நீறு தாங்கிய திரு நுதலானை, நெற்றிக் கண்ணனை, நிரை வளை மடந்தை கூறு தாங்கிய கொள்கையினானை, குற்றம் இ(ல்)லியை, கற்றை அம் சடை மேல் ஆறு தாங்கிய அழகனை, அமரர்க்கு அரிய சோதியை, வரிவரால் உகளும் சேறு தாங்கிய திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை, மனனே!.
மனமே , நீ , திருநீற்றை அணிந்துள்ள அழகிய நெற்றியையுடையவனும் , அந்நெற்றியில் ஒரு கண்ணை உடைய வனும் , வரிசைப்பட்ட வளைகளையணிந்த உமையவளைத் தனது ஒரு கூற்றில் வைத்த செய்கையை யுடையவனும் , குற்றம் சிறிதும் இல்லாத வனும் , கற்றையாகிய அழகிய சடையின் கண் நீரைக் கட்டியுள்ள அழகனும் , தேவர்களுக்கு அரிய ஒளியாய் உள்ளவனும் ஆகிய , வரியையுடைய வரால் மீன்கள் துள்ளுகின்ற , சேற்றையுடைய திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற , நன்மையின் மேலெல்லை யாயுள்ள பெருமானை அணுகச் சென்று அடைவாயாக .
பிணி கொள் ஆக்கையில் பிறப்பு இறப்பு என்னும் இதனை நீக்கி, ஈசன் திருவடி இணைக்கு ஆள்- துணிய வேண்டிடில், சொல்லுவன்; கேள், நீ: அஞ்சல், நெஞ்சமே! வஞ்சர் வாழ் மதில் மூன்று அணி கொள் வெஞ்சிலையால் உகச் சீறும் ஐயன், வையகம் பரவி நின்று ஏத்தும் திணியும் வார் பொழில்-திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை, மனனே! .
மனமே , நீ , நோயுடைய உடம்புகளிற் பிறத்தலும் , பின்பு அவற்றினின்று இறத்தலும் ஆகிய இவ்வல்லலை ஒழித்து இறைவன் திருவடியிணைக்கு ஆளாதலைத் துணிந்து நிற்க விரும் பினால் , அதற்கு வழிசொல்லுவேன் ; கேள் ; வஞ்சனையை இயல்பாக உடைய அசுரர்கள் வாழ்ந்த மூன்று ஊர்களை , அழகிய , கொடிய வில்லால் அழியுமாறு வெகுண்ட தலைவனாகிய , செறிந்த , நீண்ட சோலைகளையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற , உலகமெல்லாம் , முன்னிலையாகவும் , படர்க்கையாகவும் நின்று துதிக் கின்ற , நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை , அணுகச் சென்று அடைவாயாக ; மனமே , அஞ்சாதி .
வடி கொள் கண் இணை மடந்தையர் தம்பால் மயல் அது உற்று, வஞ்சனைக்கு இடம் ஆகி, முடியுமா கருதேல்! எருது ஏறும் மூர்த்தியை, முதல் ஆய பிரானை, அடிகள்! என்று அடியார் தொழுது ஏத்தும் அப்பன், ஒப்பு இலா முலை உமை கோனை, செடி கொள் கான் மலி திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை, மனனே! .
மனமே , நீ , அகன்ற நிலப்பரப்பின்கண் தீவினை களையே செய்தும் , பொய்கள் பலவற்றையே பேசியும் திரிந்து , உயிர்வாழ்வதற்கு இவையே ஏற்புடையன என்று கருதித் துன்பமுற்று மெலிந்து அழியாதி ; மற்று , உலகிற்கு முதல்வனாய் உள்ளவனது இயல்புகளை , நல்லாசிரியர்பாற் பெற்ற அறிவினால் சிந்தித்து , புலியினது உரித்த தோலை உடுத்தவனும் , மாணிக்கம்போல்பவனும் , யாவர்க்கும் வலிய சார்பாய் உள்ளவனும் , தேவர்களுக்கு அமுதம் போல்பவனும் , அவர்கள் அனைவர்க்கும் இறைவனும் ஆகிய திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற , நன்மையின் மேலெல்லை யாய் உள்ள பெருமானை அணுகச் சென்று அடைவாயாக .
