வாரு மன்னும் முலை மங்கை ஓர் பங்கினன்;
ஊரு மன்னும் பலி உண்பதும் வெண்தலை
காரு மன்னும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
நீரு மன்னும் சடை நிமலர் தம் நீர்மையே!
|
1
|
கச்சணிந்த முலையையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு , சிவபெருமான் பிரமகபாலம் ஏந்தி ஊர்தோறும் சென்று பிச்சை ஏற்பவர் . அப்பெருமான் மேகத்தைத் தொடும்படி வளர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் கங்கையைத் தாங்கிய சடைமுடியை உடைய நிமலராய் விளங்குவது அவர்தம் சிறந்த குணமாகும் . | |
நிருத்தனார், நீள் சடை மதியொடு பாம்பு அணி
கருத்தனார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
அருத்தனார்; அழகு அமர் மங்கை ஓர்பாகமாப்
பொருத்தனார், கழல் இணை போற்றுதல் பொருளதே.
|
2
|
சிவபெருமான் திருநடனம் செய்பவர் . நீண்ட சடைமுடியில் சந்திரனோடு பாம்பை ஆபரணமாக அணிந்தவர் . நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் கண்ணாற்காணும் பொருள்வடிவாயும் விளங்குபவர் . அழகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டுள்ள அப்பெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்குதலே பயனுடைய செய்கையாகும் . | |
பண்ணின் ஆர் அருமறை பாடினார், நெற்றி ஓர்
கண்ணினார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
விண்ணின் ஆர் விரிபுனல் மேவினார், சடைமுடி
அண்ணலார், எம்மை ஆள் உடைய எம் அடிகளே
|
3
|
சிவபெருமான் அரிய வேதங்களை உரிய பண்ணோடு பாடியருளினார் . அவர் நெற்றிக்கண்ணை உடையவர் . நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் , ஆகாயத்திலிருந்து விரிந்த கங்கையைத் தாங்கிய சடைமுடியுடையவராய் வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானே எம்மை ஆட்கொண்டருளும் எம் தலைவர் ஆவார் . | |
பணம் கொள் நாகம் அரைக்கு ஆர்ப்பது; பல் பலி
உணங்கல் ஓடு உண்கலன்; உறைவது காட்டு இடை
கணங்கள் கூடித் தொழுது ஏத்து காட்டுப்பள்ளி
நிணம் கொள் சூலப்படை நிமலர் தம் நீர்மையே!
|
4
|
சிவபெருமான் இடுப்பிலே கச்சாக அணிந்திருப்பது படமெடுத்தாடும் நாகமாகும் . பல இடங்களில் பிச்சையேற்று வந்த உணவை உண்ணும் பாத்திரம் , உலர்ந்த பிரமகபாலமாகும் . வசிப்பது சுடுகாடாகும் . அத்தகைய பெருமானார் சிவகணத்தோர் தொழுது போற்றும்படி திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகின்றார் . கொழுப்பினைக் கொண்ட சூலப்படையை ஏந்திய நிமலராய் விளங்கும் இயல்புடையவர் . | |
வரை உலாம் சந்தொடு வந்து இழி காவிரிக்
கரை உலாம் இடு மணல் சூழ்ந்த காட்டுப்பள்ளி
திரை உலாம் கங்கையும் திங்களும் சூடி, அங்கு
அரை உலாம் கோவணத்து அடிகள் வேடங்களே
|
5
|
மலையில் செழித்த சந்தனமரங்களை நீரோட்டத்தால் உந்தித் தள்ளிக் கரையினில் சேர்க்கும் காவிரியின் மணல் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தின் இறைவர் அலைவீசும் கங்கையையும் , சந்திரனையும் சடைமுடியிலே சூடி , இடுப்பிலே கோவண ஆடையுடன் காட்சிதரும் கோலமுடையவர் . | |
| Go to top |
வேதனார், வெண்மழு ஏந்தினார், அங்கம் முன்
ஓதினார், உமை ஒரு கூறனார், ஒண்குழைக்
காதினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
நாதனார்; திருவடி நாளும் நின்று ஏத்துமே!
