சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.029   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருக்குருகாவூர் வெள்ளடை - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் ராகத்தில் திருமுறை அருள்தரு காவியங்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு வெள்ளிடையப்பர் திருவடிகள் போற்றி
பின்பு சீகாழிப் பதியைப் புறத்தே வலம் வந்து வணங்கித் திருஞானசம்பந்தர் திருவடிகளைப் போற்றிப் பரவிக் குருகாவூர் என்னும் திருப்பதியை நோக்கிச் செல்வராயினார். வழியிடையே வன்றொண்டர் பசியாலும் நீர் வேட்கையாலும் வருந்தினார். அதனை உணர்ந்த இறைவன், மறையவர் வடிவில் தண்ணிரும் பொதிசோறும் கொண்டுவந்து வேனில் வெம்மை நீங்க நிழல் தரும் பந்தரையும் உண்டாக்கி நம்பியாரூரரின் வருகையை எதிர்பார்த்திருந்தார். சுந்தரர் அடியார் கூட்டத்துடன் அங்கு வந்து திருவைந்தெழுத்தோதி அமர்ந்தார். மறையவர் சுந்தரரை நோக்கி, நீர்மிகவும் பசியுடையவராகக் காணப்படுகின்றீர், யாம் கொண்டு வந்த இப்பொதி சோற்றை உண்டு இளைப்பாறுவீராக எனக் கூறி, சுந்தரரும் அடியார்களுடன் தாமும் உண்டு உணவளித்துபசரித்த மறையவரைப் பாராட்டி, அடியார்களுடன் இளைப்பாறித் துயில்கொண்டார். மறையவராய் வந்த இறைவன் பந்தருடன் மறைந்தார். துயிலுணர்ந் தெழுந்த சுந்தரர் மறையவரைக் காணாது அதிசயித்து, இவ்வாறருள் புரிந்தவர் குருகாவூர் இறைவனேயெனத் தெளிந்து இத்தனையா மாற்றை எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிக்கொண்டே திருக்கோயில் சென்று உணவளித்து உண்வித்த பெருமானைப் போற்றினார்.
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=sRZ1DTO-oc0   Add audio link Add Audio

இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன்; எம்பெருமான்!
பித்தனே என்று உன்னைப் பேசுவார், பிறர் எல்லாம்;
முத்தினை, மணி தன்னை, மாணிக்கம், முளைத்து எழுந்த
வித்தனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே; .

1
எங்கள் பெருமானே , திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , உனது திருவருட் செயல் இத்துணையதாயின காரணத்தை யான் அறிந்திலேன் ; உன் இயல்பினை அறியாதவரெல்லாம் உன்னை , ` பித்தன் ` என்று இகழ்ந்து பேசுவர் ; அஃது அவ்வாறாக , நீ , முத்தையும் மாணிக்கத்தையும் , பிற மணிகளையும் தோற்றுவித்த வித்தாய் வெளிப்பட்டவன் அன்றோ !

ஆவியைப் போகாமே தவிர்த்து, என்னை ஆட்கொண்டாய்;
வாவியில் கயல் பாய, குளத்து இடை மடைதோறும்
காவியும் குவளையும் கமலம் செங்கழு நீரும்
மேவிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .

2
வாவிகளில் கயல்மீன்கள் துள்ள , குளத்திலும் , நீர்மடைகளிலும் , கருங்குவளையும் , செங்குவளையும் , தாமரையும் , செங்கழுநீரும் ஆகிய பூக்கள் பொருந்தி நிற்கும் திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே . நீயன்றோ என்னை உயிரைப் போகாது நிறுத்தி ஆட்கொண்டருளினாய் !

பாடுவார் பசி தீர்ப்பாய்; பரவுவார் பிணி களைவாய்;
ஓடு நன் கலன் ஆக உண் பலிக்கு உழல்வானே!
காடு நல் இடம் ஆகக் கடு இருள் நடம் ஆடும்
வேடனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .

3
தலை ஓடே சிறந்த உண்கலமாயிருக்க , உண்ணுகின்ற பிச்சை ஏற்றற்குத் திரிபவனே , காடே சிறந்த அரங்காய் இருக்க , செறிந்த இருளிலே நடனமாடுகின்ற கோலத்தை உடையவனே , திருக் குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , நீ உன்னை இசைப்பாடலால் பாடுகின்றவரும் , பிறவாற்றால் துதிக்கின்ற வரும் ஆகிய அடியார்களது பசியைத் தீர்த்து , நோயைப் பற்றறுப் பாயன்றோ !

வெப்பொடு பிணி எல்லாம் தவிர்த்து எனை ஆட்கொண்டாய்;
ஒப்பு உடை ஒளி நீலம் ஓங்கிய மலர்ப் பொய்கை,
அப்படி அழகு ஆய அணி நடை மட அன்னம்
மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .

4
ஒன்றோடு ஒன்று நிகரொத்த ஒளியையுடைய நீலப் பூக்கள் சிறந்து விளங்குகின்ற , மலர்களையுடைய பொய்கைகளில் , மிகவும் அழகியவாய்த் தோன்றுகின்ற , அழகிய நடையையுடைய இளமையான அன்னங்கள் நிலைபெற்று வளர்கின்ற திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே . நீயன்றோ , என்னை வெப்புநோயோடு பிற நோய்கள் எல்லாவற்றையும் நீக்கி உய்யக்கொண்டாய் !

வரும் பழி வாராமே தவிர்த்து, எனை ஆட்கொண்டாய்;
சுரும்பு உடை மலர்க் கொன்றைச் சுண்ண வெண் நீற்றானே!
அரும்பு உடை மலர்ப் பொய்கை அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .

