அங்கை ஆர் அழலன்(ன்), அழகு ஆர் சடைக்
கங்கையான், கடவுள்(ள்), இடம் மேவிய
மங்கையான், உறையும் மழபாடியைத்
தம் கையால்-தொழுவார் தகவாளரே.
|
1
|
இறைவன் அழகிய கையில் நெருப்பேந்தியவன் . அழகிய செஞ்சடையில் கங்கையைத் தாங்கி , இடம் , பொருள் , காலம் இவற்றைக் கடந்து என்றும் நிலைத்துள்ள அச்சிவபெருமான் தன் திருமேனியின் இடப்பாகமாக உமாதேவியைக் கொண்டு வீற்றிருந்தருளும் மழபாடியைக் கைகளால் கூப்பித் தொழும் அன்பர்கள் நற்பண்பாளர்கள் ஆவர் . | |
விதியும் ஆம்; விளைவு ஆம்; ஒளி ஆர்ந்தது ஓர்
கதியும் ஆம்; கசிவு ஆம்; வசி ஆற்றம் ஆம்;
மதியும் ஆம்; வலி ஆம் மழபாடி
நதியம் தோய் சடை நாதன் நல் பாதமே.
|
2
|
திருமழபாடியில் வீற்றிருந்தருளும் கங்கையைச் சடையில் தாங்கிய சிவபெருமானின் திருவடிகளே ஆன்மாக்களுக்கு விதியாவதும் , அவ்விதியின் விளைவாவதும் , ஒளியிற் கலப்பதாகிய முத்தி ஆவதுமாம் . மனத்தைக் கசியவைத்துத் தன்வயப்படுத்தும் சிவஞானத்தை விளைவிக்கும் அத்தகைய திருவடிகளை வழிபடுவீர்களாக . | |
முழவினான், முதுகாடு உறை பேய்க்கணக்-
குழுவினான், குலவும் கையில் ஏந்திய
மழுவினான், உறையும் மழபாடியைத்
தொழுமின், நும் துயர் ஆனவை தீரவே!
|
3
|
இறைவன் முழவு என்னும் வாத்தியம் உடையவன் . சுடுகாட்டில் உறையும் பேய்க்கணத்துடன் குலவி நடனம்புரிபவன் . அழகிய கையில் மழுப்படையை உடையவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருமழபாடியை உங்கள் துன்பம் எல்லாம் நீங்கும்படி தொழுது போற்றுங்கள் . | |
கலையினான், மறையான், கதி ஆகிய
மலையினான், மருவார் புரம் மூன்று எய்த
சிலையினான், சேர் திரு மழபாடியைத்
தலையினால் வணங்க, தவம் ஆகுமே.
|
4
|
இறைவன் ஆயகலைகள் அறுபத்துநான்கு ஆனவர் . நான்கு மறைகள் ஆகியவன் . உயிர்கள் சரண்புகும் இடமாகிய கயிலை மலையினை உடையவன் . பகையசுரர்களின் திரிபுரங்களை எரியுண்ணுமாறு அக்கினிக்கணையை ஏவிய , மேருமலையை வில்லாக உடையவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் திருமழபாடியைத் தலையினால் வணங்கிப் போற்றத் தவத்தின் பலன் கைகூடும் . | |
நல்வினைப் பயன், நால்மறையின் பொரு
கல்வி ஆய கருத்தன், உருத்திரன்,
செல்வன், மேய திரு மழபாடியைப்
புல்கி ஏத்துமது புகழ் ஆகுமே.
|
5
|
இறைவன் நல்வினையின் பயனாகியவன் . நான்மறையின் பொருளாகியவன் . கல்விப் பயனாகிய கருத்தன் . உருத்திரனாகத் திகழ்பவன் . அச்செல்வன் வீற்றிருந்தருளும் திருமழ பாடியைப் போற்றுங்கள் . அது உமக்குப் புகழ் தரும் . | |
| Go to top |
நீடினார் உலகுக்கு உயிர் ஆய் நின்றான்;
ஆடினான், எரிகான் இடை மாநடம்;
பாடினார் இசை மா மழபாடியை
நாடினார்க்கு இல்லை, நல்குரவு ஆனவே.
