சீர்காழி - தக்கேசி கரகரப்பிரியா காம்போதி கர்நாடக காபி ராகத்தில் திருமுறை அருள்தரு திருநிலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு பிரமபுரியீசுவரர் திருவடிகள் போற்றி உமையம்மையளித்த திருமுலைப்பாலாகிய அமுதத்தை உண்டு உலகம் உய்யத் திருநெறிய தெய்வத் தமிழ் பாடியருளிய திருஞானசம்பந்தப் பெருமான் அவதரித் தருளிய இடமாதலால் அத்தலத்தைத் தம் பாதங்களால் மிதித்தல் கூடாதெனக் கருதிப் புற எல்லையை வணங்கி வலஞ்செய்தார் சுந்தரர். ஆரூரரின் அன்பின் திறமறிந்து மகிழ்ந்து காழிப்பெருமான் அம்மையப்பராக விடைமேல் தோன்றிக் காட்சி வழங்கினான். அவ்வருட்காட்சியைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர் ``சாதலும் பிறத்தலும்`` என்னும் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.
சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை வகுத்து, தன் அருள் தந்த எம் தலைவனை; மலையின் மாதினை மதித்து, அங்கு ஒர் பால் கொண்ட மணியை; வருபுனல் சடை இடை வைத்த எம்மானை; ஏதிலென் மனத்துக்கு ஒர் இரும்பு உண்ட நீரை; எண் வகை ஒருவனை; எங்கள் பிரானை; காதில் வெண்குழையனை; கடல் கொள மிதந்த கழுமல வள நகர்க் கண்டு கொண்டேனே .
இவ்வுடம்பின் கால எல்லையில் இதன் கண் நின்று சாதலும் , பின்பு வேறோர் உடம்பிற் பிறத்தலும் என்னும் இரண்டனை யும் விலக்கி , இவ்வொரு பிறப்பிலே என்னைப் படைத்து , அவ்வாற் றானே இதன்கண் வந்து தனது திருவருளை எனக்கு அளித்தருளிய வனும் , மலைமங்கையை நன்கு மதித்துத் தன் திருமேனியின் ஒருகூற்றில் வைத்த மாணிக்கம் போல்பவனும் , வானினின்றும் வந்த வெள்ளத்தைச் சடையிடையில் வைத்தருளினவனும் , அயலதாகிய என் நெஞ்சிற்கு , அயலாகாது , காய்ந்த இரும்பு கவர்ந்த நீர்போல , உள்ளே கலந்து நிற்பவனும் , எட்டுவகைப் பொருளாய் நிற்கும் ஒருவனும் , காதில் வெள்ளிய குழையை அணிந்தவனும் ஆகிய எங்கள் தலைவனை , அடியேன் , அவன் கயிலையில் வீற்றிருந்த வாறே , ஊழிக்காலத்தில் உலகத்தைக் கடல் கொள்ளவும் தான் கொள்ளப்படாது மிதந்து நின்ற , ` திருக்கழுமலம் ` என்னும் இவ்வள நகரிடத்திற் கண்டு கொண்டேன் ; அதனால் இனி ஒரு குறையும் இலனா யினேன் .
மற்று ஒரு துணை இனி மறுமைக்கும் காணேன்; வருந்தல் உற்றேன்; மறவா வரம் பெற்றேன்; சுற்றிய சுற்றமும் துணை என்று கருதேன்; துணை என்று நான் தொழப்பட்ட ஒண்சுடரை, முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளும் காட்டிக் கற்பனை கற்பித்த கடவுளை, அடியேன் கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே .
சூழ்ந்துள்ள சுற்றத்தாரையும் துணையென்று நினையாது , ` இவனே துணை ` என்று தெளிந்து , நாள்தோறும் என்னால் வணங்கப்படுகின்ற , ஒளியையுடைய விளக்குப் போல்பவனும் , வீடா வதும் , ஞானமாவதும் , அவற்றை அடைவிப்பனவாய் அமைந்த , தேவராலும் அறியப்படாத அளவற்ற நெறிகளாவனவும் இவை என்ப தனைப் படிமுறையானே அறிவித்து , மெய்ப்பொருளை எனக்கு உணர்த்தியருளிய கடவுளும் ஆகிய பெருமானை , அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே , ` திருக்கழுமலம் ` என்னும் இவ்வளநகரிற் கண்டு கொண்டேன் ; அதனால் , முன்பு அவனை மறந்து வருந்திய யான் , இனி ஒருபோதும் அவனை மறவாதிருக்கும் திருவருளைப் பெற்றேன் ; ஆகவே , இம்மைக்கேயன்றி மறுமைக்கும் இனி மற்றொரு துணையை நாடேன் .
