எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய
வண்டு இசைக்கும் சடையீரே;
வண்டு இசைக்கும் சடையீர்! உமை வாழ்த்துவார்
தொண்டு இசைக்கும் தொழிலாரே.
|
1
|
எட்டுத் திசைகளிலும் புகழ்பரப்பும் திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , வண்டு இசைக்கும் மலர்மாலை அணிந்த சடையுடைய சிவபெருமானே ! வண்டிசைக்கும் மலர்மாலை அணிந்துள்ள சடையுடைய உம்மை வாழ்த்தும் அடியவர்கள் தொண்டு நெறியில் சிறப்புடன் நின்று மேம்படுவரே . | |
யாழ் நரம்பின்(ன்) இசை இன்னம்பர் மேவிய
தாழ்தரு சடைமுடியீரே;
தாழ்தரு சடைமுடியீர்! உமைச் சார்பவர்
ஆழ்துயர் அருவினை இலரே.
|
2
|
யாழின் இனிய இசையை உடைய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற நீண்ட தாழ்ந்த சடைமுடியுடைய சிவபெருமானே ! நீண்டு தாழ்ந்த சடைமுடியுடைய உம்மைச் சார்ந்து பக்தியுடன் வழிபடுபவர்கள் பெருந்துன்பத்திலிருந்தும் , அதற்குக் காரணமான அரிய வினையிலிருந்தும் நீங்கியவராவர் . | |
இளமதி நுதலியொடு இன்னம்பர் மேவிய
வள மதி வளர் சடையீரே;
வள மதி வளர் சடையீர்! உமை வாழ்த்துவார்
உளம் மதி மிக உடையாரே.
|
3
|
பிறைச்சந்திரனைப் போன்ற நெற்றியையுடைய உமாதேவியோடு திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , குளிர்ச்சிபொருந்திய சந்திரனை அணிந்த நீண்ட சடையுடைய சிவபெருமானே ! குளிர்ச்சி பொருந்திய சந்திரனை அணிந்த நீண்ட சடையுடைய உம்மை வாயால் வாழ்த்தி வழிபடுவோர் பேரறிவுடையவராவர் . | |
இடி குரல் இசை முரல் இன்னம்பர் மேவிய
கடி கமழ் சடைமுடியீரே;
கடி கமழ் சடைமுடியீர்! உம கழல் தொழும்
அடியவர் அருவினை இலரே.
|
4
|
இடிக்குரல் போன்று ஒலிக்கும் முரசு , முழவு போன்ற வாத்தியங்கள் ஒலிக்க , திரு இன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , நறுமணம் கமழும் சடைமுடி உடைய சிவபெருமானே ! நறுமணம் கமழும் சடைமுடியுடைய உம் திருவடிகளைத் தொழும் அடியவர்கள் வினைநீக்கம் பெற்றவராவர் . | |
இமையவர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய
உமை ஒரு கூறு உடையீரே;
உமை ஒரு கூறு உடையீர்! உமை உள்குவார்
அமைகிலர் ஆகிலர், அன்பே.
|
5
|
உமையைத் திருமேனியின் ஓர் பாகத்திற் கொண்டவரே , தேவர்கள் தொழுது போற்றும் திரு இன்னம்பரில் எழுந்தருள்பவரே , உமை பாகராகிய உம்மை உள்ளத்தால் நினைந்து ஏத்துபவர் அன்பு அமையப் பெறாதவர் ஆகார் . | |
| Go to top |
எண் அரும் புகழ் உடை இன்னம்பர் மேவிய
தண் அருஞ் சடைமுடியீரே;
தண் அருஞ் சடைமுடியீர்! உமைச் சார்பவர்
விண்ணவர் அடைவு உடையோரே.
|
6
|
நினைத்தற்கரிய அளவில்லாத பெரும்புகழை யுடைய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , குளிர்ந்த சடைமுடியுடைய சிவபெருமானே ! குளிர்ந்த சடைமுடியுடைய உம்மைச் சார்ந்து வழிபடுபவர்கள் தேவர்களுக்குரிய சிறப்பினை அடைவர் . | |
எழில் திகழும் பொழில் இன்னம்பர் மேவிய
நிழல் திகழ் மேனியினீரே;
நிழல் திகழ் மேனியினீர்! உமை நினைபவர்
குழறிய கொடுவினை இலரே.
|
7
|
அழகுடன் விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , ஒளி விளங்கும் திருமேனியுடைய சிவபெருமானே ! ஒளி விளங்கும் திருமேனியுடைய உம்மை நினைப்பவர்களுடைய , வாட்டும் குழம்பிய கொடுவினை கெட்டழியும் . | |
ஏத்த(அ)ரும் புகழ் அணி இன்னம்பர் மேவிய
தூர்த்தனைத் தொலைவு செய்தீரே;
தூர்த்தனைத் தொலைவு செய்தீர்! உமைத் தொழுபவர்
கூர்த்த நல் குணம் உடையோரே.
|
8
|
போற்றுதற்கு அரிய புகழுடைய அழகிய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவரும் , தூர்த்தனான இராவணனை அடர்த்தவருமான சிவபெருமானே ! தூர்த்தனான இராவணனை அடர்த்த உம்மைத் தொழுபவர் பேரறிவும் , நற்குணமும் உடையவராவர் . | |
இயல் உளோர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய
அயனும் மால் அறிவு அரியீரே;
அயனும் மால் அறிவு அரியீர்! உமது அடி தொழும்
இயல் உளார் மறுபிறப்பு இலரே.
|
9
|
நல்லியல்புடையோர் தொழுது எழுகின்ற திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானே ! பிரமனும் , திருமாலும் அறிவதற்கரிய உம் திருவடிகளைத் தொழும் இயல்பு உடையவர்கட்கு மறுபிறப்பு இல்லை . | |
ஏர் அமர் பொழில் அணி இன்னம்பர் மேவிய
தேர் அமண் சிதைவு செய்தீரே;
தேர் அமண் சிதைவு செய்தீர்! உமைச் சேர்பவர்
ஆர் துயர், அருவினை, இலரே.
|
10
|
ஏர் எனப்படும் திருத்தலத்திற்கு அருகிலுள்ள சோலைகள் சூழ்ந்த அழகிய திரு இன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவராய் , சமண , புத்த நெறிகளிலுள்ள குறைகளைக் காட்டித் தாழ்ச்சியுறச் செய்த சிவபெருமானே ! சமண , புத்த நெறிகள் தாழ்வடையும்படி செய்த உம் திருவடிகளைப் போற்றி வணங்குபவர்கட்குத் துன்பமும் , அதற்குக் காரணமான தீவினையும் இல்லை . | |
| Go to top |
ஏடு அமர் பொழில் அணி இன்னம்பர் ஈசனை,
நாடு அமர் ஞானசம்பந்தன்
நாடு அமர் ஞானசம்பந்தன நல்-தமிழ்,
பாட வல்லார் பழி இலரே.
|
11
|
இதழ்களையுடைய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த அழகிய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானைப் போற்றி , தேசமெல்லாம் விரும்புகின்ற ஞானசம்பந்தன் அருளிய நற்றமிழாலான இத்திருப் பதிகத்தை ஓதவல்லவர்கள் பழியற்றவர் ஆவர் . | |