செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன், அழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும் புகல் இடம் அறிய மாட்டேன்;
எத்தை நான் பற்றி நிற்கேன்? இருள் அற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வது என்னே? கோவல் வீரட்டனீரே!
|
1
|
திருக்கோவலூர் வீரட்டப்பெருமானே ! காய்ந்த செத்தையைப் போன்ற பயனற்றவனாய் , பண்பிலேனாய் , நாய் போன்றேனாய் , குற்றமுடையேனாய் , முடைநாற்றம் உடையேனாய் , அழுக்குப் பரவியிருக்கும் பொத்தலாகிய இவ்வுடம்பினையே விரும்பிப் பாதுகாத்து நாளும் சென்று சேரத்தக்க இடத்தை அறிய இயலாதேனாய் , இருள்தீர மனத்தால் உணரமாட்டாத மனக் குருடன் ஆகிய அடியேன் எதனைப்பற்றுதலால் நிலைபேறுடையேனாவேன் ? யாது செயற்பாலேன் ? | |
தலை சுமந்து இரு கை நாற்றித் தரணிக்கே பொறை அது ஆகி
நிலை இலா நெஞ்சம் தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும்
விலை கொடுத்து அறுக்க மாட்டேன்; வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்-
குலை கொள் மாங்கனிகள் சிந்தும் கோவல் வீரட்டனீரே!
|
2
|
குலைகளாக மாங்கனிகள் பழுத்து விழும் திருக் கோவலூர்ப் பெருமானே ! தலையைச் சுமந்து கொண்டு , இருகைகளைத் தொங்கவிட்டுக் கொண்டு பூமிக்குப் பாரமாய் ஒரு நிலையில் நில்லாத உள்ளத்திலே நாள்தோறும் ஐம்பொறிகள் வேண்டுவனவற்றை வழங்கி அவற்றின் ஆதிக்கத்தை ஒழிக்க இயலாதேனாய் அவை வேண்டியவற்றையே யானும் விரும்பி இளைத்துப் பாழானேன் . | |
வழித்தலைப் படவும் மாட்டேன்; வைகலும் தூய்மை செய்து
பழித்திலேன்; பாசம் அற்று, பரம! நான் பரவ மாட்டேன்,
இழித்திலேன், பிறவி தன்னை; என் நினைந்து இருக்க மாட்டேன்-
கொழித்து வந்து அலைக்கும் தெண் நீர்க் கோவல் வீரட்டனீரே!
|
3
|
இருபுறமும் பல பொருள்களையும் அலைகளால் கரையில் சேர்க்கும் தெளிந்த நீரை உடைய திருக்கோவலூர்ப் பெருமானே ! சான்றோர் குறிப்பிடும் நல்வழியில் செல்லாதேனாய் , நாள்தோறும் உள்ளத்தைத் தூய்மையாக்கி உலகப்பற்றுக்களைப் பழித்து நீத்து மேம்பட்ட உன்னை முன் நின்று புகழமாட்டேனாய் , இப் பிறப்பை இழிவாகக் கருதேனாய் , யான் பொருத்தமில்லாத பலவற்றை நினைத்துக் காலத்தை வீணாகப் போக்குகிறேன் . | |
சாற்றுவர், ஐவர் வந்து சந்தித்த குடிமை வேண்டி
காற்றுவர், கனலப் பேசி; கண் செவி மூக்கு வாயுள
ஆற்றுவர்; அலந்து போனேன், ஆதியை அறிவு ஒன்று இன்றி;
கூற்றுவர் வாயில் பட்டேன்-கோவல் வீரட்டனீரே!
|
4
|
கோவலூர்ப்பெருமானே ! இவ்வுயிர் இவ்வுடலாகிய வீட்டில் ஒண்டிக் குடித்தனம் செய்வதால் இவ்வுடம்பில் ஆதிக்கம் செலுத்தும் உடைமையாளரைப் போல உள்ள ஐம்பொறிகள் தம் விருப்பத்திற்கு வேண்டியவற்றைக் குறிப்பிட்டுக் கண் , செவி , மூக்கு , வாய் என்ற தமக்கு அவற்றை வழங்கவேண்டும் என்று கடுமையாகப்பேசி என்னை நடத்துதலால் வருந்தினேனாய் மூலமாயுள்ள உன்னை அறியும் அறிவு இன்றிக் கூற்றுவனுடைய வாயில் அகப்பட்டுள்ளேன் . | |
தடுத்திலேன், ஐவர் தம்மை; தத்துவத்து உயர்வு நீர்மைப்
படுத்திலேன்; பரப்பு நோக்கிப் பல்மலர்(ப்) பாதம் முற்ற
அடுத்திலேன்; சிந்தை ஆர ஆர்வலித்து அன்பு திண்ணம்
கொடுத்திலேன்; கொடியவா, நான்! கோவல் வீரட்டனீரே!
