சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.021   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்கருக்குடி (மருதாந்தநல்லூர்) - காந்தாரபஞ்சமம் கனகாங்கி கேதார கெளளை கர்நாடக சுத்த சவேரி ராகத்தில் திருமுறை அருள்தரு சர்வாலங்கிரதமின்னம்மை உடனுறை அருள்மிகு சற்குணலிங்கேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=qYLdNt2Nl0k   Add audio link Add Audio

நனவிலும் கனவிலும், நாளும், தன் ஒளி
நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன்-
கனைகடல் வையகம் தொழு கருக்கு
அனல்-எரி ஆடும் எம் அடிகள்; காண்மினே!

1
நான் விழித்திருக்கும் பொழுதும் , கனவு காணும்பொழுதும் , உள்ளொளியாக நெஞ்சில் நின்று நினைவிலும் எனக்குக் காட்சி தரும் , இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனாகிய இறைவனாய் , ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இப்பூவுலகத்தோர் போற்றும் திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , நெருப்பைக் கையிலேந்தி ஆடுகின்ற எம் தலைவரான சிவபெரு மானைத் தரிசித்துப் பயனடைவீர்களாக .

வேதியன், விடை உடை விமலன், ஒன்னலர்
மூதெயில் எரி எழ முனிந்த முக்கணன்,
காது இயல் குழையினன், கருக்குடி அமர்
ஆதியை, அடி தொழ அல்லல் இல்லையே.

2
வேதத்தை அருளிச் செய்தவனும் , வேதப் பொருளாக விளங்குபவனும் , இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனும் , பகையசுரர்களின் மூன்று மதில்களும் எரிந்து சாம்பலாகுமாறு கோபித்த முக்கண்ணனுமான சிவபெருமான் காதில் குழை அணிந்தவனாய்த் திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் . எப்பொருட்கும் முதல்வனான அப்பெருமானின் திருவடிகளைத் தொழத் துன்பம் இல்லை .

மஞ்சு உறு பொழில் வளம் மலி கருக்கு
நஞ்சு உறு திருமிடறு உடைய நாதனார்
அம் சுரும்பு ஆர் குழல் அரிவை அஞ்சவே,
வெஞ்சுரம் தனில் விளையாடல் என்கொலோ?

3
மேகம் சூழும் சோலைகளையுடைய வளம் மிக்க திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற நஞ்சுண்ட திருக்கழுத்தையுடைய தலைவரான சிவபெருமான் , அழகிய வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய உமாதேவி அஞ்சும்படி கொடிய சுடுகாட்டில் ஆடல் செய்வது என்கொல் ?

ஊன் உடைப் பிறவியை அறுக்க உன்னுவீர்
கான் இடை ஆடலான் பயில் கருக்குடிக்
கோன் உயர் கோயிலை வணங்கி, வைகலும்,
வானவர் தொழு கழல் வாழ்த்தி, வாழ்மினே!

4
வினைப்பயனை அனுபவிக்க உடம்பெடுத்த இப்பிறவியை ஒழிக்க நினைக்கும் மாந்தரீர் ! சுடுகாட்டில் திருநடனம் செய்யும் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள உயர்ந்த கோயிலை வணங்கியும் , நாள்தோறும் வானவர்கள் தொழுகின்ற அப்பெருமானின் திருவடிகளை வாழ்த்தி யும் வாழ்வீர்களாக !

சூடுவர், சடை இடைக் கங்கை நங்கையை;
கூடுவர், உலகு இடை ஐயம் கொண்டு; ஒலி
பாடுவர், இசை; பறை கொட்ட, நட்டி
ஆடுவர்; கருக்குடி அண்ணல் வண்ணமே!

5
இறைவர் சடைமுடியில் கங்கையைச் சூடி உள்ளார் . தம் திருமேனியில் ஒரு பாகமாக உமாதேவியை வைத்துள்ளார் . இவ்வுலகில் பிச்சை ஏற்கும் பொழுது இசையோடு பாடுவார் . பறை கொட்ட நள்ளிருளில் நடனம் ஆடுவார் . இது திருக்கருக்குடியில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமானின் அருள் தன்மையாகும் .
Go to top

இன்பு உடையார், இசை வீணை; பூண் அரா,
என்பு, உடையார்; எழில் மேனிமேல் எரி
முன்பு உடையார்; முதல் ஏத்தும் அன்பருக்கு
அன்பு உடையார் கருக்குடி எம் அண்ணலே!

