சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.095   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருவாரூர் - செந்துருத்தி ஹரிகாம்போஜி மத்யமாவதி காரா ராகத்தில் திருமுறை அருள்தரு அல்லியங்கோதையம்மை உடனுறை அருள்மிகு வன்மீகநாதர் திருவடிகள் போற்றி
திருத்துருத்தியிலிருந்து திருவாரூரை யடைந்த நம்பியாரூரர், முதலில் திருப்பரவையுண்மண்டளி யென்னும் திருக்கோயிலை யடைந்து திருப்பதிகம் பாடி, எனது துன்பத்தினைப் போக்கிக் கண் காணும்படிக் காட்டுதல் வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். பிறகு அடியார்களுடன் ஆரூர் மூலட்டானேசுவரரை அர்த்தயாம காலத்திலே சென்று வழிபட எண்ணி அயன்மை தோன்ற வருந்திக் கூறும் நிலையில், திருப்பதிகம் பாடிக்கொண்டு உள்ளே சென்று வீழ்ந்து வணங்கினார். இறைவன் திருமேனி யழகைக் காண ஒரு கண் போதாமையை எடுத்துக்கூறி, வலக் கண் வேண்டி மிக உருக்கமாக, மீளா அடிமை என்ற திருப்பதிகத்தைப் பாடினார்.
இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ கண்களில் உள்ள கோளாறு பார்வை குறைபாடு அனைத்தும் நீங்கும்
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=57PlwAi1hCc   Add audio link Add Audio

மீளா அடிமை உமக்கே ஆள் ஆய், பிறரை வேண்டாதே,
மூளாத் தீப் போல் உள்ளே கனன்று, முகத்தால் மிக வாடி,
ஆள் ஆய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளா(ஆ)ங்கு இருப்பீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே!

1
திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானிரே , உம்மையன்றிப் பிறரை விரும்பாமலே , உமக்கே என்றும் மீளாத அடிமை செய்கின்ற ஆட்களாகி , அந்நிலையிலே பிறழாதிருக்கும் அடியார்கள் , தங்கள் துன்பத்தை வெளியிட விரும்பாது , மூண்டெரி யாது கனன்று கொண்டிருக்கின்ற தீயைப்போல , மனத்தினுள்ளே வெதும்பி , தங்கள் வாட்டத்தினை முகத்தாலே பிறர் அறியநின்று . பின்னர் அத்துன்பம் ஒருகாலைக் கொருகால் மிகுதலால் தாங்க மாட்டாது , அதனை , உம்பால் வந்து வாய்திறந்து சொல்வார்களாயின் , நீர் அதனைக் கேட்டும் கேளாததுபோல வாளாவிருப்பீர் ; இஃதே நும் இயல்பாயின் , நீரே இனிது வாழ்ந்துபோமின் !

விற்றுக் கொள்வீர்; ஒற்றி அல்லேன்; விரும்பி ஆட்பட்டேன்;
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை; கொத்தை ஆக்கினீர்;
எற்றுக்கு-அடிகேள்!-என் கண் கொண்டீர்? நீரே பழிப்பட்டீர்;
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால், வாழ்ந்துபோதீரே!

2
அடிகளே , நீர் என்னைப் பிறருக்கு விற்கவும் உரிமையுடையீர் ; ஏனெனில் , யான் உமக்கு ஒற்றிக் கலம் அல்லேன் ; உம்மை விரும்பி உமக்கு என்றும் ஆளாதற்றன்மையுட் பட்டேன் ; பின்னர் யான் குற்றம் ஒன்றும் செய்ததில்லை ; இவ்வாறாகவும் என்னை நீர் குருடனாக்கிவிட்டீர் ; எதன் பொருட்டு என் கண்ணைப் பறித்துக் கொண்டீர் ? அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர் ; எனக்குப் பழி யொன் றில்லை ; பன்முறை வேண்டியபின் ஒரு கண்ணைத் தந்தீர் ; மற்றொரு கண்ணைத்தர உடன்படாவிடின் , நீரே இனிது வாழ்ந்துபோமின் !

அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே!
கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி அவை போல,
என்றும் முட்டாப் பாடும் அடியார் தம் கண் காணாது
குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால், வாழ்ந்துபோதீரே!