ஒன்று அலா உயிர் வாழ்க்கையை நினைந்திட்டு, உடல் தளர்ந்து, அரு மா நிதி இயற்றி, என்றும் வாழல் ஆம், எமக்கு எனப் பேசும் இதுவும் பொய் எனவே நினை, உளமே! குன்று உலாவிய புயம் உடையானை, கூத்தனை, குலாவிக் குவலயத்தோர் சென்று எலாம் பயில் திருத் தினை நகருள் சிவக் கொழுந்தினை, சென்று அடை, மனனே! .
உளமே , ஒருபொருளல்லாத உயிர் வாழ்க்கையைப் பெரிய பொருளாக நினைந்து , அந் நினைவின் வழியே , ` மெய் வருந்த , அரிய பெரிய பொருட்குவையை ஈட்டி என்றும் இனிது வாழ்தல் எமக்கு இயலும் ` என்று உலகத்தார் பேசுகின்ற இச் செருக்குரைதானும் பொய் என்பதனை நினை ; மனமே , மலைபோலும் தோள்களை உடையவனும் , பல கூத்துக்களை வல்லவனும் ஆகிய உலகில் உள்ளவர் எல்லாம் சென்று பலகாலும் மகிழ்ந்து தங்குகின்ற திருத் தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற , நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை , அணுகச் சென்று அடைவாயாக .
வேந்தராய், உலகு ஆண்டு, அறம் புரிந்து, வீற்றிருந்த இவ் உடல் இது தன்னைத் தேய்ந்து, இறந்து, வெந்துயர் உழந்திடும் இப் பொக்க வாழ்வினை விட்டிடு, நெஞ்சே! பாந்தள் அம் கையில் ஆட்டு உகந்தானை, பரமனை, கடல் சூர் தடிந்திட்ட சேந்தர் தாதையை, திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை, மனனே!.
மக்கள் , அரசராய் நின்று உலகத்தை ஆண்டு , செங் கோல் செலுத்திப் பெருமிதத்துடன் அமர்ந்திருந்ததற்கு இடமாய் நின்ற மனித உடம்பாகிய இதனை , இதனொடு கொண்ட தொடர்பு நாள் தோறும் தேயப்பெற்று , பின்பு விட்டு நீங்கி , கொடிய துன்பத்தை நுகர் கின்ற இந்நிலையில்லாத வாழ்வினை , மனமே , சிறிதும் விரும்பாது விடு ; மற்று , மனமே , பாம்பை அகங்கையிற் கொண்டு ஆட்டுதலை விரும்பியவனும் , யாவர்க்கும் மேலானவனும் , கடலில் மாமரமாய் நின்ற சூரனை அழித்த முருகப் பெருமானார்க்குத் தந்தையும் ஆகிய , திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற , நன்மையின் மேலெல்லை யாய் உள்ள பெருமானை , அணுகச் சென்று அடைவாயாக .
தன்னில் ஆசு அறு சித்தமும் இன்றி, தவம் முயன்று, அவம் ஆயின பேசி, பின்னல் ஆர் சடை கட்டி, என்பு அணிந்தால், பெரிதும் நீந்துவது அரிது; அது நிற்க; முன் எலாம் முழு முதல் என்று வானோர் மூர்த்தி ஆகிய முதலவன் தன்னை, செந்நெல் ஆர் வயல்-திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை, மனனே! .
மனமே , தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை யுடையராகாது , தவத்தொழிலைச் செய்து , பயனில்லாத சொற்களைப் பேசி , பின்னுதல் பொருந்திய சடைகளைச்சேர்த்துக் கட்டிக்கொள்ளு தலுடன் எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டாலே , மக்கள் , பிறவியாகிய கடலை முற்றக் கடந்துவிடுதல் இயலாது ; ஆதலின் , அந்நிலை நின்னின் வேறாய் நிற்க , நீ , தேவர் கட்குத் தேவனாய் உள்ள பெருந்தேவனாகிய , செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக் கின்ற , நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை , அணுகச் சென்று , இவனே , தொன்மையாய முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக .
பரிந்த சுற்றமும், மற்று வன் துணையும், பலரும், கண்டு அழுது எழ உயிர் உடலைப் பிரிந்து போய் இது நிச்சயம் அறிந்தால், பேதை வாழ்வு எனும் பிணக்கினைத் தவிர்ந்து; கருந் தடங்கண்ணி பங்கனை, உயிரை, கால காலனை, கடவுளை, விரும்பி, செருந்தி பொன் மலர் திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை, மனனே! .
மனமே , அன்புள்ள சுற்றத்தாரும் , மற்றும் துணை யாயுள்ளாரும் ஆகிய பலருங் கண்டு , உடல்மேல் விழுந்து அழுது எழும்படி , உயிர் உடலைப் பிரிந்து அப்பாற் போய்விடும் ; இது நிச்சயம் . இதனை நீ அறிந்துளை என்றால் , அறியாமையையுடைய வாழ்வாகிய இம் மாறுபட்ட நெறியை நீங்கி , கரிய பெரிய கண்களை யுடையவளாகிய உமையது பாகத்தை உடையவனும் , உயிர்களில் நிறைந்திருப்பவனும் , காலனுக்குக் காலனும் , எல்லாப் பொருளையும் கடந்துள்ளவனும் ஆகிய , செருந்தி மரங்கள் பொன்போலும் மலர்களை மலர்கின்ற திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற , நன்மையின் மேலெல்லையாகிய பெருமானை , விரும்பி , அணுகச் சென்று அடைவாயாக .
நமை எலாம் பலர் இகழ்ந்து உரைப்பதன் முன், நன்மை ஒன்று இலாத் தேரர் புன் சமண் ஆம் சமயம் ஆகிய தவத்தினார் அவத்தத்-தன்மை விட்டொழி, நன்மையை வேண்டில்! உமை ஒர் கூறனை, ஏறு உகந்தானை, உம்பர் ஆதியை, எம்பெருமானை, சிமயம் ஆர் பொழில்-திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை, மனனே! .
மனமே , நீ நன்மையை அடையவிரும்பினால் , நன்மை சிறிதும் இல்லாத புத்தமும் சமணமும் ஆகிய சமயங்களைப் பொருந்திய தவத்தினரது பயனில்லாத செயல்களை விட்டொழி ; நம்மைப் பலர் இகழ்ந்து பேசுதற்கு முன்பே , உமையை ஒரு பாகத்தில் உடையவனும் , எருதை விரும்பி ஏறுபவனும் , தேவர்கட்கு முதல் வனும் , எங்கட்குத் தலைவனும் ஆகிய , மலைச்சிகரம் போலப் பொருந்திய சோலைகளையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளி யிருக்கின்ற , நன்மையின் மேலெல்லையாகிய பெருமானை , அணுகச் சென்று அடைவாயாக .
நீடு பொக்கையின் பிறவியைப் பழித்து, நீங்கல் ஆம் என்று மனத்தினைத் தெருட்டி, சேடு உலாம் பொழில்-திருத் தினை நகருள் சிவக்கொழுந்தின திருவடி இணை தான் நாடு எலாம் புகழ் நாவலூர் ஆளி நம்பி, வன் தொண்டன், ஊரன்-உரைத்த பாடல் ஆம் தமிழ் பத்து இவை வல்லார் முத்தி ஆவது பரகதிப் பயனே .
எல்லையில்லாத , நிலையற்ற பிறவியை வெறுத்து , அதனினின்றும் நாம் நீங்குதலே பொருந்துவது என்று சொல்லி மனத்தைத் தெளிவித்து , திரட்சி பொருந்திய சோலைகளையுடைய திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற , நன்மையின் மேலெல்லை யாயுள்ள பெருமானது திருவடியிணையை நினைத்தற்கு ஆகும் , புகழையுடைய திருநாவலூர்க்குத் தலைவனும் , வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய தமிழ்ப் பாடல்களாகிய இவை பத்தினை யும் பாட வல்லவர் அடையும் இன்ப நிலையாவது , மிக மேலான நிலையாகிய முடிந்த பயனேயாம் .