ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும் ஆய், உடன் தோன்றினராய்,
மூன்று ஆய் உலகம் படைத்து உகந்தான்; மனத்துள் இருக்க
ஏன்றான்; இமையவர்க்கு அன்பன்; திருப் பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணை ஆய் இருந்தனன், தன் அடியோங்களுக்கே.
|
1
|
திருப்பாதிரிப்புலியூரில் தன் அடியவர்களாகிய எங்களுக்கு ஊனக்கண்களுக்குத் தோன்றாத் துணைவனாய் இருந்த பெருமான் , அடியேனுக்குத் தாயாய் தந்தையாய் உடன்பிறந்த , சகோதர சகோதரியாராய் அமைந்து , மூன்று உலகங்களையும் படைத்து மகிழ்ந்தவனாய் , அடியேன் மனத்துள் இருக்க இசைந்தவனாய்த் தேவர்களுக்கும் அன்பனாகிய சிவபெருமான் ஆவான் . | |
பற்று ஆய் நினைந்திடு, எப்போதும்!-நெஞ்சே!-இந்தப் பாரை முற்றும்
சுற்று ஆய் அலைகடல் மூடினும் கண்டேன், புகல் நமக்கு;
உற்றான், உமையவட்கு அன்பன், திருப் பாதிரிப்புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியினான்தன மொய்கழலே.
|
2
|
நெஞ்சே ! இவ்வுலகை முழுதும் சுற்றிக்கொண்டு அலையை உடைய கடல் மூடிக் கொண்டாலும் நமக்கு உறுதுணையாய் உமாதேவிக்கு அன்பனாய்த் திருப்பாதிரிப்புலியூரில் பிறையைக் கண்ணியாகச் சூடிய சிவபெருமானுடைய எல்லா நலன்களும் செறிந்த திருவடிகளே நமக்கு அடைக்கலம் நல்குவன என்பதனை அறிந்துவிட்டேன் . ஆதலின் , அவற்றையே நமக்குப் பற்றுக்கோடாக எப்பொழுதும் நினைப்பாயாக . நினைந்திடு எப்போதும் - பாடம் . | |
விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான்; இனி நமக்கு இங்கு
அடையா, அவலம்; அருவினை சாரா; நமனை அஞ்சோம்;
புடை ஆர் கமலத்து அயன் போல்பவர் பாதிரிப்புலியூர்
உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரியது உண்டே?
|
3
|
காளை வாகனனாகிய பெருமான் விரும்பி அடியேன் உள்ளத்தில் இருக்கின்றான் . இனி நம்பக்கம் துயரங்கள் அடையா . தீவினைகள் நெருங்கா . கூற்றுவனுக்கு யாங்கள் அஞ்ச மாட்டோம் . பிரமனைப் போன்ற அந்தணர்கள் வாழ்வதும் நாற்பக்கங்களும் தாமரைகள் மலர்ந்திருப்பதுமாகிய திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானுடைய அடியவர்களுக்கு அடித்தொண்டர்களாகிய எங்களுக்குச் செய்ய இயலாத அரிய செயல் என்பது ஒன்று உண்டோ ? | |
மாயம் எல்லாம் முற்ற விட்டு, இருள் நீங்க, மலைமகட்கே
நேயம் நிலாவ இருந்தான் அவன்தன் திருவடிக்கே
தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும்-திருப் பாதிரிப்புலியூர்
மேய நல்லான் மலர்ப்பாதம் என் சிந்தையுள் நின்றனவே.
|
4
|
மலைமகளாகிய பார்வதியிடத்தில் அன்பு நிலைபெற்றிருக்க உள்ளவனாகிய பெருமானுடைய திருவடிக்கண் உலகமெல்லாம் வந்து வழிபடுமாறு திருப்பாதிரிப்புலியூரில் விரும்பித் தங்கியிருக்கும் அப்பெரியவனுடைய தாமரை போன்ற திருவடிகள் மாயை எல்லாம் முழுதும் அகன்று ஆணவம் அகலுமாறு அடியேன் உடைய சிந்தையில் நிலையாக உள்ளன . | |
வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி, மனத்து அடைத்து
சித்தம் ஒருக்கி, சிவாயநம என்று இருக்கின் அல்லால்,
மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்
அத்தன் அருள் பெறல் ஆமோ?-அறிவு இலாப் பேதைநெஞ்சே!
|
5
|
மெய்யுணர்தல் இல்லாத அறியாமையை உடைய மனமே ! நமக்கு என்று சேமவைப்பாக உள்ள பொருள் சிவபெருமானே என்று சொல்லி அவனை மனத்தில் தியானித்து மனத்தை ஒருவழிப்படுத்திச் சிவாய நம என்று திருவைந்தெழுத்தை எப்பொழுதும் ஓதிக் கொண்டிருந்தால் அல்லது , செறிந்த கிரணங்களையுடைய சந்திரனைப்போன்று பல கலைகளில்வல்ல சான்றோர்கள் வாழும் திருப்பாதிரிப்புலியூரிலுள்ள தலைவனுடைய அருளைப் பெறுதல் இயலுமோ ? | |
| Go to top |
கருஆய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன்;
உருஆய்த் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன், உனது அருளால்,
திருவாய் பொலியச் சிவாயநம என்று நீறு அணிந்தேன்;
தருவாய், சிவகதி நீ!-பாதிரிப்புலியூர் அரனே!