3
அன்றிற் பறவைகள் நாள்தோறும் தப்பாது வந்து சேர்கின்ற , சோலையையுடைய திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானிரே , கன்றுகள் முட்டி உண்ணத் தொடங்கிய பின்னே பால் சுரக்கின்ற பசுக்களிடத்தில் பாலை உண்ணும் அக் கன்றுகள் போல , நாள்தோறும் தப்பாது பாடியே உம்மிடத்துப் பயன்பெறுகின்ற அடியார்கள் , பலநாள் பாடியபின்னும் தங்கள் கண் காணப்பெறாது , குன்றின்மேல் முட்டிக் குழியினுள் வீழ்ந்து வருந்துவராயின் , நீரே இனிது வாழ்ந்துபோமின் !

துருத்தி உறைவீர்; பழனம் பதியா, சோற்றுத்துறை ஆள்வீர்;
இருக்கை திரு ஆரூரே உடையீர்; மனமே என வேண்டா:
அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்,
வருத்தி வைத்து, மறுமை பணித்தால், வாழ்ந்துபோதீரே!

4
இருக்குமிடம் திருவாரூராகவே உடையவரே , நீர் இன்னும் , ` திருத்துருத்தி , திருப்பழனம் ` என்பவைகளையும் ஊராகக் கொண்டு வாழ்வீர் ; திருச்சோற்றுத்துறையையும் ஆட்சி செய்வீர் ; ஆதலின் , உமக்கு இடம் அடியவரது மனமே எனல் வேண்டா ; அதனால் உம்பால் அன்புமிக்க அடியார்கள் , தங்கள் அல்லலை உம்மிடம் வந்து சொன்னால் , நீர் அவர்களை இப்பிறப்பில் வருத்தியே வைத்து , மறுபிறப்பிற்றான் நன்மையைச் செய்வதாயின் , நீரே இனிது வாழ்ந்துபோமின் !

செந் தண் பவளம் திகழும் சோலை இதுவோ, திரு ஆரூர்?
எம்தம் அடிகேள்! இதுவே ஆம் ஆறு, உமக்கு ஆட்பட்டோர்க்கு?
சந்தம் பலவும் பாடும் அடியார் தம் கண் காணாது
வந்து, எம்பெருமான்! முறையோ? என்றால், வாழ்ந்துபோதீரே!

5
எங்கள் தலைவரே , இது , செவ்விய தண்ணிய பவளம்போலும் இந்திரகோபங்கள் விளங்குகின்ற சோலையை யுடைய திருவாரூர் தானோ ? நன்கு காண இயலாமையால் இதனைத் தெளிகின்றிலேன் ; உமக்கு அடிமைப்பட்டோர்க்கு உண்டாகும் பயன் , இதுதானோ ? இசை வண்ணங்கள் பலவும் அமைந்த பாடலால் உம்மைப் பாடுகின்ற அடியார்கள் , தங்கள் கண் காணப்பெறாது , உம்பால் வந்து , ` எம் பெருமானே , முறையோ ` என்று சொல்லி நிற்றல் ஒன்றே உளதாகுமானால் , நீரே இனிது வாழ்ந்துபோமின் !
Go to top

தினைத்தாள் அன்ன செங்கால் நாரை சேரும் திரு ஆரூர்ப்
புனைத் தார் கொன்றைப் பொன் போல் மாலைப் புரிபுன் சடையீரே!
தனத்தால் இன்றி, தாம்தாம் மெலிந்து, தம் கண் காணாது,
மனத்தால் வாடி, அடியார் இருந்தால், வாழ்ந்துபோதீரே!

6
தினையது தாள்போலும் சிவந்த கால்களையுடைய நாரைகள் திரளுகின்ற திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற , முல்லை நிலத்தில் உள்ள கொன்றையினது மலரால் ஆகிய பொன்மாலை போலும் மாலையை அணிந்த , திரிக்கப்பட்ட புல்லிய சடையை யுடையவரே , உம் அடியவர் , தாம் பொருளில்லாமையால் இன்றி , தங்கள் கண் காணப்பெறாது வருந்தி , மனத்தினுள்ளே வாட்ட முற்றிருப்பதானால் , நீரே இனிது வாழ்ந்து போமின் !

ஆயம் பேடை அடையும் சோலை ஆரூர் அகத்தீரே!
ஏ, எம்பெருமான்! இதுவே ஆம் ஆறு, உமக்கு ஆட்பட்டோர்க்கு?
மாயம் காட்டி, பிறவி காட்டி, மறவா மனம் காட்டி,
காயம் காட்டி, கண் நீர் கொண்டால், வாழ்ந்துபோதீரே!

