சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன்
முந்திப் பொழிவன; முத்தி கொடுப்பன; மொய்த்து இருண்டு
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன-பாம்பு சுற்றி
அந்திப்பிறை அணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே.
|
1
|
பாம்பினைத் திருமேனியில் சுற்றி அணிந்து மாலையில் தோன்றும் வளர்பிறைப் பக்கத்துப் பிறைச் சந்திரனை அணிந்து கூத்து நிகழ்த்தும் ஐயாறனுடைய திருவடிகள் நம் உள்ளத்தால் உள்ளவாறு சிந்திப்பதற்கு அரியனவாய் , அவன் அருளாலே தியானிக்கும் மெய்ஞ்ஞானியருக்கு மேம்பட்டுச் சிறந்த தேன்போன்ற இனிமையை முன்னர்க்கொடுத்து , அவர்கள் உயிரைப் பிணித்து நின்ற பழவினைகளைப் போக்கி அவர்களுக்கு முத்திப் பேற்றினை வழங்குவனவாகும் . | |
இழித்தன ஏழ் ஏழ்பிறப்பும் அறுத்தன; என் மனத்தே
பொழித்தன; போர் எழில் கூற்றை உதைத்தன; போற்றவர்க்கு ஆய்க்
கிழித்தன, தக்கன் கிளர் ஒளி வேள்வியைக் கீழ முன் சென்று
அழித்தன-ஆறு அங்கம் ஆன ஐயாறன் அடித்தலமே.
|
2
|
வேதங்களின் ஆறு அங்கங்களின் வடிவான ஐயாறன் அடித்தலங்கள் - ஒரு பிறப்பின் வினைப்பயன் தொடர்தற்குரிய ஏழுபிறப்புக்கள் மக்கள் , தேவர் , நரகர் , விலங்கு , ஊர்வன , நீர்வாழ்வன , தாவரம் என்ற ஏழுவகைப் பிறப்பினுள் எப்பிறப்பாயினும் அறுவறுக்கத்தக்க அப்பிறவிப் பிணியைப் போக்குவனவாய் , அடியேன் உள்ளத்தே இன்பத்தைப் பொழிவனவாய் , போரிடுவதில் வல்ல கூற்றுவனை உதைத்தனவாய் , தக்கனுடைய மேம்பட்ட வேள்வியை அழித்தனவாய் , தம்மை வழிபடும் அடியவர்களுக்குக் கீழான பிறவிகளை முற்பட்டு முயன்று அழித்தனவாய் உள்ளன . | |
மணி நிறம் ஒப்பன; பொன் நிறம் மன்னின; மின் இயல் வாய்
கணி நிறம் அன்ன; கயிலைப் பொருப்பன; காதல் செய்யத்
துணிவன; சீலத்தர் ஆகித் தொடர்ந்து விடாத தொண்டர்க்கு
அணியன; சேயன, தேவர்க்கு;-ஐயாறன் அடித்தலமே.
|
3
|
ஐயாறன் அடித்தலங்கள் மாணிக்தத்தைப் போலவும் பொன்னைப் போலவும் மின்னலைப் போலவும் அடியவர்கள் விரும்புகின்ற நிறத்தோடும் ஒளியோடும் விளங்குவனவாய் , கயிலைமலையில் உள்ளனவாய் , அன்பு செய்யத் தக்கனவாய் , நல்லொழுக்கத்துடன் இறைபணியைத் தொடர்ந்து செய்யும் அடியவர்களுக்கு அணியனவாய்த் தேவர்களுக்குத் தொலைவில் உள்ளனவாய் இருக்கின்றன . | |
இருள் தரு துன்பப்படலம் மறைப்ப, மெய்ஞ்ஞானம் என்னும்
பொருள் தரு கண் இழந்து, உண் பொருள் நாடி, புகல் இழந்த
குருடரும் தம்மைப் பரவ, கொடு நரகக் குழி நின்று
அருள் தரு கை கொடுத்து ஏற்றும்-ஐயாறன் அடித்தலமே.
