சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.026   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்) - கொல்லி கனகாங்கி நவரோசு கனகாம்பரி ராகத்தில் திருமுறை அருள்தரு மகமாயியம்மை உடனுறை அருள்மிகு காளையீசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=D7O7s5znQTg   Add audio link Add Audio

பிடி எலாம் பின் செல, பெருங்கை மா மலர் தழீஇ,
விடியலே தடம் மூழ்கி, விதியினால் வழிபடும்
கடி உலாம் பூம்பொழில் கானப்பேர் அண்ணல்! நின்
அடி அலால் அடை சரண் உடையரோ, அடியரே?

1
பெண் யானைகள் பின்தொடர , பெரிய தும்பிக்கை யுடைய ஆண்யானையானது , விடியற்காலையிலேயே குளத்தில் மூழ்கி , மலர்களை ஏந்தி விதிமுறைப்படி வழிபடுகின்ற நறுமணம் கமழும் பூஞ்சோலையுடைய திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளையன்றி , அடியவர்கள் சரணம் புகுவதற்கு யாது உள்ளது ?

நுண் இடைப் பேர் அல்குல் நூபுர மெல் அடிப்
பெண்ணின் நல்லாளை ஓர் பாகமாப் பேணினான்,
கண் உடை நெற்றியான், கருதிய கானப்பேர்
விண் இடை வேட்கையார் விரும்புதல் கருமமே.

2
நுண்ணிய இடையையும் , பெரிய அல்குலையும் , சிலம்பணிந்த மென்மையான பாதங்களையும் உடைய பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்ட நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் வீற்றிருந் தருளுகின்ற திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தை , விண்ணுலகை ஆளும் விருப்பமுடையவர்கள் விரும்பி ஏத்துதல் கடமையாகும் .

வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டு இனம்
காவிவாய்ப் பண் செயும் கானப்பேர் அண்ணலை,
நாவிவாய்ச் சாந்துளும் பூவுளும் ஞானநீா
தூவி, வாய்ப் பெய்து நின்று ஆட்டுவார், தொண்டரே.

3
பகலில் குளத்திலுள்ள தாமரை மலர்களில் தங்கித் தேனைப் பருகிய வண்டினம் , இரவில் அப்போது மலரும் நீலோற்பல மலரை அடைந்து தேனுண்ட மகிழ்ச்சியில் பண்ணிசைக்க விளங்கும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை , கஸ்தூரி என்னும் மான் , புழுகுப்பூனை இவற்றிலிருந்து பெறப்படும் வாசனைப்பொருள் , சந்தனம் , புனித நீர் முதலியன கொண்டு அடியவர்கள் திருமுழுக்காட்டி , மலர்தூவி அர்ச்சித்துப் போற்றி வழிபடுவர் .

நிறை உடை நெஞ்சுளும், நீருளும், பூவுளும்,
பறை உடை முழவுளும், பலியுளும், பாட்டுளும்,
கறை உடை மிடற்று அண்ணல் கருதிய கானப்பேர்
குறை உடையவர்க்கு அலால், களைகிலார், குற்றமே.

4
திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற நஞ்சுண்ட கறுத்த கண்டத்தையுடைய சிவ பெருமானை , மனத்தைப் பொறிவழிஓடாது ஒருமுகப்படுத்தி நிறுத்திய நெஞ்சுடன் , பூவும் நீரும் கொண்டு , முழவு முழங்க , இறைவனின் புகழைப்பாடி நைவேத்தியம் செய்து வழிபடுகின்ற மெய்யடியார் களுக்கு அல்லாது ஏனையோர்களுக்குக் குறைகள் தீருமோ !

ஏனப் பூண் மார்பின்மேல் என்பு பூண்டு, ஈறு இலா
ஞானப் பேர் ஆயிரம் பேரினான், நண்ணிய
கானப்பேர் ஊர் தொழும் காதலார் தீது இலர்
வானப் பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே.

5
பன்றிக்கொம்பை ஆபரணமாக அணிந்த மார்பின்மேல் , எலும்புமாலையும் அணிந்து , அழிவில்லாத சிவஞானம் தருகின்ற திருநாமம் ஆயிரம் கொண்டு திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தினை விரும்பித் தொழும் அடியவர்கள் தீவினைகளற்றவர் ஆவர் . தேவர்களின் நகரமான அமராவதியை அடையும் சிறப்புடையவர் ஆவர் .
Go to top

பள்ளமே படர்சடைப் பால் படப் பாய்ந்த நீா
வெள்ளமே தாங்கினான், வெண்மதி சூடினான்-
கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்
உள்ளமே கோயிலா உள்கும், என் உள்ளமே.

6
பள்ளம் போன்ற படர்ந்த சடையில் , வெள்ளம் போலப் பாய்ந்த கங்கையைத் தாங்கி வெண்ணிறச் சந்திரனையும் சூடினான் சிவபெருமான் . கள்ளம் என்பதை அறியாது வெள்ளை உள்ளத்துடன் இறைவனை வழிபடுகின்ற , திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்திலுள்ள மெய்யடியார்களின் உள்ளத்தில் இறைவன் விளங்குவதால் , அவ்வடியவர்களின் திருவுள்ளத்தைக் கோயிலாக நினைத்து என் மனம் வழிபடும் .