7
ஆண் பறவைக் கூட்டம் , பெண்பறவைக் கூட்டத் துடன் வந்து சேர்கின்ற சோலையையுடைய திருவாரூரில் எழுந்தருளி யிருக்கின்றவரே , எங்களுக்குப் பொருந்திய பெருமானிரே , உமக்கு அடிமைப்பட்டோர்க்கு உண்டாகும் பயன் இதுதானோ ? நீர் எனக்கு உம்மை மறவாத மனத்தைக் கொடுத்து , பின்பு ஒரு மாயத்தை உண்டாக்கி , அது காரணமாகப் பிறவியிற் செலுத்தி , உடம்பைக் கொடுத்து , இப்போது கண்ணைப் பறித்துக்கொண்டால் , நீரே இனிது வாழ்ந்துபோமின் !

கழி ஆய், கடல் ஆய், கலன் ஆய், நிலன் ஆய், கலந்த சொல் ஆகி,-
இழியாக் குலத்தில் பிறந்தோம்-உம்மை இகழாது ஏத்துவோம்;
பழிதான் ஆவது அறியீர்: அடிகேள்! பாடும் பத்தரோம்;
வழிதான் காணாது, அலமந்து இருந்தால், வாழ்ந்துபோதீரே!

8
அடிகளே , யாங்கள் இழிவில்லாத உயர்குலத்திலே பிறந்தோம் ; அதற்கேற்ப உம்மை இகழ்தல் இன்றி , நீர் , கழியும் , கடலும் , மரக்கலமும் நிலமுமாய்க் கலந்து நின்ற தன்மையைச் சொல்லும் சொற்களையுடையேமாய்த் துதிப்போம் ; அவ்வாறாகலின் , எம்மை வருத்துதலால் உமக்குப் பழி உண்டாதலை நினையீர் ; அதனால் , உம்மைப்பாடும் அடியேமாகிய யாங்கள் , வழியைக் காண மாட்டாது அலைந்து வாழ்வதாயின் , நீரே இனிது வாழ்ந்து போமின் !

பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர், பிறர் எல்லாம்;
காய்தான் வேண்டில், கனிதான் அன்றோ, கருதிக் கொண்டக்கால்?
நாய்தான் போல நடுவே திரிந்தும், உமக்கு ஆட்பட்டோர்க்கு
வாய்தான் திறவீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே!

9
திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானிரே , விரும்பப்பட்டது காயே எனினும் , விரும்பிக் கைக் கொண்டால் , அது கனியோடொப்பதேயன்றோ ? அதனால் உம்மைத் தவிரப் பிறரெல்லாம் , பேயோடு நட்புச்செய்யினும் , பிரிவு ` என்ப தொன்று துன்பந்தருவதே என்று சொல்லி , அதனைப்பிரிய ஒருப் படார் , ஆனால் , நீரோ , உமது திருவோலக்கத்தின் நடுவே நாய்போல முறையிட்டுத் திரிந்தாலும் , உமக்கு ஆட்பட்டவர்கட்கு , வாய்திறந்து ஒருசொல் சொல்லமாட்டீர் ; இதுவே உமது நட்புத் தன்மையாயின் , நீரே இனிது வாழ்ந்து போமின் !

செருந்தி செம்பொன்மலரும் சோலை இதுவோ, திரு ஆரூர்?
பொருந்தித் திரு மூலட்டான(ம்)மே இடமாக் கொண்டீரே;
இருந்தும், நின்றும், கிடந்தும், உம்மை இகழாது ஏத்துவோம்;
வருந்தி வந்தும், உமக்கு ஒன்று உரைத்தால், வாழ்ந்துபோதீரே!

10
திருமூலட்டானத்தையே பொருந்தி இடமாகக் கொண்டவரே , இது , செருந்தி மரங்கள் , தமது மலர்களாகிய செம் பொன்னை மலர்கின்ற திருவாரூர்தானோ ? இருத்தல் , நிற்றல் , கிடத்தல் முதலிய எல்லா நிலைகளினும் ` உம்மை இகழாது துதிப்பேமாகிய யாம் , உம்பால் வருத்தமுற்று வந்து , ஒரு குறையை வாய்விட்டுச் சொன்னாலும் , நீர் வாய்திறவாதிருப்பிராயின் , நீரே இனிது வாழ்ந்து போமின் !
Go to top

கார் ஊர் கண்டத்து எண்தோள் முக்கண் கலைகள் பல ஆகி,
ஆரூர்த் திரு மூலட்டானத்தே அடிப்பேர் ஆரூரன்,
பார் ஊர் அறிய, என் கண் கொண்டீர்; நீரே பழிப்பட்டீர்;
வார் ஊர் முலையாள் பாகம் கொண்டீர்! வாழ்ந்துபோதீரே!

