சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.077   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருமாணிகுழி - சாதாரி பவப்ரியா பந்துவராளி காஞ்சனாவதி ராகத்தில் திருமுறை அருள்தரு மாணிக்கவல்லியம்மை உடனுறை அருள்மிகு மாணிக்கமேனியீசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=sg782MhNnpA   Add audio link Add Audio

பொன் இயல் பொருப்பு அரையன் மங்கை ஒரு பங்கர், புனல் தங்கு சடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்த விறல் வித்தகர், மகிழ்ந்து உறைவு இடம்
கன்னி இளவாளை குதிகொள்ள, இள வள்ளை படர் அள்ளல் வயல்வாய்
மன்னி இள மேதிகள் படிந்து, மனை சேர் உதவி
மாணிகுழியே.

1
சிவபெருமான் பொன்மயமான இமயமலை அரசனின் மகளான உமாதேவியைத் தன்திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர் . கங்கைநீர் தங்கிய சடையில் வன்னிப் பத்திரத்துடன் பொன்னூமத்தம் பூவை அணிந்த வலிய அறிவுருவான அச்சிவ பெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , வரப்பின்மேல் இள வள்ளைக் கொடிகள் படர்ந்த சேற்றையுடைய வயலில் , இள வாளை மீன்கள் துள்ளிப்பாய , இள எருமைகள் அதில் படிந்து வீடுசேரும் , நீர்வளமும் நிலவளமுமிக்க திருமாணிகுழி ஆகும் .

சோதி மிகு நீறு அது மெய் பூசி, ஒரு தோல் உடை புனைந்து, தெருவே
மாதர் மனைதோறும் இசை பாடி, வசி பேசும் அரனார் மகிழ்வு இடம்
தாது மலி தாமரை மணம் கமழ, வண்டு முரல் தண் பழனம் மிக்கு
ஓதம் மலி வேலை புடை சூழ் உலகில் நீடு உதவி
மாணிகுழியே.

2
ஒளிமிகுந்த திருவெண்ணீற்றினைத் திருமேனியில் உத்தூளணமாகப் பூசி , தோலை ஆடையாக அணிந்து , தெருக்களில் பெண்கள் உள்ள ஒவ்வொரு இல்லமும் சென்று இசைப்பாடல்களைப் பாடி வயப்படுத்தும் பேச்சுக்களைப் பேசும் சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் தலம் மகரந்தப்பொடிகள் மிக்க தாமரை மலர்கள் மணம் வீசுவதும் , வண்டுகள் ஒலிக்கின்ற குளிர்ச்சி பொருந்திய வயல்களையுடையதும் , கடலலைகளின் ஓசை மிகுந்ததும் ஆகி விளங்குகின்ற திருமாணிகுழி என்பதாம் .

அம்பு அனைய கண் உமை மடந்தை அவள் அஞ்சி வெருவ, சினம் உடைக்
கம்ப மதயானை உரிசெய்த அரனார் கருதி மேய இடம் ஆம்
வம்பு மலி சோலை புடை சூழ, மணி மாடம் அது நீடி, அழகு ஆர்
உம்பரவர்கோன் நகரம் என்ன, மிக மன் உதவி மாணிகுழியே.

3
அம்பு போன்ற கூரிய கண்களையுடைய உமாதேவி அஞ்ச , கோபமுடைய , தூணிலே கட்டக்கூடிய மதயானையின் தோலை உரித்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் , நறுமணமிக்க சோலை களையுடையதும் , இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற மாடமாளிகைகள் நிறைந்த அழகிய தேவலோகத்து நகரமாகிய அமராவதியைப் போன்று நிலைபெற்று விளங்குவதும் ஆகிய திருமாணிகுழியாகும் .

நித்தம் நியமத் தொழிலன் ஆகி, நெடுமால் குறளன் ஆகி, மிகவும்
சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடம் ஆம்
கொத்து அலர் மலர்ப்பொழிலில் நீடு குலமஞ்ஞை நடம்
ஆடல் அது கண்டு
ஒத்த வரிவண்டுகள் உலாவி, இசை பாடு உதவி
மாணிகுழியே.

4
நாள்தோறும் அநுட்டானம் முதலிய நியமம் பூண்டவனாய்த் திருமால் வாமனவடிவங் கொண்டு மனத்தை ஒருமுகப்படுத்தி வழிபாடு செய்யச் சிவலோக நாயகனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் , கொத்தாக மலர்ந்துள்ள பூக்களையுடைய சோலைகளில் சிறந்த மயில்கள் நடனமாட அதைப்பார்த்த வரிகளையுடைய வண்டுகள் நடனத்துக்கு ஒத்தவாறு இசைபாடுகின்ற திருமாணிகுழி ஆகும் .

