விடையவன், விண்ணும் மண்ணும் தொழ நின்றவன், வெண்மழுவாள
படையவன், பாய் புலித்தோல் உடை, கோவணம், பல்கரந்தைச்
சடையவன், சாமவேதன், சசி தங்கிய சங்க வெண்தோடு
உடையவ(ன்), ஊனம் இ(ல்)லி உறையும்(ம்) இடம்
ஒற்றியூரே.
|
1
|
சிவபெருமான் இடபவாகனத்தை உடையவன் . விண்ணுளோரும் , இம்மண்ணுலக மாந்தரும் தொழுது போற்ற விளங்குபவன் . கறைபடியாத மழுப்படை உடையவன் . பாயும் புலித்தோலுடையும் , கோவணமும் உடையவன் . பலவிதமான மலர்களைச் சடையில் அணிந்தவன் . சாமகானப் பிரியன் . சந்திரனைச் சடையில் தாங்கி , சங்கினால் ஆகிய வெண்மையான தோடு என்னும் காதணி அணிந்தவன் . குறைவில்லாத அப்பெருமான் தன்னை வழிபடும் அடியவர்களின் ஊனமாகக் கருதப்படும் குற்றம் குறைகளைக் களைந்து வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் . | |
பாரிடம் பாணிசெய்ய, பறைக்கண் செறு பல்கணப்பேய்
சீரொடும் பாடல் ஆடல் இலயம் சிதையாத கொள்கைத்
தார் இடும் போர் விடையவன்; தலைவன்; தலையே கலனா,
ஊர் இடும் பிச்சை கொள்வான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
|
2
|
பூதகணங்கள் பண்ணிசைத்துப் பாட , பறைகள் கொட்ட , கண்டாரைக் கொல்லவல்ல பல்வேறு பேய்க்கணங்கள் தாளத்தோடு இலயம் கெடாதவாறு பாடி ஆடத் திருநடனம் புரிபவன் . கிண்கிணிமாலை அணிந்த போர்செய்யும் தன்மையுடைய இடபவாகனத்தில் வீற்றிருந்தருளும் தலைவன் . பிரமகபாலத்தை உண்கலனாகக் கொண்டு ஊர்தோறும் திரிந்து பிச்சை ஏற்பவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் . | |
விளிதரு நீரும், மண்ணும், விசும்போடு, அனல், காலும், ஆகி;
அளி தரு பேர் அருளான்; அரன் ஆகிய ஆதிமூர்த்தி;
களி தரு வண்டு பண்செய் கமழ் கொன்றையினோடு அணிந்த
ஒளி தரு வெண்பிறையான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
|
3
|
ஓசையுடன் பாயும் நீர் , நிலம் , ஆகாயம் , நெருப்பு , காற்றுமாகி , மன்னுயிர்களைக் காக்கும் பெருங்கருணையாளன் ஆகிய சங்கார கர்த்தாவாகிய சிவபெருமானே உலகத்தோற்றத்திற்கும் நிமித்த காரணனாவான் . மலர்களிலுள்ள தேனைப்பருகிய மகிழ்ச்சியில் வண்டுகள் பண்ணிசைக்கும் நறுமணம் கமழும் கொன்றை மாலையோடு ஒளிரும் வெண்பிறைச் சந்திரனையும் சடையில் அணிந்த அச் சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் . | |
அரவமே கச்சு அது ஆக அசைத்தான்; அலர்க்கொன்றை அம்தார்
விரவி, வெண் நூல் கிடந்த விரை ஆர் வரைமார்பன்; எந்தை;
பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து, படர்புன்சடை மேல்
உரவு நீர் ஏற்ற பெம்மான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
|
4
|
சிவபெருமான் இடையிலே பாம்பைக் கச்சாக அணிந்தவர் . கொன்றை மலர்மாலை அணிந்தவர் . வெண்ணிற முப்புரி நூலணிந்து கலவைச் சாந்தணிந்த மலைபோன்ற மார்பை உடையவர் . எம் தந்தையான அச் சிவபெருமான் தம்மை வணங்குவாரின் பாவத்தைப் போக்கிப் படர்ந்த சடையின் மேல் கங்கையைத் தாங்கியவர் . அவர் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் . | |
விலகினார் வெய்ய பாவம் விதியால் அருள்செய்து, நல்ல
பலகின் ஆர் மொந்தை தாளம் தகுணிச்சமும் பாணியாலே,
அலகினால் வீசி நீர் கொண்டு, அடிமேல் அலர் இட்டு, முட்டாது
உலகினார் ஏத்த நின்றான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
|
5
|
கொடிய பாவத்திலிருந்து விடுபட்ட பக்குவ ஆன்மாக்கட்கு , விதிப்படி அருள்செய்து , சிவபெருமான் நல்ல பல வகையான வாத்தியங்களான மொந்தை , தாளம் , தகுணிச்சம் என்னும் ஒருவகை தோற்கருவி முதலியன ஒலிக்கப் பாட்டோடும் , தாளத் தோடும் எண்தோள் வீசி நின்று ஆட , உலகத்தோர் அவன் திருவடியில் மலர்களைத் தூவி , தங்கள் வழிபாடு தடைப்படா வண்ணம் துதித்து வணங்க அவன் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் . | |
| Go to top |
கமையொடு நின்ற சீரான்; கழலும் சிலம்பும் ஒலிப்ப,
சுமையொடு மேலும் வைத்தான், விரிகொன்றையும்
சோமனையும்;
அமையொடு நீண்ட திண்தோள் அழகு ஆய பொன்-தோடு இலங்க,
உமையொடும் கூடி நின்றான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
|
6
|