11
பல நூல்களும் ஆகி , கருமை மிக்க கண்டத்தையும் , எட்டுத் தோள்களையும் , மூன்று கண்களையும் உடைய , திருவாரூர்த் திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்ற கச்சுப்பொருந்திய தனங்களையுடையவளாகிய உமாதேவியது பாகத்தைக் கொண்ட வரே , இவ்வுலகில் உள்ள ஊரெல்லாம் அறிய , நீர் , உமது திருவடிப் பெயரைப்பெற்ற நம்பியாரூரனாகிய எனது கண்ணைப் பறித்துக் கொண்டீர் ; அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர் ; இனி நீர் இனிது வாழ்ந்து போமின் !

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவாரூர்
1.091   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி
Tune - குறிஞ்சி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
1.105   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பாடலன் நால்மறையன்; படி பட்ட
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
2.079   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பவனம் ஆய், சோடை ஆய்,
Tune - காந்தாரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
2.101   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பருக் கை யானை மத்தகத்து
Tune - நட்டராகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
3.045   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அந்தம் ஆய், உலகு ஆதியும்
Tune - கௌசிகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.004   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்
Tune - காந்தாரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.005   திருநாவுக்கரசர்   தேவாரம்   மெய் எலாம் வெண் நீறு
Tune - காந்தாரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.017   திருநாவுக்கரசர்   தேவாரம்   எத் தீப் புகினும் எமக்கு
Tune - இந்தளம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.019   திருநாவுக்கரசர்   தேவாரம்   சூலப் படை யானை; சூழ்
Tune - சீகாமரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.020   திருநாவுக்கரசர்   தேவாரம்   காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்
Tune - சீகாமரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.021   திருநாவுக்கரசர்   தேவாரம்   முத்து விதானம்; மணி பொன்
Tune - குறிஞ்சி   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.052   திருநாவுக்கரசர்   தேவாரம்   படு குழிப் பவ்வத்து அன்ன
Tune - திருநேரிசை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.053   திருநாவுக்கரசர்   தேவாரம்   குழல் வலம் கொண்ட சொல்லாள்
Tune - திருநேரிசை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.101   திருநாவுக்கரசர்   தேவாரம்   குலம் பலம் பாவரு குண்டர்முன்னே
Tune - திருவிருத்தம்   (திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
4.102   திருநாவுக்கரசர்   தேவாரம்   வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,
Tune - திருவிருத்தம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
5.006   திருநாவுக்கரசர்   தேவாரம்   எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
Tune - திருக்குறுந்தொகை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
5.007   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
Tune - திருக்குறுந்தொகை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.024   திருநாவுக்கரசர்   தேவாரம்   கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.025   திருநாவுக்கரசர்   தேவாரம்   உயிரா வணம் இருந்து, உற்று
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.026   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாதித் தன் திரு உருவில்
Tune -   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.027   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற  
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.028   திருநாவுக்கரசர்   தேவாரம்   நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.029   திருநாவுக்கரசர்   தேவாரம்   திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.030   திருநாவுக்கரசர்   தேவாரம்   எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.031   திருநாவுக்கரசர்   தேவாரம்   இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.032   திருநாவுக்கரசர்   தேவாரம்   கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
Tune - போற்றித்திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.033   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொரும் கை மதகரி உரிவைப்
Tune - அரநெறிதிருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.034   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒருவனாய் உலகு ஏத்த நின்ற
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
7.008   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு
Tune - இந்தளம்   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.012   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த
Tune - இந்தளம்   (திருவாரூர் )
7.033   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
Tune - கொல்லி   (திருவாரூர் )
7.037   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   குருகு பாய, கொழுங் கரும்புகள்
Tune - கொல்லி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.039   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தில்லை வாழ் அந்தணர் தம்
Tune - கொல்லிக்கௌவாணம்   (திருவாரூர் )
7.047   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
Tune - பழம்பஞ்சுரம்   (திருவாரூர் )
7.051   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
Tune - பழம்பஞ்சுரம்   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.059   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
Tune - தக்கேசி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.073   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கரையும், கடலும், மலையும், காலையும்,
Tune - காந்தாரம்   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.083   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
Tune - புறநீர்மை   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.095   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மீளா அடிமை உமக்கே ஆள்
Tune - செந்துருத்தி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
8.139   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
Tune - அயிகிரி நந்தினி   (திருவாரூர் )
9.018   பூந்துருத்தி நம்பி காடநம்பி   திருவிசைப்பா   பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்
Tune -   (திருவாரூர் )
11.007   சேரமான் பெருமாள் நாயனார்   திருவாரூர் மும்மணிக்கோவை   திருவாரூர் மும்மணிக்கோவை
Tune -   (திருவாரூர் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000