வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர் வளாகம் தன்னுள்
சென்றிலேன்; ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன்;
நின்று உளே துளும்புகின்றேன்; நீசனேன்; ஈசனேயோ!
இன்று உளேன்! நாளை இல்லேன்!-என் செய்வான் தோன்றினேனே!
|
1
|
எல்லோரையும் ஆளும் பெருமானே ! அடியேன் ஐம்புலன்களையும் வென்றேன் அல்லேன் . வென்ற சான்றோர்கள் உடைய சூழலிலுஞ் சென்றேன் அல்லேன் . ஆதலால் நேர்மையான வழிக்கு அப்பாற்பட்டவனாய் , உள்ளூர வருந்துகின்றேன் . இன்று உயிருடன் இருக்கும் நான் நாளை உயிருடன் இருப்பேன் என்ற உறுதி இல்லை . அங்ஙனம் ஒருபயனும் எய்தாமையின் எதற்காகத் தோன்றினேன் நான் ? | |
கற்றிலேன், கலைகள் ஞானம்; கற்றவர் தங்களோடும்
உற்றிலேன்; ஆதலாலே உணர்வுக்கும் சேயன் ஆனேன்;
பெற்றிலேன்; பெருந் தடங்கண் பேதையார் தமக்கும் பொல்லேன்;
எற்று உளேன்? இறைவனே!-நான் என் செய்வான் தோன்றினேனே!
|
2
|
ஞானக் கலைகளைக் கல்லாத நான் அவற்றைக் கற்ற ஞானிகளோடு தொடர்பு கொள்ளாததனால் நல்லுணர்வுக்கு அப்பாற்பட்டு விட்டேன் . அத்தகைய நல்லறிவு இல்லாத நான் பெரிய நீண்ட கண்களை உடைய மகளிருக்கும் பொலிவு இல்லாதவனாய் உள்ளேன் . இறைவனே ! நான் எதற்காக இருக்கிறேன் ? இம்மை மறுமை வீடுகளுள் எதனையும் தேட இயலாதவனாயினேன் . எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ? | |
மாட்டினேன், மனத்தை முன்னே; மறுமையை உணர மாட்டேன்;
மூட்டி, நான், முன்னை நாளே முதல்வனை வணங்க மாட்டேன்;
பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம் தன்னை;
ஈட்டினேன்; களைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!
|
3
|
என் மனத்தை இம்மையில் செலுத்தி , மறுமையை உணராது , வாழ்வின் தொடக்கத்திலேயே இறைவனை வணங்காது , பெருமை இல்லாத நாய் போல நின்று , உலகப் பற்றாகிய பாவத்தைத் தேடி , அதனை நீக்காதவனாய் எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ? | |
கரைக் கடந்து ஓதம் ஏறும் கடல் விடம் உண்ட கண்டன்
உரைக் கடந்து ஓதும் நீர்மை உணர்ந்திலேன்; ஆதலாலே,
அரைக் கிடந்து அசையும் நாகம் அசைப்பனே! இன்ப வாழ்க்கைக்கு
இரைக்கு இடைந்து உருகின்றேன் என் செய்வான் தோன்றினேனே!
|
4
|
கரையைக் கடந்து வெள்ளம் பெருகும் கடலில் தோன்றிய விடத்தை உண்ட கழுத்தை உடைய சிவபெருமான் சொல்லையும் கடந்த பெருமையை உடையவன் . ஆதலின் அவனைப் பற்றிப்பேசும் தன்மை உணராதேன் . ஆதலின் இடையில் பாம்பினை இறுகக் கட்டிய அப் பெருமானை நோக்கி , சிற்றின்பம் விளைக்கும் உலக வாழ்விற்கும் , பசியைப் போக்கும் உணவிற்கும் அடையத் தகாதாரை அடைந்து நெஞ்சு உருகிப் பொழுது போக்கும் நான் எதற்காகப் பிறப்பெடுத்தேன் என்று கூறி அவன் அருளை வேண்டுகின்றேன் . | |
செம்மை வெண் நீறு பூசும் சிவன் அவன், தேவ தேவன்,
வெம்மை நோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி
அம்மை நின்று அடிமை செய்யா வடிவு இலா முடிவு இல் வாழ்க்கைக்கு
இம்மை நின்று உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே!