|
6
|
வேதத்தை அருளிச்செய்து வேதப்பொருளாகவும் விளங்குபவர் சிவபெருமான் . வெண்ணிற மழுப்படையை ஏந்தியவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர் . ஒளி பொருந்திய குழையணிந்த காதை உடையவர் . நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் தலைவரான அப்பெருமானின் திருவடிகளைத் தினந்தோறும் போற்றி வழிபடுவீர்களாக ! | |
மையின் ஆர் மிடறனார், மான் மழு ஏந்திய
கையினார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
தையல் ஓர்பாகமாத் தண்மதி சூடிய
ஐயனார்; அடி தொழ, அல்லல் ஒன்று இல்லையே.
|
7
|
மை போன்ற கரிய கண்டத்தையுடைய சிவ பெருமான் மானையும் , மழுவையும் ஏந்திய கையினர் . நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் சூடிய தலைவரான சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது போற்றத் துன்பம் சிறிதும் இல்லை . | |
சிலைதனால் முப்புரம் செற்றவன், சீரின் ஆர்
மலைதனால் வல் அரக்கன் வலி வாட்டினான்,
கலைதனால் புறவு அணி மல்கு காட்டுப்பள்ளி
தலைதனால் வணங்கிட, தவம் அது ஆகுமே.
|
8
|
சிவபெருமான் மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை அழித்தவர் . சிறப்புடைய கயிலை மலையினால் இராவணனின் வலிமையை அடக்கியவர் . மான்கள் உலவும் முல்லைநிலமான அழகு திகழும் திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் பக்தியுடன் தலைதாழ்த்தி வணங்க நல்தவப்பேறு உண்டாகும் . | |
செங்கண் மால், திகழ்தரு மலர் உறை திசைமுகன்,
தம் கையால்-தொழுது எழ, தழல் உரு ஆயினான்-
கங்கை ஆர் சடையினான்-கருது காட்டுப்பள்ளி
அம் கையால் தொழுமவர்க்கு, அல்லல் ஒன்று இல்லையே.
|
9
|
சிவந்த கண்களையுடைய திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் தொழுது போற்ற அழல் உருவமாய் விளங்கியவர் சிவபெருமான் . கங்கையைச் சடையிலே தாங்கித் திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அப்பெருமானை அழகிய கைகளால் கூப்பித் தொழும் அன்பர்கட்குத் துன்பம் இல்லை . | |
போதியார், பிண்டியார், என்ற அப்பொய்யர்கள்
வாதினால் உரை அவை மெய் அல; வைகலும்,
காரின் ஆர் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
ஏரினால்-தொழுது எழ, இன்பம் வந்து எய்துமே.
|
10
|
அரச மரத்தினடியில் ஞானம் பெற்ற புத்தரின் வழிவந்த புத்தர்களும் , அசோகமர நிழலில் அமரும் அருகக் கடவுளை வணங்கும் சமணர்களும் , தங்கள் வாதத்தால் உரைப்பவை மெய்ம்மை யானவை அல்ல . மேகம் தவழும் , நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை நாள்தோறும் சீலத்தால் தொழுது போற்ற இன்பம் வந்தடையும் . | |
| Go to top |
பொரு புனல் புடை அணி புறவ நன் நகர் மனன்-
அருமறை அவை வல அணி கொள் சம்பந்தன்-சொல்,
கருமணி மிடற்றினன் கருது காட்டுப்பள்ளி
பரவிய தமிழ் சொல, பறையும், மெய்ப் பாவமே.
|
11
|
நீர்வளமிக்க அழகிய புறவம் என்னும் பெயர் கொண்ட சீகாழியில் அவதரித்த , அருமறைகளில் வல்ல , சிவஞானத் தையே ஆபரணமாக அணிந்த ஞானசம்பந்தன் , நீலமணி போன்ற கண்டத்தையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்காட்டுப் பள்ளி என்னும் திருத்தலத்தை வணங்கிப் போற்றிய இத்திருப் பதிகத்தை ஓத , பாவம் நீங்கும் . | |