6
திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமான் வீணையை இசைத்துப் பாடுவதில் மகிழ்பவர் . தம்முடைய அழகிய திருமேனியில் பாம்பையும் , எலும்பையும் ஆபரணமாக அணிந்துள்ளவர் . எரிகின்ற நெருப்பைத் திருக்கரத்தில் ஏந்தியுள்ளவர் . யாவற்றுக்கும் மூலப் பொருளாகிய , முதற்பொருளாக விளங்குபவர் . அன்பர்களிடத்து அன்புடையவர் .

காலமும் ஞாயிறும் தீயும் ஆயவர்
கோலமும் முடி அரவு அணிந்த கொள்கையர்;
சீலமும் உடையவர்; திருக்கருக்கு
சாலவும் இனிது, அவர் உடைய தன்மையே!

7
சிவபெருமான் கால தத்துவமாகவும் , அதனைக் கடந்தும் விளங்குபவர் . ஞாயிறு முதலிய சுடராக ஒளிர்பவர் . நெருப்பு முதலிய பஞ்சபூதங்களானவர் . தம் சடைமுடியில் பாம்பணிந்தவர் . சிறந்த புகழை உடையவர் . திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அப்பெருமானின் தன்மை சாலவும் இனிதாகும் .

எறிகடல் புடை தழுவு இலங்கை மன்னனை
முறிபட வரை இடை அடர்த்த மூர்த்தியார்
கறை படு பொழில் மதி தவழ், கருக்கு
அறிவொடு தொழுமவர் ஆள்வர், நன்மையே.

8
அலைவீசுகின்ற கடலையுடைய இலங்கை மன்னனான இராவணனை நிலை கெடும்படி மலையிடையில் வைத்து அடர்த்த சிவமூர்த்தியாகிய இறைவர் , மரங்களின் அடர்த்தியால் இருண்ட சோலைகளில் சந்திரன் தவழும் திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவராய் , தம்மை ஞானத்தால் தொழும் அடியவர்கட்கு நன்மையைத் தந்தருளி ஆட்சி செய்கின்றார் .

பூ மனும் திசை முகன் தானும், பொற்பு அமர்
வாமனன், அறிகிலா வண்ணம் ஓங்கு எரி-
ஆம் என உயர்ந்தவன் அணி கருக்கு
நா மனனினில் வர நினைதல் நன்மையே.

9
தாமரைப் பூவில் வாழ்கின்ற பிரமனும் , அழகிய வாமனாவதாரம் எடுத்த திருமாலும் அறிய முடியா வண்ணம் , ஓங்கிய நெருப்பு மலையாய் உயர்ந்து நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தை நாம் மனத்தால் நினைந்து வழிபட நன்மையாகும் .

சாக்கியர், சமண் படு கையர், பொய்ம்மொழி
ஆக்கிய உரை கொளேல்! அருந் திரு(ந்) நமக்கு
ஆக்கிய அரன் உறை அணி கருக்குடிப்
பூக் கமழ் கோயிலே புடைபட்டு உய்ம்மினே!

10
புத்தரும் , சமணர்களுமான வஞ்சகர் கூறும் பொய்ம்மொழிகளை உரையாகக் கொள்ள வேண்டா . பெறுதற்கரிய சைவசமயத்தில் நம்மைப் பிறக்குமாறு செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற அழகிய திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள பூமணம் கமழும் திருக்கோயிலைச் சார்ந்து உய்தி அடையுங்கள் .
Go to top

கானலில் விரைமலர் விம்மு காழியான்,
வானவன் கருக்குடி மைந்தன் தன் ஒளி
ஆன, மெய்ஞ் ஞானசம்பந்தன், சொல்லிய
ஊனம் இல் மொழி வலார்க்கு உயரும், இன்பமே.

11
கடற்கரைச் சோலைகளில் நறுமணம் கமழும் மலர்கள் நிறைந்த சீகாழியில் அவதரித்த , வானவர் தொழுதெழு திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள சிவனொளியே தானான மெய்ஞ்ஞான சம்பந்தன் அருளிய குற்றமில்லாத இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குப் பேரின்பம் மிகும் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கருக்குடி (மருதாந்தநல்லூர்)
3.021   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நனவிலும் கனவிலும், நாளும், தன்
Tune - காந்தாரபஞ்சமம்   (திருக்கருக்குடி (மருதாந்தநல்லூர்) சற்குணலிங்கேசுவரர் சர்வாலங்கிரதமின்னம்மை)

This page was last modified on Thu, 11 Dec 2025 05:33:28 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org