வைத்தனன் தனக்கே, தலையும் என் நாவும் நெஞ்சமும்; வஞ்சம் ஒன்று இன்றி உய்த்தனன் தனக்கே, திருவடிக்கு அடிமை; உரைத்தக்கால், உவமனே ஒக்கும்; பைத்த பாம்பு ஆர்த்து ஓர் கோவணத்தோடு பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் பித்தரே ஒத்து ஓர் நச்சிலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
எனது தலையையும் , நாவையும் , நெஞ்சத்தையும் , இத் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உள்ள எம்பெருமானார்க்கே உரியன ஆக்கினேன் ; திருவடித் தொண்டினையும் அவருக்கே வஞ்சனை சிறிதும் இன்றிச் செலுத்தினேன் ; இவற்றை யானே சொல்லின் , பொய்போல்வதாகும் . இந் நிலையில் , இவர் படம் விரித்த பாம்பினைக் கட்டிக்கொண்டு ஒரு கோவணத்தோடு இருந்து , பித்தரோடே ஒத்து , சிறிதும் திருவுளம் இரங்கிலராயினும் , எம்மைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !
அன்னையே! என்னேன்; அத்தனே! என்னேன்; அடிகளே அமையும் என்று இருந்தேன்; என்னையும், ஒருவன் உளன் என்று கருதி, இறை இறை திரு அருள் காட்டார்; அன்னம் ஆம் பொய்கை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறை அடிகள் பின்னையே அடியார்க்கு அருள் செய்வது ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
அடியேன் என்னைப் பெற்ற தாயைத் துணையென்று நினைந்திலேன் ; தந்தையைத் துணையென்று நினைந்திலேன் ; என்னை ஆண்ட தலைவனே சாலும் என்று நினைத்தேன் . இவ்வாறு ஒருவன் உளன் ` என்று , தம் சீரடியாரை நினைத்தற்கிடையில் , அன்னங்கள் மிக்கு வாழும் பொய்கை சூழ்ந்த திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளியுள்ள இறைவர் என்னையும் சிறிது திரு வுள்ளத்தடைத்து , சிறிது திருவருளைப் புலப்படுத்திலர் . இவர் தம் அடியவர்க்கு , மறுமை நலம் ஒன்றையே அளித்தலல்லது , இம்மை நலத்தை அருளுவதில்லையாயினும் . இம்மையில் அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !
உற்றபோது அல்லால் உறுதியை உணரேன்; உள்ளமே அமையும் என்று இருந்தேன்; செற்றவர் புரம் மூன்று எரி எழச் செற்ற, செஞ்சடை, நஞ்சு அடை கண்டர், அற்றவர்க்கு அருள் செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள் தாம், யாது சொன்னாலும், பெற்ற போது உகந்து, பெறாவிடில் இகழில், இவர் அலாது இல்லையோ, பிரானார்?.
யான் , ஒரு பொருளினால் நன்மையாதல் தீமையாதல் வந்த காலத்தில் அதனைக் கண்டபின் அல்லது , அதற்கு முன்பே அதன் உண்மை இயல்பை ஓர்ந்துணரும் சிறப்புணர்வு இல்லேன் ; அதனால் , என் பொதுமை யுணர்வே சாலும் என்று அமைந்திருந்தேன் . இத்தன்மையேனிடத்து , தேவர் பொருட்டு அவரைப் பகைத்த அசுரரது முப்புரத்தில் தீயெழச்செய்தும் , நஞ்சினை யுண்டு கண்டத்தில் வைத்தும் , சிவந்த சடை முதலிய தவக் கோலத்தைப் பூண்டும் , ` களை கண் இல்லாது அலமந்தவர்க்கு அருள் பண்ணுபவர் ` எனப் பெயர் பெற்ற திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியுள்ள இறைவர் , அடியேன் யாது சொல்லி இரந்தாலும் , தாம் மனம் மகிழ்ச்சி அடையப் பெற்றபோது இரக்கம் வைத்து , பெறாதபோது இரக்கம் வையாது விடினும் அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !
நாச் சில பேசி, நமர் பிறர் என்று, நன்று தீது என்கிலர்; மற்று ஓர் பூச்சு இலை; நெஞ்சே! பொன் விளை கழனிப் புள் இனம் சிலம்பும் ஆம் பொய்கைப் பாச்சிலாச்சிராமத்து அடிகள் என்று இவர் தாம் பலரையும் ஆட்கொள்வர்; பரிந்து ஓர் பேச்சு இலர்; ஒன்றைத் தர இலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
மனமே , பொன் விளையும் எனப் புகழத்தக்க கழனிகளில் பறவைக் கூட்டம் ஒலிப்பதும் , நீர் நிறைந்த பொய்கைகளை யுடையதும் ஆகிய திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அடிகள் எனப்பட்ட இவர்தாம் , சிலரை , ` நம்மவர் ` என்றும் , சிலரை , ` பிறர் ` என்றும் நாவாற் சிலவற்றைச் சொல்லுதலும் . அவர் சொல்வனவற்றைத் தாம் , ` நன்று ` என்று புகழ்தலாதல் , ` தீது ` என்று இகழ்தலாதல் செய்தலும் இலர் . மற்றும் ஓர் முகமன் செய்தலும் இவரிடத்து இல்லை . ஆயினும் , பலரையும் தமக்கு அடிமை என்று மட்டும் ஆளாக்கிக் கொள்வர் . அதன் பின்பு அவரிடம் அன்பு கொண்டு ஓர் இனிய பேச்சுப் பேசுதல் இலர் ; ஒன்றைத் தருதலும் இலர் ; ஆயினும் அடியேனைப் புரக்கும் தலைவர் இவரையன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !
வரிந்த வெஞ்சிலையால் அந்தரத்து எயிலை வாட்டிய வகையினரேனும், புரிந்த அந் நாளே புகழ் தக்க; அடிமை போகும் நாள் வீழும் நாள் ஆகிப் பரிந்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள் தாம், யாது சொன்னாலும், பிரிந்து இறைப் போதில் பேர்வதே ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
கட்டப்பட்ட வெவ்விய வில்லால் , வானத்தில் இயங்கும் அரண்களை அழித்த வன்கண்மையை உடையவராயினும் , தொண்டுபுரிந்த அந்த நாட்களே புகழத்தக்க நாட்களும் , தொண்டு புரியாது போகும் நாட்கள் பயனின்றிக் கழிந்த நாட்களுமாம் என்று கொண்டு , அன்புசெய்பவருக்கு அருள் செய்பவராகிய , திருப்பாச் சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவர் , என்னளவில் , யாது சொல்லி இரந்தாலும் திருச்செவியில் ஏலாது , நொடிப் பொழுதில் நீங்குதலையே உடையவராயினும் , அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !
செடித் தவம் செய்வார் சென்றுழிச் செல்லேன்; தீவினை செற்றிடும் என்று அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன்; ஆவதும் அறிவர், எம் அடிகள்; படைத்தலைச் சூலம் பற்றிய கையர், பாச்சிலாச்சிராமத்து எம் பரமர், பிடித்த வெண்நீறே பூசுவது ஆனால், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
அடியேன் , ` பணிபிழைத்தற் குற்றம் வந்து அழிவைச் செய்யும் ` என்று அஞ்சி , நன்றல்லாத தவத்தைச் செய்வார் சென்ற வழியையும் மிதியேன் ; தமது திருவடித் தொண்டினையன்றி மற்று யாவரது பணியையும் யான் அறிந்திலேன் ; அடியேன் இத் தன்மையேனாதலை எம்பெருமானாராகிய இவரும் அறிவர் . அங்ஙனமாக , என்னைப் புரத்தற்கு , படைகளுள் முதன்மையுடைத்தாகிய சூலத்தைப் பிடித்த கையை உடையவராகிய திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளியிருக்கும் எம் கடவுளாகிய இவரது நிலைமை , பிசைந்த வெள்ளிய சாம்பலைப் பூசுவதே யாயினும் , அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !
கையது கபாலம்; காடு உறை வாழ்க்கை; கட்டங்கம் ஏந்திய கையர்; மெய்யது புரிநூல்; மிளிரும் புன்சடை மேல் வெண்திங்கள் சூடிய விகிர்தர்; பை அரவு அல்குல் பாவையர் ஆடும் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்; மெய்யரே ஒத்து ஓர் பொய் செய்வது ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்?.
கையின் கண்ணதாகிய தலை ஓட்டினையும் , காட்டில் வாழும் வாழ்க்கையினையும் , ` கட்டங்கம் ` என்னும் படையினை ஏந்திய கையினையும் , மார்பின் கண்ணதாகிய முப்புரி நூலினையும் உடைய ஒளிவிடுகின்ற புல்லிய சடையின்மேல் வெள்ளிய பிறையைச் சூடிய விகிர்தரும் , அரவப் படம் போலும் அல்குலினை உடைய மகளிர் ஆடலைப் புரியும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கும் எம் கடவுளும் ஆகிய இவரது தன்மை , சொல் பிறழாதவர் போல வந்து ஆட்கொண்டு , பின்பு பிறழ்தலைச் செய்வதேயாய் விடினும் , அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !
நிணம் படும் உடலை நிலைமை என்று ஓரேன்; நெஞ்சமே தஞ்சம் என்று இருந்தேன்; கணம் படிந்து ஏத்தி, கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழுது எழுவேன்; பணம் படும் அரவம் பற்றிய கையர், பாச்சிலாச்சிராமத்து எம் பரமர், பிணம் படு காட்டில் ஆடுவது ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்?.
அடியேன் , நிணம் பொருந்தியதாகிய இவ்வுடம்பை நிலைத்த தன்மையுடையதென்று நினையாது , நெஞ்சம் இறைவருக்கு உரியது என்றே துணிந்தேன் ; இரவும் பகலும் அடியவர் குழாத்தின் ஊடே சென்று தம்மை அன்போடு துதித்துக் கைகூப்பித் தொழுவேன் ; இவ்வாறாக , படம் பொருந்திய பாம்பைப் பிடித்த கையை உடையவராகிய திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளி யிருக்கின்ற எம் கடவுளாராகிய இவரது தன்மை , பிணம் பொருந்திய காட்டில் ஆடுவதேயாய்விடினும் , அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !
குழைத்து வந்து ஓடிக் கூடுதி, நெஞ்சே! குற்றேவல் நாள்தொறும் செய்வான்; இழைத்த நாள் கடவார்; அன்பிலரேனும், எம்பெருமான்! என்று எப்போதும் அழைத்தவர்க்கு அருள் செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள் தாம், யாது சொன்னாலும், பிழைத்தது பொறுத்து ஒன்று ஈகிலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்?.
நெஞ்சே , நீ அன்பால் இளகி மகிழ்ச்சியோடும் விரைந்து சென்று நாள் தோறும் குற்றேவல் செய்ய அடைகின்றாய் ; ஆயினும் , தமக்கு வரையறுத்த நாளெல்லையைத் தவத்தாற் கடக்க மாட்டாத சிலர் , இயல்பில் அன்பில்லாதவராயினும் , தாம் கேட்ட வாற்றால் வாயினால் எப்போதும் , ` சிவனே சிவனே ` என்று கூப்பிடுந் தன்மையுடையவராயின் , அவர்க்கு அருள் செய்பவராகிய திருப்பாச் சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானார் , யாது சொல்லி வேண்டினும் , நீ பிழை செய்ததைப் பொறுத்து உனக்கு ஒன்றையும் ஈகின்றிலர் ; ஆயினும் உன்னைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; நீ என் செய்தியோ !
