சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.086   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவொற்றியூர் - திருவிருத்தம் அருள்தரு வடிவுடையம்மை உடனுறை அருள்மிகு மாணிக்கத்தியாகர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=LUfkIoXphyA   Add audio link Add Audio

செற்றுக் களிற்று உரி கொள்கின்ற ஞான்று செரு வெண் கொம்பு ஒன்று
இற்றுக் கிடந்தது போலும், இளம்பிறை; பாம்பு, அதனைச்
சுற்றிக் கிடந்தது, கிம்புரி போலச் சுடர் இமைக்கும்;
நெற்றிக்கண் மற்று அதன் முத்து ஒக்குமால்-ஒற்றியூரனுக்கே.

1
யானையைக் கொன்று அதன் தோலைப் போர்வைக்காகக் கொண்ட காலத்தில் போரிடுகின்ற அதனுடைய வெண்மையான தந்தம் ஒன்று ஒடிந்து கிடந்ததுபோல அமைகின்றது . அதனைச் சுற்றிப் பாம்பு கிடத்தல் தந்தத்துக்கிடுங் கிம்புரிப் பூண் போலாகிறது . திருநுதலில் உள்ள நெற்றிக்கண் அத்தந்தத்திலிருந்து தெறித்த முத்தினை யொப்பதாகின்றது திருவொற்றியூர்ப் பெருமானிடத்து .

சொல்லக் கருதியது ஒன்று உண்டு, கேட்கில்; தொண்டு ஆய் அடைந்தார்
அல்லல் படக் கண்டு பின் என் கொடுத்தி?-அலை கொள் முந்நீர்
மல்லல்-திரைச் சங்கம் நித்திலம் கொண்டு வம்பக் கரைக்கே
ஒல்லை(த்) திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே!

2
கடலின் வளமான அலைகள் சங்குகளிலுள்ள முத்துக்களைக் கொண்டு மணம் வீசும் கரைகளிலே ஒதுக்கிச் சேர்க்கும் ஒற்றியூரில் உகந்தருளியிருக்கும் உத்தமனே ! நீ கேட்பதற்குத் திருச்செவி சார்த்துவாயாகில் அடியேன் கூற நினைக்கும் செய்தி ஒன்று உளது . அஃதாவது உனக்கு அடிமைகளாய் வந்து சேர்ந்த அடியவர்கள் துன்பப்படுவதைப் பார்த்துக் கொண்டே வாளா இருக்கும் நீ இப்பொழுது அவர் துன்பத்தைத் தீர்க்காமல் எதிர் காலத்தில் அவர்களுக்கு யாது வழங்கத் திருவுள்ளம் பற்றியுள்ளாய் ?

பரவை வரு திரை நீர்க் கங்கை பாய்ந்து உக்க பல் சடை மேல்
அரவம் அணி தரு-கொன்றை, இளந் திங்கள், சூடியது ஓர்
குரவ நறுமலர், கோங்கம், அணிந்து குலாய-சென்னி,
உரவு திரை கொணர்ந்து எற்று, ஒற்றியூர் உறை உத்தமனே!

3
பரந்து வருகின்ற அலைகளை உடைய கங்கை நீர் பாய்ந்து சிதறும்படிக்கான வன்மையதாயப் பலவாக உள்ள சடைத் தொகுதி மீது பாம்போடு பிறையையும் கொன்றை குரவம் கோங்கம் ஆகியவற்றின் நறுமலர்களையும் அணிந்து விளங்கும் திருமுடியினனாய்க் கடல் அலைகள் கடல்படு பொருள்களை மோதிக் கொண்டு வந்து கரையில் சேர்க்கின்ற திருஒற்றியூரில் வீற்றிருக்கும் உத்தமனே !

தான் அகம்காடு, அரங்கு ஆக உடையது; தன் அடைந்தார்
ஊன் அகம் நாறும் உடை தலையில், பலி கொள்வது, தான்;
தேன் அகம் நாறும் திரு ஒற்றியூர் உறை வார் அவர்தாம்
தான் அகமே வந்து போனகம் வேண்டி உழிதர்வரே.

4
உள்ளிடமெல்லாந் தேன்மணங் கமழுந் திருவொற்றியூரில் உறையும் பெருமான் தான் ஆடரங்காகக் கொள்வதும் காடு . தன்னை அடைந்தார் இடும் பலியை ஏற்பதும் உள்ளுரத் தசையின் முடை நாற்றம் வீசும் தலையோட்டில் . அவர் தானாகவே வீடு வீடாக வந்து உணவு வேண்டித் திரிபவரும் ஆவார் .