பொறுமையுடன் விளங்கும் தலைவனான சிவபெருமான் , தன் திருவடிகளிலுள்ள கழலும் , சிலம்பும் ஒலிக்கச் சடைமுடியில் மலர்ந்த கொன்றையையும் , சந்திரனையும் தாங்கிய , நீண்ட வலிமையான தோளழகு உடையவன் . காதில் பொன்னாலாகிய தோடு பிரகாசிக்க உமாதேவியோடு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் . | |
நன்றியால் வாழ்வது உள்ளம், உலகுக்கு ஒரு நன்மையாலே,
கன்றினார் மும்மதிலும் கருமால்வரையே சிலையா,
பொன்றினார் வார் சுடலைப் பொடி-நீறு அணிந்தார் அழல் அம்பு
ஒன்றினால் எய்த பெம்மான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
|
7
|
உள்ளத்தில் பிறருக்கு உபகாரமாய் வாழவேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தச் சிவபெருமான் , உலகத்தார்க்கு தீமை செய்த அசுரர்கள் வாழும் முப்புரங்களையும் , பெருமை வாய்ந்த மேருமலையை வில்லாகக் கொண்டு அக்கினிக்கணை ஒன்றை எய்து அழித்தவர் . நெடிய சுடலைப்பொடியாகிய நீற்றினை அணிந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் . | |
பெற்றியால் பித்தன் ஒப்பான்; பெருமான்; கருமான் உரி-தோல்
சுற்றியான்; சுத்தி, சூலம், சுடர்க்கண் நுதல்மேல் விளங்க,
தெற்றியான் செற்று, அரக்கன்(ன்) உடலைச் செழு மால்வரைக்கீழ்
ஒற்றியான்; முற்றும் ஆள்வான்; உறையும்(ம்) இடம்
ஒற்றியூரே.
|
8
|
பித்தனைப் போன்று விளங்கும் சிவபெருமான் , செய்கையால் அறிவில் பெரியவனாவான் . கலைமானின் தோலைச் சுற்றி உடுத்தவன் . சுத்தி , சூலம் என்பன ஏந்தியவன் . நெற்றிக்கண் உடையவன் . கோபமுடைய அரக்கனான இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க , அவன் அம்மலையின்கீழ் நெரியுமாறு தன் காற்பெருவிரலை அழுத்தியவன் . உலகம் முழுவதையும் ஆட் கொண்டருளும் அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் . | |
திருவின் ஆர் போதினாலும் திருமாலும், ஒர் தெய்வம் முன்னி,
தெரிவினால் காணமாட்டார்; திகழ் சேவடி சிந்தை செய்து,
பரவினார் பாவம் எல்லாம் பறைய, படர் பேர் ஒளியோடு
ஒருவனாய் நின்ற பெம்மான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
|
9
|
இலக்குமி எழுந்தருளிய தாமரை மலரில் வீற்றிருந்தருளும் பிரமனும் , திருமாலும் ஒப்பற்ற தெய்வத்தைக் காணவேண்டும் என நினைத்துத் தம் அறிவால் தேடிக் காணமாட்டாதவர் ஆயினர் . சிவபெருமானின் சிவந்த திருவடிகளை மனத்தால் சிந்தித்து வழிபடுபவர்களின் பாவம் எல்லாம் அழியப் படர்ந்த பேரொளியோடு ஒப்பற்றவனாயிருந்த அச் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் . | |
தோகை அம்பீலி கொள்வார், துவர்க்கூறைகள் போர்த்து உழல்வார்
ஆகம செல்வனாரை அலர் தூற்றுதல் காரணமாக்
கூகை அம் மாக்கள் சொல்லைக் குறிக்கொள்ளன் மின்! ஏழ் உலகும்
ஓகை தந்து ஆள வல்லான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
|
10
|
நடந்து செல்லும்போது எறும்பு முதலிய சிறு பூச்சிகள் மிதிபட்டு இறந்துவிடாதிருக்க மயில்தோகை ஏந்திப் பெருக்கிச் செல்லும் சமணர்களும் , துவர் ஆடையைப் போர்த்திய புத்தர்களும் , ஆகமம் அருளிய , ஆகம நெறியில் பூசிக்கப்படும் செல்வரான சிவபெருமானைப் பழித்துக் கூறுவதால் , கோட்டான் போன்று ஐயறிவுடைய விலங்குகட்கு ஒப்பாவாராதலால் அவர்கள் கூறும் சொற்களைப் பொருளெனக் கொள்ள வேண்டா . ஏழுலகும் மகிழுமாறு ஆட்கொள்ள வல்ல சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் . | |
| Go to top |
ஒண்பிறை மல்கு சென்னி இறைவன்(ன்) உறை ஒற்றியூரை,
சண்பையர் தம் தலைவன்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன
பண் புனை பாடல்பத்தும் பரவிப் பணிந்து ஏத்த வல்லார்
விண் புனை மேல் உலகம் விருப்பு எய்துவர்; வீடு எளிதே.
|
11
|
ஒளிரும் பிறைச்சந்திரனைத் தலையில் சூடிய இறைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவொற்றியூரை , சண்பை என்று கூறப்படும் சீகாழியில் சிவம் பெருக்க அவதரித்த தலைவனான தமிழ் ஞானசம்பந்தன் அருளிய பண்ணோடு கூடிய இப்பாடல்கள் . பத்தையும் ஓதி வழிபட வல்லவர்கள் விண்ணிலுள்ள சுவர்க்கலோகத்தை அடைந்து வீடுபேற்றை எளிதில் அடைவர் . | |