சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.042   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருத்துருத்தி - திருநேரிசை:கொல்லி அருள்தரு முகிழாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வேதேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=k69FBvKLoqk   Add audio link Add Audio

பொருத்திய குரம்பை தன்னைப் பொருள் எனக் கருத வேண்டா;
இருத்தி எப்போதும் நெஞ்சுள், இறைவனை, ஏத்து மின்கள்!
ஒருத்தியைப் பாகம் வைத்து அங்கு ஒருத்தியைச் சடையில் வைத்த
துருத்தி அம் சுடரினானைத் தொண்டனேன் கண்டஆறே!

1
எம்பெருமான் இவ்வுயிருக்குச் செயற்பாட்டுச் சாதனமாம்படி தாதுக்களால் இணைத்துள்ள இவ்வுடலே காப்பாற்றத் தக்க உயர்ந்த பொருளாகக் கருதுதல் வேண்டா . எம் பெருமானை எப்பொழுதும் நெஞ்சத்துள் இருக்கச் செய்து அவனைத் துதியுங்கள் . பார்வதிபாகனாய்க் கங்கா சடாதரனாய் உள்ள திருத்துருத்தியின் ஞானச் சுடரை அடியேன் கண்டு உய்ந்தவாறு என்னே !

சவை தனைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்ற
இவை ஒரு பொருளும் அல்ல; இறைவனை ஏத்து மி(ன்)னோ!
அவை புரம் மூன்றும் எய்தும் அடியவர்க்கு அருளிச் செய்த
சுவையினை, துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!

2
குடும்பத்தைப் பெருக்கி உயிர் வாழ்தலுக்கான வஞ்சனையிலே அழுந்திச் செய்யும் உங்களுடைய இச்செயல்கள் எல்லாம் குறிப்பிடத்தக்க நற்பயன் தருவன அல்ல என்றறிந்து எம் பெருமானையே துதியுங்கள் . மும்மதில்களையும் அம்பு எய்து அழித்து அடியார்களுக்கு அருள் செய்த சுவைப் பொருளாக உள்ள துருத்திப் பெருமானை அடியவனாகிய யான் தரிசித்துப் பெற்ற இன்பம் இருந்தவாறு என்னே !

உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்து மி(ன்)னோ!
கன்னியை ஒரு பால் வைத்து, கங்கையைச் சடையுள் வைத்து,
பொன்னியின் நடுவு தன்னுள் பூம் புனல் பொலிந்து தோன்றும்
துன்னிய துருத்தியானைத் தொண்டனேன் கண்ட ஆறே.!

3
பார்வதிபாகனாய்த் கங்கா சடாதரனாய்க் காவிரியின் இனிய நீரின் நடுவிலே விளங்கித்தோன்றும் திருத் துருத்திப் பெருமானைத் தரிசித்து அடியேன் கண்ட மகிழ்வு இருந்தவாறு என்னே ! ஆதலின் என்னை ஒத்த மகிழ்வினை அடைய எப்பொழுதும் ஒப்பற்ற அப் பெருமானை உள்ளத்தில் இருத்திப் போற்றுங்கள் .

ஊன் தலை வலியன் ஆகி, உலகத்துள் உயிர்கட்கு எல்லாம்
தான் தலைப்பட்டு நின்று, சார் கனல் அகத்து வீழ,
வான் தலைத் தேவர் கூடி,வானவர்க்கு இறைவா! என்னும்
தோன்றலை, துருத்தியானை தொண்டனேன் கண்டஆறே!

4
உலகத்தில் எல்லா உயிர்களுக்கும் அவற்றின் புலால் உடம்பிலும் கலந்து வலிமை தருபவனாகி , உயிர்களுக்குள்ளும் தான் உயிராய் நின்று , அவ்வுயிர்கள் தத்தம் வினைகளுக்கு ஏற்பத் தீயைப் போன்ற துன்பங்களில் அகப்பட அத்துயரம் தாங்காமல் வருந்தும் தேவர்கூட ` எங்கள் தலைவனே ` என்று தம் துயர்களைப் போக்குமாறு வேண்டும் மேம்பட்டவனான திருத்துருத்திப் பெருமானைத் தரிசித்து அடியேன் உய்ந்த சீர் இருந்தவாறு என்னே !

உடல் தனைக் கழிக்கல் உற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம்
இடர் தனைக் கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து மி(ன்)னோ!
கடல் தனில் நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்ற
சுடர் தனை துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!

5
கடலில் தோன்றிய விடத்தை உண்டு மற்றவர்கள் தம்முயற்சியால் காண்பதற்கு அரியனாக இருக்கும் ஞானவடிவினனாகிய துருத்திப்பெருமானை அடியேன் தரிசித்து உய்ந்த பேறு இருந்தவாறென்னே !. உடல் தொடர்பை அடியோடு போக்கக் கருதும் உயிர்களாகிய உங்களுக்குள்ள துயர்களைப் போக்க நீர் விரும்பினால் அப்பெருமானைத் துதித்துப் போற்றுங்கள் .
Go to top

அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினை மின், நீர்கள்
பொள்ளல் இக்காயம் தன்னுள் புண்டரீகத்து இருந்த
வள்ளலை, வானவர்க்கும் காண்பு அரிது ஆகி நின்ற
துள் அலைத் துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!

