சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.016   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்கொள்ளிக்காடு - காந்தாரபஞ்சமம் கனகாங்கி கேதார கெளளை கர்நாடக சுத்த சவேரி ராகத்தில் திருமுறை அருள்தரு பஞ்சினுமெல்லடியம்மை உடனுறை அருள்மிகு அக்கினீசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=yn9XSEdQ1fw   Add audio link Add Audio

நிணம் படு சுடலையில், நீறு பூசி நின்று,
இணங்குவர், பேய்களோடு; இடுவர், மாநடம்;
உணங்கல் வெண் தலைதனில் உண்பர்; ஆயினும்,
குணம் பெரிது உடையர் நம் கொள்ளிக்காடரே.

1
பிணங்களை எரிக்கும் சுடுகாட்டின் சாம்பலைப் பூசிப் பேய்களோடு பெரிய கூத்து ஆடுகின்ற இறைவர் , உலர்ந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்திப் பலியேற்று உண்பர் . ஆயினும் அப்பெருமான் உயர்ந்த குணம் உடையவராய்த் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

ஆற்ற நல் அடி இணை அலர் கொண்டு ஏத்துவான்,
சாற்றிய அந்தணன் தகுதி கண்ட நாள்
மாற்றலன் ஆகி முன் அடர்த்து வந்து அணை
கூற்றினை உதைத்தனர் கொள்ளிக்காடரே.

2
நலம் தரும் இறைவனின் திருவடிகளை மலர்கொண்டு போற்றி வழிபட்ட மார்க்கண்டேயனின் வாழ்நாள் இறுதியை அறிந்து யாவராலும் தவிர்க்க முடியாதவனாகி மார்க்கண்டேயனை நெருங்கி வந்தடைந்த கூற்றுவனைக் காலால் உதைத்த இறைவர் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுகின்றார் .

அத்தகு வானவர்க்கு ஆக, மால்விடம்
வைத்தவர், மணி புரை கண்டத்தி(ன்)னுளே;
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்
கொத்து அலர் கொன்றையர் கொள்ளிக்காடரே.

3
தாம் வாழ்வான் வேண்டி வணங்கும் வானவர்களைக் காப்பதற்காகக் கொடிய விடத்தை உண்டு தம் கண்டத்தில் அடக்கிய சிவபெருமான் , ஊமத்தம் பூவும் , வன்னியும் அணிந்த சடைமுடியில் கொத்தாகக் கொன்றைமலர் சூடியவர் . அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

பா வணம் மேவு சொல்மாலையின், பல
நா வணம் கொள்கையின் நவின்ற செய்கையர்;
ஆவணம் கொண்டு எமை ஆள்வர் ஆயினும்,
கோவணம் கொள்கையர் கொள்ளிக்காடரே.

4
யாப்பிலக்கணம் பொருந்துமாறு சொல்லைத் தொடுக்கும் மாலை போன்ற பாடல்கள் பலவற்றை நாநயத்துடன் நவிலுமாறு செய்தவர் இறைவர் . அவர் உயிர்களாகிய எங்களை அடிமை கொண்டு ஆள்பவராயினும் கோவணஆடை உடையவர் . அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

வார் அணி வனமுலை மங்கையாளொடும்
சீர் அணி திரு உருத் திகழ்ந்த சென்னியர்;
நார் அணி சிலைதனால் நணுகலார் எயில்
கூர் எரி கொளுவினர் கொள்ளிக்காடரே.

5
கச்சணிந்த அழகிய முலையுடைய உமாதேவியோடு , சிறந்த அழகிய திருவுருவத்துடன் விளங்கும் சிவபெருமான் , நாண் பூட்டிய மேருமலையை வில்லாகக் கொண்டு பகைவர்களாகிய முப்புர அசுரர்களின் மதில்களை அக்கினியை அம்பின் நுனியாகக் கொண்டு கொளுத்தியவர் . அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .
Go to top

பஞ்சு தோய் மெல் அடிப் பாவையாளொடும்
மஞ்சு தோய் கயிலையுள் மகிழ்வர், நாள்தொறும்;
வெஞ்சின மருப்பொடு விரைய வந்து அடை
குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக்காடரே.

