திருப்பிரமபுரம் (சீர்காழி) - பஞ்சமம் ஹனுமத்தோடி ஆபோகி ஆகிரி ராகத்தில் திருமுறை அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி அரத்துறை இறைவன் ஞானசம்பந்தரின் வழி நடைவருத் தத்தை அறிந்து அரத்துறை அந்தணர்கள் கனவில் தோன்றி ஞானசம் பந்தன் நம்மைக் காண வருகின்றான். அவனுக்கென ஆலயத்துள் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னம் ஆகியன வைத்துள் ளோம் எடுத்துச்சென்று கொடுத்து அழைத்து வருக எனப் பணித் தருளினான். அவ்வாறே இறைவன் ஞானசம்பந்தர் கனவிலும் தோன்றி யாம் அளிக்கும் பொருள்களை ஏற்று வருக எனக் கூறியருளினான். அரத்துறை அந்தணர்கள் வியந்து எழுந்து இறைவனளித்த அப் பொருள்களைக் கொண்டு சென்று ஞானசம்பந்தரிடம் நடந்ததைக் கூறிச் சிவிகையில் ஆரோகணித்து அரத்துறை வரவேண்டுமென வேண்டினர். ஞானசம்பந்தர் இறைவன் திருவருளை எண்ணி வியந்து அச்சிவிகையை மும்முறை வலம் வந்து பணிந்து ஐந்தெழுத்தோதி அச்சிவிகையில் அமர்ந்து எந்தை ஈசன் எம்பெருமான் என்ற திருப்பதிகத்தால்,இறையருளை வியந்து புறப்பட்டுச் சென்று அரத்துறை ஈசனை வணங்கிப் போற்றினார்.
இறையவன், ஈசன், எந்தை, இமையோர் தொழுது ஏத்த நின்ற
கறை அணி கண்டன், வெண்தோடு அணி காதினன், காலத்து அன்று
மறை மொழி வாய்மையினான், மலையாளொடு மன்னு சென்னிப்
பிறை அணி செஞ்சடையான், பிரமாபுரம் பேணுமினே!
சடையினன், சாமவேதன், சரி கோவணவன், மழுவாள
படையினன், பாய் புலித்தோல் உடையான், மறை பல்கலை நூல்
உடையவன், ஊனம் இ(ல்)லி, உடன் ஆய் உமை நங்கை என்னும்
பெடையொடும் பேணும் இடம் பிரமாபுரம்; பேணுமினே!
மாணியை நாடு காலன் உயிர் மாய்தரச் செற்று, காள
காணிய ஆடல் கொண்டான், கலந்து ஊர்வழிச் சென்று, பிச்சை
ஊண் இயல்பு ஆகக் கொண்டு, அங்கு உடனே உமை நங்கையொடும்
பேணிய கோயில் மன்னும் பிரமாபுரம்; பேணுமினே!
பார் இடம் விண்ணும் எங்கும் பயில் நஞ்சு பரந்து மிண்ட,
பேர் இடர்த் தேவர்கணம், பெருமான், இது கா! எனலும்,
ஓர் இடத்தே கரந்து, அங்கு உமை நங்கையொடும்(ம்) உடனே
பேர் இடம் ஆகக் கொண்ட பிரமாபுரம் பேணுமினே!
நச்சு அரவச் சடைமேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து, அங்கு
அச்சம் எழ விடைமேல் அழகு ஆர் மழு ஏந்தி, நல்ல
இச்சை பகர்ந்து, மிக இடுமின், பலி! என்று, நாளும்
பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணுமினே!
இமையவர் அஞ்சி ஓட, எதிர்வார் அவர்தம்மை இன்றி
அமைதரு வல் அரக்கன் அடர்த்து(ம்), மலை அன்று எடுப்ப,
குமை அது செய்து, பாட, கொற்றவாளொடு நாள் கொடுத்திட்டு
உமையொடு இருந்த பிரான் பிரமாபுரம் உன்னுமினே!
துவர் உறும் ஆடையினார், தொக்க பீலியர் நக்க(அ)ரையர்
அவர் அவர் தன்மைகள் கண்டு அணுகேன்மி(ன்), அருள் பெறுவீர்
கவர் உறு சிந்தை ஒன்றி, கழி காலம் எல்லாம் படைத்த
இவர் அவர் என்று இறைஞ்சி, பிரமாபுரம் ஏத்துமினே!
உரை தரு நால்மறையோர் புகழ்ந்து ஏத்த, ஒண் மாதினொடும்
வரை என வீற்றிருந்தான், மலிகின்ற பிரமபுரத்து
அரசினை ஏத்த வல்ல அணி சம்பந்தன் பத்தும் வல்லார்
விரைதரு விண்ணுலகம் எதிர் கொள்ள விரும்புவரே.
2.065
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறை அணி வேல் இலர்போலும்;
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.073
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.074
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)