விண்ணவர் தொழுது எழு வெங்குரு மேவிய
சுண்ண வெண்பொடி அணிவீரே;
சுண்ண வெண்பொடி அணிவீர்! உம தொழு கழல்
எண்ண வல்லார் இடர் இலரே.
|
1
|
தேவர்கள் தொழுது போற்றுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும் , சுண்ணம் போன்ற வெண்மையான திருநீற்றினை அணிந்துள்ள சிவபெருமானே ! சுண்ணம் போன்ற வெண்மையான திருநீற்றினை அணியும் பெருமானாகிய உம் தொழத்தக்க திருவடிகளைத் தியானிக்க வல்லவர் துன்பம் அற்றவர்கள் ஆவர் . | |
வேதியர் தொழுது எழு வெங்குரு மேவிய
ஆதிய அருமறையீரே;
ஆதிய அருமறையீர்! உமை அலர்கொடு
ஓதியர் உணர்வு உடையோரே.
|
2
|
நால்வேதங்களையும் ஐயந்திரிபறக் கற்ற அந்தணர்கள் வழிபடுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும் , முதன்மையான வேதத்தின் பொருளானவரே ! முதன்மையான வேதத்தின் பொருளானவரான உம்மை மலர்கள் கொண்டு பூசித்துத் , தோத்திரம் செய்பவர்கள் சிவஞானம் உடையவர்கள் ஆவர் . | |
விளங்கு தண்பொழில் அணி வெங்குரு மேவிய
இளம்பிறை அணி சடையீரே;
இளம்பிறை அணி சடையீர்! உமது இணை அடி
உளம் கொள, உறு பிணி இலரே.
|
3
|
பெருமையுடன் விளங்குகின்ற குளிர்ந்த சோலைகளையுடைய அழகிய திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் , இளம்பிறைச்சந்திரனை அணிந்த சடையினையுடைய சிவபெருமானே ! இளம்பிறைச் சந்திரனைச் சடையில் அணிந்துள்ள உம்முடைய இரண்டு திருவடிகளையும் மனத்தால் நினைத்துத் தியானிப்பவர்கள் உற்றபிணிகள் இல்லாதவராவர் . | |
விண்டு அலர் பொழில் அணி வெங்குரு மேவிய
வண்டு அமர் வளர் சடையீரே;
வண்டு அமர் வளர் சடையீர்! உமை வாழ்த்தும் அத்
தொண்டர்கள் துயர், பிணி, இலரே.
|
4
|
முறுக்குடைந்து விரிகின்ற மலர்களையுடைய சோலைகளால் அழகுடன் திகழும் திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் , வண்டுகள் விரும்பும் நீண்ட சடையுடைய சிவபெருமானே ! வண்டுகள் விரும்பும் சடையினை யுடைய பெருமானாகிய உம்மை வாழ்த்தும் சிறப்புடைய தொண்டர்கள் துயரும் , பிணியும் அற்றவர்கள் ஆவர் . | |
மிக்கவர் தொழுது எழு வெங்குரு மேவிய
அக்கினொடு அரவு அசைத்தீரே;
அக்கினொடு அரவு அசைத்தீர்! உமது அடி இணை
தக்கவர் உறுவது தவமே.
|
5
|
அன்பின் மிக்கார் தொழுது எழுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , அக்குப்பாசியோடு பாம்பையும் அணிந்துள்ள சிவபெருமானே ! அக்குப்பாசியோடு பாம்பையும் அணிந்துள்ள பெருமானாகிய உம் இணையடிகளைத் துதிக்கும் தகுதிபெற்ற அடியவர்கள் பெறுவது சிறந்த தவத்தின் பயனாகும் . | |
| Go to top |
வெந்த வெண்பொடி அணி வெங்குரு மேவிய
அந்தம் இல் பெருமையினீரே;
அந்தம் இல் பெருமையினீர்! உமை அலர்கொடு
சிந்தை செய்வோர் வினை சிதைவே.
|
6
|
சுடப்பட்ட வெண்ணிறத் திருவெண்ணீற்றினை அணிந்து , திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற அழிவில்லாத புகழுடைய சிவபெருமானே ! அழிதல் இல்லாத புகழுடைய உம்மை மலர்கள் கொண்டு வழிபட்டுத் தியானிப்பவர்களின் வினைகள் சிதைந்து போகும் . | |
விழ மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய
அழல் மல்கும் அங்கையினீரே;
அழல் மல்கும் அங்கையினீர்! உமை அலர்கொடு
தொழ, அல்லல் கெடுவது துணிவே.
|
7
|
திருவிழாக்கள் நிறைந்ததும் , சோலைகள் அழகு செய்வதுமான திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் நெருப்பேந்திய அழகிய திருக்கரத்தையுடைய சிவபெருமானே ! நெருப்பேந்திய அழகிய திருக்கரமுடைய உம்மை மலர்கள் கொண்டு வழிபடுபவர்களின் துன்பங்கள் கெடுவது நிச்சயம் . | |
வித்தக மறையவர் வெங்குரு மேவிய
மத்த நல் மலர் புனைவீரே;
மத்த நல் மலர் புனைவீர்! உமது அடி தொழும்
சித்தம் அது உடையவர் திருவே!
|
8
|
சாமர்த்தியமுடைய , நான்மறைகளைக் கற்றுவல்ல அந்தணர்கள் நிறைந்த திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , ஊமத்த நன்மலரினைச் சூடியுள்ள , சிவ பெருமானே ! ஊமத்தம் மலர் சூடிய உம் திருவடிகளைத் தொழும் சித்தமுடையவர்கள் எல்லாச் செல்வங்களும் பெற்றவர் ஆவார் . | |
மேலவர் தொழுது எழு வெங்குரு மேவிய
ஆல நல் மணிமிடற்றீரே;
ஆல நல் மணிமிடற்றீர்! உமது அடி தொழும்
சீலம் அது உடையவர் திருவே!
|
9
|
மேலான பக்தர்கள் தொழுதெழுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , விடம் தங்கிய அழகிய கண்டத்தை உடைய சிவபெருமானே ! விடம் தங்கிய அழகிய கண்டத்தையுடையவராகிய உம் திருவடிகளைத் தொழுகின்ற நல்லொழுக்கம் உடையவர்களே பேரின்பம் பெறுவர் . | |
விரை மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய
அரை மல்கு புலி அதளீரே;
அரை மல்கு புலி அதளீர்! உமது அடி இணை
உரை மல்கு புகழவர் உயர்வே!
|
10
|
நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , அரையில் கட்டிய புலித்தோல் ஆடையையுடைய சிவபெருமானே ! அரையில் கட்டிய புலித்தோலாடையையுடைய பெருமானாகிய உம் இணையடிகளை நிரம்பிய சொற்களால் புகழ்பவர்களே உயர்வு அடைவர் . | |
| Go to top |