|
4
|
ஐயாறன் அடித்தலங்கள் இருளைத் தரும் துன்பத்திரை மறைக்க மெய்ஞ்ஞானம் என்னும் பார்வையை இழந்த , நுகர்தற்குரிய பொருள்களைத் தேடிப் பற்றுக்கோட்டினை இழந்த குருடர்களும் தம்மைப் போற்றுமாறு கொடிய நரகமாகிய குழியில் இருந்து அவர்களை அருளாகிய கைகளைக் கொடுத்து வெளியேற்றி முத்தி நிலத்தின் கரைக்கண் சேர்ப்பன . | |
எழுவாய் இறுவாய் இலாதன; எங்கள் பிணி தவிர்த்து
வழுவா மருத்துவம் ஆவன; மா நரகக் குழிவாய்
விழுவார் அவர் தம்மை வீழ்ப்பன; மீட்பன; மிக்க அன்போடு
அழுவார்க்கு அமுதங்கள்-காண்க!-ஐயாறன் அடித்தலமே.
|
5
|
ஐயாறன் அடித்தலங்கள் - தமக்குத் தோற்றமும் முடிவும் இல்லனவாய் நம்முடைய நோய்களைப் போக்கத்தவறாத மருந்தின் தன்மையவாய் நரகக்குழியில் தம் வினைப்பயனால் விழும் உயிர்களை வினை நுகர்ச்சிக்காக விழச்செய்து பின் கருணையினால் கரையேற்றுவனவாய் , மேம்பட்ட அன்பினால் உள்ளம் உருகி அழுபவர்களுக்கு அமுதங்களாக உள்ளன . | |
| Go to top |
துன்பக்கடல் இடைத் தோணித்தொழில் பூண்டு, தொண்டர் தம்மை
இன்பக்கரை முகந்து ஏற்றும் திறத்தன; மாற்று அயலே
பொன் பட்டு ஒழுகப் பொருந்து ஒளி செய்யும் அப் பொய் பொருந்தா
அன்பர்க்கு அணியன-காண்க!-ஐயாறன் அடித்தலமே.
|
6
|
ஐயாறன் அடித்தலங்கள் அடியார்களைத் துன்பக் கடலைக் கடத்த உதவும் தோணியின் செயலைச் செய்வனவாய் இன்பமாகிய கரையிலே கொண்டு சேர்ப்பனவாய் மாற்று அறிய முடியாத வலியற்ற பொன்போல ஒளிவீசுவனவாய்ப் பொய்ப் பொருள்களிடத்துப் பற்றற்ற மெய்யடியார்களுக்கு அணியனவாய் உள்ளன . | |
களித்துக் கலந்தது ஓர் காதல் கசிவொடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுது முன் நின்ற இப் பத்தரைக் கோது இல் செந்தேன்
தெளித்து, சுவை அமுது ஊட்டி, அமரர்கள் சூழ் இருப்ப
அளித்து, பெருஞ்செல்வம் ஆக்கும்-ஐயாறன் அடித்தலமே.
|
7
|
ஐயாறன் அடித்தலங்கள் அடியார்குழாத்தோடு மகிழ்ந்து அன்பால் ஏற்பட்ட உள்ள நெகிழ்ச்சியோடு காவிரியில் நீராடித் தொழுது தம் முன் நின்ற அடியார்களை மேம்பட்ட செந்தேனைத் தெளியச் செய்து அத்தேனை அமுதோடு உண்பித்துத் தேவர்கள் சூழ்ந்து வழிபடும் பெரிய செல்வத்தை அவர்களுக்கு வழங்கி எப்பொழுதும் செல்வன்கழல் ஏத்தும் செல்வத்தை இடையறாது நுகரும் வாய்ப்பினை நல்குவன . | |
திருத்திக் கருத்தினைச் செவ்வே நிறுத்திச் செறுத்து உடலை
வருத்திக் கடி மலர்வாள் எடுத்து ஓச்சி மருங்கு சென்று
விருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண் பட்டிகை இடுமால்-
அருத்தித்து அருந்தவர் ஏத்தும் ஐயாறன் அடித்தலமே.
|
8
|
விரும்பிச் சிறந்த தவத்தினை உடையவர்கள் துதிக்கும் ஐயாறனுடைய திருவடிகள் உள்ளத்தைப் பிற பொருட்கண் செல்லாமல் திருத்தம் பெறச் செய்து அதனைச் சிவபெருமான் திருவடிகளிலேயே பதித்து , தொடர்ந்து , அதனை அடக்கி உடலை யோகத்தால் வருத்தி , நறுமணம் கமழும் ஒளி பொருந்திய மலர்களை எடுத்து உயர்த்தித் திருவடிகளில் தூவி எம்பெருமான் பக்கல் அடைந்து உடல் விருத்தி உயிர் விருத்தி ஆகிய இரண்டற்கும் முயலும் ஆற்றல் உடையவர்களுக்கு வீட்டுலகில் இடம் பெறுவதற்குப் பட்டிகையில் பெயர்ப்பதிவு செய்துவிடும் . | |
பாடும் பறண்டையும் மொந்தையும் ஆர்ப்ப, பரந்து பல்பேய்
கூடி முழவக் குவி கவிழ் கொட்ட, குறு நரிகள்
நீடும் குழல் செய்ய, வையம் நெளிய நிணப் பிணக்காட்டு
ஆடும் திருவடி-காண்க!-ஐயாறன் அடித்தலமே.