மாசு இல் மதி சூடு சடை மா முடியர், வல் அசுரர் தொல்-நகரம் முன்
நாசம் அது செய்து, நல வானவர்களுக்கு அருள்செய் நம்பன் இடம் ஆம்
வாசம் மலி மென்குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி, அழகு ஆர்
ஊசல் மிசை ஏறி, இனிது ஆக, இசை பாடு உதவி மாணிகுழியே.

5
சிவபெருமான் குற்றமில்லாத சந்திரனைச் சடையில் சூடியவர் . வல்லசுரர்களின் பழமைவாய்ந்த திரிபுரங்களை அழித்து நற்குண நற்செய்கையுடைய தேவர்கட்கு அருள்புரிந்தவர் . அப் பெருமான் வீற்றிருந்தருளும் தலம் , நறுமணமிக்க மெல்லிய கூந்தலையுடைய பெண்கள் , மாளிகைகளில் தங்கி அழகிய ஊஞ்சலில் ஏறியமர்ந்து இனிமையாக ஊசற்பாட்டுப்பாடி ஆடுகின்ற திருமாணி குழி ஆகும் .
Go to top

மந்த மலர் கொண்டு வழிபாடு செயும் மாணி உயிர் வவ்வ மனம் ஆய்
வந்த ஒரு காலன் உயிர் மாள உதை செய்த மணிகண்டன் இடம் ஆம்
சந்தினொடு கார் அகில் சுமந்து, தட மா மலர்கள் கொண்டு, கெடிலம்
உந்து புனல் வந்து வயல் பாயும் மணம் ஆர் உதவி மாணிகுழியே.

6
மலரும் நிலையிலுள்ள மலர்களைக் கொண்டு சிவவழிபாடு செய்த பிரமசாரியான மார்க்கண்டேயனின் உயிரைக் கவரும் மனத்தோடு வந்த காலனின் உயிர் நீங்குமாறு காலால் உதைத்த நீலகண்டனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் , சந்தன மரங்கள் , கரிய அகிற் கட்டைகள் இவற்றைச் சுமந்து மலையிலிருந்து விழுந்து , குளங்களில் பூத்துள்ள சிறந்த மலர்களையும் தள்ளிக் கொண்டு வரும் கெடிலநதியின் நீர் வயல்களில் பாய நறுமணம் கமழும் திருமாணிகுழி ஆகும் .

எண் பெரிய வானவர்கள் நின்று துதிசெய்ய, இறையே கருணை ஆய்,
உண்பு அரிய நஞ்சு அதனை உண்டு, உலகம் உய்ய அருள் உத்தமன் இடம்
பண் பயிலும் வண்டுபல கெண்டி, மது உண்டு, நிறை பைம்பொழிலின் வாய்,
ஒண் பலவின் இன்கனி சொரிந்து, மணம் நாறு உதவி
மாணிகுழியே.

7
எண்ணற்ற தேவர்கள் வணங்கிநின்று துதிசெய்யப் பேரருளுடையவனாய் எவரும் உண்ணுதற்கரிய நஞ்சை உண்டு உலகம் உய்யும்படி அருள்செய்த உத்தமனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , பண்ணிசை பாடுகின்ற வண்டுகள் , பல மலர்களையும் கிளறி , தேனருந்த , வளம்மிக்க பசுமை வாய்ந்த சோலைகளிடத்துச் சிறந்த பலாமரங்களின் இனிய கனிகளிலிருந்து தேனைச் சொரிந்து நறுமணம் கமழ்கின்ற திருமாணிகுழி என்பதாகும் .

எண்ணம் அது இன்றி, எழில் ஆர் கைலை மாமலை எடுத்த திறல் ஆர்
திண்ணிய அரக்கனை நெரித்து, அருள்புரிந்த சிவலோகன் இடம் ஆம்
பண் அமரும் மென்மொழியினார், பணைமுலைப் பவளவாய் அழகு அது ஆர்
ஒண் நுதல் மடந்தையர், குடைந்து புனல் ஆடு உதவி
மாணிகுழியே.

