சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.014   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்பைஞ்ஞீலி - காந்தாரபஞ்சமம் கனகாங்கி கேதார கெளளை கர்நாடக சுத்த சவேரி ராகத்தில் திருமுறை அருள்தரு விசாலாட்சியம்மை உடனுறை அருள்மிகு நீலகண்டேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=MvVyrK4wmd0   Add audio link Add Audio

ஆரிடம் பாடலர், அடிகள், காடு அலால்
ஓர் இடம் குறைவு இலர், உடையர் கோவணம்,
நீர் இடம் சடை, விடை ஊர்தி, நித்தலும்
பாரிடம் பணி செயும், பயில் பைஞ்ஞீலியே.

1
சிவபெருமான் இருடிகளுக்காக வேதத்தை அருளிச் செய்தவர் . வசிப்பது சுடுகாடானாலும் அதனால் ஒரு குறையும் இல்லாதவர் . அணிவது கோவண ஆடை . சடைமுடியில் கங்கையைத் தாங்கியவர் . இடபவாகனத்தில் ஏறியவர் . தினந்தோறும் பூதகணங்கள் சூழ்ந்து நின்று பணிசெய்யத் திருப்பைஞ்ஞீலியில் வீற்றிருந்தருளுகின்றார் .

மருவு இலார் திரிபுரம் எரிய, மால்வரை,
பரு விலாக் குனித்த பைஞ்ஞீலி மேவலான்,
உரு இலான், பெருமையை உளம் கொளாத அத்
திரு இலார் அவர்களைத் தெருட்டல் ஆகுமே?

2
பகையசுரர்களின் முப்புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு மேரு என்னும் பெருமையுடைய மலையினை வில்லாக வளைத்த சிவபெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் . இத்தகைய வடிவமுடையவன் அவன் என்று வரையறை செய்து உணர்த்த இயலாத அப் பெருமானுடைய பெருமையை உணராதவர் அவனருளைப் பெறாதவர் . அவர்களின் அறிவைத் தெளிவித்தல் இயலுமா ?

அம் சுரும்பு அணி மலர் அமுதம் மாந்தி, தேன்
பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி மேவலான்-
வெஞ்சுரம்தனில், உமை வெருவ, வந்தது ஓர்
குஞ்சரம் பட, உரி போர்த்த கொள்கையே!

3
அழகிய வண்டு மலரை அடைந்து தேனைக் குடித்துப் பஞ்சுரம் என்னும் பண்ணைப் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் , வெப்பம் மிகுந்த காட்டில் உமாதேவி அஞ்சுமாறு வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவன் .

கோடல்கள் புறவு அணி கொல்லை முல்லைமேல்
பாடல் வண்டு இசை முரல் பயில் பைஞ்ஞீலியார்
பேடு அலர், ஆண் அலர், பெண்ணும் அல்லது, ஓர்
ஆடலை உகந்த எம் அடிகள் அல்லரே!

4
காந்தள் மலர்களிலும் , முல்லை நிலத்திலுள்ள காடுகளிலுமுள்ள முல்லை மலர்களின் மீதும் அமர்ந்திருக்கும் வண்டுகள் செய்யும் ரீங்காரம் பண்ணிசைபோல் ஒலிக்க , திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவர் அலியல்லர் . ஆணுமல்லர் . பெண்ணுமல்லர் . திருநடனம் புரிவதில் விருப்பமுடைய அப்பெருமானார் எங்கள் தலைவர் ஆவார் .

விழி இலா நகுதலை, விளங்கு இளம்பிறை,
சுழியில் ஆர் வருபுனல் சூழல் தாங்கினான்-
பழி இலார் பரவு பைஞ்ஞீலி பாடலான்;
கிழி இலார் கேண்மையைக் கெடுக்கல் ஆகுமே?

5
விழியிலாத பற்களோடு கூடிய பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி , இளம்பிறையையும் , கங்கையையும் சடையில் தாங்கியுள்ளவன் சிவபெருமான் . பழியிலாத அடியவர்கள் போற்றிப் பாடத் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் தன்னை வணங்குபவர்களின் செல்வமில்லாத வறுமைநிலையைப் போக்குவான் .
Go to top

விடை உடைக் கொடி வலன் ஏந்தி, வெண்மழுப்
படை உடைக் கடவுள் பைஞ்ஞீலி மேவலான்;
துடி இடைக் கலை அல்குலாள் ஓர்பாகமா,
சடை இடைப் புனல் வைத்த சதுரன் அல்லனே!

6
இடபம் பொறித்த கொடியை வலக்கையில் ஏந்தி , வெண்மழுப்படையையுடைய கடவுள் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளான் . உடுக்கை போன்ற குறுகிய இடையில் மேகலை என்னும் ஆபரணம் அணிந்து , சீலையால் மறைத்த அல்குலையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு , சடையிலே கங்கையைத் தரித்த சதுரன் ஆவான் .

