கண் நுதலானும், வெண் நீற்றினானும், கழல் ஆர்க்கவே
பண் இசை பாட நின்று ஆடினானும், பரஞ்சோதியும்
புண்ணிய நால்மறையோர்கள் ஏத்தும் புகலி(ந்) நகர்,
பெண்ணின் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமான் அன்றே!
|
1
|
நெற்றிக் கண்ணையுடையவனும் , திருவெண் ணீற்றினைப் பூசியுள்ளவனும் , திருவடிகளில் கழல்கள் ஒலிக்கப் பண்ணுடன் இசைபாட நடனம் ஆடுபவனும் ஆகி , மேலான சோதி வடிவாக விளங்குகின்ற கடவுள் , சிவபுண்ணியர்களாகிய , நான்கு வேதங்களையும் பயின்ற அந்தணர்கள் துதிக்கின்ற திருப்புகலி நகரில் பெண்ணின் நல்லவளாகிய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் சிவபெருமானேயாவான் . | |
சாம்பலோடும் தழல் ஆடினானும், சடையின் மிசைப்
பாம்பினோடும் மதி சூடினானும், பசு ஏறியும்
பூம் படுகல்(ல்) இள வாளை பாயும் புகலி(ந்) நகர்,
காம்பு அன தோளியோடும்(ம்) இருந்த கடவுள் அன்றே!
|
2
|
மகாசங்கார காலத்தில் சாம்பலோடு நெருப்பில் ஆடியவனும் , சடைமுடியில் பாம்போடு சந்திரனைச் சூடியுள்ளவனும் , இடபவாகனத்தில் ஏறியுள்ளவனுமான சிவபெருமான் , மலர்ப் பொய்கையில் இள வாளை மீன்கள் துள்ளிப் பாய்கின்ற திருப்புகலி நகரில் , மூங்கில் போன்ற தோளுடைய உமாதேவியோடு வீற்றிருக்கும் கடவுளே ஆவான் . | |
கருப்பு நல் வார் சிலைக் காமன் வேவக் கடைக்கண்டானும்,
மருப்பு நல் ஆனையின் ஈர் உரி போர்த்த மணாளனும்
பொருப்பு அன மா மணி மாடம் ஓங்கும் புகலி(ந்) நகர்,
விருப்பின் நல்லாளொடும் வீற்றிருந்த விமலன் அன்றே!
|
3
|
நல்ல நீண்ட கரும்பு வில்லையுடைய மன்மதன் எரியும்படி நெற்றிக் கண்ணால் விழித்தவனும் , அழகிய தந்தத்தை யுடைய யானையின் வலிய தோலினை உரித்துப் போர்த்திக் கொண்ட மணாளனுமாகிய சிவபெருமான் , மலைகள் போன்று உயர்ந்து விளங்கும் அழகிய மாடங்களையுடைய திருப்புகலி நகரில் தன்மீது விருப்பமுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் விமலனே யாவான் . | |
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும், அழகு ஆகவே
கங்கையைச் செஞ்சடை சூடினானும், கடலின்(ன்) இடைப்
பொங்கிய நஞ்சு அமுது உண்டவனும் புகலி(ந்) நகர்
மங்கை நல்லாளொடும் வீற்றிருந்த மணவாளனே.
|
4
|
உள்ளங்கையில் நெருப்பை ஏந்தியவனும் , அழகுறக் கங்கையைச் செஞ்சடையில் சூடியவனும் , திருப்பாற் கடலில் தோன்றிய நஞ்சை அமுதாக உண்டவனும் , திருப்புகலி நகரில் மங்கை நல்லாளாகிய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் சிவபெருமானே யாவான் . | |
சாம நல்வேதனும், தக்கன் தன் வேள்வி தகர்த்தானும்,
நாமம் நூறு-ஆயிரம் சொல்லி வானோர் தொழும் நாதனும்
பூ மல்கு தண்பொழில் மன்னும் அம் தண் புகலி(ந்)நகர்,
கோமளமாதொடும் வீற்றிருந்த குழகன் அன்றே!
|
5
|
நல்ல சாமவேதத்தை அருளியவனும் , சிவனை நினையாது தக்கன் செய்த யாகத்தைத் தகர்த்தவனும் , நூறாயிரம் திருநாமங்களைச் சொல்லித் தேவர்களும் அருச்சித்து வணங்கும் தலைவனும் , பூக்கள் நிறைந்த குளிர்ந்த சோலைகள் நிலைபெற்றி ருக்கும் அழகும் , குளிர்ச்சியுமுடைய திருப்புகலி நகரில் அழகிய இளம் பெண்ணாகிய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் அழகிய சிவ பெருமானேயாவான் . | |
| Go to top |
இரவு இடை ஒள் எரி ஆடினானும், இமையோர் தொழச்
செரு இடை முப்புரம் தீ எரித்த சிவலோகனும்,
பொரு விடை ஒன்று உகந்து ஏறினானும் புகலி(ந்)நகர்,
அரவு இடை மாதொடும் வீற்றிருந்த அழகன் அன்றே!
