வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ, விடை ஏறி,
பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலே
நண்டு இரிய, நாரை இரை தேர, வரைமேல் அருவி முத்தம்
தெண்திரைகள் மோத, விரி போது கமழும் திரு நலூரே.
|
1
|
வண்டு அமர விரிந்த மலர்கள் நிறைந்த சடை தொங்கச் சிவபெருமான் இடபவாகனத்திலேறி , பண்டைக்காலந் தொட்டே கையில் நெருப்பேந்தியவனாய் விளங்கும் பதியாவது , பக்கத்தில் நண்டு ஓட , நாரை தேட மலையிலிருந்து விழும் அருவி முத்துக்களை அடித்துக் கொண்டு வந்து சேர்க்க , காவிரியின் தெள்ளிய அலைகள் மோதுவதால் அரும்புகள் மலர நறுமணம் கமழும் திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் . | |
பல் வளரும் நாகம் அரை யாத்து, வரைமங்கை ஒருபாகம்
மல் வளர் புயத்தில் அணைவித்து, மகிழும் பரமன் இடம் ஆம்
சொல் வளர் இசைக்கிளவி பாடி மடவார் நடம் அது ஆட,
செல்வ மறையோர்கள் முறை ஏத்த, வளரும் திரு நலூரே.
|
2
|
நச்சுப்பல்லுடைய நாகத்தை இடுப்பிலே கச்சாகக் கட்டி , மலைமங்கையாகிய உமாதேவியைத் தன் வலிமையான தோளின் இடப்பாகத்தில் அணைத்து மகிழும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , மகளிர் பொருட்செறிவுடைய பாடல்களைப் பாடி , அவற்றிற்கேற்ப நடனமாடுவதும் , வேதம் ஓதவல்ல அந்தணர்கள் நியதிப்படி போற்றி வழிபடுவதும் ஆகிய புகழ்வளரும் திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் . | |
நீடு வரை மேரு வில் அது ஆக, நிகழ் நாகம், அழல் அம்பால்
கூடலர்கள் மூ எயில் எரித்த குழகன்; குலவு சடைமேல்
ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன்; இடம் ஆம்
சேடு உலவு தாமரைகள் நீடு வயல் ஆர் திரு நலூரே.
|
3
|
பெரிய மேருமலையை வில்லாகவும் , வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் , அக்கினியை அம்பாகவும் கொண்டு , பகைவர்களின் மும்மதில்களை எரித்த அழகனான சிவபெருமானின் சடைமேல் இதழ்களையுடைய கொன்றையும் , கங்கையும் விளங்குகின் றன . இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது பெருமைமிக்க தாமரை மலர்கள் விளங்கும் வயல்வளமுடைய திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் . | |
கருகு புரி மிடறர், கரிகாடர், எரி கை அதனில் ஏந்தி,
அருகு வரு கரியின் உரி-அதளர், பட அரவர், இடம் வினவில்
முருகு விரி பொழிலின் மணம் நாற, மயில் ஆல, மரம் ஏறித்
திருகு சின மந்தி கனி சிந்த, மது வார் திரு நலூரே.
|
4
|
சிவபெருமான் கருகிய கண்டத்தை உடையவர் , சுடுகாட்டில் கையில் எரியும் நெருப்பேந்தி நடனமாடுபவர் . தம்மைத் தாக்க வந்த மதம் பிடித்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர் . படமாடும் பாம்பை ஆபரணமாக அணிந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , சோலைகளிலுள்ள நறுமணத்தை நுகர்ந்த இன்பத்தால் மயில்களாட , அவ்வாடலுக்குப் பொழில் பரிசில் வழங்கிலதே என்று சினந்தவை போல் குரங்குகள் மரத்திலேறி , மயிலாடுதல் கண்ட இன்பத்திற்கு ஈடாகப் பரிசு கொடுப்பனபோல் கனிகளை உதிர்க்கக் கனிச்சாறு பெருகும் திருநல்லூர் எனும் திருத்தலமாம் . | |
பொடி கொள் திரு மார்பர்; புரி நூலர்; புனல் பொங்கு அரவு தங்கும்
முடி கொள் சடை தாழ, விடை ஏறு முதலாளர் அவர்; இடம் ஆம்
இடி கொள் முழவு ஓசை எழில் ஆர் செய்தொழிலாளர் விழ மல்க,
செடி கொள் வினை அகல, மனம் இனியவர்கள் சேர் திரு நலூரே.
