள் மொய்க்க மலர்கள் தேன்பிலிற்றவும் அமைந்த கடம்பூரில் மாதொருபாகனாய்ப் பின்னிய சடையினனாய் விளங்கும் பெருமானைப் பண்ணமைந்த பாடல்கள் பாடிப்பரவுவார் பாவம் இல்லாதவராவர். | |
பலி கெழு செம்மலர் சார, பாடலொடு ஆடல் அறாத,
கலி கெழு வீதி கலந்த, கார் வயல் சூழ் கடம்பூரில்,
ஒலி திகழ் கங்கை கரந்தான், ஒண் நுதலாள் உமை
கேள்வன்,
புலி அதள் ஆடையினான் தன் புனைகழல் போற்றல்
பொருள்
|
7
|
சிவபூசகர்கள் பூசைக்கு வேண்டும் செம்மையான மலர்களைக் கொய்து, பாடியும் ஆடியும் மகிழும் ஒலிநிறைந்த வீதிகளையும் நீர் நிரம்பிய வயல்களையும் உடைய கடம்பூரில் கங்கையை முடியில் மறைத்தவனாய், உமைபாகனாய், புலித்தோல் உடுத்தவனாய் விளங்கும் பெருமான் புகழைப் போற்றுதலே பொருள் உடைய செயலாகும். | |
பூம் படுகில் கயல் பாய, புள் இரிய, புறங்காட்டில்
காம்பு அடு தோளியர் நாளும் கண் கவரும் கடம்பூரில்,
மேம்படு தேவி ஓர்பாகம் மேவி! எம்மான்! என வாழ்த்தி,
தேம் படு மா மலர் தூவி, திசை தொழ, தீய கெடுமே.
|
8
|
அழகிய நீர் நிலைகளில் கயல்கள் பாய, அதனால் பறவை இரிந்தோட விளங்கும் கடம்பூரில் மூங்கில் போன்ற தோள்களை உடைய மகளிர் மனங்கவரும் இயல்பினனாய் விளங்குவோனும் புறங்காட்டில் ஆடுபவனுமாகிய பெருமானது கடம்பூரை அடைந்து மாதொருபாகனே! எம்மானே! எனக்கூறி மலர்தூவித்தொழத் தீயனகெடும். | |
திரு மரு மார்பில் அவனும், திகழ்தரு மா மலரோனும்,
இருவரும் ஆய், அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன்
கருவரை காலில் அடர்த்த கண் நுதலான் கடம்பூரில்
மருவிய பாடல் பயில்வார் வான் உலகம் பெறுவாரே.
|
9
|
திருமகள் மருவிய மார்பினனாகிய திருமாலும், தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும் ஆகிய இருவரும் அறிய முடியாதவாறு எரியுருவான ஈசனும் கரியமலைபோன்ற இராவணனைக் காலால் அடர்த்தவனும் ஆகிய பெருமானது கடம்பூரை அடைந்து, பொருந்திய பாடல்களைப் பாடிப்போற்றுவார் வானுலகம் பெறுவர். | |
ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும், அம் துவர்
ஆடைச்
சோடைகள், நன்நெறி சொல்லார்; சொல்லினும், சொல்
அலகண்டீர்!
வேடம் பல பல காட்டும் விகிர்தன், நம் வேதமுதல்வன்,
காடு அதனில் நடம் ஆடும் கண் நுதலான், கடம்பூரே.
|
10
|
ஆடையின்றி அறங்கூறும் அமணர்களும், துவராடை உடுத்து அறநெறிபோதிக்கும் பதர்களாகிய புத்தர்களும் நன்னெறிகூறிச் சொன்னாலும் அவை மெய்ச்சொற்களல்ல. பலவேறு வடிவங்களைக் கொண்டருளும் சிவபிரானும், நம் வேதமுதல்வனும் சுடுகாட்டுள் நடனமாடும் கண்ணுதலோனுமாகிய பெருமான் எழுந்தருளியிருப்பது கடம்பூராகும். | |
| Go to top |
விடை நவிலும் கொடியானை, வெண்கொடி சேர்
நெடுமாடம்
கடை நவிலும் கடம்பூரில் காதலனை, கடல் காழி
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும்,
படை நவில் பாடல், பயில்வார் பழியொடு பாவம் இலாரே.
|
11
|
விடைச்சின்னத்தை அறிவிக்கும் கொடியை உடையவனை, வெண்கொடிகள் சேர்ந்த உயரிய வாயில்களைக் கொண்ட மாடவீடுகளை உடைய கடம்பூரில் விருப்புடையவனை, கடலை அடுத்துள்ள காழிமாநகரில் தோன்றிய நன்னடை உடைய ஞானசம்பந்தன் நன்மை அருளுமாறு வேண்டிப்பாடிய சாதனமாகிய பாடல்களை ஓதுவார் பழிபாவம் இலாராவர். | |