கங்கையைத் தாங்கிய நீண்ட சடையை உடையவனே , பூத கணங்கட்குத் தலைவனே , காலனுக்குக் காலனே , காமன் உடலுக்கு நெருப்பாகியவனே , அலை மிகுகின்ற பெரிய கடலில் தோன்றிய நஞ்சினை உடைய கண்டத்தை உடையவனே , உயிர்கட்கு முதல்வனே , அறவடிவினனே , தூயோனே , சிவந்த கண்களை யுடைய திருமாலாகிய இடபத்தை யுடையவனே , தெளிந்த தேன் போல்பவனே , கடவுளே , தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற கருணையாளனே , அடியேனுக்கு உறவாவார் , உன்னையன்றி வேறு யாவர் உளர் ! என்னை , ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்யாய் .
மண்ணின் மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய வந்து என்னை ஆண்டுகொண்டானே! கண் இலேன்; உடம்பில்(ல்) அடு நோயால் கருத்து அழிந்து, உனக்கே பொறை ஆனேன்; தெண் நிலா எறிக்கும் சடையானே! தேவனே! திரு ஆவடுதுறையுள் அண்ணலே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
நிலவுலகின்கண் மானுட வாழ்க்கையில் மயங்கிக் கிடக்கக் கடவேனாகிய என்முன் நீயே வலிய வந்து என்னை ஆண்டு கொண்டவனே , தெளிவாகிய நிலவொளியை வீசுகின்ற சடையை உடையவனே , இறைவனே , திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக் கின்ற அண்ணலே , தேவர்களாகிய , விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , யான் கண் இல்லேனாயினேன் ; அதன்மேலும் , உடம்பில் வந்து பற்றி வருத்துகின்ற நோயினால் மனம் வருந்தினமையால் , உனக்குத்தான் சுமையாய் விட்டேன் ; எனக்கு உறவாவார் உன்னை யன்றி வேறு யாவர் உளர் ! ஆதலின் , என்னை ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி , எனக்கு அருள்செய்யாய் .
ஒப்பு இலாமுலையாள் ஒருபாகா! உத்தமா! மத்தம் ஆர் தரு சடையாய்! முப்புரங்களைத் தீ வளைத்து அங்கே மூவருக்கு அருள் செய்ய வல்லானே! செப்ப ஆல் நிழல் கீழ் இருந்து அருளும் செல்வனே! திரு ஆவடுதுறையுள் அப்பனே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
நிகரற்ற தனங்களையுடைய உமையவளை ஒரு பாகத்தில் உடையவனே , மேலானவனே , ஊமத்தம் பூப் பொருந்திய சடையை உடையவனே , முப்புரங்களைத் தீவளையச் செய்து , அப்பொழுதே அவற்றில் இருந்தவர்களுள் மூவருக்கு மட்டில் அருள் செய்ய வல்லவனே , அறத்தைச் சொல்லுதற்கு ஆல் நிழலில் அமர்ந் தருளிய செல்வனே , திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற என் அப்பனே ! தேவர்களாகிய விலங்குகளுக்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , எனக்கு உறவாவார் உன்னையன்றி வேறு யாருளர் ! என்னை ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி , எனக்கு அருள் செய்யாய் .
கொதியினால் வரு காளி தன் கோபம் குறைய ஆடிய கூத்து உடையானே! மதி இலேன்; உடம்பில்(ல்) அடு நோயால் மயங்கினேன்; மணியே! மணவாளா! விதியினால் இமையோர் தொழுது ஏத்தும் விகிர்தனே! திரு ஆவடுதுறையுள் அதிபனே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
சீற்றத்தொடு வந்த காளியினது கோபம் தணியும்படி அவளோடு எதிர்நின்று ஆடிய நடனத்தை யுடையவனே , மாணிக்கம் போல்பவனே , மணவாளக் கோலத்தினனே , தேவர்கள் , முறைப்படி வணங்கித் துதிக்கின்ற இறைவனே , திருவாவடுதுறையில் எழுந்தருளி யிருக்கின்ற தலைவனே , தேவர்களாய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , அறிவில்லேனாகிய யான் உடம்பில் வந்து வருத்துகின்ற பிணியினால் , செய்வது அறியாது மனம் கலங்குகின்றேன் ! எனக்கு உறவாவார் , உன்னையன்றி வேறு யாவர் உளர் ! என்னை , ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி , எனக்கு அருள் செய்யாய் .
வந்த வாள் அரக்கன் வலி தொலைத்து வாழும் நாள் கொடுத்தாய்! வழி முதலே! வெந்த வெண் பொடிப் பூச வல்லானே! வேடனாய் விசயற்கு அருள் புரிந்த இந்துசேகரனே! இமையோர் சீர் ஈசனே! திரு ஆவடுதுறையுள் அந்தணா! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
உலகமாகிய வழிக்கு முதலானவனே , வெந்த தனால் ஆகிய வெள்ளிய திருநீற்றைப் பூச வல்லவனே , அருச்சுன னுக்கு வேட உருவத்தில் சென்று அருள்செய்த சந்திர சேகரனே , தேவர் களுக்குப் புகழுடைய தலைவனே , திருவாவடுதுறையில் எழுந்தருளி யிருக்கின்ற அந்தணனே , தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , எனக்கு உறவாவார் , உன்னையன்றி வேறு யாவர் உளர் ! அன்று நீ இருக்கும் இடத்தில் செருக்குக் கொண்டு வந்த கொடிய அரக்கனாகிய இராவணனது வலிமையை அழித்து , பின்பு அவனுக்கு வாழ்நாள் கொடுத்து விடுத்தாய் ; இன்று , என்னை , ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி , எனக்கு அருள் செய்யாய் .