துணிப்படும் உடையும் சுண்ண வெண்நீறும் தோற்றமும் சிந்தித்துக் காணில், மணிப் படு கண்டனை வாயினால் கூறி, மனத்தினால்-தொண்டனேன் நினைவேன்; பணிப் படும் அரவம் பற்றிய கையர், பாச்சிலாச்சிராமத்து எம் பரமர், பிணிப்பட ஆண்டு, பணிப்பு இலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
வட்டாதல் தன்மையிற் பட்ட உடையும் , நறும் பொடியாகப் பூசிய வெள்ளிய நீறும் , மற்றும் இன்ன தோற்றமும் ஆகிய இவற்றது பெருமையை யுணர்ந்து , அவற்றைக் கண்டால் , அடியேன் நீல கண்டத்தையுடைய எம்பெருமானாரைக் கண்டதாகவே மனத்தால் நினைத்து , வாயால் துதிப்பேன் ; அவ்வாறாக , படத்தை யுடையதன் வகையிற்பட்டபாம்பைப் பிடித்த கையை யுடையவராகிய , திருப்பாச் சிலாச்சிராமத்தில் எழுந்தருளி யிருக்கின்ற எம் கடவுளாராகிய இவர் , என்னைத் தம்பால் கட்டுண்டு கிடக்குமாறு ஆட்கொண்டு , ஒன்றையும் ஈயாராயினும் , அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !
எய்தற்கரிய புகழையுடையராய பெரியோர்க்கு அருள் செய்பவராகிய திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம் கடவுளாராகிய இவர்க்கு யான் ஒரு பிறப்பில் அடியேன் அல்லேன் ; ஏழ் பிறப்பிலும் அடியேன் ; அதுவேயுமன்றி , இவர் தம் அடியார்க்கும் அடியனாயினேன் ; என்னை விற்கவும் , ஒற்றி வைக்கவுமான எல்லா உரிமைகளுமாக இவர்க்கு நான் உரியவனா யினேன் ; இவர்தம் ஒளி பொருந்திய மலர் போலும் செம்மையான திருவடிகளே எனக்கு உறுதுணையாக , என் உள்ளம் அவற்றிடத்து உருகா நிற்கும் ; இவ்வாறாக , இவர் , முன்பு பெருமைகள் பேசி , பின்பு சிறுமைகள் செய்வாராயினும் , அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !
ஏசின அல்ல; இகழ்ந்தன அல்ல; எம்பெருமான்! என்று எப்போதும் பாயின புகழான், பாச்சிலாச்சிராமத்து அடிகளை அடி தொழப் பல்-நாள் வாயினால் கூறி மனத்தினால் நினைவான், வள வயல் நாவல் ஆரூரன், பேசின பேச்சைப் பொறுக்கிலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
` எம்பெருமான் ` என்று , எப்போதும் உரிமையோடு பரவிய புகழை யுடையவனும் , திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவரை யடைந்து அவரது திருவடிகளைத் தொழவேண்டுமென்று பல நாட்கள் வாயினாற் சொல்லி , மனத்தினால் நினைந்தவனும் ஆகிய , வளப்பமான வயல்கள் சூழ்ந்த , திரு நாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் இவரைப் பேசிய பேச்சுக்கள் , உண்மையில் ஏசினவும் அல்ல ; இகழ்ந்தனவும் அல்ல ; ஆதலின் , அவைகளை இவர் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும் ; அது செய்யாராயினும் , அடியேனது பிழைகளைப் பொறுத்து ஆளும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !
Other song(s) from this location: திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)
1.044
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துணி வளர் திங்கள் துளங்கி
Tune - தக்கராகம்
(திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) மாற்றறிவரதர் பாலசுந்தரநாயகியம்மை)
7.014
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வைத்தனன் தனக்கே, தலையும் என்
Tune - தக்கராகம்
(திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) மாற்றறிவரதர் பாலசுந்தரியம்மை)
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000