விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால் யாதொன்றும்
இடகிலேன்; அமணர்கள் தம் அறவுரை கேட்டு அலமந்தேன்;
தொடர்கின்றேன், -உன்னுடைய தூ மலர்ச் சேவடி காண்பான்,
அடைகின்றேன்; ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
|
1
|
கீழான நாய் போன்ற யான் பொருட்பற்றை விடுவேன் அல்லேன் . வறியவராய் என்னிடம் இரந்து வந்தவர்களுக்கு யாதொன்றும் பிச்சையாக இடுவேன் அல்லேன் . சமணத்துறவியரின் அறவுரைகளைக்கேட்டு மனம் சுழன்றேன் . உன்னுடைய தூய மலர் போன்ற திருவடிகளைத் தரிசித்து வழிபடத் தொடர்ந்து அடைகின்றேன் . ஐயாறனாகிய உனக்கு அடிமைப்பட்டேனாய் அடியேன் கடைத்தேறினேன் . இனி உன் திருவடிகளை விடமாட்டேன் . | |
செம்பவளத் திரு உருவர், திகழ் சோதி, குழைக் காதர்
கொம்பு அமரும் கொடிமருங்குல் கோல் வளையாள் ஒருபாகர்,
வம்பு அவிழும் மலர்க்கொன்றை வளர் சடை மேல் வைத்து உகந்த
அம் பவள ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
|
2
|
செம்பவளம் போன்ற அழகிய வடிவினராய் , ஒளி வீசும் குழைகளை அணிந்தகாதினராய் , கொம்பினை விரும்பிப்படரும் கொடி போன்ற இடையையும் திரண்டவளையல்களையும் உடைய பார்வதியின் பாகராய் , புதிதாக மலரும் கொன்றைப்பூவை வளரும் சடைமேல் வைத்து உகப்பவராகிய அழகிய பவளம் போன்ற நிறத்தையுடைய ஐயாற்றெம்பெருமானுக்கு அடியேன் அடிமையாகிக் கடைத்தேறினேன் . | |
நணியானே! சேயானே! நம்பானே! செம் பொன்னின்
துணியானே! தோலானே! சுண்ண வெண் நீற்றானே!
மணியானே! வானவர்க்கு மருந்து ஆகிப் பிணி தீர்க்கும்
அணியானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
|
3
|
அருகிலும் சேய்மையிலும் உள்ளவனே ! பொன்மயமான ஆடையை உடையவனே ! தோலாடையையும் உடையவனே ! பொடியாகிய வெண்ணீறு அணிந்தவனே ! சிந்தாமணி போல்பவனே ! தேவர்களுக்கும் பிணியைத்தீர்க்கும் மருந்தாகி நெருங்கியிருப்பவனே ! ஐயாறனாகிய உனக்கு அடிமையாய் அடியேன் கடைத்தேறினேன் . | |
ஊழித் தீ ஆய் நின்றாய்! உள்குவார் உள்ளத்தாய்!
வாழித் தீ ஆய் நின்றாய்! வாழ்த்துவார் வாயானே!
பாழித் தீ ஆய் நின்றாய்! படர் சடை மேல் பனிமதியம்
ஆழித் தீ ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
|
4
|
உலகத்தை அழிக்கும் ஊழித்தீயாய் நின்றவனே ! விரும்பித்தியானிப்பவர் உள்ளத்தில் உள்ளவனே ! உடம்பகத்து இருந்து உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத முத்தீயாய் இருப்பவனே ! வாழ்த்தும் அடியவர் வாயில் உள்ளவனே ! பிரமனும் திருமாலும் காணமுடியாதபடி பெரிய தீத்தம்பமாக நின்றவனே ! பரவிய சடையின் மேல் , உலகத்தாருக்குக் குளிர்ச்சி தரும் சந்திரனாய் , தலைவனைப் பிரிந்த தலைவிக்குக் கடலின் உள்ளிருக்கும் குதிரை முகத்தீப்போல வருத்தும் பிறையைச் சூடியவனே ! ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான் உய்ந்தேனே . | |
சடையானே! சடை இடையே தவழும் தண் மதியானே!
விடையானே! விடை ஏறிப் புரம் எரித்த வித்தகனே!
உடையானே! உடை தலை கொண்டு ஊர் ஊர் உண் பலிக்கு உழலும்
அடையானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
|
5
|
சடையை உடையவனே ! சடையில் தவழும் பிறையைச் சூடியவனே ! காளைவாகனனே ! காளை மீது இவர்ந்து முப்புரங்களையும் எரியச்செய்த திறமை உடையவனே ! எல்லோரையும் அடிமையாக உடையவனே ! மண்டை ஓட்டை ஏந்தி ஊர்தோறும் பிச்சை உணவுக்கு அலைபவனாய் எல்லோரும் அடையத்தக்க சரணியனே ! ஐயாறனாகிய உனக்கு அடியேன் ஆளாகி உய்ந்தேனே . | |
| Go to top |
நீரானே! தீயானே! நெதியானே! கதியானே!
ஊரானே! உலகானே! உடலானே! உயிரானே!