|
9
|
ஐயாறன் அடித்தலங்கள் , ஒலிக்கும் பறண்டை மொந்தை என்ற இசைக்கருவிகள் ஆரவாரம் செய்யப் பலபேய்களும் நாற்புறமும் பரவி முழவு முதலியவற்றின் குவிந்து கவிழ்ந்த மார்ச்சனை இடத்தில் ஒலியை எழுப்ப , குறுநரிகள் வேய்ங்குழல் போல ஒலிக்கப் பூமி அதிர்ச்சி தாங்காமல் நெளிய , கொழுப்பு உருகும் பிணங்களை உடைய சுடுகாட்டில் கூத்து நிகழ்த்துவனவாம் . | |
நின் போல் அமரர்கள் நீள் முடி சாய்த்து நிமிர்ந்து உகுத்த
பைம்போது உழக்கிப் பவளம் தழைப்பன-பாங்கு அறியா
என் போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம்
அம் போது எனக் கொள்ளும் ஐயன் ஐயாறன் அடித்தலமே.
|
10
|
ஆகமப்படி செய்யும் முறைகளை அறியாத அடியேனைப் போன்றவர்கள் பறித்துச் சமர்ப்பித்த இலைகளையும் மொட்டுக்களையும் எல்லாம் அழகிய பூக்களாக ஏற்கும் ஐயாறன் உடைய திருவடிகள் தேவர்கள் நீண்ட முடிகளைச் சாய்த்து வணங்கிச் சமர்ப்பித்த புதிய பூக்களைத் துகைத்து எம்பெருமானைப் போலப் பவள நிறத்தால் சிறந்து விளங்குவன . | |
| Go to top |
மலையான் மடந்தை மனத்தன; வானோர் மகுடம் மன்னி
நிலை ஆய் இருப்பன; நின்றோர் மதிப்பன; நீள் நிலத்துப்
புலை ஆடு புன்மை தவிர்ப்பன-பொன்னுலகம்(ம்) அளிக்கும்,
அலை ஆர் புனல் பொன்னி சூழ்ந்த, ஐயாறன் அடித்தலமே.
|
11
|
தேவருலகத்தை வழங்கும் , அலையோடு கூடிய நீரை உடைய காவிரி தென்புறத்தில் சூழ்ந்துள்ள ஐயாறன் அடித்தலங்கள் பார்வதியின் மனத்தனவாய் , தேவர்களின் முடிகள் விளங்குவதனால் நிலையாகத் தம்மிடம் பொருந்தியிருப்பனவாய் , வழிபட்டு நிற்பவரால் மதிக்கப்படுவனவாய் , இவ்வுலகின் கீழ்மையில் ஈடுபடும் புல்லிய பிறவியைப் போக்குவன ஆகும் . | |
பொலம் புண்டரிகப் புது மலர் போல்வன; போற்றி! என்பார்
புலம்பும் பொழுதும் புணர் துணை ஆவன; பொன் அனையாள்
சிலம்பும், செறி பாடகமும், செழுங் கிண்கிணித்திரளும்,
அலம்பும் திருவடி-காண்க!-ஐயாறன் அடித்தலமே.
|
12
|
ஐயாறன் அடித்தலங்கள் அப்பொழுது அலர்ந்த பொற்றாமரைமலர்கள் போல்வனவாய் , தம்மை வழிபடுபவர் தனித்து வருந்தும்போதும் வருத்தத்தைப் போக்கும் துணையாவனவாய் , பொன் போன்ற ஒளியையுடைய பார்வதியின் சிலம்பும் பாடகமும் கிண்கிணியும் தம்மிடையே ஒலிப்பனவாகும் . | |
உற்றார் இலாதார்க்கு உறு துணை ஆவன; ஓதி நன் நூல்
கற்றார் பரவப் பெருமை உடையன; காதல் செய்ய
கிற்பார் தமக்குக் கிளர் ஒளி வானகம் தான் கொடுக்கும்;
அற்றார்க்கு அரும்பொருள்-காண்க!-ஐயாறன் அடித்தலமே.