திருத்தினை நகரின்கண் எழுந்தருளியிருக்கின்ற , முருகக்கடவுட்குத் தந்தையும் , என்னுடைய முன்னை வினைகளை யெல்லாம் விலக்குகின்ற , செம்பொன்போலும் சிறப்புடையவனும் , அழகிய பொன்போலும் திருமேனியையுடைய ஒப்பற்றவனும் ஆகிய எங்கள் சிவபெருமானையல்லது வேறு யாரையும் யான் இவ்வுலகில் இறைவராக உணரேன் ; யான் உய்யுங் காரணங் கூடினமையால் இத்தகைய உணர்வைப் பெற்றேன் ; ஆயினும் , விருத்தனும் , பாலனும் ஆகிய அவனை , யான் கனவில் என் அருகே கண்டு , நனவில் எங்குங் காணமாட்டாது பிரிந்திருந்தேன் ; இதுபோழ்து , யாவர்க்கும் தலைவ னும் , நடனம் புரிகின்ற திருவடிகளையுடையவனும் ஆகிய அவனை , அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே , கடலை அடுத்துள்ள , ` திருக் கழுமலம் ` என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டேன் ; அதனால் , இனி அப்பிரிவு இலனாயினேன் .
மழைக்கு அரும்பும் மலர்க் கொன்றையினானை வளைக்கல் உற்றேன்; மறவா மனம் பெற்றேன்; பிழைத்து ஒரு கால் இனிப் போய்ப் பிறவாமைப் பெருமை பெற்றேன்; பெற்றது ஆர் பெறுகிற்பார்? குழைக் கருங்கண்டனைக் கண்டு கொள்வானே பாடுகின்றேன்; சென்று கூடவும் வல்லேன்; கழைக் கரும்பும் கதலிப் பலசோலை கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே .
மழையினால் அரும்புகின்ற கொன்றையினது மலரைச் சூடினவனாகிய எங்கள் பெருமானை என்றும் மறவாது நினைக்கின்ற மனத்தைப் பெற்றேனாதலின் , யான் அவனைப் புறம் போகவொட்டாது என்னிடத்தே பிணித்துக் கொள்ளுதலைப் பொருந்தினேன் ; இனி ஒருபோதும் இந்நிலையினின்றும் தவறி உலகிற் போய்ப் பிறவாத பெருமையைப் பெற்றுவிட்டேன் ; யான் பெற்ற இப்பேற்றினை வேறு யார் பெற வல்லார் ! இவ்வாறாதலின் , அவனை இனியொருகால் இவ்விடத்து யான் நேர்படக் காணாதேயும் , இவ்வுடம்பு நீங்கியபின் அவனை அடையவும் வல்லேன் ; என்றாலும் , அவனைக் காணாது என் நெஞ்சம் அமையாமையின் , காதிற் குழையை யுடைய நீல கண்டனாகிய அவனை மீளக் காணுதல் வேண்டியே பாடி நிற்கின்றேன் ; இந்நிலையில் அவனை , இதுபோழ்து , அவன் கயிலை யில் வீற்றிருந்தவாறே , கழைக் கரும்பும் , வாழையும் பல சோலையுடன் நிறைந்துள்ள , ` திருக்கழுமலம் ` என்னும் இவ்வள நகரிடத்துக் கண்டு கொண்டேன் ; இனியொரு குறையும் இலனாயினேன் .
குண்டலம் குழை திகழ் காதனே! என்றும், கொடு மழுவாள் படைக் குழகனே! என்றும், வண்டு அலம்பும் மலர்க் கொன்றையன்! என்றும், வாய் வெருவித் தொழுதேன், விதியாலே; பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்று ஆய், பசுபதி பதி வினவி, பலநாளும், கண்டல் அம் கழிக் கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர்க் கண்டு கொண்டேனே .
யான் , உறக்கத்தில் , ` குண்டலமும் , குழையும் விளங்குகின்ற காதினை உடையவனே ` என்றும் , ` கொடிய மழுவாகிய ஒளியையுடைய படையை உடையவனே ` என்றும் , ` வண்டுகள் ஒலிக் கின்ற கொன்றை மலரைச் சூடியவனே ` என்றும் வாய்பிதற்றி , விழித்த பின் , பழக்கமாய் நமக்கு உள்ள பலவாறான மனத்தை ஒழித்து ஒரு நெறிப்பட்ட மனத்தையுடையேனாய் , அவனது தலங்களை வினாவி அறிந்து , ` அத்தலத்திற் கிடைப்பான் ` என்று எண்ணிப் பல நாளும் சென்று முறைப்படியே வணங்கினேன் ; அவ்வாற்றால் வருமிடத்து , தாழைகளையுடைய கழிக்கரையிடத்துக் கடல் அலைகள் வந்து உலவு கின்ற , ` திருக்கழுமலம் ` என்னும் இவ் வளநகரிடத்தே அவனை , அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே கண்டுகொண்டேன் ; இனி , அக் குறையிலேனாயினேன் .
வரும், பெரும் வல்வினை என்று இருந்து எண்ணி, வருந்தல் உற்றேன்; மறவா மனம் பெற்றேன்; விரும்பி, என் மனத்து இடை மெய் குளிர்ப்பு எய்தி, வேண்டி நின்றே தொழுதேன், விதியாலே; அரும்பினை, அலரினை, அமுதினை, தேனை, ஐயனை, அறவன், என் பிறவி வேர் அறுக்கும் கரும்பினை, பெருஞ் செந்நெல் நெருங்கிய கழனி கழுமல வள நகர்க் கண்டு கொண்டேனே .
` அளவற்ற வலிய வினைகள்வந்து வருத்துமே ; என் செய்வது ` என்று எண்ணியிருந்து வருந்தினேன் ; அங்ஙனம் வருந்தாத படி எம்பெருமானை மறவாத மனம் வாய்க்கப்பெற்றேன் ; அதனால் , என் மனத்தால் அவனை விரும்பி , மெய்சிலிர்த்து , என்னை இகழா தொழியுமாறு அவனை இரந்து நின்று , முறைப்படியே வணங்கினேன் ; அதனால் , அரும்பும் , பூவும் , அமுதும் , தேனும் , கரும்பும் போல இன்பம் தருபவனும் , யாவர்க்கும் தலைவனும் , அறவடிவினனும் , எனது பிறவியை வேரோடு அறுப்பவனும் ஆகிய அவனை , அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே , மிக்க செந்நெல் நிறைந்த வயல்களை யுடைய , ` திருக்கழுமலம் ` என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டு கொண்டேன் .
அயலவர் பரவவும், அடியவர் தொழவும், அன்பர்கள் சாயலுள் அடையல் உற்று இருந்தேன்- முயல்பவர் பின் சென்று, முயல் வலை யானை படும் என மொழிந்தவர் வழி முழுது எண்ணி; புயலினை, திருவினை, பொன்னினது ஒளியை, மின்னினது உருவை, என் இடைப் பொருளை, கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே .
மேகமும் , செல்வமும் போல்பவனும் , பொன் னொளியும் மின்னொளியும் போலும் திருமேனியையுடையவனும் , என்னிடத்துக் கிடைத்த பொருள் போல்பவனும் ஆகிய எங்கள் பெருமானை யான் அடைய நினைந்து , அதன் பொருட்டுச் சேய்மை யில் உள்ளார் அவனைத் துதிக்கவும் , அண்மையில் உள்ளார் அவனை வணங்கவும் , அவற்றுள் ஒன்றையும் செய்யாது , அவனைத் தங்கள் வன்மையால் அடைய முயல்பவர்கள் பின்னே சென்று , ` முயல் அகப் படும் வலையில் யானை அகப்படும் ` என்று சொல்லிய அவர்களது சொல்லைக்கேட்டு , அவ்வழியையே முற்றிலும் கடைப்பிடித்து , அவ னிடத்து அன்புடையாரது தோற்றத்தை மேற்கொண்டிருந்தேன் ; ஆயினும் , எனது முன்னைத் தவத்தால் , அவனை , அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே , கயல் மீன்களும் , சேல்மீன்களும் வயலின்கண் விளையாடுகின்ற , ` திருக்கழுமலம் ` என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டேன் ; அதனால் எண்ணம் கைகூடப்பெற்றேன் .