மான மா மடப்பிடி வன் கையால் அலகு இடக்
கானம் ஆர் கடகரி வழிபடும் கானப்பேர்,
ஊனம் ஆம் உடம்பினில் உறு பிணி கெட எணின்,
ஞானம் ஆம் மலர்கொடு நணுகுதல் நன்மையே.

7
பெரிய பெண் யானை தன் வலியகையால் அலகிடக் கானகத்திலுள்ள மதமுடைய பெரிய ஆண் யானையானது வழிபடுகின்ற திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்திலுள்ள இறைவனை , குற்றமுடைய இவ்வுடம்பிலுள்ள உயிரைப் பிணித்துள்ள ஆணவமாகிய நோய் தீர ஞானமாகிய மலர்கொண்டு மனம் , வாக்கு , காயத்தால் வழிபட நன்மைகள் உண்டாகும .

வாளினான், வேலினான், மால்வரை எடுத்த திண்-
தோளினான், நெடு முடி தொலையவே ஊன்றிய
தாளினான், கானப்பேர் தலையினால் வணங்குவார்
நாளும் நாள் உயர்வது ஓர் நன்மையைப் பெறுவரே.

8
வாட்போர் வலியாலும் , வேற்படைப் பயிற்சியாலும் , பெரிய கயிலைமலையை எடுத்த வலிமை வாய்ந்த தோள்களை உடைய இராவணனின் நீண்டமுடிகள் நலியுமாறு , பெருவிரலை ஊன்றிய திருவடிகளையுடைய சிவபெருமான் வீற்றிருந் தருளும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தைத் தலையால் வணங்கும் அடியவர்கள் நாளுக்கு நாள் உயர்நிலை அடைந்து எல்லா நலன்களையும் பெறுவார்கள் .

சிலையினால் முப்புரம் தீ எழச் செற்றவன்,
நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான்,
கலையின் ஆர் புறவில்-தேன் கமழ் தரு கானப்பேர்
தலையினால் வணங்குவார் தவம் உடையார்களே

9
மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரத்தைத் தீப்பற்றும்படி செய்து அழித்த சிவபெருமான் , நிலையிலா பிரமன் , திருமால் இவர்களின் செருக்கைக் கண்டு அவர்கள் காணாத வண்ணம் நெருப்பு மலையாய் ஓங்கி நின்றான் . அழகிய குறிஞ்சியும் , முல்லையும் சார்ந்த நிலமான , தேன் மணம் கமழத் திகழும் திருக் கானப்பேர் என்னும் திருத்தலத்தைத் தொழுது போற்றுபவர்கள் தவமுடையவர்கள் ஆவர் .

உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்து, உச்சி
பறித்தலும் போர்த்தலும் பயன் இலை, பாவிகாள்
மறித் தலை மடப்பிடி வளர் இளங் கொழுங் கொடி
கறித்து, எழு கானப்பேர் கைதொழல் கருமமே.

10
உறியினிடத்துச் சுரைக்குடுக்கை , கமண்டலம் இவற்றைத் தாங்கிக் கையில் பிடித்து அலையும் , இறைவனை உணராத பாவிகளாகிய சமணர் , புத்தர்கள் முறையே செய்யும் தலையிலுள்ள முடிகளைப் பறித்தலும் , காவியாடை போர்த்தலும் ஆகிய செயல்களால் பயனில்லை . மடமையுடைய பெண்யானையும் வளர்கின்ற இளங்கொழுங்கொடியும் போன்ற உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தைக் கைகூப்பித் தொழுவது நம் கடமையாகும் .
Go to top

காட்டு அகத்து ஆடலான் கருதிய கானப்பேர்
கோட்டகத்து இள வரால் குதிகொளும் காழியான்-
நாட்டு அகத்து ஓங்கு சீர் ஞானசம்பந்தன்
பாட்டு அகத்து இவை வலார்க்கு இல்லை ஆம், பாவமே.

11
சுடுகாட்டில் ஆடுகின்ற சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தை , இளவரால் மீன்கள் துள்ளிப்பாயும் நீர்நிலைகளையுடைய வளமையான சீகாழி என்னும் நகரில் அவதரித்த மிகுந்த புகழுடைய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தால் போற்ற வல்லவர்கட்குப் பாவம் இல்லை . ( அவர்கள் பாவத்திற்குக் காரணமான தீவினைகளைலிருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவர் .)

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்)
3.026   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பிடி எலாம் பின் செல,
Tune - கொல்லி   (திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்) காளையீசுவரர் மகமாயியம்மை)
7.084   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தொண்டர் அடித்தொழலும், சோதி இளம்பிறையும்,
Tune - புறநீர்மை   (திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்) காளைநாதேசுவரர் பொற்கொடியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000