ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடைமேல்
தாங்கினார், இடு பலி தலை கலனாக் கொண்ட தம் அடிகள்,
பாங்கினால் உமையொடும் பகல் இடம் புகல் இடம், பைம்பொழில் சூழ்
வீங்கு நீர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
|
1
|
சிவபெருமான் , மேன்மேலும் ஒங்கி எழுந்து ஓசையுடன் பெருக்கெடுத்து வந்த கங்கையாற்றின் வெள்ளத்தை ஒரு சடையில் தாங்கியவர் . இடுகின்ற பிச்சையை ஏற்கத் தலை யோட்டையே பாத்திரமாகக் கொண்ட தலைவர் . முறைப்படி , பகற்காலத்தில் தங்குமிடமாகப் பசுமையான சோலைகள் சூழ்ந்ததும் , நீர்ச்செழிப்பு மிக்கதுமான திருத்துருத்தி என்னும் திருத்தலத்தை உடையவர் . அப்பெருமானே இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . | |
தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர், துளங்கு ஒளி சேர்
நீறு சாந்து என உகந்து அணிவர், வெண்பிறை மல்கு சடைமுடியார்
நாறு சாந்து இளமுலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
வீறு சேர் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
|
2
|
சிவபெருமான் , புதர்ச்செடிகள் நிறைந்த சுடு காட்டில் ஒளிவிடும் நெருப்பேந்தி ஆடுபவர் . விளங்கும் ஒளி யுடைய திருநீற்றினைக் கலவைச் சந்தனம் போல மகிழ்ச்சியுடன் அணிந்து கொள்பவர் . வெண்மையான பிறைச்சந்திரனை அணிந்த சடைமுடி உடையவர் . மணம் கமழும் சந்தனக்குழம்பை அணிந்த இளமையான கொங்கைகளையுடைய உமாதேவியோடு பொருள்வளமிக்க திருத்துருத்தியில் பகற்காலத்தில் தங்கியிருப்பவர் . இரவில் திருவேள்விக் குடியில் வீற்றிருந்தருள்பவர் . | |
மழை வளர் இளமதி மலரொடு தலை புல்கு வார்சடை மேல்
கழை வளர் புனல் புகக் கண்ட எம் கண்ணுதல், கபாலியார் தாம்,
இழை வளர் துகில் அல்குல் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
விழை வளர் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
|
3
|
குளிர்ச்சியான இளம்பிறையும் , கொன்றை , ஊமத்தை போன்ற மலர்களோடு ஒரு வெண்தலையும் பொருந்திய நீண்ட சடையின் மீது , கரும்பு முதலிய பயிர்களை வளர்க்கும் கங்கை நதியினைத் தங்கச் செய்த எம் கண்ணுதல் கடவுளாகிய சிவபெருமான் பிரம கபாலம் ஏந்தியவர் . அவர் இழைகளால் நெய்யப்பட்ட ஆடை யணிந்த அல்குலையுடைய உமாதேவியோடு பகலில் , மேன்மேலும் தரிசிக்க ஆசைதரும் திருத்துருத்தியில் வீற்றிருந்தருளுவார் . அவரே இரவில் திருவேள்விக்குடியில் வீற்றிருந்தருளுவார் . | |
கரும்பு அன வரிசிலைப் பெருந்தகைக் காமனைக் கவின் அழித்த
சுரும்பொடு தேன் மல்கு தூ மலர்க்கொன்றை அம் சுடர்ச் சடையார்
அரும்பு அன வனமுலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
விரும்பு இடம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
|
4
|
இறைவன் கரும்பு வில்லையுடைய பெருந்தகை யாகிய மன்மதனின் அழகிய உடலை அழித்தவர் . வண்டுகள் மொய்க்கும் , தேன் மணம் கமழும் தூய கொன்றை மலரை அழகிய ஒளிமிக்க சடைமுடியில் அணிந்தவர் . அவர் தாமரை மொட்டுப் போன்று அழகிய கொங்கைகளை உடைய உமாதேவியோடு பகலில் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருத்துருத்தி என்னும் திருத்தல மாகும் . அவரே இரவில் வீற்றிருந்தருளுவது திருவேள்விக்குடி என்னும் திருத்தலமாகும் . | |
வளம் கிளர் மதியமும் பொன்மலர்க் கொன்றையும் வாள் அரவும்
களம் கொளச் சடை இடை வைத்த எம் கண்ணுதல்,
கபாலியார்தாம்,
துளங்கு நூல் மார்பினர், அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
விளங்கு நீர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
|
5
|
அழகு மிளிரும் சந்திரனும் , பொன் போன்ற கொன்றைமலரும் , வாள் போன்று ஒளிரும் பாம்பும் இருக்குமிடமாகச் சடைமுடியில் வைத்தருளிய , நெற்றிக்கண்ணையுடைய எங்கள் சிவபெருமான் பிரமகபாலம் ஏந்தியவர் . அசைகின்ற முப்புரி நூலணிந்த மார்பினர் . அவர் உமாதேவியாரோடு பகலில் நீர்வளமிக்க திருத்துருத்தி என்னும் திருத்தலத்திலும் , இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுவார் . | |
| Go to top |
பொறி உலாம் அடு புலி உரிவையர், வரி அராப் பூண்டு இலங்கும்
நெறி உலாம் பலி கொளும் நீர்மையர், சீர்மையை நினைப்பு
அரியார்
மறி உலாம் கையினர், மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
வெறி உலாம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
|
6
|
