நல் வெணெய் விழுது பெய்து ஆடுதிர், நாள்தொறும்,
நெல்வெணெய் மேவிய நீரே;
நெல்வெணெய் மேவிய நீர்! உமை நாள்தொறும்
சொல் வணம் இடுவது சொல்லே.
|
1
|
நல்ல வெண்ணெய் விழுதாகப் பெய்து செய்யப்பட்ட திருமஞ்சனம் நாள்தோறும் கொண்டருளுவீர் . திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானே ! திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் உம்மைத் தினந்தோறும் துதித்துச் சொல்லப்படுகின்ற சொற்களே பயன்தரும் சொற்களாகும் . | |
நிச்சலும் அடியவர் தொழுது எழு நெல்வெணெய்க்
கச்சு இள அரவு அசைத்தீரே;
கச்சு இள அரவு அசைத்தீர்! உமைக் காண்பவர்
அச்சமொடு அருவினை இலரே.
|
2
|
நாள்தோறும் அடியவர்கள் தொழுது எழுகின்ற , நெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , இளமையான பாம்பைக் கச்சாக இடையில் அணிந்துள்ள சிவ பெருமானே ! அவ்வாறு கச்சாக இளம் பாம்பை அணிந்துள்ள உம்மைத் தரிசிப்பவரே துன்பங்களைக் கண்டு அச்சப்படாதவர் , கொடிய வினைகளும் இல்லாதவர் . | |
நிரை விரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
அரை விரி கோவணத்தீரே;
அரை விரி கோவணத்தீர்! உமை அலர்கொடு
உரை விரிப்போர் உயர்ந்தோரே.
|
3
|
வரிசையாக உலகெங்கும் பரந்த தொன்மையான புகழினையுடைய திருநெல்வெண்ணெயில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , இடையில் விரித்துக் கட்டிய கோவணத்தையுடைய சிவ பெருமானே ! அவ்வாறு கோவணத்தை விரித்துக் கட்டிய உம்மை மலர்களைக் கொண்டு பூசித்து , உமது புகழைப் போற்றிப் பாடுபவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர் . | |
நீர் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் மேவிய
ஊர் மல்கி உறைய வல்லீரே;
ஊர் மல்கி உறைய வல்லீர்! உமை உள்குதல்
பார் மல்கு புகழவர் பண்பே!
|
4
|
நீர்வளம்மிக்க தொன்மையான புகழ் பொருந்திய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தை விரும்பி அவ்வூரில் நிலையாக வீற்றிருந்தருளும் சிவபெருமானே ! அவ்வாறு அவ்வூரில் நிலையாக வீற்றிருந்தருளுகின்ற உம்மை எப்போதும் இடையறாது தியானித்தலே உலகின் உயர்ந்த புகழையுடைய சிவஞானிகள் இயல்பாகும் . | |
நீடு இளம் பொழில் அணி நெல்வெணெய் மேவிய
ஆடு இளம் பாப்பு அசைத்தீரே!
ஆடு இளம் பாப்பு அசைத்தீர்! உமை அன்பொடு
பாடு உளம் உடையவர் பண்பே!
|
5
|
நீண்ட இளமரங்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , ஆடுகின்ற இளம்பாம்பினைக் கச்சாகக் கட்டியுள்ள சிவபெருமானே ! அவ்வாறு ஆடுகின்ற இளம்பாம்பைக் கச்சாக அணிந்த உம்மை அன்போடு பாடுகின்ற உள்ளம் உடையவர்களின் பண்பே சிறந்ததாகும் . | |
| Go to top |
நெற்றி ஒர் கண் உடை நெல்வெணெய் மேவிய
பெற்றி கொள் பிறை நுதலீரே;
பெற்றி கொள் பிறைநுதலீர்! உமைப் பேணுதல்
கற்று அறிவோர்கள் தம் கடனே.