குறைவு இலா நிறைவே! குணக்குன்றே! கூத்தனே! குழைக் காது உடையானே! உறவு இலேன், உனை அன்றி; மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே? சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர்ச் செம்பொனே! திரு ஆவடுதுறையுள் அறவனே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
` குறை ` எனப்படுவது ஒன்றேனும் இல்லாத நிறைவுடையவனே , இறைமைக் குணங்கள் எல்லாவற்றானும் இயன்ற தொரு மலை எனத் தக்கவனே , கூத்துடையவனே , குழையணிந்த காதினை யுடையவனே , சிறையை யுடைய வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருவாரூரில் உள்ள , செம்பொன் போல்பவனே , திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற அறவடிவினனே , தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , அடியேனும் உன்னையன்றி உறவினர் ஒருவரையும் உடையேன் அல்லேன் ; எனக்கு உறவாரும் உன்னையன்றி வேறு யாவர் உளர் ! ஆதலின் , யான் செய்த ஒரு குற்றத்தை நீ பொறுத்துக்கொண்டால் , உனக்கு வருவதொரு தாழ்வுண்டோ ! என்னை , ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி , எனக்கு அருள்செய்யாய் .
வெய்ய மா கரி ஈர் உரியானே! வேங்கை ஆடையினாய்! விதி முதலே! மெய்யனே! அடல் ஆழி அன்று அரிதான் வேண்ட, நீ கொடுத்து அருள்புரி விகிர்தா! செய்ய மேனியனே! திகழ் ஒளியே! செங்கணா! திரு ஆவடுதுறையுள் ஐயனே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
கொடிய , பெரிய யானையினது உரித்த தோலை யுடையவனே , புலித்தோல் ஆடையை உடுத்தவனே , விதிவிலக்குக் களுக்குத் தலைவனே , மெய்ப்பொருளானவனே , அன்று திருமால் வேண்டிக்கொள்ள , வலிமையையுடைய சக்கரத்தை அவனுக்கு அளித்தருளிய இறைவனே , சிவந்த திருமேனியையுடையவனே , ஒளிகள் எல்லாவற்றினும் மேம்பட்டு விளங்குகின்ற ஒளியாய் உள்ளவனே , நெருப்புக்கண்ணை உடையவனே , திருவாவடுதுறை யில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , தேவர்களாகிய விலங்கு கட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , எனக்கு உறவாவர் உன்னை யன்றி வேறுயாவர் உளர் ! என்னை , ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி , எனக்கு அருள் செய்யாய் .
கோது இலா அமுதே! அருள் பெருகு கோலமே! இமையோர் தொழு கோவே! பாதி மாது ஒருகூறு உடையானே! பசுபதீ! பரமா! பரமேட்டீ! தீது இலா மலையே! திரு அருள் சேர் சேவகா! திரு ஆவடுதுறையுள் ஆதியே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
கோதில்லாத அமுதம் போல்பவனே , அருள் வெள்ளம் பெருகுகின்ற தோற்றத்தை உடையவனே , தேவர்கள் வணங்குகின்ற தலைவனே , உடம்பின் ஒருபாதியில் மங்கை ஒருத்தியது ஒருபங்கினை உடையவனே , உயிர்கட்குத் தலைவனே , மேலானவனே , மேலிடத்தில் இருப்பவனே , நன்மையால் இயன்ற மலைபோல்பவனே , சிறப்புடைய அருள் பொருந்திய வீரனே , திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற முதற்பொருளான வனே , தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , எனக்கு உறவாவார் , உன்னையன்றி வேறு யாவர் உளர் ! என்னை , ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி , எனக்கு அருள்செய்யாய் .
வான நாடனே! வழித் துணை மருந்தே! மாசு இலா மணியே! மறைப்பொருளே! ஏன மா எயிறு, ஆமையும், எலும்பும், ஈடு தாங்கிய மார்பு உடையானே! தேன் நெய் பால் தயிர் ஆட்டு உகந்தானே! தேவனே! திரு ஆவடுதுறையுள் ஆனையே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
வெண்டலையோடு பொருந்தும் பிறையையும் , கொன்றைமலர் மாலையையும் , பாம்பினையும் , தேனையுடைய ஊமத்த மலரையும் ஒருங்கு விரவிச் சூடிக்கொண்ட சிறந்த இண்டை மாலையையுடைய , சிவந்த சடைமுடியையுடையவனும் , முதற் கடவுளும் , திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவலோக வாணனும் ஆகிய இறைவனை , அவனுக்கு அணுக்கனாய் நிற்கின்ற வன்றொண்டனாகிய , சிங்கடிக்குத் தந்தை , மிக்க அன்போடும் பாடிய இத்தண்ணிய தமிழ்மாலைகளாகிய பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர்கள் , இறத்தலையும் பிறத்தலையும் ஒழித்து , எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய் வாழ்வார்கள் .