8
கயிலைமலையின் பெருமையையும் , சிவ பெருமானின் அளவற்ற ஆற்றலையும் சிந்தியாது , கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த வலிய அரக்கனான இராவணனை அம்மலையின்கீழ் நெரித்து , பின் அவன் சாமகானம் பாட அருள்புரிந்த சிவலோக நாயகனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , பண்போன்று மென்மொழி பேசுபவர்களாய்ப் பருத்த கொங்கைகளையும் , பவளம் போன்ற வாயையும் , அழகிய ஒளிபொருந்திய நெற்றியையுமுடைய பெண்கள் கையாற் குடைந்து நீராடும் திருமாணி குழி ஆகும் .

நேடும் அயனோடு திருமாலும் உணரா வகை நிமிர்ந்து, முடிமேல்
ஏடு உலவு திங்கள், மதமத்தம், இதழிச் சடை எம் ஈசன் இடம் ஆம்
மாடு உலவு மல்லிகை, குருந்து, கொடிமாதவி, செருந்தி, குரவின்
ஊடு உலவு புன்னை, விரி தாது மலி சேர் உதவி
மாணிகுழியே.

9
பிரமனும் , திருமாலும் இறைவனின் அடிமுடி தேடியும் உணராவகை நெருப்புப்பிழம்பாய் ஓங்கி நின்றவர் சிவபெருமான் . அவர் தம் சடைமுடியில் வெண்தாமரை இதழ் போன்ற பிறைச்சந்திரனையும் , ஊமத்தை , கொன்றை ஆகியவற்றையும் அணிந்து விளங்குபவர் . எம் இறைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , மகரந்தப்பொடி நிறைந்த மல்லிகை , குருந்து , மாதவி , செருந்தி , குரவம் , புன்னை என்ற மணம் கமழும் மலர்கள் நிறைந்த திருமாணிகுழி என்பதாம் .

மொட்டை அமண் ஆதர், முது தேரர், மதி இ(ல்)லிகள் முயன்றன படும்
முட்டைகள் மொழிந்த மொழி கொண்டு அருள் செய்யாத
முதல்வன் தன் இடம் ஆம்
மட்டை மலி தாழை இளநீர் முதிய வாழையில் விழுந்த அதரில்,
ஒட்ட மலி பூகம் நிரை தாறு உதிர, ஏறு உதவி
மாணிகுழியே.

10
மொட்டைத் தலையுடைய சமணர்களும் , பேதைமை முதிர்ந்த புத்தர்களும் இறையுண்மையை உணராதவர்கள் . முயன்று செய்த வினைகளே பயன்தரும் . அதற்குக் கர்த்தா வேண்டா என்று சொல்பவர்கள் அவர்கள் . உருட்டிய வழி உருளும் முட்டைபோல் தமக்கென ஓர் உறுதி இல்லாத , அவர்கள் சொன்ன சொற்களால் அவர்கட்கு அருள்புரியாத சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , மட்டைகளையுடைய தென்னைகளின் இளநீர்கள் வாழையிலும் , பாக்கு மரங்களிலும் விழுந்து குலைகள் சிதற விளங்கும் திருமாணிகுழி ஆகும் .
Go to top

உந்தி வரு தண் கெடிலம் ஓடு புனல் சூழ் உதவி மாணிகுழிமேல்,
அந்தி மதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழி நகரான்-
சந்தம் நிறை தண் தமிழ் தெரிந்து உணரும் ஞானசம்பந்தனது சொல்
முந்தி இசை செய்து மொழிவார்கள் உடையார்கள், நெடு வான நிலனே.

11
பலபொருள்களை நீர்ப்பெருக்குடன் அடித்து வரும் கெடிலநதி சூழ்ந்த உதவி மாணிகுழியின் மீது , மாலைக்காலப் பிறைச்சந்திரனைச் சூடிய எம் தலைவனான சிவபெருமானின் திரு வடிகளை இடைவிடாது தியானிக்கும் அழகிய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் சந்தம் நிறைந்த இன்தமிழில் அறிந்துணர்ந்து அருளிய இத்திருப்பதிகத்தை இசையுடன் பாட முற்படுபவர்கள் உயர்ந்த முத்திப் பேற்றைப் பெறுவர் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருமாணிகுழி
3.077   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொன் இயல் பொருப்பு அரையன்
Tune - சாதாரி   (திருமாணிகுழி மாணிக்கமேனியீசுவரர் மாணிக்கவல்லியம்மை)

This page was last modified on Thu, 11 Dec 2025 05:33:28 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org