சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.034   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) - கொல்லி கனகாங்கி நவரோசு கனகாம்பரி ராகத்தில் திருமுறை அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பழமலைநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=lFGCZUoAzS4   Add audio link Add Audio

வண்ண மா மலர் கொடு வானவர் வழிபட,
அண்ணலார் ஆயிழையாளொடும் அமர்வு இடம்
விண்ணின் மா மழை பொழிந்து இழிய, வெள் அருவி சேர்
திண்ணில் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே.

1
பல வண்ண மலர்களைக் கொண்டு வானவர்கள் வழிபடச் சிவபெருமான் அழகிய ஆபரணங்கள் அணிந்த உமாதேவியோடு இனிது வீற்றிருந்தருளும் இடமாவது , வானத்திலிருந்து மழை பொழிந்து வெள்ளருவியாகப் பாயச் செழித்த திண்மையான முல்லைநிலம் சூழ விளங்கும் அழகிய திருமுதுகுன்றம் ஆகும் .

வெறி உலாம் கொன்றை அம் தாரினான், மேதகு
பொறி உலாம் அரவு அசைத்து ஆடி, ஓர் புண்ணியன்,
மறி உலாம் கையினான், மங்கையோடு அமர்வு இடம்
செறியுள் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே.

2
வாசனை பொருந்திய கொன்றை மாலையை அணிந்து , படமெடுக்கும் புள்ளிகளையுடைய பாம்பை இடையில் கட்டி ஆடுகின்ற புண்ணிய மூர்த்தியான சிவபெருமான் , இளமான் கன்றை ஏந்திய திருக்கரத்தை உடையவனாய் , உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்ற இடமானது சோலைகள் நிறைந்த அழகிய திருமுதுகுன்றம் ஆகும் .

ஏறனார், விடைமிசை; இமையவர் தொழ உமை-
கூறனார்; கொல் புலித் தோலினார்; மேனிமேல்
நீறனார்; நிறைபுனல் சடையனார்; நிகழ்வு இடம்
தேறல் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே.

3
இறைவன் , இடபவாகனத்தில் ஏறித் தேவர்கள் தொழுது போற்ற , உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டு , கொல்லும் தன்மையுடைய புலியின் தோலை ஆடையாக அணிந்து , திருமேனியில் திருவெண்ணீறு அணிந்து , நிறைந்த கங்கையைச் சடைமுடியில் தாங்கி வீற்றிருந்தருளும் இடமாவது , தேன் துளிகளையுடைய மலர்கள் விளங்கும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருமுதுகுன்றம் ஆகும் .

உரையின் ஆர் உறு பொருள் ஆயினான், உமையொடும்;
விரையின் ஆர் கொன்றை சேர் சடையினார்; மேவு இடம்
உரையின் ஆர் ஒலி என ஓங்கு முத்தாறு மெய்த்
திரையின் ஆர் எறி புனல்-திரு முதுகுன்றமே.

4
இறைவன் வேதத்தால் நுவலப்படும் பொருளாக விளங்குபவன் . உமாதேவியை உடனாகக் கொண்டு நறுமணம் கமழும் கொன்றை மலரைச் சடைமுடியில் அணிந்தவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , பக்தர்கள் உரைக்கும் அரநாமத்தின் ஒலியென அலையோசை எழுப்பும் , பெருகுகிற மணிமுத்தாறுடைய திருமுதுகுன்றம் ஆகும் .

கடிய ஆயின குரல் களிற்றினைப் பிளிற, ஓர்
இடிய வெங்குரலினோடு ஆளி சென்றிடு நெறி,
வடிய வாய் மழுவினன் மங்கையோடு அமர்வு இடம்
செடி அது ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே.

5
கனத்த குரலில் ஆண் யானையானது பிளிற , இடிபோன்ற குரலில் கர்ச்சிக்கும் சிங்கம் செல்லும் வழிகளில் , கூரிய முனையுடைய மழுப்படை ஏந்தி , உமாதேவியோடு இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது செடிகொடிகள் அடர்ந்த குறிஞ்சிப் புறவிடமான அழகிய திருமுதுகுன்றம் ஆகும் .
Go to top

கானம் ஆர் கரியின் ஈர் உரிவையார், பெரியது ஓர்
வானம் ஆர் மதியினோடு அரவர், தாம் மருவு இடம்,
ஊனம் ஆயின பிணி அவை கெடுத்து, உமையொடும்
தேன் அம் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே.

6
காட்டில் திரியும் யானையின் தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்திய இறைவன் , அகன்ற வானத்தில் தவழும் சந்திரனையும் , பாம்பையும் அணிந்து , உயிர்களைப் பற்றியுள்ள குற்றமான ஆணவம் என்னும் நோயைத் தீர்த்து , அருளும் பொருட்டு உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடமாவது , தேன் துளிக்கும் பூஞ்சோலைகளையுடைய அழகிய திருமுதுகுன்றம் ஆகும் .