|
6
|
நெற்றிக்கண்ணை உடையவரும் , திருநெல் வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவரும் , அடியவர்கட்கருளும் பண்புடைய பிறை போன்ற நெற்றியையுடைய உமாதேவியை உடையவருமாகிய சிவபெருமானே ! அவ்வாறு பிறை போன்ற நெற்றியுடைய உமாதேவியை உடைய உம்மை வழிபடுதலே ஞான நூல்களைக் கற்றறிந்த அறிஞர்களின் கடமையாகும் . | |
நிறையவர் தொழுது எழு நெல்வெணெய் மேவிய
கறை அணி மிடறு உடையீரே;
கறை அணி மிடறு உடையீர்! உமைக் காண்பவர்
உறைவதும் உம் அடிக்கீழே.
|
7
|
நிறையுடையவர்கள் தொழுது எழுகின்ற திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , விடமுண்ட கறுத்த கண்டத்தையுடைய சிவபெருமானே ! அவ்வாறு விடமுண்ட கறுத்த கண்டத்தையுடைய உம்மைத் தரிசிப்பவர்கள் உம் திருவடிக்கீழ் என்றும் வீற்றிருப்பர் . | |
நெருக்கிய பொழில் அணி நெல்வெணெய் மேவி அன்று
அரக்கனை அசைவு செய்தீரே;
அரக்கனை அசைவு செய்தீர்! உமை அன்பு செய்து
இருக்க வல்லார் இடர் இலரே.
|
8
|
நெருங்கிய சோலைகள் சூழ்ந்து அழகுடன் விளங்கும் திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவரும் , அரக்கனான இராவணனை வலிகுன்றச் செய்தவருமான சிவபெருமானே ! அவ்வாறு அரக்கனை வலிகுன்றச் செய்தவரான உம்மை அன்புடன் வணங்குபவர்கள் துன்பமே இல்லாதவர்கள் ஆவர் . | |
நிரை விரி சடைமுடி நெல்வெணெய் மேவி அன்று
இருவரை இடர்கள் செய்தீரே;
இருவரை இடர்கள் செய்தீர்! உமை இசைவொடு
பரவ வல்லார் பழி இலரே.
|
9
|
வரிசையாக விரிந்த சடைமுடியினை உடையவராய் , திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவராய் , அன்று திருமாலும் , பிரமனும் உம் அடிமுடி காணாமல் துன்பம் அடையச் செய்த சிவபெருமானே ! அவ்வாறு திருமால் , பிரமன் என்னும் இருவரைத் துன்பம் அடையச் செய்தவராகிய உம்மை உள்ளும் , புறமும் ஒத்து வணங்கிப் போற்று பவர்கள் பழியில்லாதவர் ஆவர் . | |
நீக்கிய புனல் அணி நெல்வெணெய் மேவிய
சாக்கியச் சமண் கெடுத்தீரே;
சாக்கியச் சமண் கெடுத்தீர்! உமைச் சார்வது
பாக்கியம் உடையவர் பண்பே.
|
10
|
வறுமை , பிணி முதலியவற்றை நீக்கியவரும் , திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவரும் , புத்தமும் , சமணமும் கெடுத்தவருமாகிய சிவபெருமானே ! அவ்வாறு புத்தமும் , சமணமும் கெடுத்த உம்மைப் பற்றுக்கோடாகச் சார்வது புண்ணியம் செய்தவர்களின் பண்பாகும் . | |
| Go to top |
நிலம் மல்கு தொல்புகழ் நெல்வெணெய் ஈசனை,
நலம் மல்கு ஞானசம்பந்தன்
நலம் மல்கு ஞானசம்பந்தன செந்தமிழ்,
சொல மல்குவார் துயர் இலரே.
|
11
|
நிலவுலகெங்கும் நிறைந்த தொன்மையான புகழையுடைய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானைப் போற்றி , நன்மைகளைத் தருகின்ற ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடுவதில் மகிழ்ச்சி மிக்கவர்கள் துன்பம் இல்லாதவர்கள் ஆவர் . | |