எனக்குப் பொன்னையும் , மெய்யுணர்வையும் , வழங்குபவனும் , அவை வாயிலாக உலகின்பத்தையும் , வீட்டின் பத்தையும் சேர்ப்பிக்கின்றவனும் , அதன்பின் யான் அவ்வின்பங்களை நுகரும்பொழுது செய்கின்ற பிழைகளைப் பொறுத்துக்கொள்பவனும் , பின்னர்ப் பிழைகளே வாராதவாறு அருள்செய்பவனும் , இன்ன தன்மையை உடையவன் என்று வரையறுத்து உணர ஒண்ணாத எங்கள் தலைவனும் , எனக்கு எளிவந்த பெருமானும் ஆகிய , அன்னங்கள் தங்கியுள்ள வயல்களை யுடைய பண்ணைகளையுடைய அழகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !
கட்டமும் பிணியும் களைவானை; காலற் சீறிய கால் உடையானை; விட்ட வேட்கை வெந்நோய் களைவானை; விரவினால் விடுதற்கு அரியானை; பட்ட வார்த்தை, பட நின்ற வார்த்தை, வாராமே தவிரப் பணிப்பானை; அட்ட மூர்த்தியை; மட்டு அவிழ் சோலை ஆரூரானை; மறக்கலும் ஆமே? .
நாம் செத்தபொழுது சிலர் வந்து கூடி நம்மை இகழ் வதற்கு முன்னே , நமக்கு இறைவன் கொடுத்த கருத்து உளதன்றோ ! நெஞ்சு உளதன்றோ ! அறிவு உளதன்றோ ! நாம் செய்த புண்ணியத்தின் பயன் உளதன்றோ ! அவற்றால் தேவர்கள் , ` இயல்பாகவே பாசம் இல்லாதவன் ` என்றும் , ` எங்கள் தலைவன் ` என்றும் வணங்க நிற் கின்ற , முதுகில் திமிலையுடைய எருதையுடையவனும் , யாவர்க்கும் தந்தையும் , என் தந்தைக்குத் தலைவனும் , எமக்குத் தலைவனும் ஆகிய திருவாரூர் இறைவனை நாம் நினையாது மறத்தலும் இயலுமோ !
செறிவு உண்டேல், மனத்தால்-தெளிவு உண்டேல், தேற்றத்தால் வரும் சிக்கனவு உண்டேல், மறிவு உண்டேல், மறுமைப் பிறப்பு உண்டேல், வாழ்நாள் மேல் செல்லும் வஞ்சனை உண்டேல், பொறிவண்டு யாழ் செய்யும் பொன்மலர்க் கொன்றை பொன் போலும் சடைமேல் புனைந்தானை அறிவு உண்டே; உடலத்து உயிர் உண்டே; ஆரூரானை மறக்கலும் ஆமே? .
எங்கும் பொள்ளல்களாய் உள்ள இவ்வுடம்பை உறுதி என்று கொண்டு , செல்வமும் , படைகளும் , இன்பமுமாய் நிற்கின்றவர்கள் செய்கின்ற மயக்கங்களையெல்லாம் நம்மிடத்து வாராதவாறு விலக்குகின்ற , நன்னெறியாய் உள்ளவனாகிய , தேவர்கள் நாள்தோறும் , ` வள்ளல் ` என்றும் , ` எங்களுக்குத் துணை ` என்றும் சொல்லித் துதிக்கின்ற , சேற்றையுடைய கழனிகளையுடைய பண்ணை யிடத்ததாகிய அழகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !
கரி-யானை உரி கொண்ட கையானை, கண்ணின் மேல் ஒரு கண் உடையானை, வரியானை, வருத்தம் களைவானை, மறையானை, குறை மாமதி சூடற்கு உரியானை, உலகத்து உயிர்க்கு எல்லாம் ஒளியானை, உகந்து உள்கி நண்ணாதார்க்கு அரியானை, அடியேற்கு எளியானை, ஆரூரானை, மறக்கலும் ஆமே? .
கையையுடையதாகிய யானையினது தோலை உரித்த கையை உடையவனும் , இரண்டு கண்களுக்கு மேலாக மற்றொரு கண்ணையுடையவனும் , அழகையுடையவனும் , அடைந் தாரது வருத்தங்களைப் போக்குபவனும் , வேதத்தை உடையவனும் , சிறந்த பிறையைச் சூடுதற்கு உரியவனும் , உலகத்தில் உள்ள உயிர்கட் கெல்லாம் விளக்காய் உள்ளவனும் , தன்னை விரும்பி நினைந்து அடையாதவர்கட்கு அரியவனும் , அடியேற்கு எளியவனும் ஆகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !
வாளா நின்று தொழும் அடியார்கள் வான் ஆளப் பெறும் வார்த்தையைக் கேட்டும் நாள் நாளும் மலர் இட்டு வணங்கார்; நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்; கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன், கிளைக்கு எலாம் துணை ஆம் எனக் கருதி; ஆள் ஆவான் பலர் முன்பு அழைக்கின்றேன்; ஆரூரானை மறக்கலும் ஆமே? .
யாதும் வருந்தாமலே நின்று வணங்குகின்ற அவன் அடியார்கள் வானுலகத்தை ஆளுதலாகிய பெருஞ்செல்வத்தைப் பெற்றுவிடுகின்ற செய்தியைக் கேட்டபின்பும் , சிலர் , அவனை நாள் தோறும் மலர் தூவி வணங்குகின்றிலர் . அங்ஙனம் வணங்குகின்ற நம்மை அவன் இம்மையிலேயே நன்கு புரத்தலையும் அறிகின்றாரிலர் . ஆயினும் , யான் , எனக்கேயன்றி என் கிளைகளுக்கும் அவன் துணை யாவான் என்று கருதி , அவனையே உறவாகக் கொண்டு , அவனுக்குப் பணிபுரிந்து நிற்கின்றேன் ; அன்றியும் , பலரையும் அவனுக்கு ஆளாகு மாறு முன் நின்று அழைக்கின்றேன் ; ஆதலின் , யான் அவனை மறத்தலும் இயலுமோ !
விடக்கையே பெருக்கிப் பலநாளும் வேட்கையால் பட்ட வேதனை தன்னைக் கடக்கிலேன்; நெறி காணவும் மாட்டேன்; கண் குழிந்து இரப்பார் கையில் ஒன்றும் இடக்(க்)கிலேன்; பரவைத் திரைக் கங்கைச் சடையானை, உமையாளை ஓர் பாகத்து அடக்கினானை, அம் தாமரைப் பொய்கை ஆரூரானை, மறக்கலும் ஆமே?.
எல்லா நாள்களிலும் ஊனைப் பெருக்கவே முயன்று , அது காரணமாக எழுந்த ஆசையால் உளதாகிய துன்பத்தைக் கடக்கமாட்டாமலும் , கடந்து நன்னெறியை உணரமாட்டாமலும் , பசியால் கண்குழிந்து வந்து இரப்பவர் கையில் ஒன்றையும் இட மாட்டாமலும் உள்ள யான் , பரத்தலையுடைய அலைகளைக் கொண்ட கங்கையாகிய நீரையுடைய சடையை யுடையவனும் , உமையாளைத் தனது திருமேனியின் ஒரு பாகத்தில் அடக்கினவனும் ஆகிய , அழகிய தாமரைப் பொய்கைகளையுடைய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !
ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப்போதனை, நச்சு அரவு ஆர்த்த பட்டியை, பகலை, இருள் தன்னை, பாவிப்பார் மனத்து ஊறும் அத் தேனை, கட்டியை, கரும்பின் தெளி தன்னை, காதலால் கடல் சூர் தடிந்திட்ட செட்டி அப்பனை, பட்டனை, செல்வ ஆரூரானை, மறக்கலும் ஆமே?.
ஓர் ஊர் என்று உலகங்களுக்கு எல்லாம் உரைக்கல் ஆம் பொருள் ஆய் உடன் கூடி, கார் ஊரும் கமழ் கொன்றை நல்மாலை முடியன், காரிகை காரணம் ஆக ஆரூரை(ம்) மறத்தற்கு அரியானை, அம்மான் தன் திருப்பேர் கொண்ட தொண்டன்- ஆரூரன்(ன்) அடிநாய் உரை வல்லார் அமரலோகத்து இருப்பவர் தாமே .
` பரவை ` என்பவள் முன்னிலையாக , எல்லா உலகங்கட்கும் தலைமையுடைய ஓர் ஊர் என்று சொல்லத் தக்க ஊராய் , தான் அவளுடன் கூடி வாழ்ந்து மறத்தற்கியலாததாய் அமைந்துவிட்ட திருவாரூர் இறைவனை , கார் காலத்தில் பூக்கின்ற , மணங்கமழுங் கொன்றைமாலையை அணிந்த முடியையுடைய வனாகிய அப்பெருமானது திருப்பெயரைக் கொண்ட . அவன் அடிக் கீழ்க் கிடக்கும் நாய் போலும் தொண்டனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பதிகத்தைப் பாட வல்லவர் , அமரலோகத்தில் வாழ்பவராதல் திண்ணம் .