தூயவன், தூய வெண் நீறு மேனிமேல்
பாயவன்-பாய பைஞ்ஞீலி கோயிலா
மேயவன்; வேய் புரை தோளி பாகமா
ஏயவன், எனைச் செயும் தன்மை என்கொலோ?

7
இறைவன் தூயஉடம்பினன் . தூய்மையான திருநீற்றைத் தன் திருமேனி முழுவதும் பரவப் பூசியவன் . திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்திலுள்ள திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுபவன் . மூங்கிலைப் போன்ற தோளையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன் . அப்பெருமான் சீவனான என்னைச் சிவனாகச் செய்யும் பண்புதான் என்னே !

தொத்தின தோள் முடி உடையவன் தலை-
பத்தினை நெரித்த பைஞ்ஞீலி மேவலான்,
முத்தினை முறுவல் செய்தாள் ஒர்பாகமாப்
பொத்தினன், திருந்து அடி பொருந்தி வாழ்மினே!

8
கொத்தாகவுள்ள இருபது தோள்களைக் கொண்ட இராவணனின் முடியுடைய தலைகள் பத்தையும் இறைவன் நெரித்தான் . அப்பெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றான் . முத்துப் போன்ற பற்களை உடைய உமாதேவியை ஒருபாகமாக அணைத்துக் கொண்டவன் . அப் பெருமானின் திருவடிகளைப் பொருந்தி வாழ்வீர்களாக .

நீர் உடைப் போது உறைவானும் மாலும் ஆய்,
சீர் உடைக் கழல் அடி சென்னி காண்கிலர்;
பார் உடைக் கடவுள், பைஞ்ஞீலி மேவிய
தார் உடைக்கொன்றை அம் தலைவர், தன்மையே!

9
நீர்நிலைகளில் விளங்குகின்ற தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் , திருமாலும் திருமுடியையும் , சிறப்புடைய கழலணிந்த திருவடிகளையும் தேடியும் காணாது நிற்க , இவ்வுலகை உடைமைப் பொருளாகக் கொண்ட இறைவன் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் கொன்றைமாலை அணிந்த தலைவனாய் வீற்றிருந்தருளுகின்றான் .

பீலியார் பெருமையும், பிடகர் நூன்மையும்,
சாலியாதவர்களைச் சாதியாதது, ஓர்
கோலியா அரு வரை கூட்டி எய்த பைஞ்-
ஞீலியான் கழல் அடி நினைந்து வாழ்மினே!

10
மயிற்பீலி யேந்திப் பெருமை கொள்ளும் சமணர்களும் , திரிபிடகம் என்னும் சமயநூலுடைய புத்தர்களும் , தங்கள் நூற்பொருளோடு பொருந்தாதவர்களை வாதிட்டு வெல்லும் வல்லமையில்லாதவர்கள் . எனவே , அவர்களின் உரைகளைக் கேளாது , வளைக்க முடியாத மேருமலையை வில்லாக வளைத்து அம்பினைத் தொடுத்து எய்து முப்புரங்களை எரித்தவனும் , திருப் பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவனுமான சிவபெருமானின் கழலணிந்த திருவடிகளை நினைந்து வணங்கி வாழ்வீர்களாக !
Go to top

கண் புனல் விளை வயல் காழிக் கற்பகம்
நண்பு உணர் அருமறை ஞானசம்பந்தன்
பண்பினர் பரவு பைஞ்ஞீலி பாடுவார்
உண்பின உலகினில், ஓங்கி வாழ்வரே.

11
தண்ணீர் பாய்கின்ற வயல்வளமுடைய சீகாழியில் , கற்பகமரம் போன்று அன்பினால் அனைத்துயிர்கட்கும் நலம் சேர்க்கும் அருமறைவல்ல ஞானசம்பந்தன் , நற்பண்புடையவர் வணங்கும் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்திலுள்ள இறைவனைப் பாடிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் , வினைப்பயன்களை நுகர்வதற் காகப் பிறந்துள்ள இப்பூவுலகில் ஓங்கி வாழ்வர் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பைஞ்ஞீலி
3.014   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஆரிடம் பாடலர், அடிகள், காடு
Tune - காந்தாரபஞ்சமம்   (திருப்பைஞ்ஞீலி நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)
5.041   திருநாவுக்கரசர்   தேவாரம்   உடையர் கோவணம், ஒன்றும் குறைவு
Tune - திருக்குறுந்தொகை   (திருப்பைஞ்ஞீலி நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)
7.036   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கார் உலாவிய நஞ்சை உண்டு
Tune - கொல்லி   (திருப்பைஞ்ஞீலி மெய்ஞ்ஞான நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000