|
13
|
ஐயாறன் அடித்தலங்கள் தமக்கு உதவுவார் இல்லாது தனித்து வருந்துபவர்களுக்கு மேம்பட்ட துணையாவனவாய் , சிவாகமங்களை ஒதி அனுபவப் பொருளை ஞானதேசிகர்பால் கேட்டு அறிந்த சான்றோர்கள் முன்நின்று துதிக்கும் பெருமை உடையனவாய் , தம்மை விரும்பும் ஆற்றல் உடையவர்களுக்கு மேம்பட்ட ஞானஒளி வடிவமான வீட்டுலகை அளிப்பனவாய் ஏனைய பொருள்பற்று அற்றாருக்குக் கிட்டுதற்குச் சிறந்த பொருளாய் உள்ளனவாம் . | |
வானைக் கடந்து அண்டத்து அப்பால் மதிப்பன; மந்திரிப்பார்
ஊனைக் கழித்து உய்யக் கொண்டு அருள் செய்வன; உத்தமர்க்கு
ஞானச் சுடர் ஆய் நடுவே உதிப்பன; நங்கை அஞ்ச
ஆனை உரித்தன-காண்க!-ஐயாறன் அடித்தலமே.
|
14
|
ஐயாறன் அடித்தலங்கள் தேவருலகையும் தாண்டி அதற்கு அப்பாலும் மதிக்கப்படுவனவாய் , மந்திரங்களால் வழிபடு கின்றவர்களுடைய பிறவித்துயரைப் போக்கி உய்தி பெற அவர்களை அடிமையாகக் கொண்டு பேரின்பம் நல்குவனவாய் , மேம்பட்ட சான்றோர்களுக்கு ஞானஒளியாய் அவர்கள் உள்ளத்தே தோன்றுவனவாய் , பார்வதி அஞ்சுமாறு பெருமான் யானையைத் தோல் உரித்த காலை அந்த யானையின் உடலை அழுத்திப் பிடித்துக் கொள்ள உதவியனவாய் உள்ளன . | |
மாதிரம், மா நிலம், ஆவன; வானவர் மா முகட்டின்
மீதன; மென் கழல் வெங் கச்சு வீக்கின; வெந் நமனார்
தூதரை ஓடத் துரப்பன; துன்பு அறத் தொண்டு பட்டார்க்கு
ஆதரம் ஆவன காண்க!-ஐயாறன் அடித்தலமே.
|
15
|
ஐயாறன் அடித்தலங்கள் வானுலகும் மண் உலகும் ஆவனவாய்த் தேவர்களின் உச்சியின் மீது பொருந்துவன வாய் , மென்மையான கழலும் விரும்பத்தக்க கச்சும் கட்டப்பட்டனவாய் , கொடிய தருமராசரின் தூதர்களை ஒடச் செய்வனவாய் , உலகத் துன்பங்கள் தீரத்தொண்டராய் அடிமைப் பணி செய்பவருக்குத் தாங்கும் பொருளாய் உள்ளன . | |
| Go to top |
பேணித் தொழுமவர் பொன்னுலகு ஆளப் பிறங்கு அருளால்
ஏணிப்படி நெறி இட்டுக் கொடுத்து, இமையோர் முடி மேல்
மாணிக்கம் ஒத்து, மரகதம் போன்று, வயிரம் மன்னி,
ஆணிக் கனகமும் ஒக்கும்-ஐயாறன் அடித்தலமே.
|
16
|
ஐயாறன் அடித்தலங்கள் , விரும்பித் தொழும் அடியவர்கள் மேம்பட்ட வீட்டுலகத்தை ஆளுமாறு மிக்க அருளினாலே ஏணிப்படி போன்று ஏறிச் செல்லக் கூடிய வழியை அமைத்துக் கொடுத்து , தேவர்கள் முடிக்கு அணியத்தக்க மாணிக்கம் , மரகதம் , வைரம் , தூய பொன் இவற்றை ஒத்து இருப்பனவாம் . | |
ஓதிய ஞானமும், ஞானப்பொருளும், ஒலி சிறந்த
வேதியர் வேதமும், வேள்வியும், ஆவன; விண்ணும் மண்ணும்
சோதி அம் செஞ்சுடர் ஞாயிறும் ஒப்பன, தீ, மதியோடு;
ஆதியும் அந்தமும் ஆன-ஐயாறன் அடித்தலமே.