6
பலதுவாரங்களை உடைய இவ்வுடலிலே , இதயமாகிய தாமரையில் இருக்கும் வள்ளலாய் , தேவர்களுக்கும் தம் முயற்சியால் காண்பதற்கு அரியவனாக இருக்கும் , காளையை ஏறி ஊரும் பெருமானை , அடியேன் கண்டு உய்ந்த சீர் இருந்தவாறென்னே ! ஆதலின் இப்பிறவியாகிய சேற்றினை நீங்கள் தாண்டிச் செல்ல விரும்பினால் சிவபெருமானையே தியானம் செய்யுங்கள் .

பாதியில் உமையாள் தன்னைப் பாகமா வைத்த பண்பன்;
வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்தச்
சாதி ஆம் சதுமுக(ந்)னும் சக்கரத்தானும் காணாச்
சோதியை, துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!

7
பார்வதிபாகன் , வேதியன் என்று தேவர்கள் விரும்பித் துதித்தவாறிருக்க , பிறப்பெடுத்த பிரமனும் திருமாலும் காணாத சோதியாகிய திருத்துருத்திப் பெருமானை அடியேன் கண்டு உய்ந்த நலம் இருந்தவாறென்னே !

சாம் மனை வாழ்க்கை ஆன சலத்துளே அழுந்த வேண்டா;
தூமம் நல் அகிலும் காட்டித் தொழுது அடி வணங்குமி(ந்)னோ!
சோமனைச் சடையுள் வைத்துத் தொல்-நெறி பலவும் காட்டும்
தூ மணல்-துருத்தியானைத் தொண்டனேன் கண்டஆறே!

8
பிறையைச் சடையில் சூடி அடியார்கள் உய்வதற்குப் பழைய நல்ல வழிகளைக் காட்டும் தூய திருவுளங்கொண்ட திருத்துருத்திப் பெருமானை அடியேன் கண்டு உய்ந்த நலம் இருந்தவா றென்னே! ஆதலின் தொண்டர்களாகிய நீங்கள் அழிந்து போகக் கூடிய மனைவாழ்க்கை என்ற வஞ்சனையுள் அழுந்தாது எம்பெருமானுக்கு நறிய அகிற்புகையை அர்ப்பணித்துத் தலையால் தொழுது அவன் திருவடிகளை உடலால் வணங்குங்கள் .

குண்டரே, சமணர் புத்தர்; குறி அறியாது நின்று
கண்டதே கருதுவார்கள் கருத்து எண்ணாது ஒழிமின், நீர்கள்!
விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க்கு அருள்கள் செய்த
தொண்டர்கள் துணையினானைத் துருத்தி நான் கண்டஆறே!

9
பகைவர்களுடைய மும்மதில்களையும் அம்பு எய்து அழித்துத் தேவர்களுக்கு அருள்களை வழங்கி அடியார்களுக்குத் துணைவனாக இருக்கும் பெருமானை அடியேன் திருத் துருத்தியுள் தரிசித்து உய்ந்த சீர் இருந்தவாறென்னே ! உடல் பருத்த சமணரும் புத்தரும் அடையவேண்டிய குறிக்கோளை அறியாமல் தம் தம் ஆராய்ச்சியால் கண்டவற்றையே முடிந்த பொருள்களாகக் கருதுவர் . ஆதலின் அவர்கள் கருத்தை உண்மையாகக் கருதாமல் புறக்கணித்து விடுங்கள் .

பிண்டத்தைக் கழிக்க வேண்டில் பிரானையே பிதற்று மின்கள்
அண்டத்தைக் கழிய நீண்ட அடல் அரக்கன் தன் ஆண்மை
கண்டு ஒத்துக் கால் விர(ல்)லால் ஊன்றி, மீண்டும் அருளிச்செய்த
துண்டத்துத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டஆறே!

10
உலகங்களைக் கடந்த நீண்ட புகழை உடைய வலிய அரக்கன் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட ஆள்வினையை நினைத்து அவனைக் கால் விரலால் ஊன்றி நெரித்துச் செருக்கு அழித்து மீண்டும் அவனுக்கு அருள்கள் செய்தவரும் , மதியின் கூறாகிய பிறையை அணிந்தவருமான துருத்திப் பெருமானை அடியேன் கண்டு உய்ந்த சிறப்பு இருந்தவாறென்னே ! நீங்களும் இவ்வுடல் தொடர்பாகிய பிறவியை அடியோடு போக்க விரும்பினீர்கள் ஆயின் அப்பெருமான் பண்பு செயல்களையே அடைவு கேடாகப் பேசுங்கள் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருத்துருத்தி
2.098   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வரைத்தலைப் பசும் பொனோடு அருங்
Tune - நட்டராகம்   (திருத்துருத்தி வேதேசுவரர் முகிழாம்பிகையம்மை)
4.042   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொருத்திய குரம்பை தன்னைப் பொருள்
Tune - திருநேரிசை:கொல்லி   (திருத்துருத்தி வேதேசுவரர் முகிழாம்பிகையம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000