தேவர்கள் , செம்பொன்னையும் , மணிகளையும் திறையாகக் கொணர்ந்து திரண்டு வந்து , நினது ஒலிக்கும் கழலை யணிந்த திருவடிகளை , மலர் தூவி வணங்குகின்ற , திருவாரூரில் உள்ள தந்தையே , பறையைக் கிழித்தாற்போன்ற உடம்பைப் பற்றிநின்று பார்த்தேனாகிய எனக்கு , அவ்விடத்துச் சிறுபொருள்களோடு பொருந்திவந்த இன்பத்தையும் , அவ்வின்பத்தோடு பொருந்தி நிகழ்ந்த இல்வாழ்க்கையையும் அஞ்சு தலுடையனாயினேன் .
ஊன் மிசை உதிரக் குப்பை; ஒரு பொருள் இலாத மாயம்; மான் மறித்தனைய நோக்கின் மடந்தைமார் மதிக்கும் இந்த மானுடப் பிறவி வாழ்வு வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன்; ஆன் நல்வெள் ஏற்ற ஆரூர் அப்பனே! அஞ்சினேனே.
மணம் கமழும் பூவும் , நீருங் கொண்டு உன்னை நாள் தோறும் வழிபடுவார்க்கு மெய்யுணர்வைத் தருகின்ற , திருவாரூரில் உள்ள தந்தையே , பூதங்கள் ஐந்தும் , ஞானேந்திரியம் கன்மேந் திரியம் என்னும் இந்திரியங்கள் பத்தும் , தன்மாத்திரை ஐந்து அந்தக்கரணம் மூன்று என்னும் நுண்ணுடம்புறுப்புக்கள் எட்டும் , தாத்துவிகங்கள் அறுபதும் , ` காலம் , நியதி , கலை , வித்தை , அராகம் , புருடன் ` என்னும் வித்தியா தத்துவங்களாகிய ஆறும் , ` சுத்தவித்தை , ஈசுரம் , சாதாக்கியம் , சத்தி ` என்னும் ஆகிய எல்லாம் புதராக , வேறாகக் கண்டு சொல்லின் . அவற்றை அறிவுடைய தம்மியல்பாக ஒருவருங் கூறார் ; ஆதலின் , தம்மை , யானாகவே மயங்கும் வண்ணம் என் இயல்பை மறைத்து நிற்கின்ற அவற்றிற்கு அடியேன் அஞ்சுதலுடைய னாயினேன் .
சொல்லிடில் எல்லை இல்லை, சுவை இலாப் பேதை வாழ்வு; நல்லது ஓர் கூரை புக்கு நலம் மிக அறிந்தேன் அல்லேன்; மல்லிகை மாடம் நீடு மருங்கொடு நெருங்கி எங்கும் அல்லி வண்டு இயங்கும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .
மேல் மாடங்கள் உயர்ந்துள்ள இடங்களிலெல்லாம் , வண்டுகள் மல்லிகை மலரின் அகவிதழில் வீழ்ந்துகிண்டுகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே , யான் , ஓட்டைக்குடில்களுள் துச்சி லிருந்துவாழ்ந்த , பேதைக்குரித்தாய , துன்பமே நிறைந்த வாழ்க்கைகளைச் சொல்லப்புகின் , அவற்றிற்கு ஓர் எல்லை இல்லை . அங்ஙனமாகவும் , நல்லதொரு புக்கிலுட் குடிபுகுந்து இன்பம் மிக வாழும் நெறியினை அறிந்திலேன் ; அதனால் , அஞ்சுதலுடையனாயினேன் .
நரம்பினோடு எலும்பு கட்டி நசையினோடு இசைவு ஒன்று இல்லாக் குரம்பை வாய்க் குடி இருந்து குலத்தினால் வாழ மாட்டேன்; விரும்பிய கமழும் புன்னை மாதவித் தொகுதி என்றும் அரும்பு வாய் மலரும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .
மணம் என மகிழ்வர், முன்னே, மக்கள் தாய் தந்தை சுற்றம், பிணம் எனச் சுடுவர், பேர்த்தே; பிறவியை வேண்டேன், நாயேன்; பணை இடைச் சோலை தோறும் பைம் பொழில் வளாகத்து எங்கள் அணை வினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .
வயல்களின் நடுவேயுள்ள சோலைகளிலெல்லாம் , பசிய இளமரக்காக்களை உடைய விளையாடுமிடங்களில் , மக்கட்குத் தங்குமிடங்களைத் தருகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே , உலகில் தாய் , தந்தை , சுற்றத்தார் என்போர் முன்பு ( இளமையில் ) தம் மக்கட்குத் திருமணம் நிகழாநின்றது என மகிழ்வார்கள் . பின்பு அவர்தாமே அவர்ளை , ` பிணம் ` என்று சொல்லி ஊரினின்றும் அகற்றிப் புறங் காட்டிற் கொண்டுபோய் எரிப்படுத்து நீங்குவர் ; ஆதலின் , இத் தன்மைத்தாகிய பிறவியை அடியேன் விரும்புகின்றிலேன் : அதன்கண் வீழ்தற்கு அஞ்சுதலுடையனாயினேன் .