6
செம்பஞ்சுக் குழம்பு தோய்ந்த மெல்லிய பாதத்தையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு , மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள கயிலைமலையில் மகிழ்ந்திருந்து நாள் தோறும் தம்மை வழிபடுபவர்கட்கு அருள் பாலிக்கும் இறைவர் , கொடிய சினத்தோடும் , கொம்போடும் வேகமாக வந்தடைந்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர் . அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

இறை உறு வரி வளை இசைகள் பாடிட,
அறை உறு கழல் அடி ஆர்க்க, ஆடுவர்;
சிறை உறு விரிபுனல் சென்னியின் மிசைக்
குறை உறு மதியினர் கொள்ளிக்காடரே.

7
திருக்கையில் விளங்கும் அழகிய வளையல்களையுடைய உமாதேவி இசைபாட , திருவடிகளில் விளங்கும் வீரக்கழல்கள் ஒலிக்க , இறைவர் திருநடனம் புரிகின்றார் . அப் பெருமான் பாய்கின்ற கங்கையைத் தடுத்துச் சடையில் தாங்கி , கலைகுறைந்த சந்திரனையும் தலையில் சூடி , திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

எடுத்தனன் கயிலையை, இயல் வலியினால்,
அடர்த்தனர் திருவிரலால்; அலறிடப்
படுத்தனர்; ஏன்று அவன் பாடல் பாடலும்,
கொடுத்தனர், கொற்றவாள்; கொள்ளிக்காடரே.

8
தன்னுடைய வலிமையினால் கயிலைமலையை அப்புறப்படுத்த எடுத்த இராவணனை , தம் காற்பெரு விரலையூன்றி அம்மலையின்கீழ் அடர்த்து அவறும்படி செய்ய , இராவணன் தவறுணர்ந்து , தன்னை வருத்திய சிவனைப் போற்றிச் சாமகானம் பாட , இறைவர் இரங்கி வீரவாளை அருளினார் . அப்பெருமானார் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

தேடினார், அயன் முடி, மாலும் சேவடி;
நாடினார் அவர் என்றும் நணுககிற்றிலர்;
பாடினார், பரிவொடு; பத்தர் சித்தமும்
கூடினார்க்கு அருள்செய்வர் கொள்ளிக்காடரே.

9
பிரமன் திருமுடியினையும் , திருமால் திருவடியையும் தேட , அவர்களால் எப்பொழுதும் அணுகமுடியாதவராய் விளங்கும் சிவபெருமான் , பக்தர்கள் மனம் ஒன்றி அன்பால் அகம் குழைந்து பாட அருள்செய்வார் . அப்பெருமானார் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

நாடி நின்று, அறிவு இல் நாண் இலிகள், சாக்கியர்
ஓடி முன் ஓதிய உரைகள் மெய் அல;
பாடுவர், நால்மறை; பயின்ற மாதொடும்
கூடுவர், திரு உரு; கொள்ளிக்காடரே.

10
இறையுண்மையை உணரும் அறிவில்லாத நாணமற்ற சமணரும் , புத்தர்களும் முனைந்து சொல்லும் உரைகள் மெய்யானவை அல்ல . அவர்களைச் சாராதுவிட்டு , நான்கு வேதங்களை அருளிய சிவபெருமான் , நன்கு பழகிய உமாதேவியோடு திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் திருக்கோலத்தைக் கண்டு தரிசித்து உய்தி அடையுங்கள் .
Go to top

நல்-தவர் காழியுள் ஞானசம்பந்தன்,
குற்றம் இல் பெரும் புகழ்க் கொள்ளிக்காடரைச்
சொல்-தமிழ் இன் இசைமாலை, சோர்வு இன்றிக்
கற்றவர், கழல் அடி காண வல்லரே.

11
நல்தவத்தோர் வாழ்கின்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் , குற்றமற்ற பெரும்புகழுடைய திருக்கொள்ளிக்காடு என்னும் தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை , அழகு தமிழில் , இன்னிசையோடு பாடிய இப்பாமாலையைத் தளராது கற்று ஓத வல்லவர்கள் அப்பெருமானின் திருவடிகளைக் காணும் பேறு பெறுவார்கள் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கொள்ளிக்காடு
3.016   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நிணம் படு சுடலையில், நீறு
Tune - காந்தாரபஞ்சமம்   (திருக்கொள்ளிக்காடு அக்கினீசுவரர் பஞ்சினுமெல்லடியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000