|
5
|
கோவலூர்ப் பெருமானே ! ஐம்பொறிகளை அடக்கி மெய்ப்பொருளின் உண்மைத் தன்மையில் ஆன்மா ஈடுபடும்படி செய்யேனாய் , எம் பெருமான் எங்கும் பரவியவனாய் இருப்பதனை மனங்கொண்டு , அவன் திருவடிகளில் சேர்ப்பிக்கப் பலமலர்களையும் பறித்துக் தொகுக்காதேனாய் , மனம் நிறைய அன்புகொண்டு அவ் வன்பை எம்பெருமான் பால் செலுத்தேனாய் அடியேன் கொடியேனாகக் காலம் கழித்துவிட்டேனே ! | |
| Go to top |
மாச் செய்த குரம்பை தன்னை மண் இடை மயக்கம் எய்தும்
நாச் செய்து, நாலும் ஐந்தும் நல்லன வாய்தல் வைத்து,
காச் செய்த காயம் தன்னுள் நித்தலும் ஐவர் வந்து
கோச் செய்து குமைக்க ஆற்றேன்-கோவல் வீரட்டனீரே!
|
6
|
கோவலூர்ப் பெருமானே ! ஐம்பெரும் பூதங்களால் அமைந்த உடம்பாகிய குடிசைக்கு உலகிலே நாவின் சுவையோடு ஒன்பது வாசல்களை அமைத்து உயிரைச் சுமக்கும் இவ்வுடலினுள்ளே நாள்தோறும் ஆட்சி செய்வனவாக , ஐம்பொறிகள் அழிவு செய்தலால் அவற்றின் தீங்குகளைப் பொறுக்க இயலாதேனாய் உள்ளேன் . | |
படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும்
விடகிலா; ஆதலாலே விகிர்தனை விரும்பி ஏத்தும்
இடை இலேன்; என் செய்கேன், நான்? இரப்பவர் தங்கட்கு என்றும்
கொடை இலேன்; கொள்வதே, நான்! கோவல் வீரட்டனீரே!
|
7
|
கோவலூர்ப் பெருமானே ! வினைகள் என்னைத் தாக்கும் படைகளைப் போல வந்து பற்றி விடாமல் வருத்துவதால் , என்னிடம் வந்து இரப்பவர்களுக்கு ஒருநாளும் ஒன்றையும் கொடுத்து அறியாதேனாய்ப் பிறரிடம் எதனையாவது பெறுவதனையே தொழிலாகக் கொண்டுள்ள அடியேன் , பெருமானாராகிய உங்களை விரும்பித் துதிக்கும் வாய்ப்பினைப் பெறேனாய்ப் பயனற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் . | |
பிச்சு இலேன், பிறவி தன்னைப் பேதையேன் ; பிணக்கம் என்னும்
ச்சுளே அழுந்தி வீழ்ந்து, துயரமே இடும்பை தன்னுள்
சனாய் ஆதிமூர்த்திக்கு அன்பனாய், வாழ மாட்டாக்
கொச்சையேன் செய்வது என்னே!-கோவல் வீரட்டனீரே!
|
8
|
கோவலூர்ப் பெருமானே ! அறிவற்றவனாகிய அடியேன் பிறவிப் பிணியை அடியோடு சிதறச் செய்து போக்கும் ஆற்றல் இல்லேன் . உயிர் தங்கியிருக்கும் இவ்வுடலின் பற்றிலே அழுந்திக் கிடந்து துயரமே நுகர்தற்குரிய இவ்வுடம்பில் உள்ள உயிரை ஆதிமூர்த்தியாகிய உமக்கு அன்புடையதாகச் செய்து வாழமுடியாத அகக்கண் குருடனாகிய அடியேன் செயற்பாலது யாது உளது ? | |
நிணத்து இடை யாக்கை பேணி நியமம் செய்து இருக்க மாட்டேன்;
மனத்து இடை ஆட்டம் பேசி மக்களே சுற்றம் என்னும்
கணத்து இடை ஆட்டப் பட்டு, காதலால் உன்னைப் பேணும்
குணத்து இடை வாழ மாட்டேன்-கோவல் வீரட்டனீரே!
|
9
|
கோவலூர்ப் பெருமானே ! கொழுப்பை இணைத்து அமைக்கப்பட்ட இவ்வுடம்பினை விரும்பி நாடோறும் செய்யவேண்டிய வழிபாட்டுக் கடமைகளைச் செய்ய மாட்டேனாய் , திருமணத்திலே விருப்பம் கொண்டு பேசி மக்கள் சுற்றம் என்னும் கூட்டத்திலே தடுமாறுமாறு செயற்படுத்தப் பட்டு அன்போடு உம்மை விரும்பும் நற்பண்போடு வாழமாட்டாதேன் ஆயினேன் . | |
விரிகடல் இலங்கைக் கோனை வியன் கயிலாயத்தின் கீழ்
இருபது தோளும் பத்துச் சிரங்களும் நெரிய ஊன்றி,
பரவிய பாடல் கேட்டு, படை கொடுத்து அருளிச் செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல் வீரட்டனாரே.
|
10
|
குரவ மரமும் கோங்க மரமும் சூழ்ந்த திருக்கோவலூர்ப் பெருமான் , விரிந்த கடலால் சூழப்பட்ட இலங்கை நகர மன்னனான இராவணனைப் பரந்த கயிலை மலையின் கீழே அவனுடைய இருபது தோள்களும் பத்துத் தலைகளும் நெரியுமாறு கால்விரலை அழுத்திப் பின் அவன் முன் நின்று போற்றிய பாடல்களைக் கேட்டு அவனுக்கு வாட்படையைக் கொடுத்து அருளியவராவர் . | |
| Go to top |