வேலைக்-கடல் நஞ்சம் உண்டு வெள் ஏற்றொடும் வீற்றிருந்த
மாலைச் சடையார்க்கு உறைவு இடம் ஆவது, வாரி குன்றா
ஆலைக் கரும்பொடு செந்நெல் கழனி அருகு அணைந்த
சோலை, திரு ஒற்றியூரை எப்போதும் தொழுமின்களே!

5
கடலிற் தோன்றிய நஞ்சை உண்டு இருண்ட கண்டத்துடன் வெள்ளை இடபத்தை ஊர்ந்தருளும் , அந்தி செவ்வானம் போன்ற சடையினரான சிவபெருமானுக்கு உறைவிடமாவது வருவாய் குறையாத ( ஆலைக் ) கரும்புகளோடு செந்நெல்லும் மிகும் வயல்களைச் சூழ்ந்து சோலைகள் விளங்கப்பெறுவதுமான திருவொற்றியூர் . அதனை எப்பொழுதுமே தொழுமின்கள் .
Go to top

புற்றினில் வாழும் அரவுக்கும், திங்கட்கும், கங்கை என்னும்
சிற்றிடையாட்கும், செறிதரு கண்ணிக்கும், சேர்வு இடம் ஆம்-
பெற்றுடையான், பெரும் பேச்சு உடையான், பிரியாது எனை ஆள்
விற்று உடையான் ஒற்றியூர் உடையான் தன் விரிசடையே.

6
இடப வாகனத்தை உடையவனாய் , தன்னைப் பற்றிச் சான்றோர்கள் பேசும் பொருள்சேர் புகழுரை தாங்குபவனாய் , என்னைத் தன் விருப்பப்படி விற்பதற்கும் உரிமை உடைய அடியவனாகக் கொண்டவனாய் ஒற்றியூரை உறைவிடமாக உடைய சிவ பெருமானுடைய விரிந்த சடை , புற்றில் வாழும் பாம்புக்கும் , பிறைச் சந்திரனுக்கும் , கங்கை என்ற பெயரை உடைய , சிறிய இடுப்பை உடைய நங்கைக்கும் , ஒற்றைப் பூந்தொடையாகிய முடிமாலைக்கும் இருப்பிடமாகும் .

இன்று அரைக்கண் உடையார் எங்கும் இல்லை; இமயம் என்னும்
குன்றர் ஐக்கு அண் நல் குலமகள் பாவைக்குக் கூறு இட்ட நாள்
அன்று, அரைக் கண்ணும் கொடுத்து, உமையாளையும் பாகம் வைத்த
ஒன்றரைக் கண்ணன் கண்டீர், ஒற்றியூர் உறை உத்தமனே!

7
இவ்வுலகில் முழுக்கண் உடையவர்களே காணப்படுகின்றனரே யன்றி அரைக்கண் உடையவர் ஒருவரும் இரார் . ஆனால் , இமவான் என்று போற்றப்படும் மலைத் தலைவனுக்கு வளர்ப்பு மகளாகக் கிட்டிய நல்ல மேன்மையை உடைய பார்வதிக்கு உடம்பைச் செம்பாதியாகப் பங்கிட்டுக் கொடுத்த காலத்திலே தன் முக் கண்களில் செம்பாதியான ஒன்றரைக் கண்கள் அவளுக்காயினதால் மீதியுள்ள ஒன்றரைக் கண்ணனாகவேயுள்ளார் திருவொற்றியூரில் உறையும் உத்தமனாம் எம்பெருமான் .

சுற்றி வண்டு யாழ் செயும் சோலையும் காவும் துதைந்து இலங்கு
பெற்றி கண்டால் மற்று யாவரும் கொள்வர்; பிறர் இடை நீ
ஒற்றி கொண்டாய்; ஒற்றியூரையும் கைவிட்டு, உறும் என்று எண்ணி
விற்றி கண்டாய்; மற்று இது ஒப்பது இல், இடம்-வேதியனே!

8
வேதத்தால் பரம் பொருள் என்று போற்றப்படும் ஒற்றியூர்ப் பெருமானே ! வண்டுகள் எப்பொழுதும் சுற்றிக்கொண்டு யாழ் போல ஒலிக்கும் பூஞ்சோலைகளும் பெருமரச்சோலைகளும் செறிந்து விளங்கும் உன் ஒற்றியூரின் சிறப்பினை நோக்கினால் அதனை யாவரும் விலைகொடுத்து வாங்கிக் கொள்வர் . அது கருதி நீ ஒற்றியாகப் பெற்று அனுபவிக்கும் இவ்வொற்றியூரையும் பிறரிடம் விற்று அதனைக் கைவிட எண்ணுதியேல் அது ஏற்புடையதன்று . இதனை ஒத்த சிறப்பான இருப்பிடம் பிறிது யாதுமில்லை என்பதனைத் தெரிந்து கொள்வாயாக .