|
6
|
பரந்த இவ்வுலகிற்கு இறைவன் உயிராய் விளங்குகின்றான் . அப்பெருமான் சுடுகாட்டில் திருநடனம் ஆடுபவன் . பத்தர்கள் இசையோடு போற்றிப் பாடத் திருமழபாடியில் இனிது வீற்றிருந்தருளும் அவனைச் சார்ந்து போற்றுபவர்கட்கு வறுமை இல்லை . | |
மின்னின் ஆர் இடையாள் ஒரு பாகம் ஆய்
மன்னினான் உறை மா மழபாடியைப்
பன்னினார், இசையால் வழிபாடு செய்து
உன்னினார், வினை ஆயின ஓயுமே.
|
7
|
மின்னலைப் போன்று ஒளிரும் நுண்ணிய இடையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற மாமழபாடியை இசைப்பாடலால் போற்றி வழிபாடு செய்யும் அன்பர்களின் வினை யாவும் நீங்கும் . | |
தென் இலங்கையர் மன்னன் செழு வரை-
தன்னில் அங்க அடர்த்து அருள் செய்தவன்
மன் இலங்கிய மா மழபாடியை
உன்னில், அங்க உறுபிணி இல்லையே.
|
8
|
இராவணனைச் செழுமையான கயிலைமலையின் கீழ் அடர்த்து அருள் செய்தவர் சிவபெருமான் . அவர் நிலையாக வீற்றிருந்தருளுகின்ற திருமழபாடியை நினைந்து போற்ற உடம்பில் உறுகின்ற பிணி யாவும் நீங்கும் . | |
திருவின் நாயகனும், செழுந்தாமரை
மருவினானும், தொழ, தழல் மாண்பு அமர்
உருவினான் உறையும் மழபாடியைப்
பரவினார் வினைப்பற்று அறுப்பார்களே
|
9
|
திருமகளின் நாயகனாகிய திருமாலும் , செழுமை வாய்ந்த தாமரையில் வீற்றிருந்தருளும் பிரமனும் , தொழுது போற்ற நெருப்பு மலையாக நின்ற மாண்புடைய வடிவினரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருமழபாடியைப் பரவிப் போற்றும் அன்பர்கள் பற்றிலிருந்து நீங்கியவராவர் . | |
நலியும், நன்று அறியா, சமண்சாக்கியர்
வலிய சொல்லினும், மா மழபாடியு
ஒலிசெய் வார்கழலான் திறம் உள்கவே,
மெலியும், நம் உடல் மேல் வினை ஆனவே.
|
10
|
நன்மை அறியாத சமணர்களும் , புத்தர்களும் பிறரை வருத்தும் சொற்களை வலிய உரைத்தாலும் அவற்றைப் பொருளாகக் கொள்ளாது , திருமழபாடியுள் வீரக்கழல்கள் ஒலிக்கத் திருநடனம் புரியும் சிவபெருமானின் அருட்செயலை நினைந்து போற்றினால் நம்மைப் பற்றியுள்ள வினையாவும் மெலிந்து அழியும் . | |
| Go to top |
மந்தம் உந்து பொழில் மழபாடி
எந்தை சந்தம் இனிது உகந்து ஏத்துவான்,
கந்தம் ஆர் கடல் காழியுள் ஞானசம்-
பந்தன் மாலை வல்லார்க்கு இல்லை, பாவமே.
|
11
|
தென்றல் காற்று வீசும் சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் வீற்றிருந்தருளும் எம் தந்தையாகிய சிவபெருமானைச் சந்தம் பொலியும் இசைப்பாடல்களால் போற்றி , வாசனை வீசும் கடலுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிக மாலையை ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை . | |