வேதியன், விண்ணவர் ஏத்த நின்றான், விளங்கும் மறை
ஓதிய ஒண்பொருள் ஆகி நின்றான், ஒளி ஆர் கிளி
கோதிய தண்பொழில் சூழ்ந்து அழகு ஆர் திருக்கோட்டாற்றுள்
ஆதியையே நினைந்து ஏத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே.
|
1
|
வேதங்களை அருளிச் செய்த சிவபெருமான் விண்ணோர்களாலும் தொழப்படுகின்றான் . அவ்வேதங்களால் போற்றப்படும் உயர்ந்த பொருளாகவும் விளங்குகின்றான் . அழகிய கிளிகள் கொஞ்சும் குளிர்ச்சியான சோலைகள் சூழ்ந்த அழகான திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஆதிப் பிரானான அவனை நினைந்து வணங்க வல்லவர்கட்குத் துன்பம் இல்லை . | |
ஏல மலர்க் குழல் மங்கை நல்லாள், இமவான்மகள்
பால் அமரும் திருமேனி எங்கள் பரமேட்டியும்
கோல மலர்ப்பொழில் சூழ்ந்து, எழில் ஆர் திருக்கோட்டாற்றுள்
ஆல நிழல் கீழ் இருந்து, அறம் சொன்ன அழகனே.
|
2
|
மணம் கமழும் கூந்தலையுடைய மங்கை நல்லாளான , இமவான் மகளான உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாக வைத்த எங்கள் பரம்பொருளான சிவபெருமான் , வண்ணப் பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் தலத்தில் ஆலமரநிழலில் தட்சணாமூர்த்தியாக அமர்ந்து சனகாதி முனிவர்கட்கு அறம் உரைத்த அழகனாவான் . | |
இலை மல்கு சூலம் ஒன்று ஏந்தினானும், இமையோர் தொழ
மலை மல்கு மங்கை ஓர்பங்கன் ஆய(ம்) மணிகண்டனும்
குலை மல்கு தண்பொழில் சூழ்ந்து, அழகு ஆர் திருக்கோட்டாற்றுள்
அலை மல்கு வார்சடை ஏற்று உகந்த அழகன் அன்றே!
|
3
|
சிவபெருமான் இலைபோன்ற சூலப்படையைக் கையில் ஏந்தியவன் . விண்ணோர்களும் தொழுது வணங்க மலை மகளான உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட நீலகண்டன் . கங்கையை நீண்ட சடையிலே தாங்கிய அழகனான அவன் , காய்களும் , கனிகளும் குலைகளாகத் தொங்கும் குளிர்ந்த சோலை சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான். | |
ஊன் அமரும்(ம்) உடலுள் இருந்த(வ்) உமைபங்கனும்
வான் அமரும் மதி சென்னி வைத்த மறை ஓதியும்,
தேன் அமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
தான் அமரும் விடையானும், எங்கள் தலைவன் அன்றே!
|
4
|
இறைவன் உடம்பினை இயக்கும் உயிர்க்குள் உயிராய் விளங்குபவன் . உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன் . வானில் தவழும் சந்திரனைத் தலையிலே அணிந்தவன் . வேதங்களை அருளிச் செய்தவன் . இடபத்தை வாகனமாக உடையவன் . அவன் தேனுடைய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எங்கள் தலைவன் ஆவான் . | |
வம்பு அலரும் மலர்க்கோதை பாகம் மகிழ் மைந்தனும்,
செம்பவளத்திருமேனி வெண்நீறு அணி செல்வனும்
கொம்பு அமரும் மலர் வண்டு கெண்டும் திருக்கோட்டாற்றுள்
நம்பன் எனப் பணிவார்க்கு அருள்செய் எங்கள் நாதனே.
|
5
|
சிவபெருமான் நறுமணம் கமழும் மாலையணிந்த கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாக வைத்து மகிழும் வலிமையுடையவன் . செம்பவளம் போன்ற திருமேனியில் வெண்ணிறத் திருநீறு அணிந்துள்ள செல்வன் . அனைத்துயிர்களும் விரும்பி அடையத்தக்க அவன் , கொம்புகளிலுள்ள மலர்களை வண்டுகள் கெண்டுகின்ற திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து , தன்னைப் பணிந்து வணங்குபவர்கட்கு அருள்புரிபவன் . அவனே எங்கள் தலைவன் . | |
| Go to top |
பந்து அமரும் விரல் மங்கை நல்லாள் ஒருபாகமா,
வெந்து அமரும் பொடிப் பூச வல்ல விகிர்தன், மிகும்
கொந்து அமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
அந்தணனை, நினைந்து ஏத்த வல்லார்க்கு இல்லை, அல்லலே.
|
6
|
சிவபெருமான் பந்துபோன்ற திரட்சியான விரல்களையுடைய மங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன் . வெந்து தணிந்த திருநீற்றினைப் பூசியுள்ள விகிர்தன் . மிகுதியாகக் கொத்தாகப் பூக்கும் மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருள்கின்ற , அனைத்துயிர்களிடத்தும் செவ்விய அருளுடைய அவனை நினைந்து வழிபடும் அடியவர்கட்கு அல்லல் சிறிதும் இல்லை . | |
துண்டு அமரும் பிறை சூடி நீடு சுடர்வண்ணனும்,
வண்டு அமரும் குழல் மங்கை நல்லாள் ஒருபங்கனும்
தெண்திரை நீர் வயல் சூழ்ந்து அழகு ஆர் திருக்கோட்டாற்றுள்
அண்டமும் எண் திசை ஆகி நின்ற அழகன் அன்றே!
|
7
|
துண்டித்த பிறை போன்ற சந்திரனைச் சடையில் சூடியவன் சிவபெருமான் . நீண்டு ஓங்கும் நெருப்புப் போன்ற சிவந்த நிறமுடையவன் . பூவிலுள்ள தேனை விரும்பி வண்டுகள் அமர்கின்ற கூந்தலையுடைய மங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டவன் . கடலும் , நீர்வளமிக்க செழுமையான வயல்கள் சூழ்ந்த நிலவளமுமுடைய அழகான திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் அண்டங்களும் , எட்டுத்திசைகளுமாகி நின்ற அழகன் அல்லனோ ? | |
இரவு அமரும் நிறம் பெற்று உடைய இலங்கைக்கு இறை,
கரவு அமரக் கயிலை எடுத்தான், வலி செற்றவன்-
குரவு அமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
அரவு அமரும் சடையான்; அடியார்க்கு அருள்செய்யுமே.
|
8
|
இரவு போன்ற கருமைநிறமுடைய இலங்கை மன்னனான இராவணன் வஞ்சனையால் கயிலைமலையைப் பெயர்த்து எடுக்க , அவன் வலிமையை அழித்த சிவபெருமான் , குரா மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து , சடைமுடியில் பாம்பணிந்து விளங்கி , தன் அடியவர்கட்கு அருள்புரிகின்றான் . | |
ஓங்கிய நாரணன் நான்முகனும் உணரா வகை,
நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன்-நிழல்
கோங்கு அமரும் பொழில் சூழ்ந்து, எழில் ஆர் திருக்கோட்டாற்றுள்
ஆங்கு அமரும் பெருமான்; அமரர்க்கு அமரன் அன்றே!
|
9
|
செருக்குடைய திருமாலும் , பிரமனும் உணரா வண்ணம் அளந்தறிய முடியாத தீ யுருவாகிநின்ற சிவபெருமான் இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன் . நிழல்தரும் கோங்குமலர்ச் சோலை சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பெருமான் . தேவர்கட்கெல்லாம் தேவனாவான் . | |
கடுக் கொடுத்த துவர் ஆடையர், காட்சி இல்லாதது ஓர்
தடுக்கு இடுக்கிச் சமணே திரிவார்கட்கு, தன் அருள்
கொடுக்ககிலாக் குழகன் அமரும் திருக்கோட்டாற்றுள்
இடுக்கண் இன்றித் தொழுவார் அமரர்க்கு இறை ஆவரே.
|
10
|
சாயம் பற்றும் பொருட்டுக் கடுக்காய் நீரில் தோய்த்த காவி ஆடை அணிந்த புத்தர்களுக்கும் , சிறுபாயைச் சுமந்து திரியும் சமணர்களுக்கும் தன்னை நாடாததால் , அருள் புரியமாட்டாத அழகன் சிவபெருமான் . திருக்கோட்டாறு என்னும் தலத்தில் வீற்றிருந் தருளுகின்ற அவனைச் சிரமப்படாமல் எளிய முயற்சியால் வழிபடு கின்றவர்களும் , தேவர்கட்குத் தலைவராவர் . | |
| Go to top |
கொடி உயர் மால்விடை ஊர்தியினான் திருக்கோட்டாற்றுள்
அடி கழல் ஆர்க்க நின்று ஆட வல்ல அருளாளனை,
கடி கமழும் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் சொல்-
படி, இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை, பாவமே.
|
11
|
இடபத்தைக் கொடியாகவும் , வாகனமாகவும் கொண்டு திருக்கோட்டாறு என்னும் தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் திருவடிகளிலுள்ள கழல்கள் ஒலிக்க , திருநடனம் புரியும் அருளாளன் . அப்பெருமானை நறுமணம் கமழும் சோலைகளை யுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களால் போற்றிப் பாடியாட வல்லவர்களின் பாவம் யாவும் நீங்கும் . | |