நினைதரு பாவங்கள் நாசங்கள் ஆக, நினைந்து முன் தொழுது எழப்பட்ட ஒண்சுடரை; மனை தரு மலை மகள் கணவனை; வானோர் மாமணி மாணிக்கத்தை(ம்); மறைப்பொருளை; புனைதரு புகழினை; எங்களது ஒளியை; இருவரும், ஒருவன் என்று உணர்வு அரியவனை; கனை தரு கருங்கடல் ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே .
நினைத்து உணரப்படும் கருத்துப் பொருள்களாகிய பாவங்கள் அழிதல் உளவாகும்படி , யான் , மனத்தால் நினைந்தும் , கையால் தொழுதும் எழப்பட்ட , ஒளி பொருந்திய ஞாயிறு போல் பவனும் , தனக்கு மனைவியைத் தர விரும்பிய மலைக்கு மகளாகிய உமைக்குக் கணவனும் , தேவர்களது தலைமணியாகிய மாணிக்கம் போல்பவனும் , வேதத்தின் பொருளாய் உள்ளவனும் , அழகியவாகச் சொல்லப்படுகின்ற புகழை உடையவனும் , எங்கள் விளக்குப் போல் பவனும் , மாலும் அயனும் , ` இன்னன் ` என்று அறிதற்கு அரியவனும் ஆகிய இறைவனை , அடியேன் , அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே , ஒலிக்கின்ற கரிய கடலினது அலைகள் வந்து உலவுகின்ற , ` திருக்கழுமலம் ` என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டேன் .
மறை இடைத் துணிந்தவர் மனை இடை இருப்ப, வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாய, துறை உறக் குளித்து உளது ஆக வைத்து உய்த்த உண்மை எனும் தக வின்மையை ஓரேன்; பிறை உடைச் சடையனை, எங்கள் பிரானை, பேர் அருளாளனை, கார் இருள் போன்ற கறை அணி மிடறு உடை அடிகளை, அடியேன் கழுமல வள நகர்க் கண்டு கொண்டேனே .
வேள்வி முதலிய கருமங்களையே மெய்யென்று துணிந்தவர்கள் பற்றுவிடமாட்டாது மனைவாழ்க்கையிலே கட்டுண்டு கிடத்தலும் , முற்றத் துறந்தவர்போலக் காட்டினோரது பொய்யாகிய தவங்கள் ஏனையோரது முயற்சிகளோடொப்பக் கடிதில் அழிந்து போதலும் கண்கூடாய் இருக்க , அவற்றை மேற்கொண்டவர்கள் , தாம் சேற்றில் அழுந்தியிருத்தலை அறியாது , நல்ல நீர்த்துறையிலே நன்கு மூழ்கியிருப்பதாகக் கருதி , பிறரையும் தம் வழியிலே செல்லக் காட்டிய தீநெறியாகிய பொருந்தா நெறியை , யான் பொருட்படுத்தாது வந்து , பிறையை யுடைய சடையை உடையவனும் , எங்கள் தலைவனும் , கருணையை மிக உடையவனும் , ஆகிய சிவபெருமானை அடியேன் , அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே , ` திருக்கழுமலம் ` என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டேன் .
செழு மலர்க் கொன்றையும் கூவிள மலரும் விரவிய சடை முடி அடிகளை நினைந்திட்டு அழும் மலர்க் கண் இணை அடியவர்க்கு அல்லால், அறிவு அரிது, அவன் திருவடியிணை இரண்டும்; கழுமல வள நகர்க் கண்டுகொண்டு, ஊரன்-சடையன் தன் காதலன்-பாடிய பத்தும் தொழு மலர் எடுத்த கை அடியவர் தம்மைத் துன்பமும் இடும்பையும் சூழகிலாவே .