பேரானே! பிறை சூடீ! பிணி தீர்க்கும் பெருமான்! என்று
ஆராத ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
|
6
|
` நீரும் நெருப்பும் செல்வமும் செல்லும் வழியும் ஊரும் உலகமும் உடலும் உயிருமாகி இருப்பவனே ! பலதிரு நாமங்களை உடையவனே ! பிறை சூடியே ! பிணிகளைப் போக்கும் பெருமானே !` என்று பலகால் அழைத்தும் ஆர்வம் அடங்கப் பெறாது மேன்மேல் வளர்ந்து வரும் நிலையில் அடியேனை ஆட்கொண்டு அருளும் ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான் உய்ந்தேன் . | |
கண் ஆனாய்! மணி ஆனாய்! கருத்து ஆனாய்! அருத்து ஆனாய்!
எண் ஆனாய்! எழுத்து ஆனாய்! எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய்!
விண் ஆனாய்! விண் இடையே புரம் எரித்த வேதியனே!
அண் ஆன ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
|
7
|
கண்ணாகவும் கண்ணின் மணியாகவும் , அக நோக்கத்திற்கு உரிய கருத்தாகவும் , நுகர்ச்சியாகவும் , எண்ணாகவும் , எழுத்தாகவும் , எழுத்தின் இயல்பாகவும் , பரவெளியாகவும் , வானத்தில் இயங்கிய மும்மதில்களை அழித்த வேதியனாகவும் , அடியேனுக்கு நெருங்கியவனாகவும் உள்ள ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான் உய்ந்தேனே . | |
மின் ஆனாய்! உரும் ஆனாய்! வேதத்தின் பொருள் ஆனாய்!
பொன் ஆனாய்! மணி ஆனாய்! பொரு கடல் வாய் முத்து ஆனாய்!
நின் ஆனார் இருவர்க்கும் காண்பு அரிய நிமிர் சோதி
அன்னானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
|
8
|
மின்னாகவும் இடியாகவும் வேதத்தின் பொருளாகவும் , பொன்னாகவும் மணியாகவும் அலைகள் மோதும் கடலில் உள்ள முத்தாகவும் உள்ளவனே ! நின்னைப் போலத் தம்மைப் பரம்பொருளாகக் கருதிய பிரமனும் திருமாலும் காணமுடியாத உயர்ந்த தீப்பிழம்பாய் நின்ற அத்தன்மையனே ! இவ்வாறு உள்ள ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான் உய்ந்தேனே . | |
முத்து இசையும் புனல் பொன்னி மொய் பவளம் கொழித்து உந்தப்
பத்தர் பலர் நீர் மூழ்கிப் பலகாலும் பணிந்து ஏத்த,
எத்திசையும் வானவர்கள், எம்பெருமான் என இறைஞ்சும்
அத் திசை ஆம் ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
|
9
|
முத்துக்களோடு கூடிவரும் காவிரியின் வெள்ளம் , செறிந்த பவளங்களை அரித்துக் கரைசேர்க்க , பத்தர்பலர் காவிரி நீரில் மூழ்கிப் பலகாலும் வணங்கித்துதிக்க எல்லாத் திசைகளிலும் தேவர்கள் ` எம்பெருமான் !` என்று கூப்பிட்டவாறே வழிபடும் அத்திசைகளில் எல்லாம் அவர்கள் வழிபாட்டை ஏற்கும் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே . | |
கருவரை சூழ் கடல் இலங்கைக் கோமானைக் கருத்து அழியத்
திரு விரலால் உதகரணம் செய்து உகந்த சிவமூர்த்தி,
பெருவரை சூழ் வையகத்தார், பேர் நந்தி என்று ஏத்தும்
அரு வரை சூழ் ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
|
10
|
கடலிடையே பெரிய மலைகளால் சூழப்பட்ட இலங்கை நகர் மன்னனாகிய இராவணனை அவன் எண்ணம் அழியுமாறு திருவிரலால் அழுத்தி உதைத்தலாகிய செயலைச்செய்து அவன் செருக்கை அடக்கி மகிழ்ந்த சிவமூர்த்தியாய் , பெரிய கடலால் சூழப்பட்ட இந்நில உலகத்தவர் நந்தி என்று பெயரிட்டு வழிபடும் , பெரிய மூங்கிற் காடுகள் சூழ்ந்த ஐயாற்று எம்பெருமானுக்கு , அடியேன் அடிமையாகிக் கடைத்தேறினேன் . | |
| Go to top |
Other song(s) from this location: திருவையாறு
1.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.130
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.006
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
Tune - காந்தாரம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
Tune - பழந்தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
Tune - திருநேரிசை:கொல்லி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.040
திருநாவுக்கரசர்
தேவாரம்
தான் அலாது உலகம் இல்லை;
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.091
திருநாவுக்கரசர்
தேவாரம்
குறுவித்தவா, குற்றம் நோய் வினை
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.098
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
Tune - திருவிருத்தம்
(திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
|
5.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
5.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓசை ஒலி எலாம் ஆனாய்,
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
7.077
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பரவும் பரிசு ஒன்று அறியேன்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
|