|
6
|
திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானே ! தாயின் கருவிலே கிடந்த போது உன் திருவடிகளையே தியானிக்கும் கருத்து உடையேனாய் இருந்தேன் . கருவின் நீங்கி வெளிப்பட்ட உருவம் கிட்டிய பிறகு உன் அருளினால் இப்பொழுது ஆராய்ந்து உன் திருநாமங்களைப் பலகாலும் சொல்லப் பழகியுள்ளேன் . வாய்க்குச் செல்வம் விளங்குமாறு திருவைந்தெழுத்தை ஓதித் திருநீறு இப் பொழுது அணியப் பெற்றேன் ஆதலின் அடியேனுக்கு மங்கலமான மார்க்கத்தைத் தருவாயாக . | |
எண்ணாது அமரர் இரக்கப் பரவையுள் நஞ்சம் உண்டாய்!
திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழச் செற்றவனே!
பண் ஆர்ந்து அமைந்த பொருள்கள் பயில் பாதிரிப்புலியூர்க்
கண் ஆர் நுதலாய்!-கழல் நம் கருத்தில் உடையனவே.
|
7
|
முதலில் உன்னைத் தியானிக்காமல் , கடலில் விடம் தோன்றிய பின் அமரர்கள் உன்னை வேண்டக்கடலில் தோன்றிய நஞ்சினை உண்டாய் . வலிமை நிறைந்த அசுரர்களுடைய மும்மதில்களையும் அழித்தவனே ! பண்ணின் பயனாம் நல்லிசைப் பாடல்கள் ஒலிக்கின்ற பாதிரிப் புலியூரில் உறையும் நெற்றிக்கண்ணனே ! உன் திருவடிகள் எங்கள் உள்ளத்தில் உள்ளன . | |
புழுஆய்ப் பிறக்கினும், புண்ணியா!-உன் அடி என் மனத்தே
வழுவாது இருக்க வரம் தரவேண்டும்-இவ் வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய் பாதிரிப்புலியூர்ச்
செழுநீர்ப்-புனல் கங்கை செஞ்சடைமேல் வைத்த தீவண்ணனே!
|
8
|
இவ்வுலகிலே அடியவர்களுக்கு இரக்கப்பட்டு அருள் செய்கின்ற , திருப்பாதிரிப் புலியூரில் உறையும் , செழுமையான கங்கைநீரைச் செஞ்சடையில் தேக்கி வைத்திருக்கும் தீப்போன்ற செந்நிறத்துப் பெருமானே ! அடியேன் மறுபிறவியில் புழுவாகப் பிறந்தாலும் புண்ணியமே வடிவெடுத்த உன் திருவடிகள் அடியேன் மனத்தை விட்டு நீங்காதிருக்குமாறு அடியேனுக்கு அருள் செய்ய வேண்டும் . | |
மண் பாதலம் புக்கு, மால்கடல் மூடி, மற்று ஏழ் உலகும்
விண்பால் திசைகெட்டு, இருசுடர் வீழினும், அஞ்சல், நெஞ்சே!
திண்பால் நமக்கு ஒன்று கண்டோம்; திருப் பாதிரிப்புலியூர்க்
கண் பாவும் நெற்றிக் கடவுள் சுடரான் கழல் இணையே.
|
9
|
நெஞ்சே ! இவ்வுலகம் பாதல உலகுக்குப் போய் அழியுமாறு நிலநடுக்கம் உற்று உலகைக் கடல் வெள்ளம் மூட மற்ற ஏழுலகங்களும் வானத்திலே இருப்புக் குலைந்து சிதறச் சூரிய சந்திரர் தம் நிலையான இருப்பிடத்தைவிட்டுக் கீழே விழுந்தாலும் எதனைப் பற்றியும் அச்சம் கொள்ளாதே . திருப்பாதிரிப்புலியூரில் உறையும் நெற்றிக்கண்ணனாய் ஞான ஒளியை உடைய பெருமானுடைய திருவடிகளாகிய திண்ணிய பகுதி நமக்குப் பாதுகாவலுக்கு உளது என்பதை நாம் அறிவோம் . | |
திருந்தா அமணர்தம் தீ நெறிப் பட்டு, திகைத்து, முத்தி
தரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன்; வரை எடுத்த
பொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய்! பாதிரிப்புலியூர்
இருந்தாய்! அடியேன் இனிப் பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே!
|
10
|
மலையைப் பெயர்க்க முற்பட்ட , நல்லறிவு பொருந்தாத இராவணனுடைய உடலை நெரித்தவனே ! திருப்பாதிரிப் புலியூரில் உறைபவனே ! மனம் திருந்துதல் இல்லாத சமணருடைய தீயவழியிலே ஈடுபட்டு மனம் மயங்கி , இப்பொழுது முத்தியைத் தரும் திருவடிகளில் சரணமாகப் புகுந்து விட்டேன் . இனி , அடியேன் பிறவி எடுக்காத வகையில் அடியேனை ஏற்றுக் கொள்வாயாக . | |
| Go to top |