சிவபெருமான் வரிகளையுடைய கொல்லும் தன்மையுடைய புலித்தோலாடை அணிந்தவர் . நெடிய பாம்பை ஆபரணமாகப் பூண்டவர் . பிச்சை எடுப்பதை நெறியாகக் கொண்ட தன்மையர் . இத்தகைய எளிமை உடையவர் ஆயினும் , எவராலும் நினைத்துப் பார்ப்பதற்கும் அரிய பெருமையுடையவர் . மான்கன்று ஏந்திய கையினர் . அத்தகைய பெருமான் உமாதேவியாரோடு பகலில் , நறுமணம் கமழும் திருத்துருத்தி என்னும் திருத்தலத்திலும் , இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுகின்றார் . | |
புரிதரு சடையினர், புலிஉரி அரையினர், பொடி அணிந்து
திரிதரும் இயல்பினர், திரி புரம் மூன்றையும் தீ வளைத்தார்
வரி தரு வனமுலை மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
விரிதரு துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
|
7
|
சிவபெருமான் முறுக்குண்ட சடையினை உடையவர் . புலியின் தோலை அரையில் உடுத்தவர் . திருவெண் நீற்றை அணிந்து கொண்டு திரியும் இயல்பினர் . திரியும் புரங்கள் மூன்றையும் தீயால் வளைவித்து எரித்தவர் . சந்தனக் கீற்றுக்கள் எழுதப் பெற்ற அழகிய கொங்கைகளையுடைய உமாதேவியோடு பகலில் திருத்துருத்தி என்னும் திருத்தலத்திலும் , இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுவார் . | |
நீண்டு இலங்கு-அவிர் ஒளி நெடு முடி அரக்கன்-இந்
நீள்வரையைக்
கீண்டு இடந்திடுவன் என்று எழுந்தவன்-ஆள்வினை
கீழ்ப்படுத்தார்
பூண்ட நூல் மார்பினர், அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
வேண்டு இடம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
|
8
|
நெடுந்தூரம் விளங்கிப் பிரகாசிக்கும் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பெரிய கிரீடத்தை அணிந்துள்ள இராவணன் ` இப்பெரிய கயிலைமலையைப் பெயர்த்தெடுத்து அப் பாலிடுவேன் ` என்று ஆணவத்துடன் எழுந்த அவனது முயற்சியை அழித்தருளியவர் சிவபெருமான் . அவர் பூணூல் அணிந்த திருமார்பினர் . அவர் உமா தேவியோடு பகலில் , விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருத்துருத்தி என்னும் திருத்தலமாகும் . இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுவார் . | |
கரைகடல் அரவு அணைக் கடவுளும், தாமரை நான்முகனும்,
குரை கழல் அடி தொழ, கூர் எரி என நிறம் கொண்ட பிரான்,
வரை கெழு மகளொடும் பகல் இடம் புகல் இடம், வண்பொழில் சூழ்
விரை கமழ் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
|
9
|
ஒலிக்கின்ற கடலில் பாம்புப் படுக்கையில் துயில்கொள்ளும் திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் , ஒலிக்கும் வீரக்கழல்களை அணிந்த தம் திருவடிகளை , செருக்கழிந்து தொழுமாறு ஓங்கிய நெருப்பு வடிவாய் நின்றவர் சிவபெருமான் . அவர் மலைமகளான உமாதேவியோடு பகலில் வீற்றிருந்தருளும் இடம் வளமை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த நறுமணம் கமழும் திருத்துருத்தி என்னும் திருத்தலமாகும் . இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . | |
அயம் முகம் வெயில் நிலை அமணரும், குண்டரும், சாக்கியரும்,
நயம் முக உரையினர்; நகுவன சரிதைகள் செய்து உழல்வார்
கயல் அன வரி நெடுங்கண்ணியோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
வியல் நகர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
|
10
|
பழுக்கக் காய்ச்சிய இரும்பு போல் சுடும் வெயிலில் தவமென்று நிற்றலையுடைய சமணர்களும் , குண்டர்களாகிய புத்தர்களும் , இன்முகத்தோடு நயமாகப் பேசி , நகைச்சுவை ததும்பும் செயல்களைச் செய்து திரிபவர்கள் . ஆதலால் அவர் உரைகளைக் கொள்ளாதீர் . கயல்மீன் போன்ற , அழகிய , வரிகளையுடைய நீண்ட கண்களையுடைய உமாதேவியோடு பகலில் அகன்ற நகராகிய திருத்துருத்தியில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் இரவில் திருவேள்விக்குடியில் வீற்றிருந்தருளுகின்றார் . அவரை வழிபட்டு உய்வீர்களாக . | |
| Go to top |
விண் உலாம் விரி பொழில் விரை மணல்-துருத்தி,
வேள்விக்குடியும்,
ஒண் உலாம் ஒலிகழல் ஆடுவார் அரிவையோடு உறை பதியை
நண் உலாம் புகலியுள் அருமறை ஞானசம்பந்தன் சொன்ன
பண் உலாம் அருந்தமிழ் பாடுவார் ஆடுவார்; பழி இலரே.
|
11
|
ஒளிவிடும் , ஒலிக்கின்ற கழல்கள் அணிந்து திருநடனம் செய்யும் சிவபெருமான் உமாதேவியோடு வீற்றிருந் தருளுகின்ற , ஆகாயம்வரை உயர்ந்துள்ள விரிந்த சோலைகள் நிறைந்த , மணம் பொருந்திய மணற் பரப்பையுடைய திருத்துருத்தி , திருவேள்விக்குடி ஆகிய திருத்தலங்களைப் போற்றி அனைவரும் வழிபடும் திருப்புகலியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் பாடிய பண்ணோடு கூடிய இந்த அரிய தமிழ்ப்பதிகத்தைப் பாடுபவர்களும் , பரவசமடைந்து ஆடுபவர்களும் எவ்விதமான பழியும் , பாவமும் இல்லாதவர்களாவர் . | |