மஞ்சர் தாம், மலர்கொடு வானவர் வணங்கிட,
வெஞ்சொலார் வேடரோடு ஆடவர் விரும்பவே,
அம் சொலாள் உமையொடும்(ம்) அமர்வு இடம் அணி கலைச்
செஞ் சொலார் பயில்தரும் திரு முதுகுன்றமே.

7
வலிமை மிகுந்தவராகிய சிவபெருமானைத் தேவர்கள் மலர்தூவிப் போற்றி வணங்க , கொடுந்தொழில் செய்யும் வேடர்களும் , பிற ஆடவர்களும் விரும்பித் தொழ , அழகிய இன்சொல் பேசும் உமாதேவியோடு இறைவர் வீற்றிருந்தருளும் இடம் வேதங்களை நன்கு கற்றவர்களும் , பக்திப் பாடல்களைப் பாடுபவர்களும் வசிக்கின்ற திருமுதுகுன்றம் ஆகும் .

காரினார் அமர்தரும் கயிலை நல் மலையினை
ஏரின் ஆர் முடி இராவணன், எடுத்தான், இற,
வாரின் ஆர்முலையொடும் மன்னனார் மருவு இடம்
சீரினார் திகழ்தரும் திரு முதுகுன்றமே.

8
மழை பொழியும் கார்மேகம் போன்று உயிர்கட்கு அருள்புரியும் சிவபெருமான் வீற்றிருக்கும் நன்மைதரும் கயிலை மலையினை , அழகிய முடியுடைய இராவணன் எடுத்தபோது , அவனை நலியச் செய்த இறைவன் , கச்சணிந்த முலையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் சிறப்பு மிக்க திருமுதுகுன்றம் ஆகும் .

ஆடினார், கானகத்து; அருமறையின் பொரு
பாடினார்; பலபுகழ்ப் பரமனார்; இணை அடி
ஏடின் ஆர் மலர்மிசை அயனும், மால், இருவரும்
தேடினார் அறிவு ஒணார்; திரு முதுகுன்றமே.

9
இறைவர் சுடுகாட்டில் திருநடனம் ஆடியவர் . அரிய வேதங்களை அருளி , அவற்றின் உட்பொருளை விரித்தோதியவர் . எவ்வுயிர்கட்கும் தலைவரான அவர் தம் திருவடிகளை இதழ்களையுடையை தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் தேடியும் அறியப்படவொண்ணாதவர் . அப்பெருமானார் வீற்றிருந்தருளும் இடம் திருமுதுகுன்றம் ஆகும் .

மாசு மெய் தூசு கொண்டு உழல் சமண் சாக்கியர்
பேசு மெய் உள அல; பேணுவீர்! காணுமின்-
வாசம் ஆர்தரு பொழில் வண்டு இனம்(ம்) இசை செய,
தேசம் ஆர் புகழ் மிகும் திரு முதுகுன்றமே!

10
அழுக்கு உடம்பையும் , அழுக்கு உடையையுமுடைய சமணர்களும் , புத்தர்களும் கூறும் மொழிகள் மெய்ம்மையானவை அல்ல . வாசனை பொருந்திய சோலைகளில் வண்டினங்கள் இசைக்க , அழகும் , புகழும் மிகுந்த திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தைத் தரிசித்து , அங்குள்ள இறைவனைப் போற்றி வழிபடுங்கள் .
Go to top

திண்ணின் ஆர் புறவு அணி திரு முதுகுன்றரை
நண்ணினான், காழியுள் ஞானசம்பந்தன், சொல்
எண்ணினார், ஈர் ஐந்து மாலையும் இயலுமாப்
பண்ணினால் பாடுவார்க்கு இல்லை ஆம், பாவமே.

11
செழுமையான சோலைகளையுடைய திருமுதுகுன்றத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை மனம் , வாக்கு , காயம் மூன்றும் ஒன்றுபட வழிபட்டு , சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தைப் பண்ணிசையோடு பாடவல்லவர்களின் பாவம் நீங்கும் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
1.012   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மத்தா வரை நிறுவி, கடல்
Tune - நட்டபாடை   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
1.053   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை
Tune - பழந்தக்கராகம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
1.093   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நின்று மலர் தூவி, இன்று
Tune - குறிஞ்சி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
1.131   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,
Tune - மேகராகக்குறிஞ்சி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
2.064   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!
Tune - காந்தாரம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
3.034   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வண்ண மா மலர் கொடு
Tune - கொல்லி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
3.099   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முரசு அதிர்ந்து எழுதரு முது
Tune - சாதாரி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
6.068   திருநாவுக்கரசர்   தேவாரம்   கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை,
Tune - திருத்தாண்டகம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
7.025   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை
Tune - நட்டராகம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
7.043   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நஞ்சி, இடை இன்று நாளை
Tune - கொல்லிக்கௌவாணம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000