5
வண்டுகளை உடைய கொன்றை மலர் மாலையையும் , பொடியாகிய வெள்ளிய திருநீற்றையும் உடையவனே , அரும்பு களையுடைய மலர்களைக் கொண்டுள்ள பொய்கைகளில் உள்ள ஆம்பல் மலர்களையும் , பூங்காவில் உள்ள மல்லிகை மலர்களையும் மிகுதியாக உடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந் தருளியிருப்பவனே , நீயன்றோ , எனக்கு வருதற்பாலதாய பழி வாராமல் தடுத்து , என்னை ஆட்கொண்டாய் !
Go to top

பண் இடைத் தமிழ் ஒப்பாய்! பழத்தினில் சுவை ஒப்பாய்!
கண் இடை மணி ஒப்பாய்! கடு இருள் சுடர் ஒப்பாய்!
மண் இடை அடியார்கள் மனத்து இடர் வாராமே,
விண் இடைக் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .

6
திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , பரவெளியின்கண் உள்ள நீ , இம் மண்ணுலகில் வாழும் அடியவர்களது மனத்தின்கண் யாதொரு துன்பமும் தோன்றாதவாறு , பண்ணின்கண் இனிமையைப் போன்றும் , பழத்தின்கண் சுவையைப் போன்றும் , கண்ணின்கண் மணியைப் போன்றும் , மிக்க இருளின்கண் விளக்கைப் போன்றும் நிற்கின்றாயன்றோ !

போந்தனை; தரியாமே நமன் தமர் புகுந்து, என்னை
நோந்தன செய்தாலும், நுன் அலது அறியேன், நான்;
சாம்தனை வருமேலும் தவிர்த்து எனை ஆட்கொண்ட
வேந்தனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .

7
இறக்கும் நிலை வரும் காலத்தை நீக்கி என்னை ஆட்கொண்ட தலைவனே , திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , எனது துன்பத்தைச் சிறிதும் பொறாயாய்ப் போந்தவன் நீயேயன்றோ ! ஆதலின் , இயமனுக்கு ஏவலராய் உள்ளார் வந்து எனக்கு யான் துன்புறும் செயல்களைச் செய்யினும் , யான் உன்னையன்றி வேறொருவரைத் துணையாக அறியமாட்டேன் .

மலக்கு இல் நின் அடியார்கள் மனத்து இடை மால் தீர்ப்பாய்;
சலச்சலம் மிடுக்கு உடைய தருமனார் தமர் என்னைக்
கலக்குவான் வந்தாலும், கடுந் துயர் வாராமே,
விலக்குவாய்; குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .

8
அலைவில்லாத உள்ளத்தினையுடைய உன் அடியார்களது மனத்தில் உள்ள மயக்கத்தினைப் பற்றறக் களைபவனே , திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , துன்பத்தைத் தருகின்ற வெகுளியையும் , மிடுக்கினையும் உடைய இயமன் தூதுவர் என்னை அச்சுறுத்த வந்தாலும் , அவர்களால் வரும் மிக்க துயரத்தையும் வாராமலே விலக்குவோன் நீயேயன்றோ !

படுவிப்பாய், உனக்கே ஆள் பலரையும், பணியாமே;
தொடுவிப்பாய், துகிலொடு பொன்; தோல் உடுத்து உழல்வானே!
கெடுவிப்பாய், அல்லாதார்; கேடு இலாப் பொன் அடிக்கே
விடுவிப்பாய்; குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .

9
திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , நல்லோரைப் பிறரை வணங்கித் துன்புறாதவாறு உனக்கே ஆட்படச் செய்பவனும் , நீ தோலை உடுத்து எலும்பை அணியினும் அவர்கட்கு நல்லாடைகளை உடுப்பித்துப் பொன்னணிகளை அணிவிப்பவனும் , முடிவில் அவர்களை அழிவில்லாத உனது பொன்போலும் செவ்விய திருவடிக்கண்ணே புகுவிப்பவனும் , நல்லோரல்லாதாரைக் கெடுவிப்பவனும் நீயேயன்றோ !

வளம் கனி பொழில் மல்கு வயல் அணிந்து அழகு ஆய
விளங்கு ஒளி குருகாவூர் வெள்ளடை உறைவானை,
இளங் கிளை ஆரூரன்-வனப்பகை அவள் அப்பன்-
உளம் குளிர் தமிழ் மாலை பத்தர்கட்கு உரை ஆமே.

10
வளப்பம் மிகுந்த சோலைகளையும் , நிறைந்த வயல்களையும் சூழக் கொண்டு அழகிதாய் நிற்கின்ற , வீசுகின்ற ஒளியினையுடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளி யிருக்கின்ற இறைவனை , சிங்கடிக்குத் தங்கையாகிய , ` வனப்பகை ` என்பவளுக்குத் தந்தையாம் நம்பியாரூரன் , மனம் இன்புற்றுப் பாடிய இத் தமிழ்மாலை , அவன் அடியார்கட்கு அவனைத் துதித்தற்கு உதவும் புகழ்மாலையாய் நிற்கும் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்குருகாவூர் வெள்ளடை
3.124   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சுண்ண வெண்நீறு அணி மார்பில்-தோல்
Tune - அந்தாளிக்குறிஞ்சி   (திருக்குருகாவூர் வெள்ளடை வெள்ளிடையப்பர் காவியங்கண்ணியம்மை)
7.029   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன்;
Tune - நட்டராகம்   (திருக்குருகாவூர் வெள்ளடை வெள்ளிடையப்பர் காவியங்கண்ணியம்மை)

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org