|
17
|
ஆதியும் , அந்தமும் ஆகிய ஐயாறன் அடித் தலங்கள் வேதஆகமங்களை ஓதியதனால் பெற்ற அபர ஞானமும் , ஞானப் பொருளாகிய பரஞானமும் , ஒலியால் மேம்பட்ட அந்தணர்கள் ஓதும் வேதமும் , வேதத்தை ஒட்டிச் செய்யப்படும் வேள்வியும் தேவருலகமும் இந்நிலவுலகமும் அக்கினியும் சிவந்த ஒளியை உடைய சூரியனும் தூயமதியும் ஒப்பனவாய ஒளிப்பொருளுமாக உள்ளன . | |
சுணங்கு முகத்துத் துணை முலைப் பாவை-சுரும்பொடு வண்டு
அணங்கும் குழலி-அணி ஆர் வளைக்கரம் கூப்பி நின்று,
வணங்கும் பொழுதும், வருடும் பொழுதும், வண் காந்தள் ஒண்போது
அணங்கும் அரவிந்தம் ஒக்கும்-ஐயாறன் அடித்தலமே.
|
18
|
ஐயாறன் அடித்தலங்கள் தேமல் படர்ந்த முன்பகுதியை உடைய இணையான தனங்களை உடைய பாவை போன்ற பார்வதி சுரும்பும் வண்டும் அழகுசெய்யும் கூந்தலை உடையவளாய் வளையல்களை அணிந்த கைகளைக் குவித்து நின்று வணங்கும் போதும் தடவிக்கொடுக்கும் போதும் காந்தட்பூவால் அழகுசெய்யப்பட்ட தாமரைப் பூக்களை ஒத்திருக்கின்றன . காந்தட்பூ - பார்வதிகைகள் , தாமரை - பெருமான் திருவடிகள் . | |
சுழல் ஆர் துயர்வெயில் சுட்டிடும் போது அடித்தொண்டர் துன்னும்
நிழல் ஆவன; என்றும் நீங்காப் பிறவி நிலை கெடுத்துக்
கழலா வினைகள் கழற்றுவ; காலவனம் கடந்த
அழல் ஆர் ஒளியன-காண்க!-ஐயாறன் அடித்தலமே.
|
19
|
ஐயாறன் அடித்தலங்கள் கலக்குகின்ற துயராகிய வெப்பம், தாக்கும் போது கைத்தொண்டு செய்யும் அடியவர்களுக்குப் பொருந்தும் நிழலானவையாய், ஒரு பொழுதும் நீங்காத பிறவி எடுக்கும் செயலைப் போக்கி, விடுத்து நீங்காத வினைகளை அப்புறப் படுத்துவனவாய்க் காலம் என்னும் காட்டினை எரித்து வென்ற தீயின் நிறைந்த ஒளியை உடையன. | |
வலியான் தலைபத்தும் வாய் விட்டு அலற வரை அடர்த்து
மெலியா வலி உடைக் கூற்றை உதைத்து, விண்ணோர்கள் முன்னே
பலி சேர் படு கடைப் பார்த்து, பல்-நாளும் பலர் இகழ
அலி ஆம் நிலை நிற்கும்-ஐயன் ஐயாறன் அடித்தலமே.
|
20
|
நம் தலைவனாகிய ஐயாறனுடைய திருவடிகள் வலிமையை உடைய இராவணனின் தலைகள் பத்தும் வாய்விட்டு அலறுமாறு மலையால் அவனை அழுத்தி, குறையாத வலிமையை உடைய கூற்றுவனை உதைத்து, தேவர்கள் காண அவர்கள் முன்னே பிச்சை வழங்கும் வீட்டுவாயில்களை நோக்கிப் பல நாளும் பலரும் இகழுமாறு ஆண்மை நிலைக்கு ஏலாத அலியாம் நிலைக்கு உரிய செயல்களைச் செய்யும் இயல்பின. | |
| Go to top |
Other song(s) from this location: திருவையாறு
1.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.130
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.006
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
Tune - காந்தாரம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
Tune - பழந்தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
Tune - திருநேரிசை:கொல்லி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.040
திருநாவுக்கரசர்
தேவாரம்
தான் அலாது உலகம் இல்லை;
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.091
திருநாவுக்கரசர்
தேவாரம்
குறுவித்தவா, குற்றம் நோய் வினை
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.098
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
Tune - திருவிருத்தம்
(திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
|
5.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
5.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓசை ஒலி எலாம் ஆனாய்,
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
7.077
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பரவும் பரிசு ஒன்று அறியேன்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
|