|
5
|
சிவபெருமான் திருநீறணிந்த அழகிய மார்பை உடையவர் . முப்புரிநூல் அணிந்தவர் . கங்கையையும் , பாம்பையும் தாங்கிய தாழ்ந்த சடைமுடியுடையவர் . இடப வாகனத்தில் வீற்றிருந்தருளும் முதற்பொருளானவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , இடி போன்ற முழவோசை ஒலிக்க , தொழிலாளர்களின் கைத்திறத்தால் அழகுடன் விழாக்கள் சிறந்து விளங்க , அவ்விழாக்களைச் சேவித்தலால் துன்பம்தரும் வினைகள் அகல , இனிய மன முடையோர் வசிக்கின்ற திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் . | |
| Go to top |
புற்று அரவர்; நெற்றி ஒர் கண்; ஒற்றை விடை ஊர்வர்; அடையாளம்
சுற்றம் இருள் பற்றிய பல்பூதம் இசை பாட, நசையாலே
கற்ற மறை உற்று உணர்வர்; பற்றலர்கள் முற்றும் எயில் மாளச்
செற்றவர்; இருப்பு இடம் நெருக்கு புனல் ஆர் திரு நலூரே.
|
6
|
சிவபெருமான் புற்றில் வாழும் பாம்பை அணிந்தவர் . நெற்றியில் ஒரு கண் உடையவர் . இடப வாகனத்தில் அமர்ந்தவர் . இவையே அவரது அடையாளமாகும் . அத்தகையவர் அடையாளம் காணமுடியாத இருட்டில் பல பூதங்கள் இசைபாட நடனம் புரிபவர் . விருப்பத்தோடு வேதங்களைக் கற்ற அந்தணர்களால் உணர்ந்து போற்றப்படுபவர் . பகையசுரர்களின் முப்புரங்கள் எரியும்படி சினந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது நீர்வளம் நிறைந்த திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் . | |
பொங்கு அரவர், அங்கம் உடல்மேல் அணிவர்; ஞாலம் இடு பிச்சை,
தம் கரவம் ஆக உழிதந்து, மெய் துலங்கிய வெண் நீற்றர்;
கங்கை, அரவம், விரவு திங்கள், சடை அடிகள்; இடம் வினவில்
செங்கயல் வதிக் குதிகொளும் புனல் அது ஆர் திரு நலூரே.
|
7
|
இறைவன் சினம் பொங்கப் படமெடுத்தாடும் பாம்பை அணிந்துள்ளவர் . எலும்பையும் திருமேனியில் அணிந்தவர் . பிரமகபாலமேந்திப் பூமியிலுள்ளோர் இடும் பிச்சையேற்க ஆரவாரித்துத் திரிபவர் . தம் திருமேனியில் திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவர் . கங்கையையும் , பாம்பையும் , சந்திரனையும் சடை முடியிலணிந்துள்ளவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது செங்கயல் மீன்கள் சேற்றில் குதிக்கும் நீர்வளமிக்க திருநல்லூர் என்னும் திருத்தலம் ஆகும் . | |
ஏறு புகழ் பெற்ற தென் இலங்கையவர் கோனை அரு வரையில்
சீறி, அவனுக்கு அருளும் எங்கள் சிவலோகன் இடம் ஆகும்
கூறும் அடியார்கள் இசை பாடி, வலம் வந்து, அயரும் அருவிச்
சேறு கமர் ஆன அழியத் திகழ்தரும் திரு நலூரே.