|
6
|
மகாசங்காரம் என்று சொல்லப்படும் நள்ளிரவில் ஒளிமிக்க நெருப்பில் ஆடியவனும் , தேவர்கள் தொழுது வேண்டப் போர் முகத்தில் முப்புரங்களைத் தீப்பற்றி எரியும்படி செய்த சிவலோக நாதனும் , இடபவாகனத்தில் உகந்து ஏறியவனும் , திருப்புகலி நகரில் பாம்பு போன்ற இடையினையுடைய உமாதேவியோடு வீற்றிருந் தருளும் அழகிய சிவபெருமானேயாவான் . | |
சேர்ப்பது திண் சிலை மேவினானும், திகழ் பாலன்மேல்
வேர்ப்பது செய்த வெங்கூற்று உதைத்தானும் வேள்விப்புகை
போர்ப்பது செய்து அணி மாடம் ஓங்கும் புகலி(ந்) நகர்,
பார்ப்பதியோடு உடன் வீற்றிருந்த பரமன் அன்றே!
|
7
|
திண்ணிய கயிலை மலையை விரும்பி இருப்பிட மாகக் கொண்டவனும் , பாலனான மார்க்கண்டேயர் மீது சினம் கொண்டு வந்த கொடுங்காலனைக் காலால் உதைத்தவனும் , வேள்விப் புகையால் மூடப்பட்ட அழகிய மாடங்கள் ஓங்கும் திருப்புகலி நகரில் உமாதேவியோடு வீற்றிருந்தருள்பவனும் எல்லோருக்கும் மேலானவ னான சிவபெருமானேயாவான் . | |
கல்-நெடுமால் வரைக்கீழ் அரக்கன்(ன்) இடர் கண்டானும்,
வில் நெடும் போர் விறல் வேடன் ஆகி விசயற்கு ஒரு
பொன் நெடுங்கோல் கொடுத்தானும் தண் புகலி(ந்)நகர்,
அன்னம் அன்ன(ந்) நடை மங்கையொடும் அமர்ந்தான் அன்றே!
|
8
|
கல் போன்று திண்ணிய நெடிய பெரிய திருக்கயிலை மலையின் கீழ் அரக்கனான இராவணனை இடர் செய்தானும் , வில்லேந்திப் போர்புரியும் வீரமுடைய வேட்டுவ வடிவில் வந்து அர்ச்சுனனுக்கு ஒரு பொன்மயமான பாசுபதம் என்ற அம்பைக் கொடுத்தவனும் , அழகிய குளிர்ச்சியான திருப்புகலி நகரில் அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியோடு வீற்றிருந்து அருளுபவ னான சிவபெருமானேயாவான் . | |
பொன்நிற நான்முகன், பச்சையான், என்று இவர் புக்குழித்
தன்னை இன்னான் எனக் காண்பு அரிய தழல்சோதியும்
புன்னை பொன்தாது உதிர் மல்கும் அம் தண் புகலி(ந்) நகர்,
மின் இடை மாதொடும் வீற்றிருந்த விமலன் அன்றே!
|
9
|
பொன்னிறப் பிரமனும் , பச்சைநிறத் திருமாலும் என்ற இவர்கள் அடிமுடி காணப் புகுந்தபோது தன்னை இன்னா னெனக் காண்பதற்கியலாதபடி அழற்பிழம்பாய் நின்ற பெருமான் , புன்னை மரங்கள் பொன் போன்ற தாதுக்களை உதிர்க்க அழகிய , குளிர்ச்சியான திருப்புகலி நகரில் மின்னல் போன்ற இடையையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் விமலனாகிய சிவபெருமானே யாவான் . | |
பிண்டியும் போதியும் பேணுவார் பேணைப் பேணாதது ஓர்,
தொண்டரும் காதல்செய், சோதி ஆய சுடர்ச்சோதியான்-
புண்டரீகம் மலர்ப் பொய்கை சூழ்ந்த புகலி(ந்) நகர்,
வண்டு அமர் கோதையொடும்(ம்) இருந்த மணவாளனே.
|
10
|
அசோக மரத்தையும் , அரசமரத்தையும் போற்றும் சமணர்கள் , புத்தர்கள் சொல்லும் உரைகளைப் போற்றாது ஒப்பற்ற தொண்டர்கள் பக்தியுடன் வழிபாடு செய்கின்ற சோதிச் சுடராய் ஒளிரும் இறைவன் தாமரைகள் மலரும் பொய்கைகள் சூழ்ந்த திருப்புகலி நகரில் வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமாதேவியோடு எழுந்தருளியுள்ள மணவாளனான சிவபெருமானே யாவான் . | |
| Go to top |
பூங் கமழ் கோதையொடும்(ம்) இருந்தான், புகலி(ந்) நகர்ப்
பாங்கனை, ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை,
ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக, இசை வல்லவர்,
ஓங்கு அமராவதியோர் தொழச் செல்வதும் உண்மையே.
|
11
|
பூ மணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட திருப்புகலி நகர் இறைவனை , ஞான சம்பந்தன் சொன்ன தமிழ்ப்பாக்கள் பத்தினைத் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவமாகவே கொண்டு இன்னிசையுடன் ஓதித் துதிக்க வல்லவர்கள் பெருமையுடைய தேவலோகத்தாரும் தொழும்படி சிவனுலகம் செல்வர் என்பது உண்மையே ஆகும் . | |