தாழ்வு எனும் தன்மை விட்டு, தனத்தையே மனத்தில் வைத்து, வாழ்வதே கருதி, தொண்டர் மறுமைக்கு ஒன்று ஈயகில்லார்; ஆழ் குழிப்பட்ட போது, அலக்கணில், ஒருவர்க்கு ஆவர்; யாழ் முயன்று இருக்கும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .
மக்கள் யாழிசைத்து இன்புற்றிருக்கின்ற திருவாரூரில் உள்ள தந்தையே , உலகத்தார் பொருள் ஒன்றனையே பெரிதாக மனத்துட்கொண்டு , அதனால் பெருமையுடன் வாழ்வதையே விரும்பி , பணிவு என்னும் பெருந்தன்மையை விட்டு , மறுமை நலத்தின் பொருட்டு வறியார்க்கு ஒன்று ஈதலை இலராகியே வாழ்வர் ; துன்பத்துள் அகப்பட்டவர்க்கு அப்போது உதவியாய் நில்லாது , துன்பமின்றி இன்புற்றிருக்கின்ற மற்றொருவருக்கு உதவியாவர் . அவரது தன்மையைக் கண்டு அவரொடு கூடி வாழ்வதற்கு அஞ்சுதலுடையனாயினேன் .
உதிரம் நீர் இறைச்சிக் குப்பை எடுத்தது மலக்குகை(ம்)மேல் வருவது ஓர் மாயக் கூரை வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன்; கரிய மால், அயனும், தேடிக் கழல் முடி காண மாட்டா அரியனாய் நின்ற ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .
கருமை நிறத்தையுடைய திருமாலும் , பிரமனும் தேடித் திருவடியைக் காணமாட்டாத அருமையையுடையோனாய் நின்ற திருவாரூரில் உள்ள தந்தையே , குருதியாகிய நீராற் பிசைந்த இறைச்சியாகிய மண் குவியலைக் கொண்டு எடுத்ததாகிய மலக் குகையின்மேல் காணப்படுவதாகிய , விரையக்கெடும் தோலாகிய கூரையினுள்ளே வாழ்வதாகிய இழிந்த வாழ்க்கையை அடியேன் விரும்புகின்றிலேன் . அதனது தீமைகள் பலவும் அறிந்து அதற்கு அஞ்சுத லுடையனாயினேன் .
பொய்த் தன்மைத்து ஆய மாயப்போர்வையை, மெய் என்று எண்ணும் வித்தகத்து ஆய வாழ்வு வேண்டி, நான் விரும்பகில்லேன்; முத்தினைத் தொழுது, நாளும் முடிகளால் வணங்குவார்க்கு(வ்) அத் தன்மைத்து ஆகும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .
முத்துப்போல அரிதிற் கிடைக்கும் நின்னை நாள் தோறும் தொழுது , தலையால் வணங்கும் அன்பர்கட்கு அத்தன்மைய தாகிய சிறந்த பொருளாய் நின்று பெரும்பயனைத் தருகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே , நிலையாத தன்மையையுடைய உடம்பை நிலையுடையதாகக் கருதும் சதுரப்பாட்டினை யுடையதாகிய இவ்வுலக வாழ்க்கையை அடியேன் இன்றியமையாததாக நினைத்து விரும்பும் தன்மையில்லேன் ; அதற்கு , அஞ்சுதலுடையனாயினேன் .
தம் சொல் ஆர் அருள் பயக்கும் தமியனேன், தடமுலைக்கண் அம் சொலார் பயிலும் ஆரூர் அப்பனை, ஊரன் அஞ்சி செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார், நஞ்சு உலாம் கண்டத்து எங்கள் நாதனை நண்ணுவாரே .
பற்றுக் கோடாதற்குப் பொருந்தாத மகளிர் பொருட்டு மனம் உடைகின்ற தமியேனாகிய நம்பியாரூரன் , அவரது பெருத்த தனங்களின் இன்பத்திலே அச்சந்தோன்றப் பெற்றவனாய் , அழகிய சொற்களையுடைய மகளிர் ஆடல் பாடல்களைப் பயிலுகின்ற திருவாரூரிலுள்ள தந்தையைச் செவ்விய சொற்களால் வேண்டிப் பாடிய இப் பாடல்களை எண்ணிப் பாடவல்லவர் , நஞ்சை அணிகலமாகத் தாங்கிய கண்டத்தையுடைய எங்கள் பெருமானை அடைவார்கள் .