|
8
|
மிக்க புகழ் பெற்ற தென் இலங்கை மன்னனான இராவணனைக் கயிலைமலையின் கீழ் நெருக்கி அடர்த்துப் பின்னர் அவனுக்கு நீண்ட வாழ்நாளும் , வெற்றிதரும் வீரவாளும் அளித்து அருள்செய்தவர் சிவலோக நாதரான சிவபெருமான் ஆவார் . அப் பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , அடியார்கள் இசைபாடி வலம் வரும்பொழுது , பக்தியால் அவர்கள் கண்களிலிருந்து பெருக்கெடுக்கும் ஆனந்தக் கண்ணீர் அருவியெனப் பாய்ந்து அருகிலுள்ள நிலவெடிப்புக்களில் விழ , வெடிப்புக்கள் நீங்கி நிலம் சேறாகத் திகழும் திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் . | |
மாலும் மலர்மேல் அயனும் நேடி அறியாமை எரி ஆய
கோலம் உடையான், உணர்வு கோது இல் புகழான், இடம் அது ஆகும்
நாலுமறை, அங்கம் முதல் ஆறும், எரி மூன்றுதழல் ஓம்பும்
சீலம் உடையார்கள் நெடுமாடம் வளரும் திரு நலூரே.
|
9
|
திருமாலும் , தாமரை மலர்மேல் வீற்றிருக்கின்ற பிரமனும் தேடியும் அறியமுடியா வண்ணம் பெருஞ்சோதிவடிவாய் விளங்கியவனும் , இயல்பாகவே பாசங்களின் நீங்கி முற்றுணர்வும் , இயற்கையுணர்வும் உடையவனும் , குற்றமற்ற புகழையுடையவனும் ஆன சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , நான்கு வேதங்களும் , ஆறு அங்கங்களும் , மூன்று அழலும் ஓம்புகின்ற சீலமுடைய தூய அந்தணர்கள் வாழ்கின்ற நீண்ட மாடமாளிகைகளையுடைய திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் . | |
கீறும் உடை கோவணம் இலாமையில் உலோவிய தவத்தர்
பாறும் உடல் மூடு துவர் ஆடையர்கள், வேடம் அவை பாரேல்!
ஏறு மடவாளொடு இனிது ஏறி, முன் இருந்த இடம் என்பர்
தேறும் மன வாரம் உடையார் குடி செயும் திரு நலூரே.
|
10
|
கிழித்த துணியும் , கோவணமும் இல்லாமையால் ஆடை துவைக்கும் தொழில் நீங்கிய தவத்தவர்களாகிய சமணத் துறவிகளும் , அழியக்கூடிய உடலைத் துவராடையில் போர்த்திக் கொள்ளும் புத்தத்துறவிகளும் கொண்ட வேடத்தை ஒரு பொருட்டாக ஏற்க வேண்டா . சிவபெருமான் உமாதேவியை உடனாகக் கொண்டு இடபத்தின் மீது இனிதேறி , தொன்றுதொட்டு வீற்றிருந்தருளும் இடமாவது , சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்ற தெளிந்த உள்ளமும் , அன்பும் உடையவர்களான சிவனடியார்கள் வாழ்கின்ற திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் . | |
| Go to top |
திரைகள் இருகரையும் வரு பொன்னி நிலவும் திரு நலூர்மேல்
பரசு தரு பாணியை, நலம் திகழ் செய் தோணிபுர நாதன்-
உரைசெய் தமிழ் ஞானசம்பந்தன்-இசை மாலை மொழிவார், போய்,
விரை செய் மலர் தூவ, விதி பேணு கதிபேறு
பெறுவாரே.
|
11
|
காவிரியின் இருகரைகளிலும் அலைகள் மோதுவதால் செழிப்புடன் விளங்கும் திருநல்லூர் என்னும் திருத் தலத்திலுள்ள மழுவேந்திய கரமுடைய சிவபெருமானை , வயல் வளமிக்க , தோணிபுர நாதனான தமிழ் ஞானசம்பந்தன் போற்றிசைத்த இப்பாமாலையை ஓதுபவர்கள் , பிரமனால் நறுமணமிக்க சிறந்த மலர்கள்தூவி வழிபடப்படும் சிவபெருமானுடைய திருவடியைப் பெறும் பேற்றினை அடைவார்கள் . | |