|
5
|
செம்மையான மேனியில் , திருநீற்றைப் பூசும் சிவபெருமானாகிய , கொடிய வினைகளைப் போக்கும் தேவ தேவன் ஆகிய அந்த விகிர்தன்பால் விருப்புற்று முற்பிறப்பில் அடிமை செய்யாத பயனற்ற வாழ்க்கைச் செயலை நினைத்து , இப்பிறப்பில் உருகுகின்றேன் . எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ? | |
| Go to top |
பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர் தமைப் புறமே பேசக்
கூச்சு இலேன்; ஆதலாலே கொடுமையை விடும் ஆறு ஓரேன்;
நாச் சொலி நாளும் மூர்த்தி நன்மையை உணர மாட்டேன்
ஏச்சுளே நின்று, மெய்யே என் செய்வான் தோன்றினேனே!
|
6
|
பேசும்போதெல்லாம் பிறரைப் புறம் கூறும் செயலை நீங்காதேனாய் , கொடுமையை நீக்குமாறு அறியேனாய் , சிவபெருமானுடைய பெருமையை நாவினாலே சொல்லி அவன் செய்யும் நன்மையை உணரமாட்டேனாய் , இகழ்ச்சிக்கு இடமாகிய இந்த உடம்பில் இன்னும் இருந்து கொண்டுள்ளேன் . யாது செய்வதற்காகப் பிறந்தேன் நான் ? | |
தேசனை, தேசம் ஆகும் திருமால் ஓர் பங்கன் தன்னை,
பூசனை, புனிதன் தன்னை, புணரும் புண்டரிகத்தானை,
நேசனை, நெருப்பன் தன்னை, நிவஞ்சகத்து அகன்ற செம்மை
ஈசனை, அறியமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!
|
7
|
ஒளிஉடையவனாய் , உலகங்கள் புகழும் திருமாலை ஒரு பாகமாக உடையவனாய் , எல்லாராலும் வணங்கப்படுபவனாய் , தூயவனாய் , அடியாருடைய உள்ளத் தாமரையில் இருப்பவனாய் , அன்பனாய் , தீயை ஏந்தியவனாய் , செம்பொருளாய் உள்ள பெருமானை அறிய முடியாதவனாகின்றேன் . எதற்காகப் பிறந்தேன் நான் ? | |
விளைக்கின்ற வினையை நோக்கி, வெண் மயிர் விரவி, மேலும்
முளைக்கின்ற வினையைப் போக முயல்கிலேன், இயல; வெள்ளம்
திளைக்கின்ற முடியினான் தன் திருவடி பரவமாட்டாது
இளைக்கின்றேன், இருமி ஊன்றி;-என் செய்வான் தோன்றினேனே!
|
8
|
இன்ப துன்பப் பயன்களை நல்கும் வினையை நினைத்து மயிர் வெளுத்த பிறகும் முளைத்து வளருகின்ற வினையைப் போக்குதற்கு முயலாது , கங்கை தங்கிய சடையை உடைய சிவபெருமானுடைய திருவடிகளை முன்நின்று வழிபட மாட்டாமல் , வீணாக இருமிக்கொண்டு , தடியை ஊன்றி இளைக்கும் நிலையினன் ஆகின்றேன் . எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ? | |
விளைவு அறிவு இலாமையாலே வேதனைக் குழியில் ஆழ்ந்து
களைகணும் இல்லேன்; எந்தாய்! காமரம் கற்றும் இல்லேன்!
தளை அவிழ் கோதை நல்லார் தங்களோடு இன்பம் எய்த
இளையனும் அல்லேன்; எந்தாய்!-என் செய்வான் தோன்றினேனே!
|
9
|
எந்தாய் ! பின் விளையும் பயனை அறியாமையால் வேதனையாகிய குழியிலே விழுந்து , ஆழ்ந்து பற்றுக்கோடு இல்லாது இருக்கின்றேன் . உன்னை வசீகரிக்கும் இசையைக் கற்றேனும் அல்லேன் . மாலையை அணிந்த பெண்களோடு இன்பமாக வாழ இளையேனும் அல்லேன் . அடியேன் எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ? | |
வெட்டனவு உடையன் ஆகி வீரத்தால் மலை எடுத்த
துட்டனைத் துட்டுத் தீர்த்துச் சுவைபடக் கீதம் கேட்ட
அட்ட மா மூர்த்தி ஆய ஆதியை ஓதி நாளும்
எள்-தனை எட்ட மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!
|
10
|
கடும் போக்கு உடையனாகி , தன் வீரத்தைக் காட்டக் கயிலை மலையைப் பெயர்க்கத் தொடங்கிய தீயவனாகிய இராவணனின் செருக்கை அடக்கி அவன் வாயினின்றும் சுவையாகச் சாம வேதகீதம் கேட்ட அட்டமூர்த்தியாகிய சிவபெருமானுடைய பெருமையைச் சொல்லி அவனை எள்ளளவும் அணுகமாட்டேன் . எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ? | |
| Go to top |