சுற்றிக் கிடந்து ஒற்றியூரன் என் சிந்தை பிரிவு அறியான்;
ஒற்றித் திரி தந்து நீ என்ன செய்தி? உலகம் எல்லாம்
பற்றித் திரி தந்து பல்லொடு நா மென்று கண் குழித்துத்
தெற்றித்து இருப்பது அல்லால், என்ன செய்யும், இத் தீவினையே?

9
என் தீவினையே ! திருவொற்றியூர்ப் பெருமான் என்றும் பிரியாது என் உள்ளத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டுள்ளான் . அவ்வாறாக , நீ என்னை , அடியொற்றித் திரிந்து கொண்டிருப்பதால் நீ சாதிக்கப் போவதென்ன ? நான் செல்லிடமெல்லாம் அடியொற்றித் திரிந்து தனக்கு வேட்டை வாய்க்காமையால் ஆத்திரமுற்று பல்லையும் நாவையும் மென்று கொண்டு சோக மிகுதியாற் கண் குழிந்து கால் தெற்றித் தானே சோர்ந்திருப்பதைவிட இத்தீவினையால் எனக்கெதிர் எதுவும் நேர்தற்கிடமின்றாம் .

அம் கள் கடுக்கைக்கு முல்லைப் புறவம்; முறுவல் செய்யும்
பைங்கண்-தலைக்கு சுடலைக் களரி; பரு மணி சேர்
கங்கைக்கு வேலை; அரவுக்குப் புற்று; கலை நிரம்பாத்
திங்கட்கு வானம்-திரு ஒற்றியூரர் திருமுடியே.

10
திருவொற்றியூர்ப் பெருமான் திருமுடியானது அழகிய தேனை உடைய கொன்றை மலருக்கு , முல்லை நிலக்காடு ஆகவும் ( உத்தமமான ஆடவர் உடலில் இயல்பாகவே முல்லைப் பூவின் மணம் கமழும் . குறுந்தொகை - 193) சிரிக்கும் தலைமாலையா யிருந்து சிரிக்குங் கபாலங்களுக்குச் சுடுகாடாகவும் , பருத்த இரத்தினக் கற்களை அலைத்து வரும் கங்கைக்கு அது சென்று சேரும் கடலாகவும் , பாம்புக்கு அதன் உறைவிடமான புற்றாகவும் , பிறைக்கு அஃது உலவும் வானமாகவும் உள்ளதாகும் .
Go to top

தருக்கின வாள் அரக்கன் முடி பத்து இறப் பாதம் தன்னால்
ஒருக்கின ஆறு அடியேனைப் பிறப்பு அறுத்து ஆள வல்லான்,
நெருக்கின வானவர் தானவர் கூடிக் கடைந்த நஞ்சைப்
பரு(க்)கின ஆறு என் செய்கேன்?-ஒற்றியூர் உறை பண்டங்கனே!

11
ஒற்றியூரிலே உறைகின்ற பண்டரங்கக் கூத்தனான பெருமான் செருக்குக் கொண்ட இராவணனுடைய பத்துத் தலைகளும் நெரியுமாறு கால்விரலால் நெரித்தொடுக்கினது போலவே அடியேனுடைய பிறப்பையும் போக்கி அடியேனை அடிமையாகக் கொள்ளவல்லவன் . நெருங்கி நின்ற தேவர்களும் அசுரர்களும் கூடிப் பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த நஞ்சினை அவனையே பருகுமாறு செய்த வினை இருந்தவாறென் ? ஆ ! என் செய்கேன் நான் !

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவொற்றியூர்
3.057   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விடையவன், விண்ணும் மண்ணும் தொழ
Tune - பஞ்சமம்   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
4.045   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத
Tune - திருநேரிசை:கொல்லி   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
4.046   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து
Tune - திருநேரிசை   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
4.086   திருநாவுக்கரசர்   தேவாரம்   செற்றுக் களிற்று உரி கொள்கின்ற
Tune - திருவிருத்தம்   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
5.024   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒற்றி ஊரும் ஒளி மதி,
Tune - திருக்குறுந்தொகை   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
6.045   திருநாவுக்கரசர்   தேவாரம்   வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர்
Tune - திருத்தாண்டகம்   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
7.054   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அழுக்கு மெய் கொடு உன்
Tune - தக்கேசி   (திருவொற்றியூர் படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
7.091   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
Tune - குறிஞ்சி   (திருவொற்றியூர் படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
11.030   பட்டினத்துப் பிள்ளையார்   திருவொற்றியூர் ஒருபா ஒருபது   திருவொற்றியூர் ஒருபா ஒருபது
Tune -   (திருவொற்றியூர் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000